Saturday, July 20, 2013

பாப மூட்டைகளைச் சுமக்கும் புண்ணிய ஆத்மாக்கள்


ஒரு ஜீவன் இந்த உலகில் ஜனித்த உடனேயே அவருடைய ஜாதகம் அவரது பூர்வ புண்யத்தைத் தெளிவாக உணர்த்தி விடும். 12 வயதுக்கு மேல்தான் ஒரு ஜீவன் பாபங்களைச் செய்ய ஆயத்தம் ஆகின்றது என்கின்றது ஜோதிட சாஸ்திரம். 12 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் ஸ்திரம் இல்லை என்பதினால் சொல்லப்பட்ட கருத்து இது. உலக நடப்பு மனதுக்குப் புரிய ஆரம்பிக்கும் இந்தக் காலகட்டம் முதல் ஒருவனுக்கு நல்ல படிப்பினைகள் போதிக்கப்பட்டால் நிச்சயம் அவனால் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்காமல் இருக்க இயலும். எந்த கிரகம் இவனுக்குப் பாபங்களைச் செய்யத் தூண்டப் போகின்றது என்பதை 12 பாவங்களில் உள்ள கட்டங்கள் நிச்சயம் சுட்டிக்காட்டும். இதற்கான நிவர்த்திகளை ஆரம்பம் முதலே பெற்றோர்கள் மேற்கொண்டால் பாப மூட்டைகள் நம் முதுகினில் ஏற்றப்படமாட்டது என்பதே உண்மை.

நல்ல காரியங்கள், தர்மங்கள், தானங்கள் செய்வதன் மூலமே புண்யங்கள் ஒருவருக்குச் சேர்கின்றன. நல்லதையே நினைப்பவருக்கு நல்லதே நடக்கின்றது என்றால் அந்த நல்லதை நினைக்கச் செய்வதும் இந்த ஒன்பது கிரகங்களின் வேலைதானே… பாபகிரகங்கள் பாபத்தைச் செய்யமங தூண்டாமல் இருக்க அந்தக் கிரகத்தினுடைய அத்தேவதையை ஆராதிக்கும் பழக்கத்தை ஆரம்பத்தில் இருந்தே அந்த ஜீவனுக்கு அறிவுறுத்திவிட்டால் பாபகிரகங்கள் தன் வேலையைச் செய்ய மறக்கச் செய்துவிடலாமே. கஷ்டங்களும் நஷ்டங்களும் எல்லோருக்கும் வராமல் இல்லை. எந்த கிரகம் அந்த நேரத்தில் கஷ்டங்களை ஏற்படுத்துகின்றது என்று உணர்ந்து அதற்கான பரிகாரங்களை மேற்கொண்டால் பாபங்கள், துன்பங்கள் விலக்கப்பட்டுப் புண்யங்களைச் சேர்த்துக்கொண்டு விடலாமே…

அவரவர் சக்திக்குத் தகுந்த பரிகாரங்களைச் செய்வதே புண்யங்களை அதிகரிக்கும் செயலாகும். செய்ய முடியாத பரிகாரங்களைப் பல ஜோதிடர்கள் கூறி அதைச் செய்ய முடியாமல் போகும் நபர்களின் மன வேதனையால் அவர்கள் மட்டும் இன்றி ஜோதிடர்களும் அதற்கான பாபத்தினைத் தன் வாழ்நாளில் சேர்த்துக்கொள்கின்றார்கள். பரிகாரங்களைப் பற்றிக் கூறும் சாந்தி குசுமாகாரம் பரிகாரங்களைப் பற்றி சொல்பவர்கள் பற்றியும் தெளிவாக இப்படிக் கூறுகின்றது.

ஆழியூர் பரந்தாமன் அந்த ஊரிலே பெரிய ஜோதிடர். அவர் அகத்துக்காரி பசு மாடு ஒன்று வேண்டும் என்று தினமும் நச்சரித்துக்கொண்டே இருந்தார். பசும்பால் சாப்பிட வேண்டும்… பால் வாங்கிக் கட்டுப்படியாகவில்லை என்பது அவரது குறை.

அன்று ஜோதிடம் பார்க்க வந்த நபருக்குப் பரிகாரம் சொல்லும்போது ஜாடை காட்டினார்… மாமி,

ஒரு நல்ல ஜாதி கறவை பசுமாடு வாங்கி தானம் செய்யுங்கள் என்னைப் போன்ற உத்தம ப்ராமணனுக்கு… உடனே இதைச் செய்ய வேண்டும்… என்றும் கட்டளை போட்டார் ஜோஸ்யர்.

அடுத்த நாள் ஜெர்ஸி பசு ஒன்று வந்து கட்டப்பட்டது ஜோஸ்யராத்துக் கொட்டிலில். தன் சக்திக்கு மீறிக் கடனை வாங்கி மனம் வேதனைப்பட்டு தானம் செய்யப்பட்ட பசு என்பது பற்றியெல்லாம் கவலைப்படுவாரா ஜோஸ்யர்…

மாமிக்கு பரம சந்தோஷம்… பால் கறப்பதற்காக ஆசையாகப் பெரிய சொம்பை எடுத்துக்கொண்டு ஆயத்தமானார் மாமி. பால் கறக்க ஆரம்பித்ததுதான் தெரியும் மாமிக்கு… கண் விழித்துப் பார்த்தபோது பிரபலமான ஹாஸ்பிடலில் மிசிஹிஇல் இருப்பது புரிந்தது. மாடு கொடுத்த ப்ரயோகம் மாமிக்கு முகத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி… செலவு நாற்பதாயிரத்துக்கும் மேல். தன் தேவைக்காகச் சொன்ன பரிகாரத்துக்கு ஜோஸ்யராத்து மாமிக்குப் பலன் நன்றாகவே கிடைத்தது.

கலியுக தர்மத்தில் செய்த பாபங்களுக்குத் தண்டனை இந்த ஜென்மத்திலேயே பெரும்பாலும் கிடைத்துவிடுகின்றது. ஆனாலும் தெரியாமல், புரியாமல் தவறு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது. தவறு செய்தவர்கள் திருத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள், பரிகாரங்கள் ஜோதிட சாஸ்திர ரீதியாகச் சொல்லப்பட்டும் உள்ளன. ஆனால் தெரிந்தே செய்யும் தப்புகளுக்கான பரிகாரங்கள் செய்தாலும் இந்த ஜென்மத்தில் பலன் கிடைப்பதும் இல்லை. அவர்கள் வருந்த வேண்டிய சூழ்நிலையே உள்ளது. அப்படிச் சேர்க்கும் பாப மூட்டைகள் அடுத்த ஜென்மத்தில்தான் அனுபவித்தே தீர்க்கப்பட இயலும்.

கலியுகத்தில் அன்னதானம், வேத ப்ராமண ஆசிர்வாதங்கள் போல் புண்ய பலன்களைத் தருவது எதுவும் இல்லை என்கின்றது தர்ம சாஸ்திரம். தான தர்மங்கள் தனது வருமானத்தில் பத்து சதவிகிதமாவது செய்ய வேண்டும் என்று மற்றய மதங்கள் வலியுறுத்துகின்றன. நமது இந்துமத தர்மத்தில் சதவிகிதங்களைப் பற்றிக் கூறாவிட்டாலும் தனது சக்திக்குத் தகுந்த தான தர்மங்களைச் செய்து புண்யங்களைச் சேர்த்துக்கொள்ளலாம். அனாஸாயேன மரணம் வினாதைன்யேன ஜிவீதம் பெற்றவர்கள்தான் வாழ்வில் புண்யங்களைச் சேர்த்தவர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பாப மூட்டைகளை என்றுமே சுமக்க விரும்பாத உண்மையான புண்ய ஆத்மாக்கள் இவர்கள்.

சேர்த்து வைத்துள்ள பாப கர்மாக்களை முழுவதும் இந்த ஜென்மத்திலேயே போக்கிக்கொள்வதற்கான வழிகள் பலவாறு தர்ம சாஸ்திரங்களிலேயும், ஜோதிட சாஸ்திரத்திலும் சொல்லப்பட்டு இருந்தாலும் மனம் என்னவோ அடுத்து வரும் ஜென்மத்தின் மீதுள்ள வேட்கையால் பாப மூட்டைகளை மீண்டும் மீண்டும் சுமக்கத்தானே விரும்புகின்றது.

No comments:

Post a Comment