Friday, November 1, 2013

மௌனமாக இருந்தால் சாதிக்கலாம்.


மௌனமென்றால் என்ன? 
வார்த்தைகளில்லாமல் நம்முடைய ஆழ்மனதின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் மௌனம் என்று சொல்லலாம். உள்மனதோடு பேசுதல், வார்த்தைகள் இல்லாமல் பிரார்த்தனை செய்தல், இயற்கையோடு இணைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் நாம் மௌனமாக இருக்கிறோம். மௌனம் இருவகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று வெளிப்புற மௌனம், இன்னொன்று உட்புற மௌனம். 

வெளிப்புற மௌனமென்பது யாருடனும் பேசாமல் நமக்குள்ளே ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு வாழ்வது. அந்த சின்ன வட்டத்துக்குள் நம்மை நாமே அடக்கிக் கொண்டு வாழ்கிறோம். இந்த வெளிப்புற மௌனம் நமக்கு உட்புற மௌனத்தைப் பற்றி அறிய வைக்கிறது. இந்த உட்புற மௌனம் மேலும் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. மனமும், மூளையும் ஆழ்ந்த நித்திரையில் உள்ள நிலையில் நமக்கு எந்த உணர்வுகளும் ஏற்படாமலிருப்பது. இதை முதல் வகையான உட்புற மௌனம் என்று சொல்லலாம். மனமும், மூளையும் ஆழ்ந்த நித்திரையில் உள்ள நிலையில் நம்மை சுற்றி நடப்பவைகளைப் பற்றி உணர்ந்து கொள்ளுதல் இன்னொரு வகையான உட்புற மௌனம். ஆனால் இந்த இரண்டு வகைகளான உட்புற மௌனம் நம்மை ஆழ்மனதோடு இணைய வைக்கிறது. உட்புற மௌனம் மனிதனுக்கு அமைதியைக் கொடுக்கிறது, கடவுளை அறிய வைக்கிறது. நாம் மௌனமாக இருக்கும் போது கடவுள் இருப்பதை நன்றாக உணரலாம், ஆனால் கடவுளை நாம் பார்க்க இயலவில்லை. கடவுளை பார்க்க இயலாமல் போனாலும் இறைவன் நம்மோடு இருக்கும் உணர்வைக் கொடுப்பதால் நமக்குள்ளே தெம்பு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, ஒற்றுமை, பிறர்க்கு உதவுதல் போன்ற உணர்வுகளைக் கொடுக்கிறது.

மௌனமானது மனிதனுக்குள்ளே இருக்கும் ஆழ்மனதை தெரிய வைக்கிறது. மௌனம் மனிதனுக்குள்ளே இருக்கும் பரமாத்மாவை அறிய வைக்கிறது. நமக்குள்ளே இருக்கும் பரமாத்வோடு வார்த்தைகள் இல்லாமல் பேசுகிறோம், பிரார்த்தனை செய்கிறோம். மௌனமானது நமக்குள்ளேயிருக்கும் எண்ணத்தை கருத்துள்ள எண்ணமாக மாற்றி அந்த எண்ணத்திற்கு ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது. உட்புற மௌனம் நம்முடைய எண்ணத்தை ஆழ்மனதோடு இணைய வைக்கிறது. இப்படிப்பட்ட மௌனம் நம்முடைய உள்ளத்திற்கும், உடலுக்கும் புத்துணர்வைக் கொடுக்கிறது. ஒரு நாள் நாம் மௌனத்தைக் கடைப்பிடித்தால் நமக்குள்ளே பல மாற்றங்கள் ஏற்படுவதை உணரலாம். இந்த மாற்றம் நம்மை வெளிப்புற உலகிலிருந்து விலக்கி உள்மனதை அறிய வைக்கிறது. எப்போது நாம் உள்மனதை அறிந்து கொள்கிறோமோ அப்போதே நாம் வெளியுலகின் மாயையிலிருந்து விடுபடுகிறோம்.

மௌனமாக இருக்கும் போது நமக்குள்ளே நல்ல எண்ணங்கள் உதிக்கின்றன. நமக்கென்று எதையும் யோசிக்காமல் பிறருடைய தேவைகள் மீது கவனம் செலுத்துகிறோம். மற்றவர்களை நேசிக்க தொடங்குகிறோம். பிறருடைய துன்பங்களை துடைப்பதற்கு இறைவனை பக்தியோடு பிரார்த்தனை செய்கிறோம். இந்த மௌனம் மனிதனுக்கு பரந்த மனப்பான்மையை கொடுக்கிறது, விரிந்து கிடக்கும் உலகைப் பற்றி அறிய வைக்கிறது. எது நல்லது, எது கெட்டது என்று பாகுபடுத்தி மனிதனுக்கு தெரிய வைக்கிறது. மனிதனுடைய ஆழ்மனம் அவனை மாற்றுகிறது. அவன் மாறும் போது அவனைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் மாற்றத் துடிக்கிறான். இந்த மௌனம் என்பது புதியவைகளை கொண்டு வருவதற்கு அவனுக்கு புதிய உணர்வைக் கொடுக்கிறது. அவனுக்குள்ளே ஆன்மீகம் வளர்கிறது, அமைதி பிறக்கிறது. எந்தவித சஞ்சலமில்லாமல் மாற்றங்களைக் கொண்டு வந்து அதிலிருந்து உருவாகும் புதிய அனுபவங்களை உணர்கிறான்.

ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் பரமாத்மா இருக்கிறார். இதனை ஆல்பா மனமென்று சொல்லலாம். மௌனம் மனிதனை ஆல்பா மனதோடு தொடர்பு கொள்ள வைக்கிறது. ஆல்பா மனமானது மனிதனுக்கு அமைதியைக் கொடுக்கிறது. அவன் அமைதியடைந்த நிலையில் பரமாத்மாவை உணர்கிறான், பரவசம் அடைகிறான், பகவான் நாமத்தைச் சொல்லிப் பாடுகிறான், ஆடுகிறான். எதிலும் பகவான் இருப்பதை உணர்கிறான். மௌனத்தில் இறைவனோடு உரையாடுகிறான், இறைவன் கலந்த வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான். எதிலும் அப்பாற்பட்டு சிந்திக்கிறான், செயல்படுகிறான். மௌனம் மனிதனை ஆழ்மனதோடு இணைய வைக்கிறது.

மௌனத்தைக் கடைப்பிடித்து வாழ்வின் உண்மைகளைப் புரிந்து கொண்டு வாழ்வோம்.

நன்றி
http://www.muthukamalam.com

No comments:

Post a Comment