ஆமை போல நீண்ட காலம் வாழும் ரகசியம்
ஒரு மனிதனோ பிராணியோ நீண்ட காலம் வாழும் ரகசியம் என்ன? அது சாப்பிடும் உணவு காரணமா? மூச்சு விடும் வேகம் (அளவு) காரணமா? காம (செக்ஸ்) உணர்வுகள் காரணமா? சுத்தமான காற்று காரணமா? அதன் எடை காரணமா? மரபணுக்கள் காரணமா? இந்த ஆராய்ச்சிக்கு நேரடியான விடை கிடையாது. ஆயினும் உணவு, மூச்சு விடும் விகிதம் ஆகியன ஒருவரின் ஆயுள் குறையவோ கூடவோ காரணமாகிறது என்பது உண்மை.
நீதி வெண்பாவில் வரும் தமிழ் பாட்டு ஒன்று கூறுகிறது:
“ ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!
இருபோது போகியே யென்ப—திரிபோது
ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்
போகியே யென்று புகல் உண்பான் ”
(ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி நான்குவேளை உண்பான் போகியே போகி (ஆள் அவுட்!) என்பது இதன் பொருள்).
மூவேளை உண்பான் ரோகி நான்குவேளை உண்பான் போகியே போகி (ஆள் அவுட்!) என்பது இதன் பொருள்).
இந்தப் பாடல் நமக்குக் கற்பிக்கும் விஷயம் என்ன? ஒருவன் அதிகம் உண்டால் ஆயுள் குறையும். அதுவும் ஆரோக்கியக் குறைவான உணவு உண்டால் இன்னும் ஆயுள் குறையும். இப்போது மருந்துகள் மூலம் ஆயுளை அதிகரிக்கச் செய்கிறார்கள் என்பது உண்மதான். ஆனால் அவர்களுடைய வாழ்வோ நரக வாழ்வு. இருந்தும் இறந்தவர்களுக்குச் சமம். சுருங்கச் சொன்னால் நடைப் பிணம்.
ஆமைகளை ஆயுளுடன் தொடர்பு படுத்தியும் யோகிகளுடன் தொடர்பு படுத்தியும் வரும்
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து (குறள் 126)
வள்ளுவருக்கு முன்பாக இதை கீதையில் கண்ணனும்(2-58), மனுதர்ம சாஸ்திரத்தில்(7-105) மனுவும்,திவ்யப் பிரபந்தத்தில்(2360) ஆழ்வார்களும் சொல்லிவிட்டார்கள்.
“யதா சம்ஹரதே சாயம் கூர்ம அங்கானீவ ஸர்வச:
இந்த்ரீயாணி இந்த்ரியார்தேப்ய: தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா” (கீதை 2-58)
பொருள்: ஆமை தனது அங்கங்களைச் செய்வதுபோல எப்போது யோகியானவன் புலன்களை இந்திரிய விஷயங்களில் இருந்து எல்லா வகையிலும் உள்ளே இழுத்துக் கொள்கிறானோ அப்போது அவனுடைய ஞானம் உறுதியாகும்.
இது பிராணாயமத்தின் மகிமையைப் புலப்படுத்துகிறது. அதாவது மூச்சுவிடுவதை முறையாகக் கட்டுப்படுத்தினால் ஆயுள் அதிகரிப்பதோடு பல அற்புத சக்திகளும் உடலில் தோன்றும். அதைத் தவறாகப் பயன்படுத்தும்படி தேவதைகள் தூண்டும். அதற்குக் கீழ்படிபவர்கள் சில ஆனந்தாக்கள் (சாமியார்கள்) போல அதோகதிக்குப் போய்விடுவார்கள்.
திருமூலர் இவர்களுக்கு எல்லாம் ஒருபடி கூடுதலாகப் போய் ஆமையைவிட இன்னும் ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழலாம் என்கிறார் (2264 & 2304)
மனிதனும் செக்ஸும்
ஒரு மனிதன் பாலுறவில் ஈடுபடும்போது அவன் சுவாசம் இருமடங்காகிறது. அதாவது நிமிடத்துக்கு 30 முறை. ஒரு சராசரி மனிதன் தனது வாழ்நாளில் 5000 முறை உடலுறவு கொள்கிறான் அல்லது விந்துவை வெளிவிடுகிறான். . ஆனால் யோகிகள் 48 ஆண்டு வரை பிரம்மசர்யம் காக்கிறார்கள். இது வடமொழி நூல்களிலும் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் (திருமுருகாற்றுப்படை) வரும் செய்தி.
கடவுள் (பிரம்ம தேவன்) ஒவ்வொருவருக்கும் இவ்வளவு கோடி மூச்சு என்ற ‘பாங்க் பாலன்ஸுடன்’ (மூச்சு வங்கிக் கணக்குடன்) நம்மை பூமிக்கு அனுப்புகிறான். வேகமாகச் செலவிடுவோர் விரைவில் பரலோகம் சேருவர். மெதுவாக முச்சுக் காற்றை விடுவோர் நீண்ட காலம் வாழ்வார்கள். இதை முறையாகக் கற்றுக் கொடுப்பதுதான் தியானமும் பிராணாயாமமும். ஆனால் விஷயம் தெரிந்தவர்களிடம் இதைக் கற்கவேண்டும்.
ஒரு சுவையான கணக்குப் போட்டுப் பார்ப்போம்: வேதங்கள் மனிதனுடைய ஆயுள் 100 என்று சொல்லுகின்றன. பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற மந்திரத்தைச் சொல்லுகிறார்கள். கண்ணதாசன் இதை ஒரு சினிமாப் பாடலில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்: “ நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வாழ்க” என்று.
நிமிடத்துக்கு 15 முறை சுவாசித்தால் 100 ஆண்டு வாழலாம்
நிமிடத்துக்கு 18 முறை சுவாசித்தால் 83 ஆண்டு வாழலாம்
நிமிடத்துக்கு 2 முறை சுவாசித்தால் 750 ஆண்டு வாழலாம்
நிமிடத்துக்கு ஒரு முறை சுவாசித்தால் 1500 ஆண்டு வாழலாம்.
ரிஷி, முனிவர்கள் இப்படிச் செய்ததாகவும் காட்டில் அவர்கள் மீது பாம்புப் புற்றுகள் வளர்ந்ததாகவும் படிக்கிறோம். திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாகவும் படிக்கிறோம். இப்போது லண்டன் பத்திரிகைகளில் மனிதனை 1000 ஆண்டு வாழச் செய்யும் ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக மரபணு ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்!
பிராணிகள் மூச்சு விடும் அளவு
ஒரு நிமிடத்துக்கு………
மனிதன் 15 முறை சுவாசிக்கிறான் –சராசரி ஆயுள் 100 வயது
ஆமை 5 முறை சுவாசிக்கிறது—150 ஆண்டு முதல் 300 ஆண்டு வரை
பாம்பு 8 முறை சுவாசிக்கிறது-- 30 ஆண்டு (உணவு வேட்டை ஆடுகையில் 15 முறையாக அதிகரிக்கும்)
யானை 12 முறை சுவாசிக்கிறது—90 ஆண்டு
குதிரை 19 முறை சுவாசிக்கிறது— 50
பூனை 25 முறை சுவாசிக்கிறது—13 ஆண்டு
நாய் 29 முறை சுவாசிக்கிறது—14 ஆண்டு
புறா 37 முறை சுவாசிக்கிறது—9 ஆண்டு
முயல் 39 முறை சுவாசிக்கிறது--8 ஆண்டு
திமிங்கிலம் 6 முறை சுவாசிக்கிறது –111 ஆண்டு
யானை 4,5 (படுத்த நிலையில்) முறை சுவாசிக்கிறது —70 ஆண்டு
குதிரை 8-15 முறை சுவாசிக்கிறது —50 ஆண்டு
சிம்பன்சி குரங்கு -14 முறை சுவாசிக்கிறது -40 ஆண்டு
குரங்கு—32- முறை சுவாசிக்கிறது --18-23 ஆண்டு
மூஞ்சுறு—170 முறை சுவாசிக்கிறது --- 1 ஆண்டு
வீட்டு எலி- 95-160 முறை சுவாசிக்கிறது—2 முதல் 3 ஆண்டு
பிராணிகளின் ஆயுட்காலம்
ஆப்பிரிக்க சாம்பல் கிளி— 50 ஆண்டு, அமேசான் கிளி—80 ஆண்டு,இந்திய கிளி—80 ஆண்டு, முதலை— 45 ஆண்டு, நீரில் மட்டும் வாழும் முதலை—68
அமெரிக்க பெட்டி ஆமை- 125, தவளை, தேரை -15
ராணி எறும்பு –3, வேலைக்கார எறும்பு- அரை ஆண்டு, வௌவால்—25, காண்டாமிருகம்—40, கரடி—40, ராணி தேனீ—5, வேலைக்கார தேனி—1, பாம்பு வகைகள்—20 முதல் 30, பசு மாடு—22, மான் –35, கழுதை—45, கழுகு—55, விலாங்கு மீன் –55, கேட் பிஷ் (மீன்) –60,ஆடு—15, ஆந்தை—68, கொரில்லா—20
சிம்பன்சி—40, குதிரை—40, குள்ள நரி—14, சிறுத்தை—17.சிங்கம்-35, கீரி—12
புறா-11, அணில்—16, புலி—22, அன்னம்—102, கங்காரு—9, கோவாலா—8
கலாபகாஸ் ஆமை--200
இந்தப் பட்டியலில் இருந்து ஒரு உண்மை புலப்படும். ராணித் தேனீயை விட வேலைக்காரத் தேனீயின் ஆயுள் மிக மிகக் குறைவு. ராணி எறும்பை விட வேலைக்காரத் எறும்பின் ஆயுள் மிக மிகக் குறைவு. வேகமாகச் செயல்படுவதால் இந்த இழப்பு. இதேபோலத்தான் வேகமாகப் பாயும் சிங்கம், புலி, சிறுத்தைகளின் ஆயுளும் குறைவு.
காய்கறி உணவையே மட்டும் சாப்பிடும் யானை, கிளி போன்றவை நீண்ட காலம் வாழ்கின்றன என்பதும் வியப்பான விஷயம். ஆனால் மூச்சு வேகம் மட்டுமோ, உணவு மட்டுமோ காரணம் என்று கருதிவிடக் கூடாது.
http://swamiindology.blogspot.in/2012/11/blog-post_15.html
No comments:
Post a Comment