இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. எல்லா உயிர்களிலும் உயிரை உறுதியோடு நிலைக்க செய்வது உயிர்ப்பாகிய காற்றே! காற்றை உட்கொள்வதும், வெளிவிடுவதும் சுவாசமாகும். இந்த நிலையை கூட்டியோ குறைத்தோ இயங்க வைக்கலாம்! மூச்சு பயிற்சி இதற்கு தேவை!
சுவாசிக்கும் காற்றை கட்டுபடுத்துவதை பிராணாயாமம் என்று சிலரும், வாசி யோகம் என்று சித்தர்களும், அழைத்தனர்!
பிராண வாயுவின் அசைவு எதுவோ அதுவே சித்தத்தின் அசைவு. பிராணனது சலனத்தை ஜெயிக்க முயன்ற சித்தர்கள் வாசியோகம் பயின்று சகல சித்திகளையும் பெற்றனர்!
காற்றை வேகமாக உள்ளிழுத்து விடுவது மூச்சு பயிற்சி. ஆனால் பிராணாயாமத்தில் காற்றை மெதுவாக உள்ளிழுத்து, இருத்திவைத்து, பின்னர் மெதுவாக வெளி விடுவது என்று மூன்று நிலைகள் உண்டு. ஒரு கால அளவில் மூச்சு பயிற்சி கட்டுபாட்டுடன் நிகழ்வதே பிராணாயாமம் அல்லது வாசி யோகம்!
வாசி யோகம் என்பது உயிர் உட்கொண்டு வெளி விடும் வாயுவை கட்டுபடுத்தும் உயர்ந்த யோகமாகும். உடல் உணவை உட்கொள்வதுபோல உயிர், காற்றை உட்கொள்கிறது. இங்கே உள்ளே உயிருக்காக இழுக்கப்படும் வாயு பிராணவாயு, வெளியே மூச்சாக வெளிவிடும் வாயு அபானவாயு. இந்த இரண்டின் போக்கையும் கட்டுபடுத்தி பிராணவாயுவில் அபானவாயுவையும், அபான வாயுவில் பிராண வாயுவைய்ம் கூட சித்தர்கள் கட்டுபடுத்துகின்றனர்!
பிராணாயாமத்தால் உள்ளம் ஒருமை பெறுகிறது, உயிர் திண்மை பெறுகின்றது. நினைத்ததை நினைத்தபடி எய்தும் உள்ளம் அமைகிறது.
உயிர்ப்பு அடிப்படையில் தான் அனைத்து உயிர்களுக்கும் ஆயுள் அமைகிறது. விரைந்து சுவாசிக்கும் உயிர்களுக்கு வயது குறைவு (ஆடு, மாடு, நாய் போன்றவை). மெல்ல உயிர்த்து, இழுத்து, இருத்தி மெல்ல மூச்சு விடும் உயிரினங்கள் நீண்ட நாட்கள் வாழ்வதை காணலாம் (மனிதன், ஆமை, யானை போன்றவை).
நமது உடலிலுள்ள 72000 நரம்புகளும் பத்து நாடியில் அடங்கும். இதனை தச நாடி என்பர். இந்த பத்தும் மூன்று நாடியில் ஒடுங்கும். சந்திர நாடி மூக்கின் இடது பக்கத்தில் பொருந்தி உள்ளது. சூரிய நாடி மூக்கின் வலது பக்கம் பொருந்தி உள்ளது. சுழுமுனை நாடி புருவ நடுவில் அமைந்துள்ளது.
சந்திர நாடியை இடகலை என்பர். சூரிய நாடியை பிங்கலை என்பர். சந்திர நாடி - சக்தி, சூரிய நாடி சிவம், பூரணம், சூன்யம்.
பிராணாயாமத்தில் வெளி வாயுவை உட்கொள்வது பூரகம். அவ்வாயுவை உள்ளே நிறுத்துதல் கும்பகம், கும்பித்த வாயுவை வெளி விடுதல் ரேசகம் எனப்படும்!
"ஏற்றி இறக்கி இரு காலும் பூரிக்கும் கணக்கரிவாரில்லை
காற்றை பிடிக்கும் கணக்கரிவார்க்கு கூற்றை
உதிக்கும் குறியதுவாமே"
என்கிறார்.
நமது உடலை சித்தர்கள் மூன்று பகுதிகளாக பிரிக்கின்றனர். அவை, ஆதவன், அக்னி, சந்திரன் என்பவை.
த்யானத்த்தால் அக்னியை மூலாதாரத்தில் நிறைய செய்து, குண்டலினியை எழுப்புகின்றனர். இதற்கு வாசி யோகம் நிறையவே உதவி பண்ணுகிறது. குண்டலினியை உசுப்பி நாகமாக படமெடுக்க செய்து அதன் சஞ்சாரத்தை மேல் நோக்கி அனுப்பிட வாசி யோகம் உதவி செய்கிறது. இப்படி மேல் எழும்பும் குண்டலினி இந்த பயணத்தின் போது பல இதழ்களையுடைய ஆறு ஆதாரங்களிலும் ஒவ்வொன்றாய் பொருந்தும்போது ஏற்ப்படும் அதிர்வு காரணமாக ஒலி தோன்றுகிறது. இந்த ஒலியை கேட்ட பின்னரே குண்டலினி சஹஸ்ராரத்தை அடைகிறது. சஹாஸ்ராரத்தில் உள்ள சிவம் எனப்படும் விந்துவுடன் நாத தத்துவமாகிய குண்டலினி அல்லது வாலை (சக்தி) இணையும். இந்த நிலையே சிவசக்தி ஐக்கியம் எனப்படும். இந்த நிலையில் சுரக்கும் ஊற்றை வானாறு என்றும், சந்திர அமிர்தம் என்றும், மாங்காய் பால் என்றும் கூறுவார். இந்த சந்திர வட்டத்து அமுத தாரையை உண்டார்க்கு உணவு தேவை இல்லை. உடம்பு உணவின்றியே அழியாமல் இருக்கும் என்று சாகா கலைக்கு சாதனமாக இந்த குண்டலி யோகத்தை கூறுகின்றனர்.
தூய காற்றை போலவே தூய நீரும் உடலை வளர்த்தும். நாளும் விடிகாலை பொழுதில் மூச்சு பயிற்சிக்கு முன் வெறும் வயிற்றில் எவ்வளவு தண்ணீர் அருந்த இயலுமோ அவ்வளவு அருந்த வேண்டும். தொடக்கத்தில் சிறிது சிறிதாக ஆரம்பித்து மூன்று அல்லது ஐந்து குவளை அளவு வரை அருந்தவேண்டும். இவ்வாறு விடிகாலை பொழுதில் ஒரே காலத்தில் அருந்தும் நீர் அமுதமாகி உடலை நோயின்றி நீண்ட நாள் வாழ வைக்கும். நீர் அருந்துகின்ற அளவிற்கும் நீர் அருந்துகின்ற காலத்திற்கும் ஏற்ப பொருந்தி அமுத தன்மை மிகும்.
இவ்விதம் செய்யும் நீர் பயிற்ச்சியால் குட்ட நோய் கூட மருந்தின்றி குணமாகும் என்று சித்த வைத்தியத்தில் கூறப்படுகிறது.
வாழ்க்கை/உணவு முறை உடலின் நோயற்ற தன்மையை நிறைய அளவுக்கு பாதிக்கிறது. அரை வயிறு உணவு, கால் வயறு நீர், கால் வயிறு காற்று உலவிட சிறிய இடம் என்ற முறையில் உண்ணுதலே சிறந்தது. வயதுக்கு தக்க அளவு, செரிமான அளவு அறிந்து அரை வயிறு உண்ணுவதையே அளவறிந்த உணவாக கூறுகின்றனர்.
உண்ட பின்னே உறங்குவதும், நீராடுவதும், உடலுறவு கொள்வதும் உடல் கேட்டிற்கு வழிவகுக்கும். உணவில் கல், மயிர், உமி சேர்வதாலும் நோய் வரும். பனியில் திரிவதாலும், மிகுந்த உணர்ச்சிகளாலும், பால் தயிர் ஒரு சேர உண்பதாலும் நோய் வரும்.
தேரையர் இதை
"திண்ணமி ரண்டுள்ளே சிக்கல டக்காமல்
பெண்ணின்பால் ஒன்றை பெருக்காமல் உண்ணுங்கால்
நீர்சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி உண்பவர்தம்
பேருரைக்கில் போமே பிணி"
என்கிறார். அதாவது மலம், சிறுநீர் அடக்காமல், புணர்ச்சியை அதிகம் கொள்ளாமல், உண்ணும் நீரை காய்ச்சி வடித்து அருந்தலாம். நெய்யை உருக்கியே உணவில் சேர்த்தல் வேண்டும். மோரை மிகுதியாக அருந்த வேண்டும். இதை கடைபிடித்தால் நோய் நம்மை அணுகாது. சித்தர்கள், இந்த பிராணாயாம யோகத்தை நன்கு கவனமுடன், அதி ச்ரத்தையுடன் பயில வேண்டும் என்று உபதேசிக்கின்றனர். காரணம் எல்லா யோக சித்தியையும் அடைவதற்கு இதுவே முதல் படி.
பிராணாயாமத்தில் முதலில் மன அமைதியுடன் பத்மாசனத்தில் அமர்ந்து பழக வேண்டும். ஆணிற்கு வலது பக்கமும் பெண்ணிற்கு இடது பக்கமும் ஆளுமை உடைய பக்கங்களாகும். முதலில் இரு நாசியிலும் மூச்சை இழுத்து விடல் வேண்டும். நான்கு அல்லது ஐந்து முறை செய்து இதயத் துடிப்பைச் சமநிலைக்கு கொண்டு வருதல் வேண்டும். பின் பிரணாயாமத்தை தொடங்க வேண்டும்.
சூரிய நாடியாகிய பிங்கலையில் பிராணனை இழுத்து மெல்ல நிரப்பி, விதிப்படி பந்த பூர்வமாகிய கும்பகம் செய்து மறுபடியும் சந்திர நாடியாகிய இடைகலையில் ரேசிக்கவேண்டும். பின்னர் சந்திர நாடியாகிய இடைகளில் பிராணனை பூரித்துக் கும்பிக்கபட்ட பிராணனை பிங்கலையில் ரேசிக்கவேண்டும்.
சூரிய சந்திர கலைகளில் பிராண வாயு செல்லுங்கால் பிரிதிவி, அப்பு, தேயு, வாயு என்னும் நன்கு தத்துவங்களும் வந்து விலகும். இவை அனைத்தும் ஆகாய தத்துவத்தில் சென்று அமரும். அந்த நேரத்தில் சுவாசம் குறைந்து வரும். இதை சுவாச பந்தனம் என்பர்.
சுவாச பந்தனத்தின் போது ஒரு அங்குலம் குறைந்தால் யோகியானவன் இவ்வுலகத்தினின்று சுவாதீன படுவான். இரண்டு அங்குலம் குறைந்தால் - மனம் ஆனந்திக்கபட்டு ஞான செல்வம் உண்டாகும். மூன்று அங்குலம் குறைந்தால் தூர தேசத்தில் நடக்கும் நடவடிக்கைகள் அவனுக்கு புலனாகும். நான்கு அங்குலம் குறைந்தால் விவேகியாவான். அயிந்து அங்குலம் குறைந்தால் முதுமையை வெல்வான். ஆறு அங்குலம் குறைந்தால் ஆகாயத்திலுள்ள சகலமும் கண்டுணர்வான். எழங்குலம் குறைந்தால் அவன் சரீரம் காய சித்தி பெறுவான். எட்டங்குலம் குறைந்தால் அணிமாதி சித்திகளை அடைவான். ஒன்பது அங்குலம் குறைந்தால் நவ கண்டங்களில் சஞ்சரிப்பான். பத்து அங்குலம் குறைந்தால் ஒரு தேகத்தை விட்டு மற்றொரு தேகத்தில் பிரவேசிப்பான். பதினோரு அங்குலம் குறைந்தால் தனது ஆன்மாவை கண்டு உணர்வான். பன்னிரண்டு அங்குலம் அடங்கும் சுவாசமானது உதித்த இடத்திலேயே சுழன்று கொண்டு இருக்கிறபடியால் யோகியானவன் நெடும்காலம் அன்ன பானாதிகளை நீக்கி அசைவற்றிருப்பன்.
இந்த யோகத்தின் போது முதல் தீக்ஷையில் ரோம த்வாரங்கள் வழியாக கெட்ட நீர் வியர்வையாய் வழியும். இரண்டாவதில் வாத, பித்த, சிலேத்தும தோஷங்கள் நீங்கும். மூன்றாவதில் பழைய கெட்ட உதிரங்கள் கசியும். நான்காவதில், சர்ப்பம் தோலுரிப்பதுபோல் சரீரத்தில் தோல் உரியும். aint சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாகப் பஞ்சமூர்த்திகள் கோரியதை தருவார்கள்.
ஆறாவதில் சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறந்து, தூர திருஷ்டி தெரியும். ஏழாவதில், எட்டவதில் சட்டை வெறுப்பாய் கழன்று தீபம் போல பிரகாசிக்கும், வச்யமாகும்.
இந்த தலைப்பு போகிற போக்கை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்! ஆனால் இவை அனைத்தும் சித்தர்கள் ஏடுகளில் சொல்லப்பட்ட உண்மைகள். அவற்றை சொல்வது மட்டும் தான் எனது வேலை. சித்த மார்கத்தில் செல்லவேண்டும் என்றால் எத்தனை விஷயங்களை பொறுத்து கொள்ளவேண்டி வரும் என்று புரியும். ஆம்! சாதாரண மனிதனாக வாழ்ந்த வாழ்க்கையை எவ்வளவு தூரம் மாற்றி கொள்ளவேண்டிவரும் என்பது தெளிவாகும். இதனால் தான், பல பெரியவர்களிடம் நாம் என்ன பேச முனைந்தாலும், அவர்கள் பதில் சொல்லாமல் மௌனமாக செல்கிறார்கள். "வேற வேலை இல்லையா?" என்று கேட்டு நம்மை விரட்டுகிறார்கள். அவர்களுக்கு தெரியும். நம்மை இழுத்து விட்டால் பாதி வழியில் வருத்தப்பட்டு திரும்ப நினைக்க, முடியாமல் தவித்துவிடுவோம் என்று. முன்னரே சொன்னது போல் பெரியவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு உள் அர்த்தம் இருக்கும்! அதை புரிந்துகொண்டு சரி என்று விலக தெரிய வேண்டும்! இனி தலைப்புக்கு வருவோம்!
ஒன்பதாவதில் தேகம் சூரிய பிரகாசமாய் அஷ்டமா சித்தியும் கைவல்யமாய் தேவர்கள் ஏவல் புரிவர். பத்தாவதில் தேகம் தீபம் போல பிரகாசிக்கும். பதிநோன்றாவதில் தேகத்தை வெட்ட கத்தி ஓடும். பன்னிரெண்டாவதில் சொருஒப சித்தி, அண்டத்தில் மௌனம், நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் ஏற்படாது!
சுடரான சுழுமுனையில் சந்திரன் சேரில் பஞ்ச பூதமும் அறிவும் ஒடுங்கும். சூரியன் சேரில் ஐம்பூபுலனும் அறிவும் ஒடுங்கும். சூரியன் சந்திரன் ஒன்றாய் கூடி சுழு முனையில் ஒடுங்கில் அறிவும் தச வாயுவும் ஒடுங்கும்.
இந்த வாயுவை நடுநிலையிலும், மூலத்திலும், நாபியிலும், கண்டத்திலும், சுழியிடமும் சதா நிற்கப் பெற்றவர்களே மெய் ஞானியர்!
இந்த பிரணாயாமத்தை அருணோதயம் முதல் மூன்று நாழிகை வரையிலும், மத்தியானத்திலும், அஸ்தமனத்துக்கு முன்னும் பின்னுமாக இரு முகூர்த்தமும், அர்த்த ராத்திரியிலும் பிரதி தினம் நான்கு முறை செய்ய வேண்டும்.
திருமந்திரத்தில் இந்த பிராணாயாம சுற்றை, 16 வினாடி இழுத்து, 64 வினாடி இருத்தி, 32 வினாடி விடுதல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தச வாயுக்களில் ஒன்றான "பிராணன்" என்ற வாயுவை (உயிர் காற்றை) வெளியில்விடாதவாறு கட்டுபடுத்துவதே பிராணாயாமம்!
http://drsuresh-karmichealing.blogspot.in
No comments:
Post a Comment