Friday, May 18, 2012

பேய், பிசாசு, பூதம்


பேய், பிசாசு, பூதம் இவையெல்லாம் இருக்கிறதா, இல்லை வெறும் கற்பனையா? அவற்றை நேரில் பார்த்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா, அப்படியென்றால் அவை எப்படி, எந்தத் தோற்றத்தில் இருக்கும்? இல்லை, அனைத்துமே ஏமாற்று வேலையா, மூடநம்பிக்கைகள் தானா?- இவையெல்லாம் பரவலாக எல்லோர் மனதிலும் எழும் கேள்விகள். இருக்கிறது என்று ஒரு சிலரும், இல்லவே இல்லை என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர். சென்னையில் இது பற்றியெல்லாம் ஆராய்வதற்காக விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் தலைமையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ‘ஆவியுலக ஆராய்ச்சி மையம்’ செயல்பட்டு வருகிறது. Ghost Lives, Conversations with a Spirit என்று பல தலைப்பினால ஆங்கிலப் புத்தகங்கள் ஹிக்கின்பாதம்ஸிலும், லேண்ட்மார்க்கிலும் குவிந்து கிடக்கின்றன. தமிழிலோ கேட்கவே வேண்டாம், ஆவிகள் பேசுகின்றன, ஆவிகளுடன் நாங்கள், ஆவி உலக அனுபவங்கள் என்றெல்லாம் பல புத்தகங்கள் காணக் கிடைக்கின்றன. உண்மையில் ஆவிகள் இருப்பது உண்மைதானா? இல்லை மனித மனத்தின் கற்பனையா? இந்தக் கேள்விக்கு விடை தேடும் முன் நமது இலக்கியங்களில், புராணங்களில் அவை பற்றி ஏதேனும் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கலாம்.
சிலப்பதிகாரத்தில் பேயும், பூதமும்
உண்மையாக நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே சிலப்பதிகாரத்தை இளங்கோ இயற்றினர் என்பர். அச்சிலப்பதிகாரத்தில் இயற்கைப் பிறழ்ந்த நிகழ்வுகளாக மோகினி, இடாகினிப் பேய், சதுக்க பூதம் என்றெல்லாம் பல நிகழ்வுகள் சுட்டப்படுகின்றன.
“கழல்கண் கூளி”, எனவும்  ‘இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய்’  எனவும் பேயைப் பற்றிக் கூறுகிறது சிலம்பு. வனசாரினி என்ற வன தேவதையைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. மேலும் ஊர் கோட்டம், வேற் கோட்டம், வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம் எனக் காவல் தெய்வக் கோவில்கள் பற்றியும் சிலம்பு கூறுகின்றது. ஐயை கோட்டம் என கொற்றவை வழிபாடு பற்றியும், சாமியாடுதல் பற்றியும் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தெய்வம் ஏறப்பெற்ற சாலினி கண்ணகியைப் புகழ்ந்து கூறுவதாக வரும் காட்சி மிகச் சிறப்பானது. கொல்லிப் பாவை பற்றியும் மிக விரிவாக சிலம்பு சுட்டுகின்றது. பாய்கலைப் பாவை மந்திரத்தை உச்சரித்து வனசாரிணியிடமிருந்து கோவலன் தன்னைக் காத்துக் கொள்கிறான் என்கிறது சிலம்பு. யார் இந்த வனசாரிணி, யார் இந்த பாய் கலப் பாவை? வனசாரிணி என்பது மோகினிப்பேய் அல்லது வன தேவதை. பாய்கலப்பாவை என்பது கொற்றவை தான் என பதில் கூறுகிறது சிலம்பு. சிங்கம் மட்டுமல்ல; மானும் கூட அவளுக்கு ஒரு வாகனமாம்.
நரபலி கொண்ட பூதம் பற்றியும், தவறு செய்பவரை அடித்துக் கொன்று தின்னும் சதுக்கபூதம் பற்றியும் சிலம்பில் காட்சிகள் உள்ளன. அரசபூதம், வணிக பூதம், வேளாண்பூதம் மற்றும் நால்வகைப் பூதங்கள் பற்றியும் சிலம்பு பேசுகிறது.
சிலம்பில் ஆவி வழிபாடு
மறுபிறவி பற்றியும், முன் வினை, அதன் விளைவுகள் பற்றியும் கூட சிலம்பு குறிப்பிட்டுள்ளது. மேலும் இறந்த தேவந்தி, மாதரி, கோவலன் மற்றும் கண்ணகியின் தாய் போன்றோரின் ஆவிகள் மூன்று சிறுமிகளின் மீது ஆக்கிரமித்தலையும், சேரன் செங்குட்டுவன் அவற்றை வழிபட்டதையும் சிலம்பு காட்டுகின்றது. அதுமட்டுமல்ல; கண்ணகியே இளங்கோவடிகளுக்கு ஆவியுருவில் காட்சி தந்தாள் என்றும் ஆசி கூறி வாழ்த்தினாள் என்றும் இளங்கோவடிகளே நூலின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார்.
பாசாண்ட சாத்தன் என்னும் தெய்வம் பற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றது. “தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” என்று இந்திரனின் ஏவலால் பூதம் வந்து நகரைக் காத்ததை சிலம்பு சுட்டுகிறது. மேலும் வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் அது குறிப்பிடுகிறது. இன்றைய சிறு தெய்வ வழிபாட்டிற்கு அடிப்படையாக அது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இது போன்று பல தகவல்கள் சிலம்பு மட்டுமல்லாது, மணிமேகலை, முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப் பரணி போன்ற பல நூல்களில் காணக்கிடைக்கின்றன. இலக்கியங்களில் காணப்படும் எல்லாமே உயர்வு நவிற்சியால் புனைந்துரைக்கப்பட்ட கற்பனைகள்தான் என்றால் கண்ணகி வரலாறும் கற்பனை தானா?

Tuesday, May 15, 2012

உலகம் எப்போது அழியும்

இன்று விஞ்ஞானத்தில் ஒரு எர்த் வருடம் என்று சொல்வதை, அன்று புராணங்களில் தேவர்களின் ஒரு நாள் என்று சொன்னார்கள். தேவர்களின் 12 நாட்கள் - ஒரு கல்பம்; நான்கு கல்பங்கள் ஒரு யுகம்; நாலு யுகங்கள் - ஒரு சதுர் யுகம்; பல சதுர் யுகங்கள் - பிரம்மனின் ஒரு நாள் - பிரம்மனின் ஒரு பகலும் ஒரு இரவும் 34,560 மில்லியன் எர்த் வருடத்துக்கு சமானமாகக் கணக்கு வருகிறது.


ஆக, இன்றைக்கு எர்த் வருடம் என்று மில்லியனில் போடும் வானசாஸ்திரக் கணக்குகள் நம் புராணங்களில் சர்வ சாதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த 34,560 மில்லியன் எர்த் வருடங்களுக்கு ஒருமுறை பிரளயம் ஏற்பட்டு உலகமழிந்து மறுபடியும் உயிர்கள் தோன்றும் என்கின்றன புராணங்கள். அந்த ஒளியும் ஒலியும் தான் சிவன் என்று சொன்னார்கள்.


சிவனைச் சக்தியின் பிறப்பிடமாகவும் இருப்பிடமாகவும் காட்டியவர்கள், சிவனின் பிறையில் சந்திரனை வைத்தார்கள். சந்திரன் = அறிவு. சக்தியைக் சரியாகப் புரிந்துகொண்டு பயன்படுத்த அறிவு அவசியம் என்பதின் அடையாளமே சந்திரன். சிவனின் கழுத்தைச் சுற்றி நிற்கும் பாம்பு, காலத்தைக் குறிப்பது. சக்தியை அறிவால் உணர்ந்துகொண்டு செயல்பட்டாலும், மானுட வாழ்க்கை காலத்துக்குக் கட்டுப்பட்டது என்பதைக் குறிக்க வே இந்த அடையாளம்.


சிவனின் இருப்பிடம் இமாலயம் என்று சொல்கிறோம். இமனின் ஆலயம் இமாலயம். இமன் = சிவன், தேவைப்படும்போது அழிக்கவல்லவன் என்று பொருள். இந்த இடத்தில் அழிவு என்பது, மாற்றத்தைக் குறிக்கிறது. எந்த விஷயத்திலும் மாற்றம் வர வேண்டுமானால், இப்போது இருப்பதை அழித்தால் அல்லது அது அழிந்தால் தான் மாறுதல் (புதியன உருவாதல்) ஏற்படும். எனவே, சிவனை அழிவுக்கான கடவுள் என்பதைவிட மாற்றத்துக்கான கடவுள் என்பதே பொருந்தும்.



ed;wp
Nfhapy;-jpdkyh;

Thursday, May 10, 2012

ம‌ச்ச முனி சித்தர்



ம‌ச்ச‌ முனி பிண்ணாக்கீசரால் வ‌ளர்க்க‌ப்ப‌ட்டு, போதிக்கப்பட்டு அவருக்கு சீடரானவர்.இவரது ஆயுள்காலம் 300 ஆண்டுகள் என்பர்.
இவரது குரு அகத்தியர்,புண்ணாகீசர் மற்றும் காக பசுண்டர் ஆவர்.
இவரது சீடர் கோரக்கர் ஆவார்.இவர் ஹத்த யோகம் மற்றும் தாந்த்ரீக யோக முறைகளையும் உலகிற்கு அளித்ததில் முக்கிய பங்கு வகித்தவர்
க‌ருவூரார் அவ‌ர‌து “க‌ருவூரார் வாத‌ காவிய‌ம்” 523 ஆவது பாட‌லிலும்,அக‌த்திய‌ர் அவ‌ர‌து “அமுத‌ க‌லை ஞான‌ம்” எனும் நூலிலும் ம‌ச்ச‌முனி மீன‌வ‌ இன‌த்தைச் சேர்ந்த‌வ‌ர் என்று கூறிப்பிட்டுள்ளார்க‌ள்.
இவ‌ர் ஆடி மாத‌ம் ரோகிணி ந‌ட்ச‌த்திர‌த்தில் பிற‌ந்த‌வ‌ர் ஆவார்.
இவ‌ர‌து “ம‌ச்ச‌முனி த‌ண்டகம் 100″ எனும் நூலில் போக‌ர் ம‌ற்றும் ந‌  ந்தீச‌ர் ஆகியோரையும் த‌ன‌து குருக்க‌ளாக குறிப்பிட்டுள்ளார்.
இதே நூலில் இவ‌ர் தில்லையில் ப‌த‌ஞ்ச‌லி முனிவ‌ரும்,வியாக்ர‌ பாத‌ரும் சிவ‌ தாண்டவம் கண்டதைக் குறிப்பிட்டுள்ளார்.என‌வே இவ‌ரும் அவ‌ர்க‌ளது கால‌த்தில் வாழ் ந்த‌வ‌ர் என‌க் கொள்ளலாம்.
அக‌த்திய‌ர் 12000 – 5 வ‌து காண்டத்தில் இவ‌ர் காக‌ புசுண்ட‌ரிட‌ம் க‌லைக‌ளைக் கற்றதாக‌க்குறிப்பிட்டுள்ளார்.
இவரது படைப்புகள்:
* ம‌ச்ச முனி பெரு நூல் காவிய‌ம் 800
* ம‌ச்ச‌ முனி  சரக்குவிப்பு 800
* ம‌ச்ச‌ முனி வாகரம் 800
* ம‌ச்ச‌ முனி யோகம் 800
* ம‌ச்ச‌ முனி வைத்தியம் 800
* ம‌ச்ச‌ முனி திருமந்திரம் 800
* ம‌ச்ச‌ முனி ஞானம் 800
* ம‌ச்ச‌ முனி வேதாந்தம் 800
* ம‌ச்ச‌ முனி குறுநூல் 800
* ‌ம‌ச்ச‌ முனி தீட்சை 100
* ம‌ச்ச‌ முனி தண்டகம் 100
* ம‌ச்ச‌ முனி ஞான தீட்சை 50
* ம‌ச்ச‌ முனி காரண ஞானம் 30
* ம‌ச்ச‌ முனி சூத்திரம் 21
சித்தர் மச்ச முனிவர் திருப்பரங்குன்றத்தில் ஜீவ சமாதி அடைந்தவர்.

Tuesday, May 8, 2012

லிங்கமூர்த்தி


லிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு <உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது. உருவமற்றது. ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது. அதுவே அனைத்துமானது, பற்பல குணாதிசயங்களைக் கொண்டது. நிறமில்லாதது, அழிவென்பதே இல்லாதது, ஈரேழு உலகங்களும் தோன்ற, அழிய காரணமாயிருப்பது, இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது. இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.
மேற்சொன்னவாறு  ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட, இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத, உலகம் தோன்ற, அழிய காரணமான இதனை உருவம் உள்ளது, அதாவது சகளம் என்றும், உருவமற்றது  அதாவது  நிட்களம் என்றும் பிரிக்கலாம். மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம்.  லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது. அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும். பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம். இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும்.  லிங்கம் மூவகைப்படும் . அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம். இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம். அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும். பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும்   பிரம்ம பாகம் என்றழைக்கப்படும். பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால் பாகம் என்றழைக்கப்படும். ருத்ரபாகம் ஆணாகவும், திருமால் பாகம் பெண்ணாகவும் பிரமபாகம் பேடு  எனவும் குறிக்கப்படும்.
கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே  ஈசனும் அமைந்திருக்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பற்றி மகாலிங்க தலம் எனும் சிறப்புப் பெற்ற ஊர் மயிலாடுதுறை  அருகே உள்ள இடைமருதூர்  ஆகும். இங்கு சிவபெருமான் தானே லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, பூஜைக்குறிய வழிமுறைகளை வகுத்தும் தந்துள்ளார். இங்கு காவிரி நதி  வில்வத்தால் சிவனைப் பூஜித்தாள். நம்மிடமுள்ள  மும்மலங்களை   அகற்றும்  வல்லமையுடையவர் இவர்.  பிரமஹத்தி    தோஷ பரிகார தலமாகும்.  வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும். இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர்.  இறைவி பெயர் பெருநலமுலையம்மையார் என்பதாகும்.

Friday, May 4, 2012

பக்தி கதைகள்படிச்சா போதாது ... பண்பு வேணும்!

இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து
வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித
உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள்
தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே
தூக்கி மடியில் வைத்தனர். குடலைப்பிடுங்கி மாலையாகப்
போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள்
நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை மகாலட்சுமிகூட அவர் அருகில் செல்ல பயந்தாள். என் கணவரை
இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில்
யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான்
அருகில் செல்கிறேன், என்றாள். அவர் அருகில் செல்லும் தகுதி
அவரது பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது
தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன்
அவரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத் தானே அவர்
அங்கு வந்திருக்கிறார்! தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர்
அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார். பிரகலாதா!
என்னை மன்னிப்பாயா? என்றார். அவனுக்கு தூக்கி 
வாரிபோட்டது சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய 
வார்த்தையைச்சொல்லுகிறீர்கள்? என்றான். உன்னை நான்
அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் 
மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல 
கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற 
மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு,
என்றார் நரசிம்மர். பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள், என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே
கூடாதுஎன்றான். பணம் இருக்கிறது, படிப்பு இருக்கிறது.
ஆனால், ஆசைவேண்டாம் என்கிறான் பிரகலாதன்.
குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்கவும்,
நாடாளவும் மட்டும் அல்ல! இறை
சிந்தனையையும் வளர்த்துக் கொள்வதற்கு!
படித்தால் மட்டும் போதாது. பண்பையும் வளர்த்துக் கொள்ள
வேண்டும். பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை
உருக்கிவிட்டது. பகவானை கண்டு பக்தன் தான் உருகுவான்.
இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த
பகவான் பக்தனைக் கண்டு உருகிப் போனான். இந்த
சின்னவயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம்
என்கிறானே! ஆனாலும்,
அவர் விடவில்லை. இல்லையில்லை!
ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும், நரசிம்மர் விடாமல்
கெஞ்சினார். பகவான் இப்படி சொல்கிறார் என்றால், தன்
மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும் என்று
முடிவெடுத்த பிரகலாதன், இறைவா! என் தந்தை உங்களை
நிந்தித்து விட்டார்.
அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு
வைகுண்டம் அளியுங்கள், என்றான். நரசிம்மர் அவனிடம்,
பிரகலாதா!உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல
பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும்,
அவர்கள் என் இடத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும்
புனிதமடைவர், என்றார். தந்தை கொடுமை செய்தாரே
என்பதற்காகஅவரை பழிவாங்கும் உணர்வு பிரகலாதனிடம்
இல்லை. 
படித்தவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பண்பு இதுதான்

Thursday, May 3, 2012

அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை விசேஷம்


ஒவ்வொரு திதிக்கும், ஒவ்வொரு நட்சத்திரத் திற்கும் அதிதேவதைகள், பிரதி அதிதேவதைகள் உண்டு. அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை திதி நித்யா தேவதைகள் என்று தனி தேவதைகள் ஸ்ரீவித்யா ரகசியத்தில் உண்டு. இதுபற்றி லலிதோபாக்யானம், நவாவரண பூஜை முதலியன விரிவாகப் பேசுகின்றன. ஸ்ரீவித்யை உபாசகர்கள், ஒவ்வொரு திதிகளுக் குமுரிய பூஜா முறைகளை அவரவர் குரு சொன்னபடி செய்கின்றனர். இந்த உலகம் இயங்கி வருவது சூரியன், சந்திரன் என்னும் முக்கியமான இரண்டு கிரகங்களால்தான். சூரியனது வெப்பம் இல்லாவிட்டாலும் சந்திரனின் குளிர்ச்சி இல்லாவிட்டாலும் பூமியில் ஜீவராசிகள் வாழ்வது கடினம். பதினைந்து திதிகளும் சூரிய- சந்திரனை வைத்தே வருகின்றன. 27 நட்சத்திரங்களும் இந்த பூமியில் உள்ள அத்தனை ஜீவராசிகளின் வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளன. நீங்கள் குறிப்பிட்டுள்ள கிருத்திகை மட்டுமல்ல; திருவோணம், திருவாதிரை ஆகியவையும் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும், ஏகாதசி, சோமவார விரதங்களும் உண்டு. இந்த விரதங் களின் தத்துவம் என்னவென்றால்- குறிப்பிட்ட மாதம், குறிப்பிட்ட தேதி, குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் சேரும்போது தர்மசாஸ்திரத் தின்படி புண்ணிய தினங்கள் என்று குறிப் பிடப்பட்டுள்ளன. சாதாரண மனிதர் வரும் பொழுது உபசரிப்பதிலும், அதே மனிதன் பெரிய பதவியை ஏற்றுக் கொண்டு வரும்போது உபசரிப்பதிலும் உள்ள வேறுபாடு நமக்கே தெரியும். அதேபோல்தான் திதியும் நட்சத்திரங் களும் ஒன்றோடு ஒன்று கூடும்போது சிறப் பான நிலைகளைப் பெறுகின்றன.

முன்னோரை வணங்கும் புண்ணிய வழிபாடு!


ஜோதிட சாஸ்திரத்தில் அயனம், பருவம், மாதம், பட்சம், வாரம், நாள், ராசி, நட்சத்திரம், திதி என பல அம்சங்கள் உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து வரும்போது ஒவ்வொரு விரதங்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. வான, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன், சந்திரன் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை‘ ஆகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும்போது புரட்டாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தை ஆன்மீக மாதம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு விரதங்களும் வழிபாடுகளும் பண்டிகைகளும் இம்மாதத்தில் பிரசித்தம்.
 
திதிகளில் மிகவும் சிறப்பு பெற்றது, மகத்துவங்கள் கொண்டது அமாவாசை. இந்நாளில் முன்னோர்களை நினைத்து பூஜை, வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட புரட்டாசி மாதம் வரும் அமாவாசை பிரசித்தி பெற்றது. எனவேதான் இந்த அமாவாசைக்கு பெரிய அமாவாசை எனும் பொருள்படும்படியாக ‘மகாளய அமாவாசை‘ என்று பெயர். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.
 
இந்த காலகட்டத்தை மகாளய பட்சம் என்று அழைக்கிறார்கள். பட்சம் என்பது 15 நாட்களை குறிக்கும். பிரதமை முதல் புரட்டாசி மாத அமாவாசை வரை நம் முன்னோர்கள் இங்கே வருகிறார்கள். இந்த பட்ச காலத்தில் முன்னோர்களை நினைத்து வணங்குவதன் மூலம் அவர்களின் நல்லாசி நமக்கு கிட்டும். மற்ற அமாவாசைகளில் வழிபடாவிட்டாலும் இந்த மகாளய அமாவாசையில் வழிபட்டால் அதிக பலன் உண்டு. இந்த பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரம் மகா பரணி என்றும் அழைக்கப்படுகிறது. அஷ்டமி மற்றும் திரயோதசி திதிகளும் மிகவும் சிற்பபானவை என்று தர்ம சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
 
இறந்த தாய், தந்தையர்க்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள் இறந்த தேதி, திதி போன்றவற்றை மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசையில் திதி, வழிபாடுகள் செய்யலாம். இறந்த தாய், தந்தையரை நினைத்து அவர்கள் படத்துக்கு மாலை போட்டு, அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலைவாழை இலையில் படைத்து வணங்கினால் கர்ம வினைகள் நீங்கும். 
 
துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைப்பதற்கு இந்த நாள் மிகவும் உகந்ததாகும். இந்நாளில் இதுபோல் இறந்தவர்களை நினைத்து பூஜை, வழிபாடு செய்ய அவர்கள் ஆத்மா சாந்தியடையும் என்பது வேதவாக்கு. இந்த நாளில் ஏழை, எளியோர், இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வை தானம் செய்வதும் அன்னதானம் தருவதும் நலம் பயக்கும். காகத்துக்கு உணவிடுவது மிக சிறப்பானது. பசுமாட்டுக்கு கீரை, பழம் போன்றவற்றையும் யானைக்கு பழங்கள், கரும்பு, சர்க்கரை பொங்கல் ஆகியவற்றையும் அளிப்பதால் பாவங்கள், தோஷங்கள், தடை நீங்கி சுபிட்சம் உண்டாகும்.