அகம் கோயில்
உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு
நம் உள்ளம் ஒரு பெரிய கோயில், ஊனாகிய இந்த உடம்பு ஓர்ஆலயம். வள்ளலான கடவுளைப் புகழ்கின்ற இந்த வாய்தான்அந்தக் கோயிலுக்குக் கோபுர வாசல், தெளிவான உண்மையை உணர்ந்தவர்களுக்கு உள்ளே இருக்கும் ஆன்மா(ஜீ(சீ)வன்)தான் கடவுள் (சிவலிங்கம்), நம்மை ஏமாற்றக்கூடிய கள்ளத்தனம்நிறைந்த ஐந்து புலன்களும்தான் இருட்டைப் போக்கும் மணிவிளக்குகள்
துக்கடா
- இந்தப் பாடலில் ’கள்ளப் புலன்கள்’ என்பது மிக முக்கியமான வார்த்தை – நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை உலக இன்பங்களின்பக்கம் இழுத்துவிடக்கூடியவை கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்கள். ஆகவே அவற்றைக் ‘கள்ளப் புலன்கள்’ என்று அழைத்தார்கள் – கள்வனைக் கட்டுப்படுத்தி வைப்பதுபோல் புலன்களை அடக்கப் பழகவேண்டும் என்பது பொருள்
- இன்றைய அரிய வார்த்தை – காளம் = இருட்டு (காளா = இருட்டு இல்லாத)
- உதாரணங்கள்:
- 1. காளக உடையினன் – சீவக சிந்தாமணி
- 2. காளக உருவு கொண்ட கடுவினை… – கந்த புராணம்