குருவருளும் திருவருளும் நிறைந்த சிவத்தலம் திருச்சுழி. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ளது. எழில்சூழ்ந்த இந்த கிராமத்தில், அண்ணாமலையாரின் அருந்தவப்புதல்வரான ரமண மகரிஷி 1879 டிசம்பர் 30ல் அவதரித்தார். இவ்வூரில் பூமிநாதசுவாமி கோயில் உள்ளது. கோயில் அருகில் உள்ள கார்த்திகேயன் வீதியில் ஸ்ரீசுந்தர மந்திரம் என்று அழைக்கப்படும் ரமணரின் வீடு உள்ளது. சுந்தரமய்யர், அழகம்மாள் தம்பதியரின் இரண்டாவது பிள்ளையாக ரமணர் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் வேங்கடராமன். நாகசாமி, நாகசுந்தரம்,அலமேலு உடன்பிறந்தவர்கள். இவரது பரம்பரையில், யாராவது ஒருவர் தொடர்ந்து துறவியாவது வழக்கமாக இருந்து வந்தது. சுந்தரமய்யர் பிள்ளையை நன்கு படிக்கவைக்க எண்ணம் கொண்டிருந்தார். ஆனால், அவர் ரமணர் சிறுபிள்ளையாக இருந்தபோதே காலமாகி விட்டார். வேங்கடராமன் ஆரம்பக்கல்வியை திருச்சுழி சேதுபதி ஆரம்பப்பள்ளியில் தொடங்கினார். பின்பு, மதுரையில் சொக்கநாதர் கோயில் தெருவில் வசித்த சித்தப்பா சுப்பையர் வீட்டிற்கு வந்தார். (அந்த வீடு இப்போது ரமணாஸ்ரமம் என்று அழைக்கப்படுகிறது) அமெரிக்கன் மிஷன் உயர்நிலைப்பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பள்ளியில் ஒருமுறை, ஆசிரியர் கேட்ட கேள்விக்கு வேங்கடராமன் பதில் சொல்லவில்லை. அதனால், ஆசிரியர் அப்பாடத்தை மூன்றுமுறை எழுதிவரும்படி அறிவுறுத்தினார். இதன் பிறகு, பள்ளிக்கல்வியைக் கற்பதில் ஈடுபாடு இல்லாமல், ஆன்மிக்கல்வி பயில ஆர்வம் கொண்டார். தன் அண்ணன் நாகசாமியிடம் ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதாகச் சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்பினார்.
அண்ணனும் தம்பி பள்ளிக்குச் செல்வதாக எண்ணி, சித்தியிடம் 5 ரூபாய் வாங்கி பீஸ் கட்டும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், வேங்கடராமன் கோயில் நகரான திருவண்ணாமலை செல்ல முடிவெடுத்து, ரயில்டிக்கெட்டுக்கான 3ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை வீட்டிலேயே வைத்து விட்டார். திண்டிவனம் சென்று ரயில் மாற வேண்டும் என்று எண்ணி 2 ரூபாய் 78 காசுக்கு டிக்கெட் எடுத்தார். ஆனால், ஒருபெரியவர் திருவண்ணாமலை செல்ல விழுப்புரம் செல்ல வேண்டும் என்று சொல்ல விழுப்புரத்தில் இறங்கினார். கையில் இருந்த காசைக் கொண்டு மாம்பழப்பட்டு வரை சென்றார். அதன் பின் திருவண்ணாமலைக்கு நடக்க ஆரம்பித்தார். இரவான போது அரகண்டநல்லூரை அடைந்திருந்தார். அங்கிருந்த சிவன்கோயிலில் தங்கினார். சிறுவனின் வாடிய முகத்தைக் கண்ட நாதஸ்வர வித்வான் ஒருவர் பிரசாதத்தைக் கொடுத்தார். காதில் இருந்த தங்க கடுக்கனை அவ்வூரில் அடகுவைத்து 4 ரூபாய் பெற்றார். திருவண்ணாமலையை வந்தடைந்தார். உடைகள் தேவையில்லை என்று கோவணத்தைக் கட்டிக் கொண்டார். அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு பிரகாரத்தில் இங்குமங்கும் அலைந்தார். கையில் இருந்த மீதி சில்லறையை வேண்டாம் என்று குளத்தில் எறிந்தார். அண்ணாமலையாரை எண்ணி தியானத்தில் ஆழ்ந்தார். விழித்தபோது, உடலில் காயங்கள் இருந்தன. அவரைச் சிலர் பைத்தியம் என்று கல்லால் தாக்கியிருப்பதை உணர்ந்தார். கோயிலில் இருக்கும் பாதாள லிங்க அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டார். முகத்தில் அருள்நிறைந்த வேங்கடராமனை ஊர் அன்பர்கள் ரமணா அழைத்தனர். ரமணருக்கு சேவை செய்ய பழனிச்சுவாமி, எச்சம்மாள், கீரைப்பாட்டி என்று பலர் வந்தனர். இதற்கிடையில், தனது மகன் திருவண்ணாமலையில் இருப்பதைக் கேள்விப்பட்ட ரமணரின் தாய் அழகம்மா பிள்ளையைக் காண வந்தார். அங்கேயே தங்கி மகனுக்கு சேவை செய்து முக்தி பெற்றார். தம்பிக்கு சேவைசெய்ய நாகசாமியும் வந்தார். பற்றற்ற ஞானியாக வாழ்ந்த ரமணர் 1950 ஏப்ரல் 14ல் இறைவனோடு கலந்தார். திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில் அவருடைய கமண்டலம், பாதணி, கைத்தடி ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த புண்ணிய பூமியில் ரமணர் இன்றும் தங்கியிருந்து தங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் பக்தர்கள்.
No comments:
Post a Comment