உயிருக்கு ஆதாரமாக இருப்பது மூச்சுதான். எனவேதான் அதை “உயிர் மூச்சு’ என்கிறோம். மனிதன் உணவின்றி பல நாட்கள் உயிர் வாழ முடியும். நீர் இல்லாமற்கூட சில நாட்கள் உயிர் வாழலாம். ஆனால் காற்று (பிராணவாயு) இல்லாமல் போனால் எட்டு நிமிடங்களில் மரணம் நிச்சயம்! உடலின் இயக்கங்கள் அனைத்திற்கும் இந்த மூச்சுக் காற்றே ஆதாரம்.
“ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண்டு ஏறும் குதிரைமற்று ஒன்றுண்டு
மெய்யர்க்கு பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.’
உய்யக்கொண்டு ஏறும் குதிரைமற்று ஒன்றுண்டு
மெய்யர்க்கு பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.’
நாம் நமது ஐம்பொறிகளாலேயே இந்த உலகை அளக்கிறோம். ஐம்பொறிகளின் வழியாகக் கிடைக்கும் செய்திகளின், உணர்வு களின் அடிப்படையிலேயே நமது செயல்பாடு களும் அமைகின்றன. கண், காது, மூக்கு, வாய், மெய் (தோல்) ஆகிய இந்த ஐம்பொறிகளையே திருமூலர் “ஐவர்’ என்று குறிக்கிறார்.
இந்த ஐவர்க்கும் நாயகனாகவும், இந்த ஐம்பொறிகளும் உறையும் ஊருக்குத் (உடலுக்கு) தலைவனாகவும் ஒருவன் இருக்கிறானாம். நமது மனம்தான் (அல்லது சித்தம்) இந்தத் தலைவன்! தலைவன் வலுவாக இருந்தால் ஐம்பொறிகளும், இந்தப் பருவுடலும் அவனுக்கு அடங்கி நடக்கும். தலைவன் வலுவற்றவனாக இருக்கும் பட்சத்தில் ஐம்பொறிகளும் தம் இச்சைக்குச் செயல்படத் துவங்கிவிடும். உடலும் (ஊரும்) அந்தத் தலைவனின் கட்டுப்பாட்டிற்குள் இராது.
இந்த மனம் எனும் தலைவன் ஏறி வரும் குதிரை ஒன்று உள்ளதாம். சித்தர் இலக்கியங்க ளில் பல சங்கேத மொழிகள் உபயோகத்தில் உள்ளன. அவற்றுள் இந்த “குதிரை’ என்பதும் ஒன்று. வேகம், உறுதி, இடைவிடாத ஓட்டம் ஆகியவை குதிரையின் தனிக்குணங்களாகும். குதிரைகள் தூங்கும்போதுகூட நின்று கொண்டேதான் தூங்கும்; படுப்பதில்லை. நோய்வாய்ப்படும்போது மட்டுமே குதிரைகள் படுத்துக்கொள்ளும். இந்த குணநலன்கள் அனைத்துமே நமது மூச்சுக் காற்றுக்கும் (பிராணன்) பொருந்துகின்றன. எனவேதான் சித்தர் இலக்கியங்களில் பல இடங்களில் மூச்சு அல்லது பிராணனைக் குறிக்க “குதிரை’ என்ற சங்கேதச் (ரகசியம்) சொல்லை உபயோகப் படுத்துகின்றனர்.
குதிரை அடிப்படையில் ஒரு காட்டு விலங்கு. எளிதில் கட்டுப்படாது. ஒரு குதிரையைக் கட்டுக்குள் கொண்டு வருவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம். அதில் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் பல நாட்கள் போராடித்தான் குதிரையை அடக்கி அதன் மேல் ஏறி சவாரி செய்ய முடியும். ஒவ்வொரு முறையும் அதன் மேல் ஏற முயற்சி செய்யும்போதும் அது குப்புறத் தள்ளிவிடும். படிப்படியாகவே அதை அடக்க முடியும். ஒருமுறை அதை அடக்கி வெற்றி கொண்டு சேணத்தைப் பூட்டிவிட்டால், தனது வாழ்நாள் முழுவதும் அந்தக் குதிரை தனது எஜமானனுக்கு விசுவாசமுள்ள துணையாக இருக்கும். மூச்சுக் காற்றும் அவ்வாறே! அடக்குவதும் ஆள்வதும் மிக மிகச் சிரமமான காரியம். இந்த மூச்சு எனும் குதிரை யாருக்கு அடங்கும்?
இறைவனின் திருவடிகளையே பற்றிக் கொண்டு மெய்ஞ்ஞான வழியில் செல்லும் மனிதர்களுக்கே (மெய்யர்க்கு) இந்த குதிரை வசப்படுமாம்! உலக மாயைகளில் சிக்கி, இறை நாட்டம் கொள்ளாது வாழும் பொய்யர்களை இந்த சண்டிக் குதிரை கீழே தள்ளிவிடுமாம்.
No comments:
Post a Comment