Thursday, July 12, 2012

யோகாவும் தியானமும் நோய் குணப்படுத்துமா ?

யோகம் என்பதும் தியானம் என்பதும் பலர் குழப்பிக்கொள்ளும் விஷயமாக இருக்கிறது.

அஷ்டாங்க யோகம் என்ற ஒரு முறை உண்டு. அது யாமம், நியமம்,ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்தியாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு நிலைகள் இருப்பதால் அஷ்டாங்க யோகம் என்ற பெயர் பெறுகிறது.


பதஞ்சலி என்பவர் அஷ்டாங்க யோகத்தின் தந்தை என்ற அழைப்படுகிறார். அதற்கு முன் பலர் அஷ்டாங்க யோகத்தை பின்பற்றினாலும் புத்தக வடிவில் அஷ்டாங்க யோகத்தை வடித்தவர் பதஞ்சலி. இவர் 5000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்.

இவரை பற்றி கூற பல விஷயங்கள் உண்டு. இருந்தாலும் இவர் கூறும் சில வார்த்தைகளை கொண்டு நம் கேள்விக்கு பதில் தேடுவோம். அவர் கூறும் சூத்திரங்களில் முதலில் எடுத்தவுடனேயே கூறுவது


“யோகா சித்த விருத்தி நிரோதனா”

இதன் பொருள் , யோகம் என்பது உன் சித்தத்தை மேம்படுத்தி பிரச்சனைகள் இன்றி நிர்வகிக்கிறது.

நம் மனநலத்தின் காரணமான சித்தம் மேம்படுகிறது. சித்தம் என்பது உணர்வதற்கு அரிய ஒரு உள் மன கட்டமைப்பு. பதஞ்சலி நம்முள் இருக்கும் மனம் என்ற உள்நிலையை மூன்று கட்டமைப்புகளாக பிரித்து பதஞ்சலி யோக சூத்திரத்தில் ஆய்வு செய்கிறார். அவை மனம், சித்தம், புத்தி என வகைப்படுத்துகிறார்.

பதஞ்சலியின் இந்த அலசல் அசாத்தியமானது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன் ஒரு மனிதன் மனோத்தத்துவத்தையும், ஆன்மீகத்தையும் இப்படி அலசமுடியுமா என யோசித்ததால் எனக்கு பல நாள் தூக்கம் கேட்டது உண்டு.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம் அவர் இறைவன் என ஒருவன் இருக்கிறான் என ஒரே ஒரு இடத்தில் மறைமுகமாக கூறுவதுடன் நிறுத்திவிடுகிறார். வேறு எங்கும் இறைவனையோ வழிபாட்டு முறையை பற்றியோ கூறுவதில்லை.

நீ இருக்கிறாய் உனக்கு கூறுகிறேன் என்ற கட்டமைப்பில் அமைந்தது பதஞ்சலி யோக சூத்திரம். மேற்கத்திய நாடுகளில் பரவியதற்கு இதுவும் ஒரு காரணம் என கூறலாம்.மேலை நாடுகளில் தத்துவ பள்ளிகளிலும், பல பல்கலைகழகத்திலும் ஆய்வு நூலாக இருக்கிறது.

நம் 
நாட்டில் பதஞ்சலி யோக சூத்திரம் என்பதை ஒரு படித்த மனிதனிடம் கேட்டால் பதஞ்சலியா? - பாஞ்சாலியின் தங்கச்சியா என கேட்கக் கூடும்.

நம் உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவை முழுமை அடையும் நோக்கத்தில் செய்யபடுவதே யோக முறைகள். யோக முறை என்பது முன்பு ஆன்மீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கே பயன்பட்டு வந்து.

யோக முறை இருவகையாக தற்காலத்தில் இருவகையாக பயன்படுகிறது. ஒன்று யோக பயிற்சி மற்றொன்று யோக சிகிச்சை.

யோக பயிற்சி என்பது ஆன்மீக பாதையில் நம்மை செலுத்த உதவும் கல்வி. முன்காலத்தில் குருவுடன் இருந்து பயணித்து கற்றதை ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் கற்றுக்கொள்ளும் பாஸ்ட் புட் பயிற்சிகள்.

இதை தீவிரமாக முயற்சி செய்தால் ஆன்மீகத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவும். இத்தகைய 
பயிற்சிகள் ஆன்மீக கிண்டர் கார்டன் என வேடிக்கையாக சொல்லலாம்.

யோக சிகிச்சை என்பது தனி நபரின் உடல் குறைபாடுகள், மனக்குறைபாடுகள் கண்டு அதற்கான பயிற்சியை அளிப்பது. எளிமையாக சொல்ல வேண்டுமானல் அஷ்டாங்க யோகத்தை மருந்தாக கொடுப்பது பலரும் யோக பயிற்சியையும், யோக சிகிச்சையையும் போட்டு குழப்பிகொள்கிறார்கள். யோக பயிற்சியால் நிச்சயமாக நோய் குணமாகாது. எதிர்காலத்தில் வரும் நோயை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம். ஆனால் யோக சிகிச்சையால் குணமாக வாய்ப்பு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

யோக பயிற்சி மற்றும் யோக சிகிச்சை இரண்டுமே மிகவும் தேர்ச்சி பெற்ற நபர்களால் வழங்கப்பட வேண்டும். 

’தேர்ச்சி பெற்ற’ என்றவுடன் பல்கலைகழக பட்டயம் கேட்டாதீர்கள். பட்டயங்கள் எதுவும் யோகத்தில் வேலை செய்யாது. முழுமையாக உணர்ந்தது நீண்ட நாட்கள் செய்த பயிற்சி மற்றும் அனுபவமே அவர்களுக்கு பயன்படும். பட்டம் பெற்ற அனைத்து மருத்துவர்களும் சிறப்பானவர்கள் என கூற முடியாது அல்லவா? அது போன்றதே இது.

Yoga therapy research என இணையத்தில் தேடிப்பாருங்கள். பல கோடி மதிப்பில் உலகின் பல இடங்களில் ஆய்வுகள் நடந்துவருகிறது. இந்தியாவில் பூனாவிற்கு அருகில் கைவல்ய தாம் என்ற இடமும், முதல் யோக பல்கலைகழகமான பீஹார் ஸ்கூல் ஆப் யோகாவும் யோக சிகிச்சைக்கான தன் ஆய்வுக்கூடம் வைத்து ஆராய்ச்சி செய்கிறார்கள்.

ஹரித்துவாரில் ஒரு ’யோக மன்னன் புலிகேசி’ இருக்கிறார். அவர் தனக்கு மீடியா வெளிச்சம் வரவேண்டும் என்பதற்காக புற்று நோய் குணமாக்குவேன், எய்ட்ஸை குணமாக்குவேன் என பேட்டிகள் தருவார். கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பத்தாயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிப்பார். யோக பயிற்சி அவ்வாறு வழங்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். அவரிடம் முகபொலிவுக்காக வாங்கிய ஆயுர்வேத களிம்பை பயன்படுத்தி பலர் பழைய டெலிப்போன் நிறத்தில் திரிகிறார்கள்.

இந்த புலிகேசி மூன்று மாதத்திற்கு முன் ஹோமோ செக்ஸுவல் என்ற நோயை குணமாக்குகிறேன் என பேட்டிகொடுத்தது. இவர் நோயை யார் குணமாக்குவது? கொடுமையின் உச்சம் இவர் வைத்துள்ள யோக மருத்துவ மனைக்கு பதஞ்சலியின் பெயரை வைத்தது தான்.

எத்துறையிலும் கெட்டவர்களும் நல்லவர்களும் இணைந்தே இருக்கிறார்கள். நாம் பதஞ்சலியை போல ப்ரதிபக்‌ஷ பாவனையில் இருந்தால் நமக்கு மேன்மை மட்டுமே ஏற்படும். பதஞ்சலி, யோகமுறை என பல விஷயங்களை நீண்ட தொடராகவோ, கட்டுரையாகவோ அமைக்கலாம் என இருந்தேன். சூழல் கருதி முடிந்த வரை சுருக்கமாக இங்கே எழுதி இருக்கிறேன்.

வலையுலகம் என்பது நாம் நினைத்ததை எழுதும் இடமல்ல. பலர் பார்க்கும் சந்தையில் நடந்து செல்லுவதை போன்றது. நாம் நினைத்த செயலை இங்கே செய்தோமானால் பிறர் நம் மேல் வைத்திருக்கும் பிம்பம் உடைய வாய்ப்புண்டு. அதுவும் ஊரில் ஒரு நல்லவராக காட்சி அளிப்பவர் திடிரென சந்தை மைதானத்தில் பல்டி அடித்தால் என்னை போன்ற பிச்சைக்காரர்கள் எல்லாம் கருத்து சொல்ல வேண்டி வரும்.

தியானம் என்பது மனம் மூடி அமர்ந்திருப்பது!




பசுமையான மரங்கள் நிறைந்த மலைப்பகுதி....

விலங்குகள் அற்ற வனப்பிரதேசமான அங்கே அடிவாரத்தில் 
ஒரு குகை..

தியானத்திற்காக அங்கே மூன்று ஞானிகள் உட்கார்ந்திருந்தனர்.
மூவரும் குகையின் வாயிலை நோக்கி அமர்ந்திருந்தார்கள்.

குகையின் வெளிப்பகுதியில் குதிரையின் குளம்படி ஓசை கெட்டது...

சராலென... ஒரு குதிரையில் பயணித்த மனிதன் குகையைக் 
கடந்தான்...

மூன்று ஞானிகளும் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தனர்..

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

மூன்று ஞானியரில் ஒருவர் கூறினார்...”அந்த குதிரை வெள்ளை
என நினைக்கிறேன்...”

அங்கே பூரண அமைதி...

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

இரண்டாவதாக இருந்த ஞானி கூறினார் .. “இல்லை இல்லை..
அந்த குதிரை கருப்பு நிறம் தான்.. ”

அங்கே பூரண அமைதி...

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

மூன்றாம் ஞானி கூறினார்... “ இப்படி இடைவிடாமல் பேசினீர்கள்
என்றால் எப்படி தியானம் செய்வது ? நான் இருக்க வா போகவா?” 
என்றார்..

தியானம் என்பது கண்கள் மூடி அமர்ந்திருப்பதில்லை;
மனம் மூடி அமர்ந்திருப்பது என பலருக்கு தெரிவதில்லை.

மெளனம் எனும் பெருவெளியில் உன்னதமான சக்தியின் மேல்
பயணிப்பது தியானம் என கூறி ஒரு மொழியின் சிதறுண்ட 
எழுத்துக்களால் தியானத்தின் தன்மையை சிதைக்க முயல 
விரும்பவில்லை.

தினமும் பல மணி நேரம் தியானம் செய்கிறேன்.... தியானத்தில் 
இருக்கும் பொழுது எனக்கு ஒரு காட்சி புலப்பட்டது என பலர் 
சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். நீங்களும் கேள்விப்படலாம்.

தியானம் செய்யும் ஒருவன் நேரத்தை நோக்கியும், ஒரு
காட்சியாலும் கவனிக்கப்பட்டால் அங்கே அவனுக்கு விழிப்பு
நிலை உண்டு என அர்த்தம். அது தியானம் ஆகுமா?

தியானத்தில் மன எண்ணங்களே இல்லை என கூறுபவர்கள்
உண்டு. மன எண்ணமே இல்லை என்பதை பார்த்தவர் யார்?
மன எண்ணம் இல்லை என்பதே ஒரு எண்ணம் தானே?

தியானம் என்றால் தியானம் + தியானிக்கபடுவது+தியானி
இவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பது என்றார்கள் ஞானிகள்.

தியானம் எப்பொழுது செய்யவேண்டும்? அந்த
வார்த்தையிலேயே இருக்கிறது விடை. “யாஎனும்
எழுத்தை எடுத்து விடுங்கள்

தினம் ஒரு திருமந்திரம் 12/7


இயமம் (தீது அகற்றல்)
(அஃதாவது அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்பு என்பதாம்)

போதுஉகந் தேறும் புரிசடை யான்அடி
யாதுஉகந் தார்அம ராபதிக் கேசெல்வர்
ஏதுஉகந் தான்இவன் என்றருள் செய்திடும்
மாது உகந்து ஆடிடும் மால்விடை யோனே.

பொருள் : சகஸ்ரதளத்தை விரும்பி எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது திருவடியை, எல்லாவற்றாலும் விரும்பியவர் விண்ணுலகை அடைவர். உமை காண நடனம் புரியும் இடப வாகன மூர்த்தி இச் சாதகன் எதை விரும்பி வந்தான் என்று அதனை அருள் புரியும்.