தலமும் இருப்பிடமும்:
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே தஞ்சை செல்லும் சாலையில் 2.கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தலப்பெயர்கள்:
அருள்மிகு ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்
தலவிருட்சம் : வில்வம்
மூர்த்திகள்:
இறைவன்:அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர்
இறைவி:மந்திர பீடேஷ்வரி அருள்மிகு மங்கள நாயகி
தீர்த்தங்கள் : மகாமகம், காவிரி,அரிசெல்லாறு
திருமுறை : ஸ்ரீசம்பந்தர், ஸ்ரீஅப்பர்
தலப்பெருமை:
பிரளய காலத்தில் இறைவன் அருளிய வண்ணம் பிரம்ம தேவர் அமுதத்தையும்
மண்ணையும் சேர்த்துப் பிசைந்து மாயா மயமாகிய குடத்தைச் செய்து அதனுள்
அமுதத்தையும், சிருஷ்டி பீஜத்தை வைத்து குடத்தின் மேல் மாவிலை வில்வம்,
தேங்காய் பூணூல் முதலியவைகளைச் சேர்த்து ஓர் உறியில் குடத்தை வைத்து
மேருமலையில் ஓர் இடத்தில் சேர்க்க, பிரளய வெள்ளத்தில் அக்குடம் மிதந்து
தென்திசை நோக்கி வந்தது. ஓர் இடத்தில் தங்கியது. குடத்தின் மேல் அணியிருந்த
மாவிலை, தேங்காய், வில்வம், பூணூல் முதலியவை பிரளயத்தின் பெருங்காற்றால்
சிதறுண்டு பல் வேறிடங்களில் விழுந்தன. அவை விழுந்த இடங்களில் எல்லாம்
தனித்தனி இலிங்கங்கான் ஏற்பட்டுப் பற்பல கோயில்களாக விளங்குகின்றன. மாவிலை
வன்னி மரமாயிற்று. அப்போது சிவபெருமான் வேட வடிவங்கொண்டு அமுத கும்பம்
தாங்கிய இடத்துக்கு வந்து தூரத்தில் இருந்தபடியே கும்பத்தின் மீது ஓர்
அம்பை (பாணத்தை) எய்தார். பாணம் எய்த இடம் பாணபுரி என்னும் தலமாகும். அந்த
அம்பு அமுத கும்பத்தின் மூக்கைச் சிதைத்தது. அதன் மூலம் அமுதம்
நாலாபக்கங்களிலும் பரவியது. இக்காரணத்தால் இத்தலம் குடமுழுக்கு என்ற பெயரை
அடைந்தது. பின்பு சிவபெருமான் கும்பத்தை அணுகி அமுதத்தால் நனைந்த வெண்மணலை
வாரிக்கும்பத்தில் சேர்த்து இலிங்க வடிவமாகித் தாமும் அதனுள் புகுந்து
மறைந்தார். இவ்விதம் கும்பத்தில் தோன்றியதால் கும்பேஸ்வரர் ஆனார்.
அருள் மிகு கும்பேஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் சற்று புதுமையுடன்
காணப்படுகிறார். பாணம் கீழே பருத்தும் முடி சற்று சிறுத்தும் சாய்ந்தி
ருப்பதும் போல் தோன்றுகிறது. அமுத வெண்மணல் லிங்கமாதலால் தங்கக் கவசம்
சார்த்தியே அபிஷேகம் செய்கிறார்கள் சந்நிதியின் அமைப்பு கண் கொள்ளாக்
காட்சியாக இருக்கிறது.
இக்கோயிலில் அடுத்து ஓர் மணங்கவர் சந்நிதி அம்பாளுடைய கோயிலாகும். அம்பாள்
தம்மை அன்போடு தொழுவோர்க்குத் திவ்விய மங்கள்நாயகி என்னும் பெயரைப்
பெற்றிருக்கிறார். மந்திர பீடத்தில் எழுந்தருளியிருந்து மங்கள பீடேசுவரியாக
நின்று அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
இக்கோயிலில் நவராத்திரி மண்டபத்தின் மேல் இடத்தில் இருபத்தேழு
நட்சத்திரங்களுடன் பன்னிரண்டு இராசிகளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள
சிற்ப மாட்சி குறிப்பிடதக்கது. இதேபோல் சில தெய்வ மாட்சிகளையும்
குறிப்பிடலாம்.
தலச்சிறப்பு:
இக்கோயிற் கருவறை சதுர வடிவுடையது. கருவறையில் உள்ள மூல லிங்கம்
ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது.இக்கோயில் காமிகாகம்
முறைப்படி நித்தம் ஆறு காலப்பூசை நடைபெறுகிறது.
அர்த்த மண்டபம்:
கருவறை முன் உள்ள அர்த்த மண்டபம் தூண்கள் இன்றி எளிமையான அமைப்புடையது.
தென் திசைகளிலும் வடதிசையிலுமாக இரு துவார பாலகர் சிலைகள் வாயிலைக் காத்து
நிற்கின்றன. 123 செ.மீ. உயரமுடைய இவை பிற்காலச் சோழர் காலக் கலையை
வெளிப்படுத்துகின்றன.
மகாமண்டபம்
அர்த்த மண்டபத்தின் முன்புறம் உள்ள மகாமண்டபம் நீள் சதுர வடிவில்
காணப்படுகிறது. இம்மண்டபத்தை வரிசைக்கு மூன்று தூண்கள் வீதம் இரண்டு
வரிசைகளில் ஆறு தூண்கள் தாங்கி நிற்கின்றன. இத்தூண்களின் மேல் இருதலைப்
போதிகையும் முத்திலைப் போதிகையும் அலங்கரிக்கின்றன. போதிகையின்
பக்கங்களிலும் மத்தளத்தின் இசைகேற்ப சதுர நாட்டியமாடும் பெண்களும் பாயும்
சிம்மமும், சுற்றிலும் குழந்தைக்கு விளையாட்டு காட்டும் இரு
பணிப்பெண்களுக்காகச் சில சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள்
பிந்திய சோழர் காலப் பாணியில் அமைக்கப்பட்டு உள்ளன. மகாமண்டபத்தின்
தென்மேற்கு மூலையில் உள்ள மேடை மீது ஆறு கால கணபதி என வழங்கப் பெறும்
இடம்புரி விநாயகரின் நின்ற கோலச்சிற்பம் காணப்படுகிறது. இந்த உருவம்
கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.
சோமஸ்கந்தர் சந்நதி
மகாமண்டபத்தின் தென்புறம் சோமாஸ்கந்தருக்கொன்று தனிச் சந்நிதியும், அர்த்த
முகமண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சோமாஸ்கந்தர் சந்நதியில் அம்மை
அப்பராகத் தோன்றும் சிவனும் உமையும் இருவருக்கும் நடுவே தாமரை மலரேந்தி
நிற்கும் குகனும் அருகில் தனித்து நிற்கும் தனி அம்மனும் அழகிய செப்புச்
சிலைகளாக அமைந்து வழிப்பாட்டில் உள்ளன. இச்செப்பு படிமங்கள் பிற்காலச்
சோழர் காலத்தவை. சோமஸ்கந்தரின் படிமம் கி.பி 12 ஆம் நூற்றாண்டைச்
சார்ந்தது. இச்சந்நிதியில் முன்புறம் சிறிய அர்த்தமண்டபம் அதன் முன்புறம்
சிறிய அர்த்தமண்டபம் அதன் முன்புறம் நான்கு தூண்களை கொண்ட முகமண்டப
மேடையும் அலங்கரிக்கின்றன.
சுவாமி சந்நிதி முகமண்டபம்
முகமண்டபத்தின் முன்புறமுள்ள சதுர வடிவுடைய முகமண்டபத்தின் தென்மேற்கு
மூலையில் ஸ்ரீ சபை விநாயகருக்கும் வடமேற்கு மூலையிலுள்ள ஸ்ரீ
காசிவிசுவநாதருக்கும் தனியாக சிறு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆடல்வல்லாண் -சிவகாமி
இம்மண்டபத்தின் வடதிசையில் ஆடல்வல்லானுக்குத் தனிச்சபை உள்ளது.இங்குள்ள
மேடைமீது ஆடல்வல்லானும்,அருகில் அன்னை சிவகாமியும் செப்பு வடிவில் தென்திசை
நோக்கிக் காட்சி தருகின்றனர். இங்குள்ள ஆடல்வல்லானும் உருவம் கி.பி.10ஆம்
நூற்றாண்டைச் சார்ந்தது. முந்திய சோழர் கலைக்குச் சிறந்த எடுத்து காட்டாகத்
திகழ்வது. ஆடல் வல்லானின் கூத்தை அமைதியோடு கண்டு களிக்கும் சிவகாமியின்
உருவம் இடப்புறத்தில் தாமரை இருக்கை மீது நின்ற கோலத்தில்
காட்டப்பட்டுள்ளது. அன்னை தன் வலக்கை கடக முத்திரையிலும், இடக்கை தொங்கும்
கரகமாகவுமிருக்க இடையை வலப்புறமாக ஒடித்துத் திரிபங்கியாக நின்ற கோலத்தில்
காட்சியளிக்கின்றாள். இச்சந்நிதி தென்திசை நோக்கி அமைந்து உள்ளது.
முற்காலச் சோழர் காலத்திய ஆடல்வல்லானுக்கு நாயக்கர் காலத்தில்
முகமண்டபத்தின் எழுப்பித்துள்ளனர்.
மங்களாம்பிகை சந்நிதி
சுவாமி சந்நிதிக்கு வடபுறம் முதல் திருச்சுற்றில் இத்தலத்துக் காமகோட்ட
நாச்சியாரயான ஸ்ரீ மங்களாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது.சிறு கருவறை அர்த்த
மண்டபம் விமானம் சிகரம் முகமண்டபம் ஆகிய பகுதியுடன் கீழ்த்திசை நோக்கி
அமைந்துள்ளது. கருவறையின் நடுவே தாமரை பீடத்தின் மீது நான்கு கைகளுடன்
நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்ற இவ்வம்மை மந்திர பீடேஸ்வரி
மங்களாம்பிகை என்ற பெயர்களால் அழைக்கப்பெறுகிறார். திங்கள் தோறும் பெளர்ணமி
நாளிலும்,புரட்டாசித் திங்களில் நவராத்திரிப் பெருவிழாவின் போதும் மாசி
மகத்தின் போதும். ஆடி, தை வெள்ளிக் கிழமைகளிலும் அம்மைக்குச் சிறப்பு
வழிபாடு நடைபெறுகிறது.
முகமண்டபம்
முகமண்டபத்தின் முன்புறம் நந்தியும் பலிபீடமும் மேடை மீது அமைக்கப்பட்டு
உள்ளன. முகமண்டபத்தை வரிசைக்கு 7 தூண்கள் வீதம் இரு வரிசைகளில்14 தூண்கள்
அலங்கரிக்கின்றன.இவற்றில் 8 தூண்கள் துதி யாளிகள் பாயும் நிலையில்
காட்டப்பட்டுள்ளன. சீற்றத்தோடு தோன்றும் யாளிகள் வாயிலிருந்து வளைந்து
செல்லும் கொடிக் கருக்குகள் வேலைப்பாடு மிக்கவை. ஏனைய 6 தூண்கள் யாளி இன்றி
வேறுபட்ட சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை. அடுத்து உள்ள தூண்களில் ஒன்றில்
யாளி மீது வலக்காலை ஊன்றி, கால்களில் பாதரட்சையணிந்து இரு கைகளுடன்
ஒய்யிலாக நிற்கும் கொடிப்பெண்களின் உருவத்தைக் காணலாம். இப்பெண்ணின் எதிரே
உள்ள மற்றொரு தூணில் இரு கைகளுடன் கூடிய எழில் வாந்த நங்கையின் தோற்றத்தைக்
காணலாம்.
எழில் வாய்ந்த இச்சிற்ப தூண்கள் அனைத்தும் தஞ்சை நாயக்கர் காலத்தவை.
ஒவ்வொன்றும் 3.5 மீட்டர் உயரமுடயவை. இத்தூண்கள் மீது குந்துசிம்மங்களும்,
பூமுறைகளும், கல்வளையங்களும் அலங்கரிக்கக் காண்கிறோம்.
முதல் திருச்சுற்று
முதல் திருச்சுற்றில் மகாமண்டபத்தின் வடதிசையில் சண்டி கேசுவரின்
சிற்றாலயம் அமைந்துள்ளது.திருச்சுற்று மாளிகையின் கீழ்த்திசையில் 63
நாயன்மார்களுக்கும் தொகையாடியார் ஒன்பதிமருக்குமாக 72 செப்புச் சிலைகள்
வார்த்து வைக்கப்பட்டுள்ளன.இவை அனைத்தும் பணிந்து நின்று வணங்கும்
கோலத்தில் காணப்படுகிறது. இம்மண்டபம் அறுபத்து மூவர் மண்டபம் என்ற பெயரில்
வழங்கப்படுகிறது. இம்மண்டபத்தில் அதிகார நந்தியின் செப்பு வடிவம் ஒன்றும்,
திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் வலஞ்சுழி விநாயகர் உருவம் நான்கு
கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காணப்படுகின்றன.இவ்வுருவம் பிற்காலச் சோழர்
காலமான கி.பி.12, 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. வலஞ்சுழி விநாயகரை
அடுத்து,பிட்சாடன மூர்த்தி சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை,
ஆறுமுகப்பெருமான் ஆகியோர் செப்புப் படிமங்களும் ஸ்ரீ ஜோதிலிங்கம்
அட்சயலிங்கம் கோடிலிங்கம் ஆகிய இலிங்க வடிவங்களும் மகாலட்சுமி, சேட்டை
ஆகியோர் சிலைகளும் உள்ளன.
பள்ளியறை
வடதிசையில் பள்ளியறையில் உள்ள கண்ணாடி பதிந்த வேலைப்பாடு கொண்ட
மண்டபத்தில் ஊஞ்சலில் அம்மையின் திருமேணி உள்ளது. பக்கச் சுவர்களில்
கற்பகத்தரு, காமதேனு இவற்றின் ஓவியங்களும், பார்வதி, சிவலிங்கம் ஆகியனவும்
ஊஞ்சலில் அமர்ந்துள்ள சிவனுக்குத் தேவி பழம் ஊட்டும் காட்சியும் சிவனைத்
தன் மடியில் கிடத்தியிருக்கும் கோலமும், சிவனும் உவமையும் தழுவி நிற்கும்
காட்சியும் ஓவியமாக உள்ளன. இதன் முன்புள்ள கண்ணாடி மண்டபத்தில், எட்டுத்
தேவியரின் உருவங்களும், நாட்டியமாடும் பெண்ணுருவமும், ஆறு கலைஞர்கள்
தஞ்சாவூர் பெண் இசைக்கும் காட்சியும் சமயக்குரவர் பாட பெண்கள்
நாட்டுயமாடும் காட்சியும் ஓவியமாக்கப்பட்டுள்ளன.விதானம், கண்ணடிகளாலும்
வண்ணக் கற்களாலும் அணி செய்யப்பட்டுள்ளது. இராமருக்குத் தனிச் சன்னதியும்,
பைரவர், ஜீரகரேசுவர், யோகமூர்த்தி, கோவிந்த தீட்சதர், அவர் மனைவி ஆகியோர்
சிலைகளும் உள்ளன. இக்கோயில் உற்சவ மண்டபம் ஒன்றும், அலங்கார மண்டபமொன்றும்
உள்ளன.