Wednesday, November 30, 2011

வாத நோய்கள் வராமலிருக்க அசைவ உணவை தவிர்ப்பீர்



நமது உடம்பை நாம் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தும் ஆய்வுகளமாகத்தான் உபயோகப்படுத்தி வருகிறோம். உணவுகள் மீதான நமது ஆசையை பூர்த்தி செய்வதற்காக உடல்நலத்தை பலி கொடுக்கவும் நாம் தயாராகவே இருக்கிறோம். நமக்கு நமது உடலின் மேல் அக்கறை இருந்தாலும்,  அதனை அலட்சியப்படுத்துகிறோம். இந்த அலட்சிய மனோபாவம் தான் நமது உடலை, மருத்துவருக்கும், மருத்துவமனைக்கும் அழைத்துச்செல்கிறது. அங்கு சென்ற பின்,  அவர்கள் தரும் அதிர்ச்சியான தகவலால் நமது மனம் பதற்றமடைகிறது. தொடர்ந்து இயங்குவதற்கு தயக்கம் அடைகிறோம். பலவித சந்தேகங்களை உருவாக்கிக் கொள்கிறோம். இது பற்றி மற்றவர்கள் கூறும் சில தவறான முன்னுதாரணங்களைக் கூட பின்பற்றுவதற்கு எளிதாக இருப்பதால் பின்பற்ற தொடங்கி விடுகிறோம். 

வாதநோய் என்றால் என்ன?

மனிதனுக்கு உடலில் பொதுவாக வாதம், பித்தம், கபம் என்ற 3 நாடிகள் உண்டு. நாடி பிடித்துப் பார்க்கும்போத வாது நாடி தன்னளவில் மிகுந்து காணப்பாட்டால் அந்த நபருக்கு வாதநோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இதை ஆங்கிலத்தில் ஆர்தரைடிஸ் என்பார்கள்.
வாதநோயில் 80 வகைகள் இருப்பதாக யூகி என்ற சித்தர் கூறியுள்ளார். இதில் முக்கியமானவை, வாத கீல் வாயு மற்றும் பக்கவாதம். இதில் வாத கீல் வாயு பித்த கீழ்வாயுவை ஆங்கிலத்தில் ருமாட்டிக் காய்ச்சல் என்பார்கள். இதன் அறிகுறிகள் தொண்டையில் வலி, மார்பு, இரண்டு மூட்டுப் பொருத்துகளில் வலி, கை, கால்கள் சிவந்து வீங்குதல், உடம்பில் ஒரு வகையான குடைச்சல், கை, கால்களை நீட்டவும், மடக்கவும், அசைக்கவும் முடியாத நிலை போன்றவை தோன்றலாம். வீக்கத்திற்கேற்ப காய்ச்சல் கூட வரலாம். குத்தல் குடைச்சலினால் நோயாளி இரவில் தூக்கமின்மையால் தவிப்பார். இதில் பெரும்பான்மையான பாதிப்புகள் முழங்கால் மூட்டுக்கள், இடுப்புப் பொருத்துகள், மணிக்கட்டு மற்றும் முழங்கைகளில் உண்டாகலாம்.

வாத கீல் நோய்க்குக் காரணம் என்ன?
இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களினால் தான் இது பெரும்பாலும் ஏற்படுகிறது.அதிலும் குறிப்பாக 5 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒரு வகையான கிருமிகளால் இது போன்ற பாதிப்பு  ஏற்படும். இந்த வயதுக்குள்,  இதற்குத் தேவையான சிகிச்சை எடுத்துக் குணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இது வாழ்நாள் முழுவதும் தொடரும். 15 வயதுக்கு மேலும் இந்தப் பாதிப்பு இருந்தால் இதயத்தின் நிலையே மாறிப்போகும். சரியாக ரத்த ஓட்டம் இருக்காது. படபடப்பு இருக்கும். படபடவென மார்பு துடிக்கும். பெருமூச்சு, அடிக்கடி தன்னையும் அறியாமல் வியர்வை பெருக்கெடுக்கும். தவிர, நாடி தளர்தல், அடிக்கடி மயக்கம், உடல் சோர்வு போன்ற அறிகுறிகளும் தோன்றும். சில நேரங்களில் மலச்சிக்கல் கூட  இருக்கும். சிறுநீர் சரியாகப் பிரியாது. அப்படி சிறுநீர் பிரிந்தாலும் மிகக் குறைந்த அளவில் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் எனப்படும் பித்த கீழ்வாயு எந்த வயதினரைப் பாதிக்கும்? 

வயது ஆக ஆகத்தான் இந்த நோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. பொதுவாக ஆண், பெண்களுக்கு கால் மூட்டுகளில் சைனோவியல் என்ற திரவம் சுரக்கிறது. சைனோவியல் என்ற சவ்வுக்குள் இந்தத் திரவம் இருக்கும். இந்தத் திரவம் வயது ஆக ஆக  குறைவாக சுரக்கும். இதனால் இரண்டு மூட்டுகளும் சந்திக்கிற இடத்தில் ஒன்றோடொன்று உராயத் தொடங்கும். இதுவே பித்த கீல் வாயு எனப்படுகிறது. குறிப்பாக கடல் மற்றும் கடல் சார்ந்த  நிலப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்த வகை வாத நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. உப்புச்சத்து அதிகம் கொண்ட அந்த மண்ணின் இயல்புக்கு ஏற்றபடி வாத நோய் ஏற்படுகிறது.

இது எந்த விதமான அறிகுறிகளைத் கொண்டிருக்கும்?

மூட்டுகளில் வலி, வீக்கம் இருக்கும். உட்கார்ந்து எழுந்திருக்க முடியாமை, மலச்சிக்கல், நடக்கும் போது எலும்பு முறிந்தது போன்ற சடக் சடக் என்ற ஒரு வகையான ஒலி, சில சமயங்களில் காய்ச்சல், காலை நீட்டி மடக்க முடியாமை போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த வகை நோய் பெரும்பாலும் பெண்களையே பாதிக்கிறது. பலவீனமான உடல், அதிக வேலைப்பளு, மூட்டுகளில் அடிபடுவது போன்ற காரணங்களால் இந்நோய் வரலாம். சில பெண்களுக்கு பேறுகாலத்திற்குப் பின்னர் இந்த நோய் வருவதற்கான சாத்தியக்கூறு உண்டு.

ருமாட்டாய்டு ஆர்த்ரைடிஸ் எனப்படும், வாத பித்த கீல் வாயு நோய் வைரஸ், பாக்டீரியாக்களால் உண்டாகிறது என்பது உண்மையா? 

வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுநோய்க்கிருமிகளால் இந்த நோய் வரலாம். தவிர, ரத்தத்தில் ருமாட்டாய்டு என்ற காரணி பாசிட்டிவ் ஆக இருக்கிறவர்களுக்கு இந்த நோய் இருக்கிறது என அர்த்தம். கை விரல் பொருத்துகளில் வலி, வீக்கம் இருக்கும். விரல்களை நீட்டி மடக்க முடியாது. பெரும்பாலும் அதிகாலையில் தான் இது போல ஆகும். குளிர்ச்சியான சூழலில் இந்த நோயின் அறிகுறிகள் தீவிரமாகும். மணிக்கட்டுப் பகுதி மற்றும் விரல்கள் சிவந்து எரிச்சல் மற்றும் வலி உண்டாகும். தூக்கமின்மை, காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் இது வெளிப்படுத்தும்.

இன்றைய நிலையில் பக்கவாத நோயால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவதற்குக் காரணம் என்ன?

மூளையில் ரத்தக்குழாய் அடைப்பு, ரத்த நாளங்களில் சிதைவு ஏற்பட்டாலும் கூட  இந்த நோய் வரலாம். வலது பக்க மூளைப்பகுதி பாதித்தால் உடலின் இடது பக்கம் முழுவதும், இடது பக்க மூளை பாதித்தால், உடலின் வலது பக்கம் முழுவதும் பாதிப்பு உண்டாக்குவதே இந்த நோயின் தன்மை. இந்தப் பாதிப்பு பெரும்பாலும் அதிகாலையில் தான் தெரியும். அதிகமான கொழுப்புப் பதார்த்தங்கள் உண்பது, குடிப்பழக்கம். அதிகமாக டென்ஷன் ஆவது, அதிக ரத்த அழுத்தம் இன்னும் சில பால்வினை நோய்களுக்கு அணையாகக் கூட இந்த நோய் உண்டாகலாம். இதன் கொடூரத்தன்மை என்னவென்றால் நோயாளிகளுக்குத் தெரியாமலே அதிகாலையில் மூளையில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். சிறு குழந்தைகளுக்கு இது பாதித்தால் கை, கால், வாய், நாக்கு பாதிக்கப்படும்.

இதைத் தவிர்ப்பது எப்படி?

உட்கொள்ளும் உணவில் அதிகமான அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய், பழைய சாதத்தைத் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து அதிகம் கொண்ட உணவுப்பொருட்களையும் குறைத்துக் கொள்ள வேண்டும். ரத்த அழுத்த நோயை வராமல் தவிர்ப்பது முக்கியம். நேரம் தவறாமல் உணவு உட்கொள்ளுதல் மற்றும் தூக்கம் போன்றவற்றை வயதுக்கு ஏற்றவாறு கடைப்பிடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment