Wednesday, October 17, 2012

இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகள் !


இந்திய மக்கள் தொகையில், 60 முதல் 70 சதவீதம்
வரையிலான மக்கள், வயது வித்தியாசம் இன்றி,
இரும்புச் சத்து குறைபாட்டினால் அனீமியா என்ற
ரத்தசோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

உடலில்,
ஹீமோகுளோபின் (எச்.பி.,) அளவு, 100 மி.லி.,
ரத்தத்தில் 10 கிராம் தான் உள்ளது. இதை 10 ஜி/டி.எல்.,
என்ற அளவில் குறிக்கிறோம். உடலில் ஹீமோகுளோபின்
அளவு, 100 மி.லி., ரத்தத்தில் 11 முதல் 15 கிராம் வரை
இருக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள இந்த குறைபாடு, வேறு எந்த நாட்டிலும்
இந்த அளவுக்கு இல்லை. மற்ற நோய்கள் ஏற்படும் போது 
கடும் காய்ச்சலோ, கட்டியோ உருவாகும். ஆனால்,
ரத்தசோகை நோய் உடனடியாக ஏற்படாது. மெதுவாக
ஏற்பட்டு, மெதுவாகவே அதிகரிக்கும். இந்த நேரத்தில்
வரும் என்றும் கூற முடியாது.
எனவே, இந்நோயைக் கண்டறிவது கடினம்

கண்டறிவதற்கு முன்பே, சம்பந்தப்பட்ட நபர் கடுமையான நோயாளியாகி விடுவார். இதற்கான அறிகுறிகளாக, சோர்வு,
அசதி, தலைவலி, தலை லேசாகிப் போதல், மூச்சிறைத்தல்,
கால், கை சில்லிட்டுப் போதல், நகங்கள் வலுவிழத்தல், நா
வறட்சி ஆகியவை ஏற்படும். கால்கள் ஆடிக் கொண்டே
இருக்கும்;

இதனால் இரவுத் தூக்கத்தில் திடீர் விழிப்பு நிலை ஏற்படும்
பசி எடுக்காது. சத்தான உணவு சாப்பிடத் தோன்றாது. ஐஸ்
கட்டி, சமைக்கப்படாத அரிசி, புழுதி, சாக்பீஸ், கரிக் கட்டை,
பெயின்ட், விபூதி, குங்குமம் ஆகியவற்றை சாப்பிடத்
தோன்றும்.

இரும்புச் சத்து குறைபாடு கொண்ட ரத்தசோகை ஆபத்தானது. ஏனெனில், ஹீமோகுளோபின் உருவாக இரும்புச் சத்து மிக
அவசியம். ரத்தத்தின் சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் காணப்படும். இதன் முக்கிய பணியே, உடல் முழுவதும்
ஆக்சிஜனை எடுத்து செல்வது தான். ஹீமோகுளோபின்
குறைந்தால், சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் குறையத்
துவங்கும்.

ஆண், பெண் இருவருக்குமே, உடலில் இரும்புச் சத்து
குறைந்தபடியே இருக்கும். இறந்த செல்கள் உதிரும் போது,
கழிவுகள் வெளியேறும் போது, தினமும் ஒரு மி.லி., கிராம்
அளவு, இரும்புச் சத்தும் வெளியேறி விடும். மகப்பேறு தகுதி
கொண்ட அனைத்து பெண்களுமே, மாதவிடாய் காலங்களில்
தினமும், கூடுதலாக ஒரு மி.லி., கிராம் அளவும், மகப்பேறு
காலத்தில் 500 மி.லி., கிராம் அளவும் இரும்புச் சத்தை
இழக்கின்றனர்.

எனவே, ஆண்களை விட பெண்கள் ரத்தசோகை நோயால்
அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு ரத்தசோகை
ஏற்படும் போது உடல் சோர்வு, வீடு மற்றும் அலுவலகப்
பணிகளை சுறுசுறுப்பாய் செய்ய முடியாமல் போதல்
ஆகியவை ஏற்படும்.

மகப்பேறு தகுதி உடைய பெண்களுக்கு கருச்சிதைவு,
குழந்தை இறந்து பிறத்தல், ரத்தசோகை உள்ள குழந்தை
பிறத்தல் ஆகியவை ஏற்படலாம். கடும் ரத்தசோகை
ஏற்படின், தாய் உயிருக்கே உலை வைத்து விடும். 
குழந்தைகள்,தாயிடமிருந்தே இரும்புச் சத்தை வாங்கிக்
கொள்கின்றன.

பிறந்து ஆறு மாதம் வரை, தாயிடமிருந்து பெறப்பட்ட
இரும்புச் சத்தே, குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும்.
அதன் பிறகு, இரும்புச் சத்து டானிக் கொடுக்கத் துவங்க
வேண்டும். குழந்தைகளுக்கு ரத்தசோகை இருப்பதைத்
தெளிவாகக் கண்டறிந்து, உடனுக்குடன் சிகிச்சை அளிக்க
வேண்டும்.

இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால்,
குழந்தையின் அறிவுத் திறன் 5 முதல் 10 பாயின்ட்
வரை குறையும். மொழி கற்றுக் கொள்வதில் சிரமம்
உண்டாகும். உடல் வளர்ச்சியும் குன்றும். சோர்வு,
தாமத செயல்பாடு, உணவு சாப்பிடத் தோன்றாமை,
நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், தொடர் தொற்று
ஏற்படுதல் ஆகியவை உண்டாகும்.

விடலைப் பருவத்தை அடைந்த பெண்கள், அதிகளவில் ரத்தசோகையால் பீடிக்கப்படுகின்றனர். மாதவிடாய்
ஏற்படத் துவங்கும் காலமான இந்த நேரத்தில், திடீர்
சோர்வு ஏற்படுவதால், பள்ளிக்கு செல்வதில் சிரமம்
ஏற்படும். கவனம், நினைவுத் திறன் குறையும். நல்ல
முறையில் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும்.
இதனால், பல பெண்களுக்குப் பள்ளிக்குப் போவதே 
பிடிக்காத நிலை ஏற்படும்.
இந்தியாவில் ரத்தசோகை ஏற்பட முக்கிய காரணமாக
இருப்பது, குடலில் புழுக்கள் வளர்வது தான். கொக்கிப்
புழு, கீரைப் புழு, வட்டப் புழு ஆகியவை வயிற்றில்
சேர்வதால், ரத்தசோகை ஏற்படுகிறது. இந்தியாவில்
தாய்ப்பால் மறந்த குழந்தைகள் வயிற்றில் இது
போன்ற புழுக்கள் வளர்வது சகஜமாகி விட்டது.
இதனால், வாழ்நாள் முழுவதும் அவதிப்பட நேர்கிறது.
வயிற்றில் புழு தோன்றுவதைத் தவிர்க்க அனுபவ
ரீதியான மருத்துவம் தான் இந்தியாவில்
பின்பற்றப்படுகிறது. அல்பெண்டிசால் மருந்து
சாப்பிடுவது அல்லது மூன்று நாட்களுக்கு, இரண்டு
வேளை மெபெண்டசால் மருந்து சாப்பிடுவது என்ற
நிலை உள்ளது

சரியான முறையில், சரியான அளவு மருந்து
சாப்பிடவில்லை எனில், வயிற்றில் எல்லா புழுக்களும்
அழியாமல், சதை வழியே மற்ற பாகங்களுக்குப் பரவும்
நிலை ஏற்படும். கீரைப் புழு ஒருவரிடம் இருந்தால்,
வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் வந்து விடும்.

இதனால், இந்தப் புழுவை அழிக்க, வீட்டில் உள்ள
அனைவரும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
இரண்டு வாரத்திற்குப் பின், மீண்டும் சிகிச்சை எடுத்துக்
கொள்ள வேண்டும்.
இது போன்ற புழுக்கள் வயிற்றில் வளராமல் இருக்க:
1. சமையல் செய்வதற்கு முன், கையை நன்கு சுத்தப்படுத்திக்
கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னும், ஒவ்வொரு
முறை சிறுநீர், மலம் சென்ற பின்னும், கையை மிகச்
சுத்தமாகக் கழுவ வேண்டும்.

2. கையில் நகங்கள் வளர்ந்தால், இடுக்குகள் இல்லாமல்,
சீராக கத்தரிக்கப்பட வேண்டும்.

3. பச்சைப் பழங்களைச் சாப்பிடக் கூடாது. நன்கு
சமைக்கப்படாத காய்கறிகளை சாப்பிடக் கூடாது.
காய்கறிகளை நறுக்குவதற்கு முன், நன்றாகக் கழுவ
வேண்டும்.

4. படுக்கை விரிப்புகளை, வாரத்திற்கு இரு முறை மாற்ற
வேண்டும். துவைத்த விரிப்புகளை, வெயில் படும்படி
உலர்த்த வேண்டும்.

ரத்தசோகை ஏற்படாமல் இருக்க:
1. நாள் ஒன்றுக்கு, 10 முதல் 15 மி.லி., கிராம் வரை
இரும்புச் சத்து நம் உடலுக்குத் தேவைப்படுகிறது.
மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஆட்டுக்கறி, கோழிக்கறி,
இறால், வஞ்சிரம் மீன் ஆகியவற்றில் இரும்புச்
சத்து அதிகம்.

2. சைவம் சாப்பிடுபவர்கள், சோயா, கோதுமை, ஓட்ஸ்,
உலர் பழங்கள், பசலைக் கீரை, உலர் திராட்சை
ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

3. காய்கறிகளில் உள்ள சில ரசாயனங்கள், அதில்
உள்ள இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவதற்குத் தடை
ஏற்படுத்தி விடுகின்றன. எனவே, ஆட்டுக் கறி, மீன் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் இரும்புச் சத்தை விட,
காய்கறியில் கிடைக்கும் சத்து குறைவானதே. எனவே,
காய்கறிகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

4. குழந்தைகளும், பெண்களும் இரும்பு ஊட்டச்சத்து
மாத்திரைகள் சாப்பிட வேண்டும். உணவுடன் சாப்பிட்டால்
அதிக பலன் கிடைக்கும். தினமும் ஒரு மாத்திரை என
சாப்பிடத் துவங்கலாம்.

5. எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடன் சாப்பிடலாம்
அமிலம் கலந்த சாறு, இரும்புச் சத்து உடலில் நன்கு
உறிஞ்சிக் கொள்ள உதவும். இதனால் மலச்சிக்கல்
ஏற்பட்டால், கூடவே வாழைப்பழமோ, கொய்யா பழமோ
சாப்பிடலாம். இரும்புச் சத்து மாத்திரையுடன், கால்சியமோ,
துத்தநாகச் சத்து நிறைந்த மாத்திரையோ சாப்பிடக் கூடாது.

6. அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து மற்றும்
பாலிக் ஆசிட் அடங்கிய சத்து மாத்திரைகள்
கொடுக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் இப்படி
கொடுப்பதில்லை. பெற்றோராகிய நாம் தான், நம்
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட
வேண்டும்.

                                                                                     -தினமலர்

No comments:

Post a Comment