மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது
பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும்
பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற
தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள்,
அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள்
என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன. பிற்காலத்திலும்
பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன்
மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக
ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார்.
இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில்
ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற
சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு
வருகின்றன. தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர்
எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக
இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக
நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல
முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில்
குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான
விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல
வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான
விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ
தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே
இருக்கிறார்கள்.
அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க
மருந்து அனெஸ்தீஸியா கண்டுபிடிக்கப்படும் முன்பே
இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே
(Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர்
1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400
அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல்
செய்து சாதனை படைத்திருக்கிறார்.
இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை
போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள்,
கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு
இருக்கின்றன. இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள்
தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து
இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக
டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார். இந்த 400 அறுவை
சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை
என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்.
இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த
முடியும் என்றாலும் முதலில் நாம் நம்க்குப் பயன்படுத்தி
நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும்
நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது
எப்படி என்றும் பார்ப்போம்.
நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு
இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு
வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும்
மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல்,
உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல்
போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே
செய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நாம்
விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள்,
டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல்,
வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக்
கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச்
செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது.
இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது.
உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக
உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின்
பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான்.
இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப்
பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.
முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட
வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர
வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து
ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த
வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம்
தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம்
தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல்
மேலும் பாழாகும்.
தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட
சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால்
மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு
வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான
மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது
ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல்
நலத்தைப் பாதுகாக்கும்.
சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை
ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை
இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய
உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில்
வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய்
அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.
முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள்.
தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம்
சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும்
இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள்
உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் 'இந்த
வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது' என்ற எண்ணத்தை
உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக்
கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு
ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப்
பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப்
பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள்
சக்தி சேர்க்க வேண்டும்.
அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில்
பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில
நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு
கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின்
மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள்
கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக
விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த
மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக்
காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து
தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும்
இருக்கும். சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும்
நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள்
இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற
நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது
வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும். 55 ஆம் அத்தியாயத்தில்
முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே
தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான்
குணமாக்கியது.
நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன
சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில்
சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில்
நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி
பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய
அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை
உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற
பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை.
அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு
பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள்.
அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில்
நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே
"NO" என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில்
கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை
கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில்
இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப்பயிற்சிகளை
தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே
அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.
உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு
நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய்
உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து
ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக்
கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல்
தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு
வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில்
உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில்
ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து
இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள்.
உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி
உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது.
ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள்
ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க
வேண்டும் என்பது முக்கியம்.
No comments:
Post a Comment