Thursday, March 28, 2013

ஜென் கதைகள்



‘புத்தருக்குக் கராத்தே தெரியுமா?’ குறும்புக்காரச் சீடன் ஒருவன் கேட்டான்.

ஜென் குரு சட்டென்று பதில் சொன்னார். ‘தெரியுமே! அவர் பெரிய கராத்தே நிபுணராக இருந்திருக்கவேண்டும் என்பது என் ஊகம்.’

கேட்டவன் முகம் சட்டென்று சுருங்கியது. ‘என்ன குருவே இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? புத்தர் அமைதியைப் போதித்தவர், அடிதடியை அல்ல, அவருக்கு எதற்குக் கராத்தே?’

குருநாதர் மர்மமாகச் சிரித்தார். ‘புத்தர் கராத்தே, குங்ஃபூ, டேக்வாண்டோவெல்லாம் பழகினாரா என்கிற வம்பு நமக்கு வேண்டாம். ஆனால் இதுபற்றி ஒரு சுவாரஸ்யமான பழங்கதை இருக்கிறது. கேளுங்கள்!’

‘போதிதர்மர் முதன்முறையாக சீனாவுக்குச் சென்றபோது, அங்கே இருந்த துறவிகளைப் பார்த்து அதிர்ந்துபோனார். அவர்கள் மத்தியில் யாருக்கும் தங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற அக்கறையே இல்லை.’

‘ஆகவே, போதிதர்மர் அவர்களுக்குச் சில எளிய உடற்பயிற்சிகளை, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அசைவுகளைச் சொல்லிக்கொடுத்தார். இவற்றைத் தொடர்ந்து செய்வதன்மூலம் துறவிகள் தங்களது உடல்நலத்தைப் பராமரித்துக்கொள்ளமுடிந்தது!’

‘இந்த அசைவுகள்தான், பின்னர் பல மாற்றங்களுடன் சீனத் தற்காப்புக் கலைகளாக வடிவெடுத்ததாகச் சொல்கிறார்கள்’ என்று முடித்தார் குருநாதர். ‘ஒருவிதத்தில், நம்முடைய உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்துகொள்வதும் தற்காப்புக் கலைதானே?’

Wednesday, March 27, 2013

தமிழ் மரபின் அடையாளம் கோலங்கள்



தமிழ் மரபின் அடையாளம் கோலங்களின்
கணிதவியல் இயல்புகள் – ஒரு மீள் பதிவு

முனைவர். திருமதி. அ. பெத்தாலெட்சுமி,
இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,
கணினி அறிவியல் துறை,
எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரி,
திண்டுக்கல்.

திருமதி. இரா. இராஜ இராஜேஸ்வரி,
உதவிப்பேராசிரியர், கணினி அறிவியல் துறை,
எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரி,
திண்டுக்கல்.


1. முன்னுரை
கோலங்கள் தமிழ் மரபின் அடையாளம். வட இந்தியாவில் ரங்கோலி, கேரளாவில் பூவிடல், ஆந்திரப் பிரதேசத்தில் முக்குலு என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெற்றாலும் தமிழில் கோலங்கள் என அழைக்கப்படும் வெண் சித்திரங்கள் சிறப்பியல்புகள் கொண்டவை. குறிப்பாக மார்கழி, தை மாதங்களில் செவிக்கு திருப்பாவை கீதங்களும் கண்களுக்கு பல்வகைக் கோலங்களும் என இயற்கையைக் கொண்டாடுபவர்கள் தமிழர்கள். அது மட்டுமின்றி கோலங்கள் தமிழ் மரபின் ஒரு முக்கிய அங்கமாக விழாக்களிலும் சிறப்பான வைபவங்களிலும் திகழ்கிறது.

கோலங்களோடு விழாக்கள் மட்டுமல்ல சூழலியல் சிந்தனைகளும் சமூகக் கோட்பாடுகளும் இணைந்துள்ளன. பண்டைய காலத்தில் வெண்ணிற அரிசி மாவு கொண்டே கோலங்கள் இழைக்கப்பட்டன. எறும்புகளுக்கு உணவாகவே அரிசி மாவு பயன்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாகினும் கோலங்கள் இழைக்கப் பெற்ற இல்லங்கள் விருந்தினர்க்கு நல்ல வரவேற்பையும் பொருந்தும் சூழலையும் கொடுக்கும் என்பது விருந்தோம்பலை அறமாகப் போற்றிய தமிழருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. கோலங்களின் இத்தகைய சிறப்புப் பண்புகள் அரண்மனையைத் துறந்த கௌதம புத்தரைக்கூட இக்கலையைப் பயில வைத்திருக்கிறது [2,3,5]. தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு கோலங்களை பதிவு செய்திருக்கின்றன என்பது பற்றிக் காண்போம்.

2. தமிழ் இலக்கியங்களில் கோலங்கள்
வெகுசில தமிழ் இலக்கியங்களே கோலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து பதிவு செய்திருக்கின்றன. பழந்தமிழ் நூல்களான நிகண்டுகளில் கோலங்கள் பற்றிய குறிப்புகள் இல்லை என்று [8] கூறுகிறது. கோலங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படும் இலக்கியங்கள் நான்கு: நாச்சியார் திருமொழி, கம்பராமாயணம், மீனாட்சியம்மை குறம் மற்றும் குற்றாலக்குறவஞ்சி. சான்றுக்கு சில வரிகள் :
“வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதிவாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்றன் மேல்“
- நாச்சியார் திருமொழி

“தலைமெழுகு கோலமிடு முறை பெறவே
கணபதிவை அம்மே“
- திருக்குற்றாலக்குறவஞ்சி

தமிழர் வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்தது; அறிவியலையும் உள்வாங்கியது. அவ்வாறாகில் கோலங்கள் வெறும் வெண்சித்திரங்களா? இல்லை அதையும் தாண்டிய அறிவியல் பரிமாணம் கோலங்களுக்கு இருக்கிறது. கணிதவியலாளர்கள் பலரும் குறிப்பாக மறைந்த சென்னை கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் கிஃப்டசிரோமெனி இது குறித்து செய்த ஆய்வுகள் ஆங்கிலத்தில் உள்ளன. அவரது குழுவினர் மட்டுமின்றி வெளிநாட்டு ஆய்வாளர்களும் கோலங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர் [12]. அவற்றின் மீதான தமிழ் மீள்பதிவு பின்வரும் பத்திகளில்.

3. கோலங்களின் எளிய கணிதவியல் பண்புகள்
புள்ளிகளை ஒரு சட்டகம் ஆகக் கொண்டு ஒரு புள்ளியில் ஆரம்பித்து இடைவிடாது பல புள்ளிகளைக் கடந்து பின்பு அதே புள்ளியில் இணையும் ஒரு கம்பிக் கோலங்களே மூலக் கோலங்கள். மற்ற கம்பிக் கோலங்கள் காலப் பரிணாம வளர்ச்சியில் மூலக் கோலங்களில் மாற்றம் கண்டவை. இந்த ஆய்வு மூலக் கோலங்களை மட்டுமே மையமாகக் கொண்டது.

பெரும்பாலான கோலங்களின் முக்கியக் கூறு கணிதவியல் பண்பான (Symmetry) சமச்சீர்மை ஆகும். இக்கோலங்களை 90º , 180º, 270º கோணங்களில் சுழற்சி செய்தாலும் மாற்றங்கள் எதுவுமில்லை. புள்ளிக் கோலங்களின் அடிப்படை அலகு (Basic Unit) கம்பிகளின் முடிச்சு. கணிதவியலில் ஒரு வளைவரையான (Curve) Folium of Descartes - ஐ (படம் 1) ஒத்து இருக்கிறது. இதன் சமன்பாடு.
x3 + y3 – 3axy = 0 ஆகும்.




படம் -1


3.1 கோலங்களும் கோட்டுருக்களும்
ஒரு கோலத்தை கோட்டுருவாகவும் (Graph) கொள்ள முடியும் [11]. ஒரு கோலத்தில் உள்ள கம்பிக் குறுக்கிடல்களை புள்ளிகளாகவும் (Vertices) அவற்றை இணைக்கும் கோடுகளைக் கம்பிகளாகவும் (edges) கொள்ளலாம்.


கோலம் இணையான கோட்டுரு
படம் -2

இவற்றை ஆராயும் போது ஒரு ஆச்சரியத்தக்க உண்மை தெளிவாகிறது. பெரும்பாலான ஒரு கம்பிக் கோலங்களுக்கு சமமான கோட்டுருக்கள் எல்லாமே ஆய்லரின் கோட்டுருக்களாகவே [6] உள்ளன.


3.2. புள்ளிகளும் கம்பிகளும்
கணிதவியலில் பல வகை வளைவரைகள் இருப்பதைப் போலவே பல்வகை கோலக் குடும்பங்களும் உள்ளன. உதாரணங்கள் ஆசனப்பலகை, மிட்டாய்ப்பெட்டி, பாரிஜாதம் போன்றவை. இவ்வகைக் குடும்பங்களில் அடிப்படைப் பாங்கு (Basic Pattern) ஒன்று இருக்கும். அதிலிருந்து பெரிய கோலங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
இவற்றில் மிட்டாய்ப்பெட்டி என்றழைக்கப்படும் கோலக் குடும்பத்தைச் சோ்ந்த ஒரு கோலத்தை (படம்-3) முதலில் ஆராயலாம். இந்தக் கோலம் பின்வரும் பொதுவான விதிகளுக்கு உட்பட்டதாய் அமைந்துள்ளது.
1. ஒவ்வொரு கோலமும் புள்ளிகள், கம்பிக் குறுக்கிடல்கள் (Crossings) மற்றும் கம்பிக் குறுக்கிடல்களை இணைக்கும் கம்பிகள் (Edges) கொண்டதாய் இருக்கும்.
2. கோலக் கம்பிகளால் வரையறுக்கப்பட்ட எல்லா வெளிக்குள்ளும் ஒரே ஒரு புள்ளி மட்டுமே இருக்கும்.
3. ஒவ்வொரு குறுக்கிடலிலும் சரியாக நான்கு கம்பிகள் இருக்கும்
இந்த சிறிய கோலத்தின் எளிய பண்புகளைப் பற்றி முனைவர் கிஃப்ட் சிரோமெனி [8] பின்வருமாறு வரையறுத்துள்ளார். புள்ளிகளின் எண்ணிக்கையை a எனவும் கம்பிக் குறுக்கிடல்களின் எண்ணிக்கை c எனவும், கம்பிகளின் எண்ணிக்கையை e எனவும் எடுத்துக் கொள்வோம்.








படம் -3

படத்தில் காணப்படும் கோலம் மேலே சொல்லப்பட்ட கணிதவியல் பண்புகளை நிரூபிக்கிறது. மேற்சொன்ன மூன்று விதிகளை இசைவு செய்யும் கோலங்கள் எல்லாவற்றுக்குமே மேலே நிரூபிக்கப்பட்ட கணிதவியல் பண்புகள் பொருந்தும்.


3.3 கோலத்தை எளிதாக்கும் கணிதம்
தாமரை மலரை ஒத்த தோற்றத்தை உடையது இருதயக் கமலம் என்னும் பெயர் கொண்ட கோலம். மிகவும் சிறப்பான கோலம் எனப் பெயர் பெற்றது. பார்வைக்கு மிக சாதாரணமாகத் தோன்றினாலும் அங்கேயும் இருக்கிறது கணிதம். பொதுவாக அறியப்பட்ட இருதயக்கமலம் எனும் கோலம் எட்டுக் கரங்களையும், ஒவ்வொரு கரத்திலும் ஐந்து புள்ளிகளையும் கொண்டது.


இவற்றை மீள்செய்தல் (repetition) எனும் முறைப்படி வரைவதற்கு ஒரே ஒரு (Tracing sequence) சுவடு தொடர் தான் [9] தேவைப்படுகிறது. அந்தத் தொடர் <1> ஆகும். அதைப் பின்வரும் சித்திரங்கள் காட்டும்.



படம் -4


வரைவதற்கும் நினைவில் கொள்வதற்கும் கடினமான இந்தக் கோலம் கணிதத்தால் எளிதாக இருக்கிறது.
4. கோலங்களும் ஃபிபோனசை எண்களும் (Fibonacci Numbers)
கணிதவியலின் தனித்துவம் மிக்க எண்களில் ஒரு வகை ஃபிபோனசை எண்கள். 0,1,1,2,3,5 ..... என்பது சிறப்புமிக்க ஃபிபோனசை தொடர். இதன் வரையறை பின்வருமாறு: இந்தத் தொடரின் முதல் இரண்டு உறுப்புகள் 0,1. இதில் மற்ற எந்த உறுப்பை எடுத்துக் கொண்டாலும் அது அதற்கு முந்தைய இரு உறுப்புகளின் கூட்டுத் தொகைக்கு சமமானதாக இருக்கும். கணிதவியலின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்
Fn = Fn -1 + Fn -2,
ஆரம்ப மதிப்புகள் F0 = 0, F1 =1 என்பதாக இருக்கும். இவை இயற்கையோடும் இயைந்த எண்கள் ஆகும். இயற்கையின் பல படைப்புகள் ஃபிபோனசை எண்களோடு தொடர்புடையதாகவே இருக்கின்றன.
(உ.ம்) பூ இதழ்கள்.
பெரும்பாலான பூ இதழ்களின் எண்ணிக்கை [1] ஃபிபோனசை எண்களாவே உள்ளன. இவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஃபிபோனசை எண்கள் கோலங்களோடும் இணைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தமிழகக் கோலங்கள் 5x5, 8x8, 13x13 என்று ஃபிபோனசை எண்களையே ஒத்துள்ளன. இத்தகைய கோலங்களில் பின்வரும் நான்கு விதிகளுக்கு உட்பட்ட கோலங்களை ஆய்வு செய்து அவற்றின் கணிதவியல் கூறுகளைப் பின்வருமாறு கூறியிருக்கிறார் பேராசிரியர் எஸ். நாரணன் அவர்கள் [13]:
விதி 1 : கோலங்கள் சதுர மற்றும் செவ்வக சட்டகங்களைக்
கொண்டதாக இருக்க வேண்டும்.
விதி 2 : 90◦, 180◦, 270◦ கோணச் சுழற்சிகளால்
கோலங்களுக்கு மாற்றம் ஏற்படக் கூடாது
விதி 3 : கோலக் கம்பிகளுக்கிடையேயான வெளியில்
கட்டாயம் ஒரு புள்ளி இருக்க வேண்டும்.
விதி 4 : ஒரு கம்பிக் கோலமாக இருக்க வேண்டும்
ஏதேனும் நான்கு தொடர் பிபோனசை எண்களை எடுத்துக் கொள்ளவும். Q = (a, b, c, d) (உ.ம்) (2,3,5,8). இவை பின்வரும் தொடர்பைக் கொண்டிருக்கின்றன. bc = b2 + ab, d2 = a2 + 4bc. இவற்றின் நிரூபணங்கள் மற்றும் மேலும் பல கணிதச் செய்திகள் [13] aaகட்டுரையில் உள்ளன.
அதாவது bxc என்ற செவ்வகக் கோலம் b2 என்ற சதுரக் கோலம் மற்றும் axb என்னும் செவ்வகக் கோலத்தைக் கொண்டிருக்கிறது. அதே போன்று d2 என்னும் சதுரக் கோலம் a2 என்னும் சிறு சதுரக் கோலத்தையும் நான்கு bxc செவ்வகக் கோலங்களையும் கொண்டிருக்கிறது.
(உ.ம்)



52 = 12 + 4 (2x3) 3x5 = 32 + 2x3
படம் -5
இதை கணிதவியல் குறியீட்டு முறைப்படி Fn-2F n-1 = F2 n-2+ F n-3 F n-2 (n >2) எனவும் F2 n = F2 n-3+ 4 F n-2 F n-1 எனவும் வரையறுக்கலாம்.
ஃபிபோனசை எண்களை அடித்தளமாக்கி கொண்டு கோலங்களை பிறப்பாக்கும் புதிய படிமுறை (algorithm) இதோ :
படி : 1. ஏதேனும் ஒரு ஒற்றைப்படை எண்ணை எடுத்துக் கொள்ளவும்.
(உ.ம்) n=9
படி : 2. ஃபிபோனசை எண்களை α=0 முதல் எண்ணாகவும் அடுத்த எண் β =1 என்றும் ஆரம்பித்து ஒற்றைப்படை எண் வரை
(n=9) உருவாக்க வேண்டும்.
படி : 3. n புள்ளிகளை உருவாக்கி கொண்டு அதில் ஃபிபோனசை
எண்களை நிரப்ப வேண்டும்.
படி : 4 தொடங்குக.
படி : 5 முதல் மூன்று புள்ளிகளை எடுத்துக் கொண்டு (ஃபிபோனசை
எண்கள் 0,1,1) நடுவில் ஃபிபோனசை எண் 0 வை (புள்ளி 1) வைத்து இரண்டு புறமும் புள்ளிகள் 2 மற்றும் 3யை இணைக்கவும்.
படி : 6. இதே போல் அடுத்த மூன்று புள்ளிகளை தோ்வு செய்வதற்கு
முதல் புள்ளியாக முன்பு எடுத்த மூன்றாவது புள்ளி இருக்க வேண்டும் (உ.ம்) (3,4,5). இதற்கு ஒவ்வொரு புள்ளியின் ஃபிபோனசையின் மதிப்பையும் முந்தையப் புள்ளியின் மதிப்பிலிருந்து கழிக்க வேண்டும்.
படி : 7. கடைசி வரை இதே போல் செய்யவும்.
மேலே சொல்லப்பட்ட படிமுறையை செயல்படுத்தி, n=9 என்ற
மதிப்பிற்கு பின்வரும் கோலங்கள் கிடைக்கிறது.




இலைக்கோலம் பூக்கோலம்
படம் – 6


இவை கணிதவியலின் கூறுகள் மட்டும் அல்லாது கணினி அறிவியலில் காணப்படும் கூறுநிலை செய்நிரலாக்கத்துக்கும் (modular programming) சான்றாக விளங்குகின்றன. அதாவது ஒரு பெரிய மென்பொருள் சிக்கலை எவ்வாறு பகுத்து சிறு சிறு சிக்கல்களாக்கி அவற்றைத் தீர்ப்பதன் மூலம் மொத்த தீர்வை அடையலாம் என்னும் கருத்தாக்கத்துக்கு உதாரணமாக இவற்றைக் கொள்ளலாம்.
அடுத்து கணினி அறிவியலின் அடித்தளமான முறையமைவு மொழிகளுடன் (Formal Languages) கோலங்கள் எப்படி தொடர்புள்ளதாக உள்ளன என்று ஆராயலாம்.


5. கோலங்கள் பேசும் சித்திர மொழிகள்
1950 களில் நோவாம் காம்ஸ்கி மொழியியலில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தார். பேச்சுமொழிகளை(Natural Languages ) நவீன கணித முறைகளின்படி வரையறுத்தார். கணினி பயன்பாட்டிற்கான மொழிகளுக்கான இலக்கணங்களையும் முறையாக வகுத்து அவற்றை அடித்தளமாகக் கொண்டு முறையமைவு மொழிகளின் (Formal Languages ) படிமரபை ( Hierarchy) ஸ்தாபித்தார். ஒரு முறையமைவு மொழி என்பது வார்த்தைகளை உறுப்பினர்களாகக் கொண்டது. இதில் வார்த்தைகள் என்பது எழுத்துக் கணத்தில் (Alphabet) உள்ள உறுப்பினர்களைக் கொண்டு ஒரு முறையமைவு இலக்கணத்தின் விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட சரங்களாகும் (Generated strings ). (உ.ம்) L = { anbn / n ≥ 1}
இங்கே எழுத்துக் கணம் Σ = {a>b}. இம்மொழியின் சில வார்த்தைகள் ab>
a2b2, a3b3. இவை ஒரு பரிமாணம் கொண்டவை. இவற்றை இரு பரிமாணங்களுக்குக் கொண்டு செல்லும் போது சித்திரமொழிகள் உருவாகின்றன.
சித்திரமொழி என்பது சித்திரங்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு கணமாகும். இதில் சித்திரம் என்பது எழுத்துக்களால் ஆன ஒரு இரு பரிமாண அணியாகும். (உ.ம்) L = { / வலது / { a^ {n>n} / n> 0 } இடது /} இந்த சதுரங்களின் மொழி a a என்னும் எழுத்தால் ஆனது. இதில் உள்ள சில சித்திரங்கள்



a a a a a a
a a a a a
a a a


இந்த மொழிகளை உருவாக்கும் இலக்கணங்களுக்கு அணி இலக்கணங்கள் என்று பெயர் (array grammars). இந்த சித்திர மொழிகளை கோலங்களோடு இணைத்து பல ஆய்வுகள் [7,10] மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
கோலங்களில் பலவகைக் குடும்பங்கள் உள்ளன. அதில் சிறப்பான ஒன்று கிருஷ்ணரின் சதங்கை. அக்கோலக்குடும்ப உறுப்பினர்கள் சில பின்வருமாறு:.




படம் -7
மேலே சொல்லப்பட்ட கோலங்களை சித்திர மொழிகளோடு ஒப்புநோக்கி பின்வரும் முடிவுகளைக் கூறியிருக்கிறது ஒரு ஆய்வு [12]. முதலில் சில குறியீடுகளைப் பார்க்கலாம்.



வெற்றிடம்
A B C



இந்தக் குறியீடுகளை எழுத்துக் கணமாகக் கொண்டு கோலச்சித்திரங்களை பின்வருமாறு உருவாக்கலாம்.

அதாவது Σ = {A>B>C}
A B A B
A C A
B A B
படம் -8
இரு பட வரிசைகளையும் (படம் -7 மற்றும் படம் -8) ஒப்பு நோக்குகையில் கோலங்களுக்கும் சித்திரமொழிகளுக்குமான இணைவு தெரிகிறது. இவற்றின் பயன்பாடு பாங்கு கண்டறிதல் (Pattern Recognition) மற்றும் கணினி வரையம் (Computer Graphics) துறைகளில் உள்ளது. இவ்வகைக் கோலங்களை இடிஓஎல் சுழற்சி இலக்கணம் கொண்டும் [14] உருவாக்க முடியும். இவை மட்டுமின்றி குலக்கொள்கை (Group theory), போன்ற இன்னும் பல துறைகளோடும் தொடர்புடையனவாக உள்ளன கோலங்கள். கோலங்களையும் கணிதவியலையும் இணைத்த இந்த ஆய்வின் நிறைவாக சில வரிகள்.


6. முடிவுரை
முந்தைய பத்திகளில் ஆராயப்பட்ட கோலங்களின் கணிதவியல் பண்புகள், கோலங்களை கணினி முறையில் பதிவு செய்யவும் உருவாக்கவும் பயன்படும் [14]. அது மட்டுமின்றி கலாச்சார மாற்றத்தால் தமிழகத்தின் பாரம்பரிய முகம் மாறிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பெருநகரமாக மாறியிருக்கும் தமிழகத் தலைநகர் சென்னையில் கோலமிடும் முறை அரிசிமாக்கோலத்திலிருந்து சுண்ணாம்பு பொடிக்கோலம், ஒட்டுக்கோலம் என்று கோலம் சார்ந்த உயிர்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. நவீன மேலாண்மை உத்தியான பணிவெளியிடக் கொடுத்தல் (Outsourcing) என்ற முறை இல்லத்தின் முன் கோலமிடும் பணியிலும் நுழைந்து விட்டது. இச்சூழலில் மரபுகள் அழியாது காக்கப்பட வேண்டியவை. அடுத்த தலைமுறையினருக்கு அர்த்தத்தோடு விட்டுச் செல்லப்பட வேண்டியவை. இந்தப் பணியை கம்பீரமாக எழுந்திருக்கும் புதிய தமிழக சட்டசபைக் கட்டிடம் [4] செவ்வனே செய்கிறது. பாரம்பரியமும் நவீனமும் கலந்து நிற்கும் அக்கட்டிடத்தில் அமைந்துள்ள பொதுவெளியில் (Public Plaza) கீழே படத்தில் கண்டுள்ள கோலத்தின் பதிவுகள் 2300 சதுர அடியில் காணப்படுகின்றன. மேலும் இவ்வளாகத்தின் நுழைவாயில் அருகே உள்ள உலோகத் திரையில் 10,000 சதுர அடி கோலப்பதிவுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.




படம் -9


இது அடுத்த தலைமுறையினர் பாரம்பரியக் கோலங்களை அவற்றின் அழகியல் மதிப்புகள் (aesthetic values) தாண்டி கணிதச் சுவை சேர்த்து மீள்பார்வை (review) செய்ய உதவி செய்யும். எனவே தமிழ் மரபின் அடையாளமான கோலங்கள் பற்றிய இந்த ஆய்வு ஒரு ஆரம்பப் புள்ளியே. இது தொடர வேண்டும். தொடர்வதால் கிடைக்கும் ஆய்வின் முடிவுகள் நிச்சயம் தமிழ் மரபின் அடையாளமான கோலங்களை பதிவு செய்தல் மட்டுமின்றி தமிழர்களின் கணிதவியல் பங்களிப்பு தகவல்களையும் உலகுக்கு வெளிக்கொணரும்.

நன்றி

http://tamilennam.blogspot.in/

Monday, March 11, 2013

அரசனுக்கு வேண்டிய தர்மம்


இராமாயணம், மகா பாரதம் என்னும் இரண்டு 
இதிகாசங்களும் நம் பாரத நாட்டின் மிகப்பெரிய 
பொக்கிஷங்கள்! இவ்விரு புராணங்களிலும் 
கதையம்சம் ஒரு பக்கம் இருந்தாலும், அன்பு, 
வீரம், தர்மம், இரக்கம், ராஜநீதி உள்ளிட்ட பலவும் 
நிறைந்துள்ளது. அரக்கர் குலத்திலும் அறத்தை 
அறிந் தோர் இருந்தனர். மகாபாரதத் தில் 
துரியோதனனுடன் பிறந்த நூறு சகோதரர்களில் 
விகர் ணன் என்பவன் தர்மவான். துர்புத்தி உள்ள 
துரியோதன னின் நன்மையை வேண்டி பல 
தர்மங்களை எடுத்துரைத் தான் அவன்.

இராமாயணத்திலும் இராவணனுக்கு அவனுடைய சகோதரர்கள் கும்பகர்ணன், விபீஷணன் போன்றவர்கள் தர்மங்களை எடுத்துரைத்தனர்.
இராமாயண யுத்த காண்டத்தில், இராவண னுக்கு மால்யவான் செய்யும் உபதேசம் கருத்தாழம் கொண் டது. போர் மும்முரமாக நடந்தது. ஸ்ரீராமனுடைய வீரத்தைக் கண்டு இராவணன் மனம் கலங்கி விட்டான்.

இராவணன் மந்திரிசபை யைக் கூட்டி ஆலோசனை நடத்தினான். "வெற்றியை அடைய என்ன வழி?' என்று கேட்டான் இராவணன்.
சீதா தேவியை ஸ்ரீஇராம னிடத்தில் திரும்பக் கொடுக் கக்கூடாது என்ற பிடிவாதத் தோடு இராவணன் இருப்பது தெரிந்திருந்ததால், எதுவும் சொல்லாமல் அனைவரும் மௌனமாக இருந்தார்கள். அப்போது இராவணனுடைய பாட்டனாரான மால்யவான் எழுந்தான். முதிர்ந்த அனுபவம் உள்ளவனும், கிருத யுகத்தில் விஷ்ணுவோடு யுத்தம் செய்தவனும், மதி நிறைந் தவனும், மாவீரனும், வயதிலும் அனுபவத்திலும் உயர்ந்தவனுமான மால்யவான் எழுந்து நின்றவுடன், எல்லாரும் பிரமித்துப் போய் அவனையே பார்த்தார்கள். நிசப்தமான சூழ்நிலை.

அப்போது மால்யவான் இராவணனைப் பார்த்து, ""அரசே! ராஜ தர்மத்தை உணர்ந்தவன்தான் ராஜ்யத்தைப் பாதுகாக்க முடியும். ராஜதர்மம் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பதில்லை. வெற்றி - தோல்வி இரண்டிற்கும் அரசன் தயாராக இருக்க வேண்டும். இவை இரண்டும் அரசனுக்கு நன்மை- தீமை இரண்டையும் உண்டு பண்ணும். தோல்வி அடைந்தால் அரசன் அழிகிறான். வெற்றி அடைந்தால் தோற்றவனைச் சேர்ந்தவ ருடைய அதிருப்திக்கு ஆளாகிறான். அதோடு மட்டுமல்லாமல், தோற்றவனைச் சேர்ந்தவர்கள் மறுபடியும் யுத்தம் செய்து இவனைப் பழிவாங்குவதற்கான சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது யுத்தத்தால் ஏற்படும் வெற்றி- தோல்வியைக் காட்டிலும் ஆபத்தானது. இதைத் தவிர்க்க மூன்றாவதாக ஒரு வழி உண்டு.

அந்த வழி சமாதான மார்க்கம். இதில் இருவருமே ஒத்துப்போவதால் வெற்றிக்கோ தோல்விக்கோ இடமே இல்லை. சமாதானம் மூலமாக ஏற்படும் முடிவு ஸ்திரமானது. சமா தான வழியில் நிற்கும் அரசன் தானும் வெற்றி யோடு வாழலாம்; சத்ருக்களையும் தன்வசமாக் கலாம். ஆனால் இந்த சமாதான வழியைப் பின்பற்றுவதிலும் சிரமங்கள் உண்டு. யாரோடு எப்பொழுது சமாதான வழியைக் கையாளுவது என்பதை அரசனே அப்போதைக்கப்போது காலம் அறிந்து தீர்மானிக்க வேண்டும். நல்ல காலத்தில் சமாதான வழியைப் பின்பற்றினால் மகத்தான ஐஸ்வர்யத்தை அடையலாம். தானும் வாழலாம், பிறரையும் வாழச் செய்யலாம். சத்ருக்களோடு காலம் அறிந்து யுத்தம் செய்ய வேண்டும். யுத்தம் செய்யக்கூடாத சூழ்நிலையில் யுத்தம் செய்தால் அரசன் அழிந்து போவான். செய்ய வேண்டிய காலத்தில் செய்தால் வெற்றியை அடையலாம்.

சமாதானம் செய்துகொள்வது என்பதும் அந்தந்த இடத்தைப் பொறுத்தது. எப் பொழுதுமே சமாதானத்தால் காரியத்தைச் சாதிக்க முடியாது. அவ்விதமே எப்போதும் யுத்தத்தாலும் சாதிக்க முடியாது. தன்னைக் காட்டிலும் வலிமையில் தாழ்ந்தவர்களிடம் யுத்தம் செய்து வெற்றி பெறுவது எளிது. தன் னைக் காட்டிலும் வலிமையில் பெரியவர்களிடம் யுத்தம் செய்ய வேண்டிய நிலை வந்தால் அதற்கும் தயாராக இருக்க வேண்டும். வலிமையில் தாழ்ந்தவர்களுடனோ சமமாக இருப்பவர் களுடனோ சமாதானம் செய்துகொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். சத்ருக்கள் தாழ்ந்த வர்கள் என்பதற்காக அவர்களை அவமானப் படுத்தக் கூடாது. அவர்களோடு போர் புரியவும் கூடாது.

ஆகவே இராமனோடு சமாதானமாகப் போவதுதான் உசிதமான காரியம் என்று எனக் குத் தோன்றுகிறது. பலத்தில் நம்மைவிட இராமன் தாழ்ந்தவனாக இருக்கலாம். ஆனால் தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள் உள்பட உலகத் தில் உள்ள நல்லவர்கள் எல்லாரும் இராமன் பக்கமாக இருக்கிறார்கள். அவர்கள் இராமனுக்கு வெற்றியை வேண்டுகிறார்கள். ஆகவே அவனு டன் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சமாதானமாகவே போவோம்.

எந்த சீதையை அடைவதற்காக இராமன் யுத்தம் செய்ய வந்துள்ளானோ அந்த சீதை யைத் திருப்பிக் கொடுத்து விடுவோம். மன்னா! நான் ஏன் இப்படி ஆலோசனை சொல்கிறேன் என்றால் சூழ்நிலை அவ்விதம் உள்ளது. இப்பொழுது அதர்மம் அடங்கி தர்மமே ஓங்கி நிற்கிறது. நாம் எல்லாரும் அதர்மத்தின் பட்சத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் நாம் அடங்கித்தான் போக வேண்டும். அரசனே! ஒரு உண்மையைச் சொல்கிறேன். ஆதிகாலத்தில் பிரும்ம தேவன் இரண்டே இரண்டு வழிகளைப் படைத்தார். ஒன்றுக்கு தர்மபட்சம் என்று பெயர். மற்றொன்றுக்கு அதர்மபட்சம் என்று பெயர். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டே நிற்பவை. அடிக்கடி மோதிக் கொள்ளும். மனித வர்க்கம் வாழவும் ஓங்கி வளரவும் உதவுவது தர்மம். மனித வர்க்கத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து அழிவுப் பாதையில் செல்ல உதவுவது அதர்மம்.

தேவர்கள் தர்மபட்சத்தைச் சார்ந்தவர்கள். ராட்சதர்களான நாம் அதர்மபட்சத்தைச் சார்ந்தவர்கள். தர்மம் ஓங்கும் காலத்தில் தேவர்கள் பட்சம் ஜெயிக்கும். அதர்மம் ஓங் கும் காலத்தில் நம்முடைய பட்சம் ஜெயிக்கும். அசுரர்களும் நம்மைச் சேர்ந்தவர்களும் தர்மத்தின் கை ஓங்கி அதர்மத்தின் கை தாழ்ந்திருக்கும் காலத்தில் எந்தக் காரியம் செய்தாலும் வெற்றியைக் கொடுக்காது.

தர்மம்- அதர்மம் இரண்டும் மோதிக் கொள்ளும் காலத்தில் தர்மம் ஜெயித்தால் கிருத யுகம் ஏற்படும். அதர்மம் ஜெயித்தால் கலியுகம் உண்டாகும். அதர்மம் ஜெயித்த காலத்தில் நாம் செய்யும் காரியங்கள் பய னுள்ளவையாக ஆயின. அன்று நாம் எடுத்த காரியங்கள் கைகூடின. ஆனால் இன்றுள்ள நிலைமை வேறு. தர்மம் ஜெயித்து அதர்மம் இன்று அடங்கி நிற்கிறது. இந்த நிலையில் நாம் வெற்றிபெற இடமே இல்லை. ஆங்காங்கு யாகங்கள் நடக்கின்றன. உரத்த குரலில் வேதங்களை ஓதுகிறார்கள். ரிஷிகளுடைய அக்னி ஹோத்ர சாலையிலிருந்து கிளம்பும் புகை நான்கு பக்கங்களிலும் பரவி நிற்கிறது. இந்த நிலையில் ராட்சதர்களுக்கு ஜெயிக்க வாய்ப்பே கிடையாது'' என்றான்.

இந்த உபதேசத்தின் மூலம் ஒரு அரசனுக்கு வேண்டிய தர்மத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. இது எல்லா காலகட்டத்திற்கும் பொருத்தமாகவும் உள்ளது.

கண் பெற்ற பயனே சூரியனைக் கண்டு மகிழ்வதற்கு

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது 
பழமொழி. உலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராக 
இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லாவிட்டால் 
செல்வத்தால் பயனில்லை. சுவரை வைத்துத் தானே 
சித்திரம் என்றும்கூட சொல்வதுண்டு.

அதனால் மனிதவாழ்விற்கு மன, உடல் ஆரோக்கியம் 
மிகவும் அவசியம். இதற்குரிய தெய்வமாக சூரியன் 
இருக்கிறார். இவருக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் 
செந்தாமரை மலரிட்டு வணங்கினால் ஆரோக்கியம் 
உண்டாகும்.

"கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யாதே' 
என்பது சூரியனின் பெருமையை எதிர்மறையாகக் 
கூறுவதாகும். இப்பழமொழி "கண் பெற்ற பயனே 
சூரியனைக் கண்டு மகிழ்வதற்கு' என்று குறிப்பிடுகிறது

முதல் மனைவியை நேசியுங்கள்!


ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.

வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.
ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியது
கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், “முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்.” என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.
அதன் பிறகு, அவ்வப்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, “நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.
அவன் கண்களை மூடினான். அப்பொழுது “நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்” என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன் கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க வேண்டும் என்றான்.
உண்மையில் இந்த வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.
1. நான்காவது மனைவி நம்முடைய உடல். அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது. நம்மை விட்டுச் சென்று விடும்.
2. மூன்றாவது மனைவி நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.
3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.
4. நம்முடைய முதல் மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.
 எனவே வாழ்க்கையின் உண்மை அறிவோம்

நன்றி
http://vivekanandadasan.wordpress.com/

மச்ச சம்ஹார மூர்த்தி


சோமுகாசுரன் மூன்று லோகத்தினராலும் அழிக்க முடியாத வரத்தினை சிவபெருமானிடமிருந்துப் பெற்றிருந்தான். அந்த அகந்தையில் பிரமனிடம் சென்று வேதங்கள் நான்கையும் பிடுங்கிக் கொண்டு கடலிலுள் சென்று மறைந்தான். பிரமன் திருமாலிடம் நடந்தவற்றை கூறினான். திருமாலும் பெரிய மீன் வடிவம் ஏற்றார். கடலிலுள் சென்று சோமுகாசுரனைத் தேடிக் கடலையேக் கலக்கியது. பின்னர் ஒளிந்திருந்த சோமுகாசுரனை கண்டுபிடித்து அவனை துன்புறுத்திக் கொன்றது. 

அவனிடமிருந்து பறிக்க வேதங்களை மீண்டும் பிரமனிடம் சேர்ப்பித்தது. ஆனாலும் சோமுகனின் உடலிருந்து வெளிவந்த இரத்தம் சமுத்திரத்தை செந்நிறமாகக்கியது. பின் பெரிய மந்தரம் போன்ற அந்த மீன் கடலை இடித்தபடி கொள்ளாமல் திசை நான்கிலும் பரவி நிரம்பியிருந்தது. அது அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் அழித்து தின்றது. ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி அக்கொடிய மீனை பிடிக்க வேண்டிய வேலையுடன் மீனவர் போல் உருமாறி அக்கடலில் அம்மீனிற்கு தக்கவாறு உருவம் கொண்டு நின்றார். 

வலைவீசி அப்பெரிய மீனைப் பிடித்தார். பின்னர் அதன் கண்னை தோண்டி தன் மோதிரத்தில் பதித்துக் கொண்டார். இதனால் கண்ணிழந்த மீன் வடிவம் கொண்ட திருமால் சிவபெருமானிடம் தன் பழைய உருவைத் தருமாறுக் கேட்க, அவரும் தந்து ஆசி கூறினார். தேவர்களின் வேண்டுகோளின்படி அட்டூழியம் செய்த மீனை அழிக்க சிவபெருமான் எடுத்த உருவமே மச்ச சம்ஹார மூர்த்தி யாகும். இவரை காஞ்சிபுரத்துக் கோயிலில் தரிசிக்கலாம். அங்கு கல் தூணில் இவ்வுருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவர்க்கு வில்வார்ச்சனையும், புளிசாத நைவேத்தியமும் செவ்வாய் அன்று கொடுத்து, எள் தீபமிட தொழில் விருத்தியடையும். பல புதியத் தொழில்கள் தோன்ற ஏதுவாகும்.

தினம் ஒரு திருமந்திரம் 11-03-2013


               மலையார் சிரத்திடை வானீர் அருவி
               நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
               சிலையார் பொதுவில் திருநட மாடும்
                தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.

பொருள் :
மலைபோன்ற சிரசினிடை ஆகாயகங்கை எப்போதும் பாய்ந்து கொண்டேயிருக்கின்ற சுழுமுனை நாடியின் வழியாகச் சென்று, பரநாத ஒலிகூடிய சிற்சபையில் ஆனந்தக் கூத்தாடும் அகலாத ஆனந்தத்தை  நல்கும் சோதியைத் தரிசித்தேன்.

வாந்தி மற்றும் ஜுரம்


தலைவலி மற்றும் வாந்தி என்பது ஒரு வியாதியின் அறிகுறியே ஆகும்... ஆனால் இங்கு பெரும்பாலும் இவற்றை மறக்கடிக்க மருந்து எடுத்துக் கொள்ளப் படுகிறதே தவிர இந்த வாந்தியும் தலைவலியும் வருவதற்கு காரணமான வியாதியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பது குறைவே ஆகும்... இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க நாம் மருத்துவம் படித்திருக்க வேண்டும்... ஆகையால் தலைவலி அல்லது வாந்தி வந்தால் சிறந்த மருத்துவரை சந்திப்பது நல்லது...

வாந்தி வரும் நோயாளிகளுக்கு மருந்தை மாத்திரையாய் கொடுத்தால் உபயோகமில்லை என்ற காரணத்தாலும், சில மருந்துகள் மாத்திரை வடிவத்தில் தர முடியாது என்ற காரணத்தினாலும் ஊசி மருந்து பயன்பாட்டில் உள்ளது.. ஆனால் அனைத்து வியாதிகளுக்கும் ஊசி போட்டு கொண்டால் மட்டுமே குணமாகும் என்ற எண்ணம் படிக்காதவர்கள் மத்தியில் மட்டும் அல்ல படித்தவர்கள் மத்தியிலும் உள்ளது... மிக சிறந்த மருத்துவர்கள் மட்டுமே அனைத்து நோயாளிகளுக்கும் ஊசி போடுவதில்லை... முக்கியமாக ஜுரம் வந்த குழந்தைகளுக்கு ஊசி போடுவது உடல் சூட்டை உடனே குறைக்க உதவுவதால் சில சமயங்களில் பின்விளைவுகள் வருவதற்கு வழி வகுக்கும் [ஆதாரம் தேவைபடுகிறது].  அடிக்கடி ஊசி போட்டு கொள்வதால் நரம்பு மண்டலம் பாதிக்கப் படும் அபாயமும் உள்ளது..

ஜுரம் என்பது என்ன?
நம் உடலில் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் நுழையும் பொழுது அதை ஒழித்துக் கட்ட நம் உடலின் எதிர்ப்பு சக்தியானது நம் உடல் வெப்பத்தை அதிகரித்து அந்த கிருமிகளை கொள்ள பார்க்கிறது.

Monday, March 4, 2013

யாரு முட்டாள்? – சிரிப்பு



முல்லாவின் உடைவாள் – முல்லா கதைகள்


முல்லாவுக்கு வாள் எடுத்துச் சண்டை போட்டுப் பழக்கம் இல்லை என்றாலும் அண்டை வீட்டுக்காரர் அன்போடு தருவதை மறுக்கக் கூடாதே என்று அவருடைய உடைவாளை வாங்கி இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு அவர் பிரயாணத்தைத் தொடர்ந்தார். ஒரு காட்டு வழியாக முல்லா கழுதைமீது அமர்ந்து சென்று கொண்டிருந்தார். நான்கு திருடர்கள் அவரை வழிமறித்துக் கொண்டனர்.
“கிழவனாரே, உம்மிடம் உள்ள விலை உயர்ந்த பொருளைக் கொடுத்துவிடும். உம்மை உயிரோடு அனுப்பி விடுகிறோம் “ என்று திருடர்கள் கேட்டனர்.“என்னிடம் காசு பணமெல்லாம் ஏதுவும் கிடையாதே நான் ஒரு பரம ஏழை” என்றார் முல்லா.“அப்படியானால் உம்முடைய கழுதையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நடந்து செல்லும் “ என்ற கள்வர்கள் மிரட்டினர்.
“என்ன யோசனை ? “ என்று கள்வர்கள் கேட்டனர்.“என்னிடம் ஒரு உடைவாள் இருக்கிறது கழுதைக்குப் பதிலாக அதைப் பெற்றுக் கொண்டு என்னை விட்டு விடுகிறீர்களா ? “ என்றார் முல்லா.கள்வர்கள் உடைவாளை வாங்கிப் பார்த்தனர் விலை மதிப்புள்ள அருமையான வாள் அது. கள்வர்களின் தொழிலுக்கும் அது பயன்படும். அதனால் அவர்கள் மகிழ்ச்சியோடு உடை வாளைப் பெற்றுக் கொண்டு முல்லாவை கழுதையுடன் தொடர்ந்து போக அனுமதித்தனர்.
“உடைவாளைப் பயன்படுத்தி அந்தக் கள்வர்களை விரட்டி அடித்திருப்பீர் என்று நினைக்கிறேன் “ என்றார் அண்டை வீட்டுக்காரர்.“உங்கள் உடைவாள் தான் என் உயிரைக் காப்பாற்றி கழுதையை மீட்டுத் தந்தது. உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் “ என்று முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு நன்றி கூறினார்.“உடைவாள் உங்களிடம் பத்திரமா இருக்கிறதல்லவா ? இனி உமக்கு உடைவாள் தேவைப்படாது. கொடுத்து விடுங்கள் “ என்றார் அண்டை வீட்டுக்காரர்.“உடைவாள் என்னிடம் ஏது ? “ அதைத்தான் அவர்களிடம் கொடுத்துவிட்டேனே என்றார் முல்லா. “கள்வனிடம் கொடுத்து விட்டீரா ?
அவர்களிடம் ஏன் உடைவாளைக் கொடுக்க வேண்டும். உடைவாளைக் கொண்டு சண்டைபோட்டு கள்வர்களை விரட்டியிருப்பீர் என்றல்லவா நான் நினைத்தேன்” என்று வியப்பும் திகைப்பும் தோன்றக் கேட்டார் அண்டை வீட்டுக்காரர்.காட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியை முல்லா விரிவாக எடுத்துச் சொன்னார். அண்டை வீட்டுக்காரருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

பஞ்சமுட்டிக் கஞ்சி



தேவையானவை: 

பச்சரிசி - 2 கைப்பிடி, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்து - தலா 2 தேக்கரண்டி, மிளகு - கால் தேக்கரண்டி, சீரகம் - அரை தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு.

செய்முறை: 

உப்பு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தனித்தனியாக எடுத்துவைக்கவும். பாத்திரத்தில் தேவையான அளவுக்குத் தண்ணீர் ஊற்றி பச்சரிசியை மட்டும் வேகவைக்கவும். முதல் கொதி வந்ததும் கடலைப் பருப்பையும், இரண்டாவது கொதி வந்ததும் துவரம் பருப்பையும் போட்டு வேகவைக்கவும். அதேபோல், மூன்றாவது கொதி வந்ததும் உளுந்தையும், நான்காவது கொதி வந்ததும் பாசிப் பருப்பையும் போட்டு வேகவைக்கவும். அனைத்தும் நன்றாக வெந்ததும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கஞ்சியில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கீழே இறக்கவும்.

மருத்துவப் பயன்: 

வாத நோய்களுக்குப் பலன் தரும். நடக்க முடியாமல் மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்ற உணவு. அதேபோல் இரண்டு வயதாகியும் நடக்க முடியாத குழந்தைகளுக்கு ஊட்டம் அளித்து, நடக்க உதவி செய்யும். ஃபுட் பாய்சன் ஏற்பட்டால், இரண்டு வேளை இந்தக் கஞ்சி சாப்பிட சரியாகும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் துளசி – விஞ்ஞான பூர்வ ஆரய்ச்சி முடிவு



நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி சில துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம், சிறுநீரகம், கண்கள் போன்றவை பாதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் துளசியின் மருத்துவ குணங்கள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்விற்கு எலிகளைப் பயன்படுத்திய இந்த ஆய்வுக்குழுவினர் முதலில் ஸ்ட்ரெப்டோசோசின் என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி எலிகளுக்கு சர்க்கரையின் அளவை அதிகரித்தனர்.
பிறகு துளசி இலையில் இருந்து இவர்கள் கண்டுபிடித்த மருந்தை நாளொன்றுக்கு ஒரு முறை 30 நாட்களுக்கு கொடுத்து வந்தனர். இந்த ஆய்வின் முடிவில் சர்க்கரையின் அளவு குறைக்கப்பட்டிருந்ததோடு, முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், ஈரல் ஆகியவை இந்த துளசி மருந்தால் பாதுகாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
தினசரி இரவில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை தண்ணீரில் ஊறவைத்து அதை காலையில் எழுந்து குடித்து வர நீரிழிவு கட்டுப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் தினசரி துளசி இலைகளை மென்று தின்றாலும் நீரிழிவு கட்டுப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் துளசி இலை ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவல்லது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.