Friday, November 30, 2012

உடல்- I


இந்த பரந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு ஒரு இருப்பிடம்
 தான் நமது இந்த உடல்.
ஒருவரின் இலட்சியங்கள், செயல்கள் உயர்ந்ததாக இருந்தாலும்,
உடலை நல்ல முறையில் ஒத்துழைக்க வில்லை எனில், 
அவரது வாழ்க்கை பாதி கிணறு தாண்டிய கதை தான்.
உடலை பாதுகாத்து நோயில்லா வாழ்க்கை வாழ்வது 
அவரவர் கையிலே தான் உள்ளது. 
மனித உடலின் அமைப்பை சித்தர் பாடல் ஒன்று 
இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


" கூறுவேன் தேகமது என்னவென்றால் 
குருபரனே எலும்புதனைக் காலை நாட்டி 
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு 
வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி 
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி 
தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி 
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி 
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே"

உடல் என்பது, எலும்புகளை கை கால்களைப் போட்டு நீட்டி 
வைத்து, அவற்றின் "இருப்பிடம்" மாறிவிடாமல் 
இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து ,
நரம்புகளால் இழுத்துக் கட்டி, 
தோலால் மூடி, அவற்றிற்கு இடையே தசைகளைச் 
சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, உள்ளே 
வாயு எனப்படும் பிராணனை உள்ளடக்கி 
உடல் என்ற ஒரு உருவம் உருவாக்கப்பட்டிருப்பதாக 
சித்தர் பாடல் கூறுகின்றது.


" உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் 
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே "

உடலுக்கு உயிரும் உயிருக்கு உடலும் தான் ஆதாரம் 
என்பதனை "திரு மூலர்" பாடல் உணர்த்துகின்றது.

ஒவ்வொரு மனிதனின் உடல் அவரவரின் கைகளினால்
எட்டு ஜான் உயரமும், நான்கு ஜான் அகலமும் 
கொண்டதாக இருக்கும். 
மனிதர்களின் தேகமானது 96 தத்துவங்களை 
உள்ளடக்கியதே.

பூதம் 5 + பொறி 5 = 10
புலன் 5 + ஞானேந்திரியம் 5 = 10
கன்மேந்திரியம் 5 + கரணம் 4 + அறிவு 1 = 10
ஆசயம் 5 + கோசம் 5 =10
வினை 2 + குணம்  3  + ஈடனை 3 = 8
மலம் 3 + மண்டலம் 3 + ராகம் 8 = 14
ஆதாரம் 6 + நாடிகள் 10 = 16
அவஸ்தை 5 + வாயு 10 + தோஷம் 3 = 18

ஆக மொத்தம் 96.

தத்துவங்கள் 96 என்ன  என்று சிறிது தெரிந்து கொள்வோமே.....  

பூதம் - 5
நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம்

பொறி - 5 (செவி, மெய்( சருமம்) , கண், நாக்கு, மூக்கு }

புலன் - 5
வாய் , கை , கால், மலவாய், கருவாய்.

ஞானேந்திரியம்: 5
ஆகாயம் (செவி) - ஆசை, பகை, மோகம், வஞ்சனை போன்றவை ஆகாயத்தின் இயல்பு.

ஆகாயத்தின் பொறி காது. கேட்டல், மற்றும் ஓசை ஆகியவற்றை அறிவதற்கு.
காற்று:( சருமம்) - ஓடுவது, உட்காருவது, நடப்பது, படுப்பது, நிற்ப்பது போன்றவை காற்றின் இயல்பு.
மெய் ( சருமம் ௦ - தொடு உணர்வை அறிவதற்கு )
நெருப்பு ( கண்) - சோம்பல், உடல் உறவு, பயம், துக்கம், ஆணவம் போன்றவை நெருப்பின் இயல்பு. நெருப்பின் பொறி - கண்ணாகும். - பார்த்தல்,
நீர் ( நாக்கு ) - ரத்தம், கொழுப்பு, வியர்வை, சிறு நீர் , மூளை போன்ற உடற்கூறுகளுக்கு நீரின் பொறுப்பாகும். நீரின் பொறி - நாக்கு. - சுவை அறிவதற்கு.
மண் ( மூக்கு ) - நிலத்திற்கான பொறி - மூக்கு.
எலும்பு, தோல், தசை, மயிர், நரம்பு இவை நிலத்தின் கூறுகளாகும்.
மூக்கு - வாசனை, மற்றும் நாற்றம் இவற்றினை அறிவதற்கு.

கன்மேந்திரியம் - 5
வாய் - பேசுதல்
கால் - நடத்தல்
கை - கொடுத்தல், வாங்குதல், பிடித்தல், விடுதல்
மல வாய் ( எரு வாய்) - மலம் கழித்தல்
கரு வாய் ( இனப் பெருக்க உறுப்புகள்)


கரணம் - 4
மனம் - விஷயங்களை அலைந்து  சேகரிக்கும்
புத்தி   -மன ஓட்டத்தின்படி  நன்மை, தீமை ஆராய்ந்து அறிவது.
நினைவு - எண்ணங்களை நினைப்பது
அகங்காரம் ( தன முனைப்பு ) - நான், எனது, என சுய முனைப்புடன் விஷயங்களை அலசுவது.

அறிவு - 1 
பகுத்து அறியும் உணர்வு.

ஆசயம் என்பது விஷயம் அல்லது குறிப்பிட்ட உறுப்புகளின் செயல்களைக் குறிப்பது.
ஆசயம் - 5
இரைக் குடல் -  சாப்பிட்ட உணவு சேரும் இடம்
செரி குடல் - சத்துக்கள் பிரிக்கும் இடம்
நீர்க்குடல் - கழிவு நீர்கள் சேகரமாகும் பை.
மலக் குடல் - திடக் கழிவுகள் சேகரமாகும் இடம்.

வினை - 2
நல்வினை, தீவினை ( ஆரோக்கியம், நோய் வாய்ப்படுதல்)

குணம் - 3
சாத்வீகம் - ( அகிம்சை - ஐம் பொறிகள் அடங்குதல், ஞானம், தவம், உண்மை உணர்தல், உண்மை பேசுதல், அன்பில் (தெய்வீக ) திளைத்தல்
ராஜசம் ( அகம்பாவம் ) - தன் மீதான அதிகப்படியான உணர்வு - வீரம், வள்ளல் தன்மை, அதிக ஈடுபாடு, கஞ்சத்தனம்,
தாமசம் ( சோம்பல் ) - ஒழுக்கம் இன்மை, எதிர்மறையான செயல்கள்,
பிறர் வெறுக்கும் செயல்களை செய்தல், இத்தகைய செயல்களில் ஈடுபாடு.

ஈடனை - 3
பற்றால் உண்டாகும் வேதனையே ஈடனை எனப்படும்.
அர்த்த வேதனை - உயிர் அற்ற பொருட்களின் மீதான பற்று அதனால் உண்டாகும் வேதனை.
புத்திர வேதனை - பெற்றெடுத்த மற்றும் வளர்த்த - பிள்ளைகள், பெண்கள், சுற்றத்தினர் - இவர்களின் மீதான பற்றும் அதனால் உண்டாகும் வேதனை.
உலக வேதனை - உலக விஷயங்களில் உண்டான ஈடுபாட்டால் உண்டாகும் வேதனைகள்.

மலம் - 3
ஆணவம்- நான் , எனது என்ற நிலையில் தருமத்திற்கு எதிரான காரியங்களில் ஈடுபடுவது.  எல்லாம் தன்னால் தான் ஆனது என்று தன்னை முன்னிலைப் படுத்தி   செய்யும் செயல் நிலை.
மாயை - மனதினில் ஒரு குழப்பம் இருக்கும் நிலை (சந்தேக உணர்வு)
இதனால் நன்மையையும் தீமையாகவும், தீமையும் நன்மையாகத் தெரியும் உணர்வு நிலையாகும்.
காமியம் - அனைவருக்கும் இடையூறாக இருப்பது. பாவத்தினை செய்வதினை ஒரு போதும் தவறு என நினையாத நிலையில் இருப்பது. சங்கடங்களை உருவாக்குவது .

மண்டலம் -  3
அக்னி மண்டலம் , சூரிய மண்டலம், சந்திர மண்டலம் 

ராகங்கள் - 8  
மனதினால் உண்டாகும் விபரீத எண்ணங்களைக் குறிப்பது தான் ராகங்கள்.
இவற்றினால் , உடலுக்கு கேடு உண்டாகும். 
காமம் -  வக்கிர புத்தியின் காரணமாக சிற்றின்ப ஆசை ( பெண், பொன், பொருள், மண் - அடைந்தே தீர வேண்டுமென்ற தீரா ஆசை.
குரோதம் - அனைவர் மீதும் கோபம் கொண்டு பகைத்துக் கொள்வது.   (எதிரியாக உருவாக்கிக் கொள்வது.)
உலோபம் - கஞ்சத் தனமாக இருப்பது.
மோகம் -( பிற )   பெண்கள் மீதான ஆசை.
மதம் - பிறரிடம் கர்வத்துடன் இருப்பது. 
மாச்சரியம் - அனைவரிடமும் பகை கொள்வது. ( எதிரியாய் நினைப்பது)
இடும்பை - தனக்குத் தான் எல்லாம் தெரியும் என சொல்லி பிறரை பழித்தல்.
அகங்காரம் - தன் குற்றம் உணராமல், பிறரை பழித்தல்.


No comments:

Post a Comment