‘புத்தருக்குக் கராத்தே தெரியுமா?’ குறும்புக்காரச் சீடன் ஒருவன் கேட்டான்.
ஜென் குரு சட்டென்று பதில் சொன்னார். ‘தெரியுமே! அவர் பெரிய கராத்தே நிபுணராக இருந்திருக்கவேண்டும் என்பது என் ஊகம்.’
கேட்டவன் முகம் சட்டென்று சுருங்கியது. ‘என்ன குருவே இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? புத்தர் அமைதியைப் போதித்தவர், அடிதடியை அல்ல, அவருக்கு எதற்குக் கராத்தே?’
குருநாதர் மர்மமாகச் சிரித்தார். ‘புத்தர் கராத்தே, குங்ஃபூ, டேக்வாண்டோவெல்லாம் பழகினாரா என்கிற வம்பு நமக்கு வேண்டாம். ஆனால் இதுபற்றி ஒரு சுவாரஸ்யமான பழங்கதை இருக்கிறது. கேளுங்கள்!’
‘போதிதர்மர் முதன்முறையாக சீனாவுக்குச் சென்றபோது, அங்கே இருந்த துறவிகளைப் பார்த்து அதிர்ந்துபோனார். அவர்கள் மத்தியில் யாருக்கும் தங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற அக்கறையே இல்லை.’
‘ஆகவே, போதிதர்மர் அவர்களுக்குச் சில எளிய உடற்பயிற்சிகளை, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அசைவுகளைச் சொல்லிக்கொடுத்தார். இவற்றைத் தொடர்ந்து செய்வதன்மூலம் துறவிகள் தங்களது உடல்நலத்தைப் பராமரித்துக்கொள்ளமுடிந்தது!’
‘இந்த அசைவுகள்தான், பின்னர் பல மாற்றங்களுடன் சீனத் தற்காப்புக் கலைகளாக வடிவெடுத்ததாகச் சொல்கிறார்கள்’ என்று முடித்தார் குருநாதர். ‘ஒருவிதத்தில், நம்முடைய உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்துகொள்வதும் தற்காப்புக் கலைதானே?’
No comments:
Post a Comment