Wednesday, November 30, 2011

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சினிமா

நமது பாரத கலாச்சாரம் தொன்மையானது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதால் உலகின் மூன்றாம் நிலையில் அதிகமாக பின்பற்றப்படும்கலாச்சாரம் நம்முடையது. மேற்கத்திய நாடுகள் அறிவியல் பூர்வமான விஷயங்களில முன்னோடியாக இருந்தாலும் , குடும்ப அமைப்புகள் உணர்வு பூர்வமான பாசங்கள் போன்றவற்றில் நம்மை விட பின் தங்கியே இருக்கிறார்கள்.

மேல் நாட்டிநாட்டினர் நம் நாட்டிற்கு வரும் பொழுது ( குறிப்பாக ஐரோப்பிய நாடுகள்) அவர்கள் ஓர் முன்நிர்ணயம்(Predefined Mind set) செய்த மனோநிலையில் வருகிறார்கள். எதை முன்னால் முடிவுசெய்கிறார்கள் என பார்த்தால் , பாரத தேசத்தவர்கள் எந்தவிதமான கலாச்சாரமும் நாகரீகமும் அற்றவர்கள் என்பது தான்.அவர்களை பொருத்தவரை நம் மக்கள் மருத்துவம் இல்லாமல், சுகாதாரம் இல்லாமல் இருக்கிறோமாம். ஒரே வார்த்தையில் சொல்லுவதேன்றால் காட்டுமிரண்டிகள் என சொல்லலாம். மிகையாக நான் சொல்லுவதாக உங்களுக்கு படலாம். 

ஐரோப்பியர்கள் நமது நாட்டை ஆளும் காலத்தில் அவர்களின் மனோபாவத்தால் நிறைய விஷயங்கள் நம் கலாச்சாரத்தில் புகுத்தப்பட்டது. அதே சமயம் அவர்களின் கண்ணோட்டத்தில் இருந்த இந்தியாவை உலகிற்கு காட்டி,இது தான் இந்த பாம்பாட்டிகளும் - சாமியார்களும் கொண்ட காட்டுமிராண்டி தேசம் என சொன்னார்கள்.

நம் நாட்டவர்களோ அவர்களின் நிறத்தாலும், அடக்கு முறை ஆற்றலாலும் பயந்த நாம் அவர்களை “துரை” என அழைத்து அவர்கள் 
உயர்ந்தவர்கள் என்று அவர்களை போற்றி புகழ்ந்தோம்.சிந்து நதிக்கரையிலிருந்து தென்பகுதியை தேசமாக கொண்டதால், இந்தியா என வெளிநாட்டினர் தான் நமது தேசத்திற்கு பெயரையும் வைத்தார்கள். சிந்தியா என்று தானே வைக்கவேண்டும் என நீங்கள் கேட்கலாம். அவர்களுக்கு "Si" என்ற உச்சரிப்பு "ze" என்று தான் வரும். சுகந்திரத்திற்கு முன் இருக்கும் பிரிட்டீஷ் காலனி ஆதிக்க பத்திரங்கள், அரசு ஆவணங்களில் "zenthu" என்றே இந்தியனை அவர்கள் அழைத்தார்கள். 

அதனால் தான் நம் நாட்டை பாரதம் எனும் சொல்லில் அழைக்கிறேன். காரணம் வெளிநாட்டினர் வைத்ததாற்காக அல்ல, பாரதி நம் தேசத்தை பாரதம் என்றே அழைத்தான். அது தான் நம் நாட்டின் உண்மையான பெயரும் கூட. 

முதல் குழந்தை பிறந்ததும் முதலைக்கோ, கொடிய மிருகங்களுக்கோ கொடுத்துவிடுவார்கள். அந்த நாடு முழுவதும் பாம்பாட்டிகளும் சாமியார்களும் நிறைந்து இருப்பார்கள் என்பதே பல நூற்றாண்டுகளாக நம்மை பற்றி மேற்கத்திய நாடுகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். விவேகானந்தர் அமெரிக்காவிற்கு பயணமாகும் பொழுது இந்தியாவை பற்றி வெளிநாட்டினர் என்ன நினைத்தார்கள் என்பது மேற்கண்ட தகவல்களுக்கு ஓர் சான்று. இன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பார்த்தால் பாம்பாடிகளை வைத்து வேடிக்கை காட்டுவார்கள். இது எல்லாம் எதற்கு என கேட்டால்... நாம் இந்தியர்கள் என நிரூபிக்க வேண்டாமா? சுற்றுலா பயணிகளுக்கு இந்தியா வந்த உணர்வு ஏற்படுத்த வேண்டாமா என கூறுவார்கள். விவேகானந்தர் சிகாக்கோவுக்கு பயணமாகி ஒரு நூற்றாண்டு முடிந்த நிலையிலும் இந்த நிலையே நீடிக்கிறது.

ஹைஜீனிக் (hygienic) எனும் விஷயம் நாம் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டுமாம். இதை பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். சாமியார்களும் பாம்பாட்டிகளும் என்றாவது குளித்தார்களா? துய்மை என்பதே அவர்களுக்கு கிடையாதே. அதனால் அதான் நாம் மேலை நாட்டினரிடத்திலிந்து துய்மையாக இருப்பதை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஹைஜீனிக் என்றவுடன் எனக்கு ஓர் சம்பவம் நினைவுக்கு வரும்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த சமயம் ஓர் அரசு முறை விருந்தில் கலந்து கொண்டார். அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டதும், ஸ்பூனை பயன்படுத்தாமல் கையால் உணவை சாப்பிட ஆரம்பித்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த மேலைநாட்டுக்காரர் ஒருவர் , ஜனாதிபதியை நெருங்கி “ ஐயா, கரண்டியை பயன்படுத்தாமல் கையால் சாப்பிடுவது சுகாதரமானது அல்ல” என கூறி நீண்ட உரையாற்றினார். அனைத்தையும் பொறுமையாக கேட்ட திரு ராதகிருஷ்ணன் அவர்கள், “ஐயா, நீங்கள் கையில் வைத்திருக்கும் கரண்டியில் எத்தனையோ நபர்கள் உணவு அருந்தி இருப்பார்கள். எனது கையில் நான் மட்டும் தான் உணவருந்துவேன். கையில் உண்பதே சுகாதாரமானது” என்றார்.

இன்றைய உலகில் நாகரீகம் என்ற பெயரிலும் சுகாதாரம் என்ற பெயரிலும் எத்தனையோ கோமாளித்தனங்கள் நடக்கிறது. தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற ஐரோப்பிய ம்னோபாவம் தான் இத்தனைக்கும் காரணம். தாங்கள் தான் உயர்ந்தவர்கள் எனும் எண்ணம் ஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் நம்மை ஆண்டதால் நமக்கும் உண்டு. நைஜீரியா மற்றும் உகாண்டாவை பற்றி உங்கள் நண்பரிடம் கேட்டுப்பாருங்கள். மக்கள் எலும்பும் தோலுமாக பட்டினியால் சாகிறார்கள் என்பதே அவர்கள் பதிலாக இருக்கும். உண்மையில் உகாண்டாவில் பணக்காரர்களும் இருக்கிறார்கள், தனது கழிவறையை தங்கத்தால் அலங்கரித்தவர்கள் அங்கே அதிகம். ஆனால் செய்தி ஊடகங்களும் மேலைநாட்டு மேதாவிகளும் துயரத்தை மட்டுமே காட்டி இருக்கிறார்கள். தற்சமயம் உகாண்டாவின் அரசர் முடுசூட்டப்படும் பொழுது எடுத்த படம் உங்களுக்காக 



எப்படி ஏழ்மையாக எலும்பும் தோலுமாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா?

பின் தங்கிய ஆப்பிரிக்க நாடுகள் என சொல்லப்படும் நிலையில் ஆப்பிரிக்கா சித்தரிக்கப்படுவதை போல பாரதமும் சித்தரிக்கப்படுகிறது.

கிரிக்கெட்டில் சதம் 
அடித்தாலும், சந்திராயன் அனுப்பினாலும் அவர்களுக்கு சென்றடையாது. ஆனால் சாமியார் ஒருவர் லிங்கம் எடுத்தால் தென் அமெரிக்காவின் முனையில் இருப்பவருக்கு சென்றடையும் மர்மம் இது தான்.

சினிமாவில் கலாச்சாரம் சீரழிவு என சொல்லிவிட்டு ஐரோப்பிய மனோபாவத்தை சாடுகிறீர்களே? என நீங்கள் கேட்பது புரிகிறது. செய்தி ஊடகங்களும் சில மேதாவிகளும் பல நூற்றாண்டுகளாக செய்து வந்த மாபெரும் செம்பணியை தற்காலத்தில் சினிமா எனும் ஒரே ஊடகம் திறம்படசெய்கிறது.

என்னிடம் சாஸ்திரம் கற்க பல மேலை நாட்டுக்காரர்கள் வருவதுண்டு. அவர்கள் வரும் பொழுது கூறுவது, ”நான் நினைத்த இந்தியா ஒன்று. இங்கே இருப்பது ஒன்று.” அவர்கள் நம் நாட்டிற்கு வருவதற்கு முன்பே அவர்கள் எப்படி ஆடை உடுத்த வேண்டும், இங்கு உள்ள உணவு முறை, தட்பவெப்பம் எப்படி இருக்கும் என கூறிவிடுவேன். பிரச்சனை உடை விஷயத்தில் தான் ஆரம்பிக்கும். குறிப்பாக மேலை நாட்டு பெண்கள் இந்திய திரைப்பட நடிகையின் படத்தை காண்பித்து , இந்திய பெண்கள் இவ்வாறு உடை அணியும் பொழுது நாங்கள் அணியும் உடை மேன்மையானதாகவே இருக்கும் என்பார்கள். அதன் பிறகு இங்கு வந்து நம் பெண்களை பார்த்து உடை மாற்றி புடவை கட்டி அழகு பார்ப்பார்கள் என்பது வேறு விஷயம்.


இந்தியாவை தெரிந்து கொள்ள அவர்கள் நம் சினிமாவையும்,
தொலைகாட்சியையும் நாடுகிறாரர்கள் என்பதால் தான் இத்தனை பிரச்சனையும்.

சினிமா என்பது கலாச்சாரத்தின் ஓர் பிம்பம் என மறந்து தங்கள் மனம் போன போக்கில் இவர்கள் சினிமா எடுப்பதால் பாரதம் என்பது வேறு வகையானதன்மையில் வரலாற்றில் பதிவாகிறது. 50 வருடம் கழித்து இந்தியர்களின் மனநிலை 2008ல் எப்படி இருந்தது என ஆய்வு மேற்கொண்டால் ஆவணமாகஇருப்பது தற்சமய சினிமா எனும் ஊடகம் என்பதை மறந்துவிடக்கூடாது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் பெண்கள் எப்படி இருந்தார்கள் என இலக்கியத்தை பார்த்து 
தானே தெரிந்து கொள்கிறோம்? புலியை அடித்து விரட்டிய பெண்யை பற்றி யுவான்சுவாங்கின் நூல் குறிப்பிலா தெரிந்துகொள்கிறோம் ? அது போல பெண்கள், சமூதாய உறவுகள்,ஆன்மீகம் என அனைத்தும் சினிமாவில் ஒன்றும் நடைமுறையில் ஒன்றுமாக இருக்கிறது. சில காலத்திற்கு பிறகு பாரதம் இப்படித்தான் இருந்தது என வரலாறு சொல்ல இவர்கள் துணைபோகிறார்கள். வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கையும் சினிமாவில் வந்த கட்டபொம்மனின் வாழ்க்கையும் வேறு வேறானது என எத்தனை சராசரி தமிழனுக்கு தெரியும்?

சினிமாவில் காண்பிக்கப்படும் சில அபத்தங்களை இங்கே பட்டியலிட வேண்டி இருக்கிறது. இதன் மூலம் சினிமாவின் தவறான கலாச்சார ஊடுருவலை உணர முடியும்.

பாசிச மன நிலை : காதல் படங்களை எடுக்கும் பொழுது மத ரீதியான பாஸிச கொள்கை கொண்டு எடுக்கப்படுகிறது. பாரத கலாச்சாரம் காதலுக்கு எதிரானது அல்ல. ஆனால் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதல் மணம் புரிவது போல் எடுக்கும் படங்களில் சில அபத்தங்கள் உண்டு. இது போன்ற படங்களில் அதிகபட்சம் பெண் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவராக காட்டப்படும். உதாரணம் அலைகள் ஓய்வதில்லை, கிளிஞ்சல்கள் துவங்கி காதலுக்கு மரியாதை வரை பெரிய பட்டியலே உண்டு.

கிருஸ்துவ பெண் என்பதால் வேறு மதத்தவருடன் எளிதில் பழகுவா
ள் என காண்பிப்பது எவ்வளவு கொடுமையானது. பாரதத்தில் எந்த மதத்தில்பிறந்தாலும் பெண் அவளுக்கே உண்டான குணத்தில் இருக்கிறாள் என்பதே உண்மை. கிருஸ்துவை கும்பிட்டாலும், கிருஷ்ணனை கும்பிட்டாலும் அவளுக்குள் இருக்கும் பெண்மை பாரத தேசத்திற்க்கே உரிய பண்பாடு நிறைந்தது என ஏன் மறந்து விடுகிறார்கள்? உங்களுக்கு விளக்க வேண்டியதற்காக தமிழ் படங்களை பட்டியலிட்டுள்ளேன், அனைத்து மொழி இந்திய படங்களில் இது போல நிறைய உண்டு.

சமூதாயத்தை தவறாக சித்தரிப்பது : திருநெல்வேலி என்றவுடன் வீச்சரிவாளை காண்பிப்பது. மதுரை என்றவுடன் அடிதடி செய்வது என காண்பிப்பது ஒட்டு மொத்த மக்களையும் அசிங்கப்படுத்தவதாக இருக்கிறது. இவர்கள் சினிமாவில் காட்டுவதை பார்த்தால், திருநெல்வேலி மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தைகள் கூட மினி அருவாளுடன் பிறக்கும் என நினைக்க தோன்றுகிறது.

சென்னையை விட்டு தாண்டாத உங்கள் சாப்ட்வேர் நண்பரிடம் திருநெல்வேலி 
பற்றி கேட்டுப்பாருங்கள், அவர்கள் சினிமாவிலிருந்து எடுத்த தகவலைத் தான் பகிர்ந்து கொள்ளுவார்கள். தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இதுதான் நிலை. இங்கே திருநெல்வேலி என்றால் அங்கே பீகார் அல்லது சம்பல் பள்ளத்தாக்கு.

ஆன்மீகம் : சினிமாவில் அதிகம் சீரழிவது ஆன்மீகம் தான். தாங்கள் ஆன்மீகத்தை காண்பிக்கிறோம் என அவர்கள் செய்யும் அவமானங்கள் எல்லை இல்லாதது. ஆன்மீகம் என்றவுடன் மத ரீதியான சாயம் பூசுவது இவர்கள் செய்யும் சேட்டையின் முதல் படி.

கஷ்டம் வரும்பொழுது அம்மன் கோவில் வாசலில் நின்று கதறி 
அழும் பொழுது மணி காற்றில் ஆட .... புயல் அடிக்க...அங்கு அம்மன் வந்து கஷ்டத்தை நிவிர்த்தி செய்வதாக காண்பிக்கப்படுவது உச்சக்கட்டம். இப்படி நடப்பது உண்மை என்றால் ஒவ்வொரு கோவிலிலும் இண்டஸ்ட்ரியல் விசிறி வாங்கி வைத்து தினமும் புயலை கிளப்ப வேண்டி வரும். பனங்காட்டு அம்மனோ, பாளையத்து அம்மனோ ஏதோ ஒரு படம், அதில் ஓரு காட்சி. அம்மனாக வரும் அந்த நடிகை அடுத்த காட்சியில் குறைந்த ஆடையுடன் நடனமாடிக் கொண்டிருக்கிறார். வில்லனாக வரும் கதாப்பத்திரத்தை அம்மன் மயக்குகிறாளாம். என்ன கொடுமை இது? இந்தியாவின் ஆன்மீக படங்களை சப்டைட்டிலுடன் பார்க்கும் வெளிநாட்டுக்காரர்கள் என்ன நினைப்பான்? 

இதெல்லாம் கூட பொருத்துக்கொள்ளலாம். சில வருடங்களுக்கு முன் எனது யோக வகுப்பில் சேர ஒருவர் வந்தார். எது போல யோக பயிற்சி எடுக்கிறீர்கள் என கேட்டார். விளக்கினே. திடீரென தனது கைவிரலை மடக்கி இது போல யோகா சொல்லி தருவீர்களா என கேட்டார். பள்ளி நாட்களில் “டூ” விட்ட நண்பரிடம் “பழம்” என காண்பிப்பது போல இருந்தது அந்த செய்கை. பின்புதான் தெரிந்தது ஒரு சினிமா நடிகர் சினிமாவில் யோகாவை அப்படி அசிங்கப்படுத்தினார் என்பது.அப்படி எல்லாம் யோகா கிடையாது என எவ்வளவு விளக்கினாலும் , வந்த நபர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.

தற்சமயம் அகோரிகளை அசிங்கப்படுத்தி ஓர் சினிமா. அனைவருக்கும் அகோரிகள் என்பவர்கள் யார் என தவறாக பதிவு செய்வதில் தனது பணியைசெம்மையாக செய்திருக்கிறது. கபாலிகர்கள் எனும் ஆன்மீகவாதிகளின் வழி வந்த அகோரிகள் மிகவும் தூய்மையானவர்கள், மாமிசம் உண்ணமாட்டார்கள், கஞ்சா குடிக்க மாட்டார்கள் என நான் சொன்னால் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு இந்த பக்கத்தை விட்டு வெளியேறிவிடுவீர்கள்.

நாகாசன்யாசிகள் எனும் 
பரம்பரை அகோரிகள் எனும் பிரிவை கொண்டது. பல நாட்கள் உணவு உண்ணாமல், எங்கே சென்றாலும் கால் நடையாகவே செல்லும் ஓரு வகை சன்யாசிகள் அகோரிகள். பெரும் ஞானம் கொண்ட இவர்களை புரிந்து கொள்வது கடினம். இவர்களுடன் சில நாட்கள் வாழ்ந்ததால் எனக்கு இவர்களின் செயல் ஓரளவு தெரியும் இவர்களை பற்றி விரிவான பதிவே போடலாம் (நீங்கள் விரும்பினால் வெளியிடுகிறேன்). ஆனால் சினிமா இவர்களை நரமாமிசம் தின்பவர்களாகவும், போதைக்குஅடிமையானவர்களாக காட்டுவது மிகப்பெரிய கலாச்சார அதிர்வை உண்டு பண்ணுகிறது. 

ஐரோப்பியர்கள் இன்று கூட காசியில் மனிதன் மனிதனை தின்பதாக படங்கள் வெளியிடுகிறார்கள். சில வீடியோ வலைதளத்தில் அகோரிகள் என தேடினீர்கள் என்றால், நர மாமிசம் தின்பவனைதான் காட்டுகிறார்கள். தமிழகத்தில் ஏதோ ஒருவர் சினிமா எடுப்பதால் எப்படி உலக மக்கள் அனைவரும் தவறாக புரிந்து கொள்வார்கள் என நீங்கள் வாதம் செய்யலாம். 

எதிர்காலத்தில் ஒருவர் அகோரிகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த திரைப்படத்தை பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும் காரணம் தகவல் களஞ்சியமே சிபாரிசு செய்துவிட்டதே...!

எத்தனையோ விஷயங்கள் இப்படி நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது.மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தை நெருப்பில் ஒருவர் கருகி சாவதைகைகொட்டி சிரிப்பதை போல கலாச்சாரம் நெருப்பில் அழியும் பொழுதுநாம் சினிமா அரங்குகளில் கைகொட்டி ரசிக்கிறோம். ஒரு நாட்டிற்காகவோ, மதத்திற்கவோ சார்பாக நான் இங்கே பேசவில்லை.

உண்மை தவறாக பதிவு செய்யும் பொழுது அதை சுட்டிக்காடுவதை கடமை என நினைத்து கூறுகிறேன். என்னை பொருத்தவரை உலக ஜீவராசிகள் அனைவரும் என்னில் ஒருபகுதியாகவே பார்க்கிறேன். ஆனால் எனது உடலின் உறுப்பு ஒன்று சீழ் பிடித்து புண்ணாக இருக்கும் நிலையில் பிறரிடம் காட்டி ஆறுதல் தேடும் முயற்சிதான் இது. ஒரு சில நல்ல படங்கள் வெளிவரலாம் , ஆனால் பெருவாரியான படங்கள் இவ்வாறு இருந்தால் நல்ல படங்கள் இதன் முன் மறைந்து விடும். நல்ல படங்களை மட்டுமே சினிமாவாக பதியவேண்டும் என சொல்ல முடியாது. 



எனது வேண்டுகோள் எல்லாம் இதுதான். 

உண்மைக்கு புறம்பானவற்றை சினிமாவாக எடுக்காதீகள். சாகசம் செய்யும் இருசக்கர வாகன விளம்பரங்களில் வரும் எச்சரிக்கை செய்தியை போல, திரைபடம் துவங்கும் முன் இதில் வரும் பாத்திரங்கள் சினிமாவுக்காக சித்தரிக்கப்பட்டுள்ளது என கூறுங்கள்.

உங்கள் குறுகிய மனப்பான்மையை சினிமாவாக எடுத்தால் 
வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். சமூகத்தில் அம்பலமாக்காதீர்கள். சமூக ஆர்வலர் சிலரிடம் கருத்துக்கள் கேட்டு சினிமாவை எடுங்கள் அல்லது காண்பித்தபின்வெளியிடுங்கள்.

எதிர்காலத்தில் இயக்குனார்களாகவோ, திரைப்பட தயாரிப்பாளராகவோ, கதையாசிரியர்களாகவோ வரக்கூடிய ஏனையோர் இந்த பதிவை படிக்கலாம். அதில் யாரேனும் எனது கருத்தை புரிந்து கொள்வீர்கள் எனும் நோக்கத்தில் இக்கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன். நீண்ட கட்டுரையை படித்த உங்களுக்கு நன்றி

சத்தியமேவ ஜெயதே..!

No comments:

Post a Comment