Wednesday, October 31, 2012

சூட்சுமசக்திகள்


reincarnation‘நான்’ என்ற எண்ணமும், தன்முனைப்பான ஆர்வமுமே ஒரு மனிதனின் வாழ்வியல் கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ள வைக்கின்றது. சாதனை செய்யத் தூண்டுகின்றது. ஒவ்வொரு மனிதனும் ‘தான்’ என்ற தன் முனைப்புடன் தான் உலகில் செயல்படுகிறான். ‘தன்னுடையது,’ ‘தனக்கு’ என்பது அவன் பிறந்து வளர்ந்து இந்த உலகை உணரத் தொடங்கும் பொழுதே வளர ஆரம்பித்து விடுகிறது. இறக்கும் வரை தொடர்கின்றது. இரண்டு வயதுச் சிறு குழந்தையே ஆனாலும்,  ஒரு பொம்மையை அதனிடமிருந்து பிடுங்கினால், ‘என்து, வேணும், கொண்டா’ என்றெல்லாம் அழுகிறது.
இந்தத் ‘நான்’ என்ற தனிமனித எண்ணமே ‘அகங்காரம்’ என்றும் ‘ஆணவம்’ என்றும், அதுவே ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடை என்றும் பல சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. பிறந்த உடனேயே, மனிதனை ‘மாயை’ சூழ்ந்து கொள்வதால் தான், அவனால் அதனை மீறிச் செயல்படவும் முடிவதில்லை. அதிலிருந்து விடுபடவும் முடியவில்லை. அதற்கான சரியான வழிமுறையும் மனிதனுக்குத் தெரிவதில்லை. ஆக, இந்தத் தன்முனைப்பு என்பது  வாழ்வியலுக்கு ஆதரவாகவும், இறையை உணர்வதற்குத் தடையாக உள்ளதாகவும் கொள்ளலாம். ஆனால் ஒரு விஷயம் இங்கு சிந்திக்கவேண்டியதாகிறது. ஒவ்வொரு செயலையும் மனிதன் தன் ஈடுபாட்டோடு தான் செய்கிறானா? இல்லை. ஏதேனும் சில சக்திகள் அவனை அவ்வாறு செய்யுமாறுத் தூண்டுகிறதா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியதாகிறது.
உண்மையில் அனைத்துச் செயல்களையும் செய்வது யார்? நாம் தானா? அல்லது நம்மை ஆட்டி வைக்கும் ஏதேனும் சூட்சும சக்திகள் அவ்வாறு நம்மைத் தூண்டுகின்றனவா?. நாம் தான் என்றால் ஏன் இவ்வளவு சிக்கல்கள், குழப்பங்கள், தவறுகள், வேதனைகள்? அல்லது அந்த சூட்சும சக்திகள் தான் என்றால் ஏன் பல தோல்விகள், துயரங்கள், சோதனைகள்?. அவற்றின் சக்திகள் தான் எவ்வளவு? இதெல்லாம் நாம் சிந்திக்க வேண்டியவையாக உள்ளன.
உண்மையில் அந்தச் சூட்சும சக்திகள் என்பது எது? ஏன் அவை நம்மை ஆட்டிப் படைக்கின்றன? அவை நல்லவையா, கெட்டவையா?. அதற்கான விடைகளை நம்மால் உணர முடிவதில்லை. ஒருசிலருக்கு நன்மை தருபனவாகவும் மற்றவர்களுக்கு ஏன் தீமை செய்பவனவாகவும் அவை ஏன் நடந்து கொள்கின்றன?.  அதற்கு என்ன காரணம்?. நாம் செய்த, பாவ, புண்ணியங்களா?. இல்லை. வேறு ஏதெனும் நம்மால் அறிய இயலாத காரணங்கள் உள்ளனவா?. நமக்குத் தெரியாது. நம்மால் அவ்வளவு எளிதில் அவற்றை அறிந்து கொள்ளவும் இயலாது. ஏன் நன்மை செய்பவர்கள், நல்லது நினைப்பவர்கள் துன்பப்படுகின்றனர், தீயவர்கள் வசதியோடு, செழிப்பாக வாழுகின்றனர்?. அதற்கு ஏதேனும் சிறப்பான காரணம் உண்டா?  மனிதன் செய்த கர்மவினை தான் காரணமா?. அல்லது வேறு ஏதேனும் சூட்சுமமான செயல்பாடுகள் உள்ளனவா?. விடை அறிவது மிக மிகக் கடினம்.
MWS-50-Reincarnationஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்கிறது நமது சாத்திரம். அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன என்றும் அது கூறுகிறது. அப்படியென்றால், அந்த நவக்கிரகங்களை சாந்தி செய்து விட்டால், பரிகாரம் செய்து விட்டால் போதுமே, ஊழிலிருந்து தப்பித்து விடலாமே! இப்படி எண்ணத் தோன்றும். ஆனாலும் அவை சாத்தியமா?
ஏனெனில், நம்மை ஆட்டி வைப்பவை வெறும் நவக்கிரகங்கள் மட்டுமல்ல; அதற்கும் மேலான, இறைவனின் ஏவலைச் செய்து முடிக்கக்கூடிய சில தேவதாம்சங்களும் உள்ளன என்பது தான் உண்மை. அவை தான் நம்மை வழிநடத்துகின்றன. நம்மை சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்கின்றன. துன்பத்திலிருந்து காக்கின்றன. அதே சமயம் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற விதிப்பாடு இருக்குமானால், அவற்றை அவன் அனுபவிக்குமாறும் விட்டு விடுகின்றன. அவற்றின் மூலம் அவன் தான் செய்த தவறை உணர்ந்து, தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே இவற்றின் நோக்கம்.
இவ்வகை சூட்சுமசக்திகளே தேவதைகளாகப் போற்றப்படுகின்றன. இவை, மனிதனின், மூளையில் தங்களது எண்ண அலையைப் பிரயோகித்து, அவரவர் கர்மவினைக்கு ஏற்றவாறு, அவனை நல்ல வழியிலோ, அல்லது தீய வழியிலோ செயல்படத் தூண்டுகின்றன. பாவ, மத்திய, புண்ணிய ஆவியுலகங்களையும் கடந்த நிலையில் வாழும் இவ்வகைத் தேவதைகள், இறைவனின் ஏவலர்களாகப் பணிபுரிகின்றன. இவற்றில் நல்ல தேவதைகளும் உண்டு. தீய தேவதைகளும் உண்டு. பிரதமர், அமைச்சர் என படி நிலையில் அரசு செயல்படுவது போல, இவ்வகைத் தேவதைகளும், இறைவனின் தலைமையில் செயல்படுகின்றன.
இது போன்ற தேவதைகள் வழிபாடு, இந்து மதத்தில் மட்டுமல்லாது, முஸ்லிம், கிறித்துவ, சொராஸ்டிரிய மதங்களிலும் காணப்படுகின்றன. கிறித்துவ மதத்தில் இவை ‘ஏஞ்சல்’ என்றும், இசுலாமியர்களால், ‘ஜின்’ வானவர், தூதர் என்றும் இவை குறிப்பிடப்படுகின்றன. மேலும் தீயவற்றைச் செய்யும் சாத்தான்களும், மலக்குகளும் உண்டு.
தேவதூதர்கள் இயேசு பெருமானுக்குக் காட்சி அளித்ததாக பைபிள் கூறுகின்றது. நபி பெருமானும் தேவதூதர்களால் ஆசிர்வதிக்கப்பட்டே குரானை அருளினார். இந்து மதத்திலும் தேவதைகள் சிறப்பிடம் பெறுகின்றன. ஹோமங்கள், யாகங்கள் யாவற்றிலும் அவற்றிற்கு அவிர்ப்பாகம் அளிக்கப்படுகின்றன. மேலும், சில தீய தேவதைகளும் உண்டு. சில குறி சொல்பவர்கள், சோதிடநிபுணர்கள், யக்ஷணி போன்ற தேவதைகளை உபாசனை செய்து, தங்களை நாடி வந்திருப்பவரைப் பற்றிய உண்மையான நிலையை அறிந்து, அதை அவர்களிடம் எடுத்துக் கூறி பொருள் ஈட்டி வருகின்றனர். அவற்றிலும் பல வகைகள் உள்ளன. அவ்வவற்றின் தன்மைக்கேற்ப அவற்றை, குறி சொல்ல, அடுத்தவர் மனதில் இருப்பதைக் கண்டறிய, ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பணம் நகைகள் போன்றவற்றைக் கண்டறிய, களவு போன பொருட்கள், காணாமல் போன மனிதர்கள் பற்றி அறியப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் மிகக் கொடூரமானவைகளும் உண்டு. சற்று கொடூரம் குறைந்தவையும் உண்டு. தன்னை உபாசிப்பவர்களையே பழிவாங்கும் யக்ஷிணிகளும் உண்டு.
இவற்றில் தேவ யக்ஷணியும் உண்டு. அசுர யக்ஷனியும் உண்டு. அசுர யக்ஷணிகள் துர் தேவதைகளாகவும், நீச தேவதைகளாகவும் கருதப்படுகின்றன. யக்ஷனிகளில் கர்ண யக்ஷணி, தாம்பூல யக்ஷணி எனப் பலவகைகள் உள்ளன. மேலும் யோகினி, சாகினி, டாகினி, ஹாகினி, மோகினி எனப் பல தேவதாம்சங்களும் உண்டு.
சில மாந்த்ரீகர்கள், இது போன்றவற்றை உபாசித்து, தீய காரியங்கள் சிலவற்றிற்கு உபயோகப் படுத்துகின்றனர். இறுதியில் அவற்றாலேயே அழிந்தும் போகின்றனர்.
இந்துமதத்தைப் பொறுத்தவரை, தேவதைகள் அனைத்தும், சப்தமாதாக்களின் கட்டுப்பாட்டில் வருகின்றனர். ஸ்ரீ சக்ர மகாமேருவில் வீற்றிருந்து இவ்வுலகைப் பரிபாலிக்கும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் காவல் நாயகிகளாக இந்த சப்தமாதாக்கள் விளங்குகின்றனர். ஒவ்வொரு சிவ ஆலயத்திலும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சன்னதியின் எதிரே இவற்றிற்கு சன்னதிகள் இருக்கும். இம் மாதாக்களுக்குக் காவலாக ஸ்ரீ சாஸ்தா அல்லது அய்யனார் இருப்பார். சில சமயங்களில் சில முனிவர்களின் திரு உருவங்களும், விநாயகப் பெருமானின் சன்னதியும் கூட அடுத்து இருக்கும். இச் சப்த மாதாக்களில் வாராஹி மிகவும் சக்தி வாய்ந்தவள். கேட்ட வரம் தருபவள். இவளை வழிபட்டுத் தான் சோழச் சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் மாபெரும் வெற்றி அடைந்தான் என்பது வரலாறு. தஞ்சாவூர் அரண்மனையை ஒட்டி ஸ்ரீ வாராஹிக்கு தனி ஆலயம் உள்ளது. தஞ்சை பிரகீதீஸ்வரர் ஆலயத்திலும் தனிச் சன்னதி உள்ளது. இது போக சப்த மாதாக்களான பிராமி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி ஆகியோரை வழிபட நன்மைகள் பெருகும்.
எனவே, நம்மை நாமே அறியாமல் கட்டுப்படுத்தும் தேவதைகளின், சூட்சும சக்திகளின் பாதுகாப்பினைப் பெற சப்த மாதாக்களையும்,  ஸ்ரீ சக்ர மாதாவினையும் சரணடைவோம். வளம் பெறுவோம்.

நன்றி

No comments:

Post a Comment