Saturday, July 20, 2013

இந்துத்துவம்- VI

கன்னியை தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பக்கத்து வீட்டு காளைக்கு தமிழ்க்கூட்டம் என்ன தண்டனை கொடுத்தது தெரியுமா?
`இதோ பாரடா... நீ அவளை தொட்ட முதல் ஆண்மகன். அதனால் அவள் உனக்குரியவள்தான். உன்னுடன்தான் வாழ வேண்டும் அவள்’ என இரண்டு பேரையும் சேர்த்து வைத்தது தீர்ப்பு.
இஃது களவியல் என்றால்... தமிழர்களின் இன்னொரு சிறப்பு, சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது பாருங்கள். காதலை அஃதாவது கற்பியலை.
``யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...’’
நானும் நீயும் யார் யாராகவோ இருந்தோம். என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் சொந்தக்காரர்கள் என்றும் தெரியாது. நானும், நீயும் எங்கிருந்து வந்தோம் எனவும் இப்போது தெரியவில்லை.
ஆனாலும்... இந்த அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லாமல் அன்பு கொண்டோம்... எப்படி தெரியுமா... செம்மண்ணிலே பெய்யும் மழைநீரும் செந்நிறம் அடைந்துவிடுகிறதே. அதுபோல அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள் இரண்டும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது.
இப்படி காதல் வாழ்க்கையிலும் நாகரிகத்தின் சிகரத்தில் இருந்தனர் தமிழர்கள்.
இவ்வாறு களவியல், கற்பியல் இரண்டு விஷயங்களிலுமே முன்னணியில் இருந்த தமிழர்களின் கல்யாணங்களில் `தாலி’ வந்த கதை சுவாரஸ்யமானது.
திருநெல்வேலி போன்ற பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில், ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்துகொண்டான் என்றால்... பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி அதில் `இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள்’ என எழுதி ஒரு நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுவார்கள்.
பனைமரத்துக்கு `தால்’ என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக் கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது. பிறகு இந்தத் தாலியில் பெயருக்கேற்றவாறு பனையோலை இல்லாமல்... பவுன் கட்டித் தொங்கவிட்டதெல்லாம் மாற்றத்தின் அடையாளங்கள்.
``இவ்வளவு கஷ்டப்பட்டு களவியல் செய்கிறீர்களே... இவ்வளவு மகிழ்ச்சியுடன் காதல் மணம் புரிகிறீர்களே? இவற்றையெல்லாம் முறைப்படி சடங்குகள் செய்து விழாக்களாக கொண்டாடினால்தானே மகிழ்ச்சி என்றும் கூடும்?’’
கல்யாண கலாச்சாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள்.
ஒன்றா, இரண்டா? எக்கச்சக்க சடங்குகள். என்னென்ன.... ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.
1. திருமணத்துக்கு முன்பே இந்த பெண்ணுக்கு இவன்தான் கணவன் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பெண் தரப்பில் பொருள்களை மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு பெயர் நிச்சயதாம்பூலம்.
2. கல்யாணச் சடங்குகள் ஆரம்பிக்கின்றன.
முதலில் காசி யாத்திரை.
சந்நியாசம் வாங்கவேண்டுமென்றால்... மகனே கல்யாணத்துக்கு முன்னரே நீ சந்நியாசம் வாங்கிவிட வேண்டும். அதைவிட்டு கல்யாணத்துக்குப் பிறகு துறவறம் போகிறேன் என சொல்லி பெண்ணின் வாழ்வை படுத்தாதே.. என சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
அதனால் கல்யாணத்துக்கு முன் `காசியாத்திரை’ என்றொரு சடங்கு.
அதாவது மாப்பிள்ளை குடைக்கம்பை பிடித்துக்கொண்டு காசிக்கு புறப்படுவதுபோல `பாவ்லா’ (Drama) செய்யவேண்டும். மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி மறுபடி திருமணத்துக்கு அழைத்துப் போவார்கள்.
3. ஊஞ்சலாட்டுதல்
குழந்தாய்... நீ பெண்ணோடு சந்தோஷமாக இருக்கும்போது அவருடன் ஊஞ்சல் பலகையில் அமர்ந்து ஆனந்தமாய் ஆடுவாயாக என்பது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது கல்யாணம் என்றால் மஹஸ். அதாவது (Festival) கொண்டாட்டம் இதற்காகத்தான் ஊஞ்சல்.
4. மாலை மாற்றுவது:
இது க்ஷத்திரியர்களின் கலாச்சாரம். மணமகனும், மணமகளும் சுக துக்கங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் மாலை மாற்றிக் கொள்வார்கள்.
5. திருஷ்டி சுத்தி போடுவது. மணமக்களுக்கு யார் கண்ணும் பட்டுவிடக் கூடாது என்பதற்காக உறவினர்கள் எல்லாம் மணமக்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள்.
6. நீராஜனம் எனப்படும் ஆரத்தி எடுப்பது.
7. இது முக்கியமானது. பெண்ணும், பையனும் இப்போதுதான் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ளவேண்டும். மந்த்ரங்கள் ஒலிக்க... பெண்ணை உட்கார வைத்து அவள் தலையில் தண்ணீரை மெல்ல மெல்ல ஊற்றி குளிப்பாட்ட வேண்டும்.
8. பிறகு... முழுக்க நனைந்த அவளை... உள்ளே அழைத்துச் சென்று மணமகனே அவளுக்கு புடைவை உடுத்திவிட வேண்டும்.
அவளது நனைந்த புடைவையை களைந்துவிட்டு... புதுப் புடைவையை மணமகன் உடுத்திவிடும்போது... இந்த சேலை வளர்வதுபோல் நம்முடைய மகிழ்ச்சி. சந்ததியெல்லாம் வளரவேண்டும் என்பதற்காகத்தான் இப்புடைவைச் சடங்கு.
இன்னும் இருக்கும் கல்யாணச் சடங்குகளையும்... அவை மறுபடியும் எப்படி மாறின என்பதையும் அடுத்து பார்ப்போம்.

No comments:

Post a Comment