Thursday, December 1, 2011

கந்தபுராணம் பகுதி- 13





அசுரேந்திரன் அரண்மனைக்குள் ஓடிச் சென்று பெரியப்பாவின் காலில் விழுந்தான். சூரபத்மனுக்கு அவனது கலவரத்திற்கான காரணம் புரியவில்லை. மேலும், முன்னறிவிப்பின்றி தம்பி மகன் இப்போது ஏன் இங்கு வந்தான் என்றும் ஆச்சரியப்பட்டான். அவனது பரபரப்பு கண்டு, நடக்ககூடாத ஏதோ நடந்து விட்டதை உணர்ந்து கொண்டான். விக்கி விக்கி அழுத அசுரேந்திரன், வார்த்தைகள் வெளியே வராமல் தத்தளித்தான். தரையில் விழுந்த மீன்போல், அவன் துடிப்பது கண்டு, சூரபத்மன் கலங்கி, மகனே ! எந்தச் சூழலிலும் நாம் பதட்டம் கொள்ளக்கூடாது. மேலும், நாம் அசுரர்கள் நமக்கு தேவர்களிடம் பயமில்லை. சிவனின் பேரருள் நாம்... யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. மேலும், எதையும் நம்மிடமிருந்து பறிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் இந்த அண்டத்தில் இல்லை என பெருமை பொங்க கூறினான். பறித்து விட்டார்கள் பெரியப்பா ! பறித்து விட்டார்கள். ஆம்... என் தந்தை... உங்கள் தம்பி... இப்போது இந்த பூமியில் இல்லை. ஒரு சிறுவன் அவரைக் கொன்று விட்டான். என் தாய்மார்கள் தந்தையோடு உடன்கட்டை ஏறி விட்டார்கள். இப்போது நான் அனாதை. எனக்கு என் நாட்டில் எந்த பாதுகாப்பும் இல்லை. அந்தச் சிறுவனைக் கண்டால் உள்ளம் நடுங்குகிறேன். அவனுக்கு பயந்து ஓடி வந்து விட்டேன், என்று நடுக்கத்துடன் சொன்னால் அசுரேந்திரன். சூரபத்மன் இடிஇடியென நகைத்தான். குழந்தாய் ! நீ எதைப் பார்த்து பயந்தாய். யாரைப் பார்த்து பயந்தாய். தந்தை இறந்தான் என்கிறாய். தாய்மார்கள் உடன்கட்டை ஏறினார்கள் என்கிறாய். என்ன உளறல் இது ? ஏதேனும் கனவு கண்டு வந்தாயோ ? கனவுகள் கூட நம் அனுமதி பெற்று தான் நம் கண்களில் தெரிய முடியும். அந்தளவு செல்வாக்கு பெற்றது நம் குலப்பெருமை. மகனே ! அழாதே. உள்ளே உன் பெரியம்மாக்கள் இருக்கிறார்கள். அங்கே செல். வேண்டியதை சாப்பிடு. அழகுக்கன்னியர் உனக்காக காத்துக் கிடக்கிறார்கள். அவர்களோடு கூடி மகிழ். போதை பானங்கள் அருந்து. துன்பத்தை மறந்து. இன்ப லோகத்திற்கு செல், என்றான் பரிவோடு.
பெரியப்பா, என் நிலைமை புரியாமல் பேசாதீர்கள். உங்கள் தம்பி மாண்டது உண்மை. அவருக்கு கொள்ளி வைத்த கையோடு இங்கே வந்திருக்கிறேன். அவரைக் கொன்றவன் முருகன். ஆம்... நம் குல தெய்வமான சிவபெருமானின் மைந்தன். நமக்கு அழிவு சிவனால் மட்டும் என்பதை நாம் அறிவோம். ஆனால், புது எதிரி ஒருவன்... அதிலும் சின்னஞ்சிறு பாலகன். அவன் திடீரென விஸ்வரூபம் எடுக்கிறான். திடீரென குழந்தையாகிறான். அவனது சக்திவேல் தந்தையை அழித்து விட்டது, என்றான் கண்ணீர் வழிய. சூரபத்மன் நிலைமையைப் புரிந்து கொண்டான். தம்பி ! போய் விட்டாயா ? இந்த சிறுவன் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லையே ! யாராலும் நம் வம்சத்தை அழிக்க முடியாது என்று இறுமாப்பு கொண்டிருந்தேனே ! ஐயோ ! நீ இல்லாமல் எனக்கேது வாழ்வு ? அசுரகுலத்தின் ஒளி விளக்கே ! நீயின்றி நான் இந்த உலகை எப்படி கண்காணிப்பேன். என் அன்பு இளவலே ! அந்த முருகன் யாருடைய மகனாயிருந்தால் எனக்கென்ன ? அவனைக் கொன்று கூறு போடுகிறேன். படை கிளம்பட்டும். முரசுகள் ஆர்ப்பரிக்கட்டும். உடனே செல்லுங்கள். அந்த முருகனை கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லுங்கள், என ஆர்ப்பரித்தான். கண்கள் ரத்தச் சிவப்பாயின. சபையிலே மன்னன் அழுது கொண்டிருக்கிறான் என்ற சேதியறிந்து. சூரபத்மனின் மனைவியர் ஓடிவந்தனர். அசுரேந்திரனுக்கு ஆறுதல் சொல்லி கண்ணீர் வடித்தனர். தாரகன் மீது அன்பு கொண்ட அசுர உள்ளங்கள் சோகமும், ஆத்திரமும் கொப்பளிக்க படையெடுப்புக்குத் தயாராயினர். சூரபத்மனின் இன்னொரு தம்பி சிங்கமுகன் தகவலறிந்து வந்தான். இடிதாக்கிய நாகம் போல் சோகத்தில் சுருண்டு போனான். பலமுறை மயக்கம் தெளிவித்தும் உணர்வற்று கிடந்தான். ஒரு வழியாக தன்னிலைக்கு திரும்பிய அசுரர்கள் தேரேறி மன்னா ! படையெடுப்பை நிறுத்துங்கள். ஒரு சிறுவனின் கையால் நம் மாமன்னர் மடிந்திருக்கிறார் என்றால், சற்று சிந்திக்க வேண்டும்.
தாரகனாரைக் கொன்றவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது, என்ற குரல் கேட்டு திரும்பினார்கள் சூரபத்மனும், சிங்கமுகனும். அவன் சூரபத்மனின் அமைச்சரான அமோகன். அவன் தொடர்ந்தான். அரசே ! அந்த முருகனை பற்றி நான் சொல்வதைக் கேளுங்கள். அவன் சிறந்த பராக்கிரமசாலி. சிவமைந்தன். சிவனோடு நமக்கு எந்த பகையும் இல்லை. அவர் உலகை ஆள்பவர். அந்த சர்வேஸ்வரனுக்கு கட்டுப்பட்டே நாம் இயங்குகிறோம். அது போல், அவருக்கு பிறந்த முருகனிடமும் நாம் பணிந்து தான் சென்றிருக்க வேண்டும். ஆனால், அறியாமை காரணமாக நம் தாரகனார், அவனோடு போரிட்டு இறந்து விட்டார். எதிரியின் வயது மட்டும் வெற்றிக்கு தகுதியானதாகி விடாது. அவனது பலத்தைப் பார்க்க வேண்டும். அவனுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் யார் யார் ? அவனுக்கு ஆலோசனை சொல்பவர்கள் யார் யார் ? எந்த தைரியத்தில் அவன் அசுரர்களோடு மோதுகிறான் ? என்ன காரணத்துக்காக மோதுகிறான். ஒருவேளை நம் நீண்ட கால ஆட்சி போதுமென கருதி, சிவபெருமானே அவனைத் தூண்டியுள்ளாரா ? அல்லது நம் குல எதிரிகளான தேவர்களின் உந்துதலால் இப்ப செய்கிறானா ? எங்கிருந்து அவன் உந்தப்படுகிறானோ, அவனை ஒழித்து விட்டால், வடிவேலன் நம்மை துன்புறுத்த மாட்டான், என்றான். அமோகனின் வார்த்தைக்கு மதிப்பளிப்பவன் சூரபத்மன். உடனடியாக கிளி, மயில், பருந்து ஆகிய வடிவங்களில் உருமாறும் அசுரர்களை அழைத்தான். நீங்கள் இதே உருவில் அலைந்து திரிந்து, அந்த முருகனைப் பற்றி ரகசியங்களை அறிந்து வாருங்கள், என கட்டளையிட்டான். அந்த பறவை அசுரர்கள் உயரப் பறந்தனர்.

No comments:

Post a Comment