தென்பால் உகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காண் ஏடி
பெண்பால் உகந்திலன் ஏற் பேதாய் இரு நிலத்தோர்
விண்பால் இயோகெய்தி வீடுவர் காண் சாழலோ
-திருவாசகம்-
சைவத்திலே அண்டத்திற்கும், பிண்டத்திற்கும் ( உடம்பு) உள்ள ஒரே தன்மையான ஒத்த இயல்புகளை ஒற்றுமைகளைக் கூறுவது திருமூலர் காலத்திலிருந்து இன்று வரை இருந்து வருகின்ற சித்தர்களின் மிக முக்கியான வெளிப்பாடாகும்.
நான்கு வேதங்களிலும் உள்ள புருஷஸூக்தம் அண்டத்தை ஒரு பிரமாண்டமான மனித உருவில் கண்டு வணங்குகின்றது. சாந்தோக்கிய உபநிடதத்தில் உள்ள தஹரவித்தை எம்முள்ளே உள்ள ஆகாசத்தை உபாசிப்பதைப் பற்றிப் பேசுகின்றது. திருமூலர் எமது உடலின் உள்ளமைப்பிலேயே பேரண்டத்தைக்காணும் ஒரு பெரும் அறிவுப்புரட்சியைப் பேசுகின்றார். இது எமது வானியலையும், அறிவியலையும், உளவியலையும் ஊடறுத்த சைவத்துக்கே உரிய ஒரு புதிய பரிணமிப்பான பேரண்ட உள அறிவுப் பரிமாண தத்துவமாகும். இதுவே தமிழர்களின் உளவியல் அல்லது அறிவியல் தத்துவங்கள் என்றும் கூறலாம். இது சைவத்திலேயே காணப்பட்டாலும் இந்த அறிவியல் உண்மை கால, தேச, நேர, சூழ்நிலை வரையறைகளைக் கடந்த எல்லா மக்களுக்கும், எல்லா இடங்களுக்கும் உரிய உலகளாவிய தத்துவ உண்மையாகும். இது படைப்புகள் எல்லாவற்றிற்குள்ளும் உள் ஆழத்திலே உள்ள பொதுவான சூத்திரத்தின் ஒத்த அமைப்பை, இயக்கத்தை, செயற்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
அண்டம் முழுவதுமே கருஞ்சுழியிலிருந்து (Black Hole) சூட்சுமமான இருப்பு நிலையில் இருந்து தூலமான இருப்பு நிலைக்குத் (from subtle to the gross existance) தள்ளப்பட்டு வந்தவையே. (Steven Hawkins, Ex Head of the Department of Physics, Cambridge University, UK) இவை எல்லாம் பராசக்தியின் வெளிப்பாடே. இங்குதான் சக்தியில் இருந்து சடமும், சடத்தில் இருந்து சக்தியும் பரிணமிக்கும் மாற்றத்தைக் காண்கின்றோம்.( Albert Einstein, Atomic Scientist, Nobel prize winner for thr the Physics - 1921) இந்தப் பேரண்டத்தின் தோற்றமும், இருப்பும், ஒடுக்கமும் பராசக்தியின் பரிணமிப்பும், மீள் பரிணமிப்புமான விளையாட்டே. இந்த சக்தியைத்தான் ஸ்ரீசக்கரத்திலும் அதன் முப்பரிமாண வடிவான மஹாமேருச்சக்கரத்திலும் உச்சியில் உள்ள முக்கோணமாக உருவகப்படுத்தித் தியானிக்கின்றோம். இதுவே சிவலிங்கத்தின் வட்டமான பீடமான ஆவுடையார். சிவலிங்கம் என்பது சுழற்சி அதிர்வான சக்தியை நிலைக்குத்ததிர்வான நாதம் அல்லது சிவம் ஊடறுத்து நிற்கும் இணை வடிவு ஆகும். சைவர்களாகிய நாம் சிவலிங்கத்தை முக்காலத்துக்கும் உரிய உளவியல், உயிரியல், வானியல், இரசாயனவியல், தத்துவம், ஆன்மீகம் யாவும் உள்ளளடக்கிய ஒருங்கிணைந்த அறிவியல் வடிவமைப்பாகக் காண்கின்றோம்.
இறையை நாதம் என்கின்ற சிவம் அல்லது அப்பன் என்ற ஆண் வடிவும் பிந்து என்கின்ற சக்தி அல்லது தாய் என்ற பெண்வடிவும் இணைந்த ஒருமித்த அம்மையப்பர் வடிவில் எப்பொழுதும்,எங்கும் காணும் தரிசனம் சைவத்தின் முனைப்புண்மை. எம்மில் இந்த நாதம், பிந்து இரண்டும் இணையும் போது அடி வயிற்றின் கீழே உள்ள குண்டலினி என்கின்ற பாலியற் சக்தி மேலெழுந்து மூலாதாரம் முதலாக சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை ஊடான ஆறு ஆதாரச் சக்கரங்களினூடாகச் (Energy Centres) சிரசு வரை மேல் நோக்கிப் பாய்ந்து இறையனுபவமாகிய பரவச நிலையை (State of Bliss), புதிய உணர்வை, பார்வையை (Perception), தெளிவை, தரிசனங்களை, விளக்கங்களைத் தருகின்றது. நாதம், பிந்து இணைந்து குண்டலினி சக்தி கீழ் நோக்கிச் செல்லும் போது உலக வாழ்க்கையில் பாலியல் இன்பமாகப் பரிணமிக்கின்றது. ஆண், பெண், அலி, பிறழ்பாற் சேர்க்கையாளர் என்று எம்மில் ஒவ்வொருவரிலும் ஏற்கெனவே இந்த நாதம் என்கின்ற ஆண்மையும் பிந்து என்கின்ற பெண்மையும் வெவ்வேறு விகித்தில் உண்டு. ஆணில் பெண்மையும் பெண்ணில் ஆண்மையும் கலந்துதான் காணப்படுகின்றது. இதையே சைவர்களாகிய நாம் ஆண் பாதி, பெண் பாதியான அர்த்த நாரீசுவர வடிவில் காண்கின்றோம். ஆண்களில் நாதம் கூடிய அளவிலும் பிந்து குறைந்த அளவிலும் காணப்படுகின்றது. பெண்களில் பிந்து கூடிய அளவிலும் நாதம் குறைந்த அளவிலும் காணப்படுகின்றது. அவ்வாறில்லாமல் மாறுபட்டுக் காணப்படும் நிலையில் அலிகளும், பிறழ் பாற் சேர்க்கையாளர்களும் வருகின்றார்கள். ஒவ்வொருவரும் தம்முள் உள்ள இந்த நாதம், பிந்து உந்துதல்களின் அகச்சமநிலையைப் பெறும் பொருட்டு புறத்தே பாலியல் நாட்டத்தை வெளிப்படுத்துகின்றார்கள். இது மிகச்சிறிய கண்ணுக்குத் தெரியாத பற்றீரியாக்கள் போன்ற நுண்ணுயிர்களில் இருந்து மனிதர் வரையுள்ள சிக்கலான உயிரினங்கள் வரை பொருந்துகின்ற உண்மையாகும்.
இதுவே படைத்தலுக்கரிய உந்துதல் ஆகும். இதுவே எமது இருப்புக்கான உந்துதலுமாகும். இதுவே இருப்பு நிலையைப் பேணுகின்ற உந்துதலுமாகும். இதுவே அண்ட வெளியின் இருட் சுழல். இதுவே எமது அகத்தின் இருள் மலம். இறையொளி இந்த இருளை ஊடுருவும்போது உதயம் நிகழ்கின்றது. இந்தப் பேரண்டம் கருஞ்சுழியில் சூட்சுமமான இருப்பில் இருந்து தூலமான இருப்புக்கு வந்து மீண்டும் முடிவில் சூட்சுமத்திலேயே சென்று ஒடுங்குவது கோடிக்கணக்கான வருடங்கள் எடுக்கும் இந்த சுழற்பாட்டினூடாக மீண்டும் விரிந்து வெளிப்படவே.
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்படவிரிந்தன - திருவாசகம் -திருவண்டப்பகுதி. இதுதான் இந்தப் பேரண்டத்தின் அசைவு அல்லது சுழற்சி. இதுதான் உயிர் வாழ்வனவற்றின் உள்ள (உள்) அசைவு அல்லது சுழற்சி. இதற்குப் பின்னால் ஒரு பேரறிவு இருப்பதனால் இது எந்த விதமான குழப்பமும் இல்லாமல் நடந்தேறுகின்றது. இதுவே எமது விஞ்ஞான, தொழில் நுட்ப, தொடர்பாடல்களின் தொடர்ந்தேர்ச்சியான தேடல். இது வானியலின் அண்டப்பேரறிவியல்; உளவியலின் அண்டப்பேரறிவியல்; பௌதிகத்தின் அண்டப்பேரறிவியல்; சமூகவியலின் அண்டப்பேரறிவியல்; இறையியலின் அண்டப் பேரறிவியல்; பாலியலின் அண்டப்பேரறிவியல்; ஆத்மீகத்தின் அண்டப்பேரறிவியல்; இதுவே ஆண் என்றும் பெண் என்றும் சகல உயிரினங்களும் முனைப்படுத்தப்பட்டுள்ளதைக்காட்டும் அண்டப்பேரறிவியல்; உயிரற்ற சடப்பொருட்களையாக்கும் துணிக்கைகளான அணுக்களிலும் உள்ள நேரேற்றம் உள்ள புரோத்தன்களினதும் எதிரேற்றம் உள்ள இலத்திரன்களினதும் அகச்சமநிலை நாடிய கவர்ச்சியையும் அசைவையும் விளக்கும் அண்டப்பேரறிவியல்; துணிக்கைகளே அற்ற ஒளி, ஒலி, மின்சாரம், மின்காந்தம், ஈர்ப்பு, காந்தம், மற்றும் அணுச்சக்திகளும் கூட அகச்சமநிலை நாடி நேர் எதிர் முனைகளாகத் தொழிற்படுவதை விளக்கும் அண்டப்பேரறிவியல். இதுவே முழுமையான அண்டப்பேரறிவியலின் வடிவு. இந்தப் பேரண்டஅறிவியலின் தரிசனத்தைத்தான் அப்பர் சுவாமிகள்“….கண்டறியாதன கண்டேன்” என்று திருவையாற்றுப் பதிகத்தில் பாடுகின்றார்.
“காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்…”
“கோழிபெடை யொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்…”
“வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்…”
“சிறையிளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்…”
“பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்…”
“வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்…”
“இடுகுரல் அன்னதோர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்…”
“கருங்கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்…”
“நற்றுணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்…”
“பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்…”
“இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்…”
இந்த எதிர்முனைப்பட்ட உந்தல்கள் எப்போதும் அகச்சமநிலையை அடைவதற்கான ஓட்டத்தில், ஆட்டத்தில் அல்லது அசைவில் உள்ளன. தொடர்ந்தேர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் இந்த ஆட்டமே, அசைவே அணுவிலும் காணப்படுகின்றது; அண்டத்திலும் காணப்படுகின்றது; உயிர் வாழ்வனவும் இந்த ஆட்டத்தில்தான்; உயிரற்ற சடப்பொருட்கள் கூட இந்த ஆட்டம்தான். இவற்றில் அடங்காத மினசாரம், காந்தம், மின்னியற் சக்திகளும் கூட இந்த ஆட்டத்தின் படியே ஆடுகின்றன. நுண்ணுயிர்களிலும் எளிமையான உயிர் உள்ளதோ, அற்றதோ என்ற இரண்டுக்கும் இடைப்பட்ட நியூக்கிளிக்கமில உயிரக வடிவங்களிலும் இந்த ஆட்டமே. அவன், அவள், அது என்று மூவகைப்பட்டு நிற்கும் இந்த அண்டப்பேரண்டம் முழுமையிலும் நின்று இயங்கும், இயக்கும் ஆட்டம். இந்த ஆட்டத்தை உணர்ந்து தெளிதலே சிதம்பர தரிசனம்.
சாங்கிய யோகம் 24 தத்துவங்களையும் ஆராய்ந்து புருக்ஷன், பிரகிருதி வரை சென்று நின்று விடுகின்றது. (ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாசம்; ஐந்து அறிகருவிகளான கண், காது, மூக்கு, நாக்கு, தோல்; ஐந்து செயற்கருவிகளான கை, கால், நாக்கு, பாலுறுப்பு, கழிவுறுப்பு; ஐந்து அகப்புலனுணர்வுகளான மணம், சுவை, தொடுகை, பார்வை, ஒலி; நான்கு அந்தக்கரணங்களான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் யாவும் எம்மை ஆக்கியுள்ள 24 தத்துவங்கள்). புருஷனுக்கும் அப்பால் உள்ள பேர்இருப்புடன் ஒன்றுதல் அல்லது சமாதிநிலையுடன் நின்று விடுகின்றது பதஞ்சலியின் யோகம். பௌத்தம் சூனியநிலை அல்லது ஒன்றுமற்ற நிலையைப்பறிப் பேசுகின்றது. வேதாந்தம் பேர்இருப்பாகவே ஆகிவிடும் நிலையைப் பேசுகின்றது. வைணவம் பேர்இருப்புக்கு அணித்தாகி அனுபவிக்கும் பேரின்ப நிலையைக்கூறுகின்றது. சாக்தம் இருப்பை பெண்வடிவான பராசக்தியாக வழிகாட்டுகின்றது. ஆனால் இங்கெல்லாம் இந்த அண்டத்தினது, இந்த படைப்புகளினது நோக்கம், இருப்பு, இயக்கம், ஆட்டம், முடிபு பற்றிய புதிர்கள் இன்னமும் விடுபடவில்லை. முழுமையாக ஒழுங்கமைக்கப்படாத புதிர்ச்சித்திரம் (Jigsaw Puzzle) போலக் கிடக்கின்றது.
சைவத்தின் அறிவியலே இதற்கு அப்பாலும் சென்று எம்முள்ளே உறையும் இறையை பிந்து அல்லது சக்தி என்கின்ற பெண்வடிவினதும் நாதம் அல்லது சிவம் என்கின்ற ஆண்வடிவினதும் இணைபிரியா நிலையாக அம்மையப்பராகக் காண்கின்றது. இதேபோல இறையின் பேரண்ட இருப்பை பராசக்தி என்ற பெண் வடிவினதும் பரசிவம் என்ற ஆண்வடிவினதும் ஒருமித்த இணைந்த அம்மையப்பரான இந்தக்காட்சியுடன் இந்தப்பேரண்டத்தினதும் இந்தப்பிண்டமாகிய மனித உடலினதும் ஒத்த உள் அமைப்பும், இயக்கமும், ஆட்டமும் விளங்க அம்மையப்பராக நேர் எதிர் முனைப்புகளாக நேர் எதிர் ஏற்றங்களாக உள்ள படைப்புகள் யாவற்றினதும் தொடர்ந்தேர்ச்சியான உயிரியல், பௌதிக இரசாயனத், தொடர்புகளும் தாக்கங்களும் இயக்கங்களும் சமநிலையை நாடி அவை ஆடும் ஆட்டங்களும் ஒழுங்கமைக்கப்பட்ட புதிர்ச்சித்திரம்போல் (jigsaw puzzle) தெளிவாக தரிசனம் ஆகின்றது. இதுவே பேரண்டம் முழுவதிலும் உள்ள ஆட்டம் (Cocmic Dance). இதுவே நடராச நர்த்தனம்.
எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி
எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்குந்
தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே
- திருமந்திரம் பா-2722 -
நன்றி
No comments:
Post a Comment