Monday, August 11, 2014

தினம் ஒரு திருமந்திரம் 11-08-2014



அரன்நெறி யாவது அறிந்தேனும் நானும்
சிவநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி யுள்ளக் கடல்கடந்து ஏறும்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.

பொருள் : அரனை அடைவதற்குரிய வழியாவதை அறிந்தேன். ஆகிய நானும் வேறு சில நெறிகளைத் தேடித் திரிந்த அக்காலத்து வன்மை மிக்க நெறியில் எண்ணமாகிய கடலைக் கடந்து ஏறுவதற்கு மேன்மையான நெறியாக நின்றது ஒப்பற்ற சுடரேயாம்.

Tuesday, August 5, 2014

தினம் ஒரு திருமந்திரம் 05-08-2014



வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்த போதாந்த மாதுப் புனஞ்செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.

பொருள் :
வேதாந்தமாவது சுத்த சைவ சித்தாந்தமாம். இந்நெறி நிற்போரே நாதவடிவமாகிய சிவத்தைத் தரிசித்த சலனம் அற்றவராவர். தத்துவ முடிவை ஞானமயமாகப் பண்படுத்த நாதமுடிவில் நிறைவுற்று விளங்கும் சிவம் அறியப்படு பொருளாவர். விளக்கம்; சுத்த சைவ சித்தாந்தமே வேதங்களின் முடிவு . (பூதாந்தம் - பூதங்களின் முடிவு போதாந்தம் - ஞானமுடிவு . புனம் செய்ய - ஐம்புலக் காட்டினைப் பண்படுத்த.)