Friday, December 9, 2011

திருவிளையாடல்-மலையத்துவஜனை அழைத்த படலம்!


காஞ்சனமாலைக்கு வருத்தம். ஏழுகடல் வந்தாயிற்று, புனித நீரும் ஆடலாம். ஆனால், சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா? தீர்த்தமாடினாலும் சரி, கோயிலுக்கு  போனாலும் சரி...திருமணத்துக்குப் பிறகு தம்பதி சமேதராகச் சென்றால் தான் சிறந்த பலன் உண்டு. மலையத்துவஜனோ இந்த பூமியிலேயே இல்லை. காஞ்சனா என்ன செய்வாள்? இவ்வளவு செய்தும், கணவரின்றி நீராடி பயனில்லாமல் போய்விடுமே! அவளது கண்களில் நீர் முட்டியது.சிவனடியார்களை அழைத்த காஞ்சனமாலை, திருநீறு போல் வெள்ளை உள்ளம் படைத்த அடியவர்களே! அடியவளுக்காக எம்பெருமான், எழுகடலை வரவழைத்துள்ளார். அதில் நீராட வேண்டுமானால், கணவருடன் இணைந்தே நீராட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அது என்னால் இயலாது என்பதை தாங்கள் அறிவீர்கள். இதற்கு மாற்று வழியிருக்கிறதா? எனக்கேட்டாள். அடியவர்கள் அவளது கவலையை உணர்ந்து, இதற்காக வாட வேண்டாம் தாயே! புனிததீர்த்தங்களுக்கு செல்லும் கணவனை இழந்த பெண்கள், தங்கள் புத்திரர்களின் கையைப் பிடித்தபடியே மூழ்கி எழுவதற்கு அனுமதியளிக்கிறது சாஸ்திரம். தங்களுக்கு புத்திரன் இல்லை என்பதும், ஒரே புத்திரி என்பதையும் நாங்கள் அறிவோம். இவ்வாறான சமயங்களில் பசுக்கன்றின் வாலை பிடித்தபடி நீராடுவது போதுமானதென்றும், அத்தகைய நீராடலுக்கும் புண்ணிய நீராடலின் முழுபலனும் கிடைக்கும் என்றும் சாஸ்திரம் தெரிவிக்கிறது.
தாங்கள் அதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்,என்றனர். காஞ்சனமாலைக்கு கண்ணீர் இன்னும் அதிகமானது. தன் மகள் தடாதகையிடம் சென்று, மகளே! நான் கொடுத்து வைக்காத பாவியாகி விட்டேன். கணவரை இழந்தேன், ஆண் குழந்தைகளைப் பெறவில்லை. ஒரு பசுக்கன்றின் வாலைப் பிடித்தபடி நீராடும் நிலைக்கு ஆளானேன். என்னவோ என் மனம் இதற்கு ஒப்பவில்லை. உன் மணாளரிடமே கேட்டு, இதையும் விட சிறந்த உபா யத்தை அறிந்து சொன்னால், அந்த ஈசனின் கட்டளையை நிறைவேற்ற சித்தமாயிருக் கிறேன், என்றாள். தாயின் வருத்தம் மகளைக் கலக்கியது. மீன் தன் குஞ்சுகளைக் காப்பது போல், மக்களைக் காக்கும் மாதரசி மீனாட்சியான தடாதகை பிராட்டியார் தன் கணவரிடம் சென்று, ஈசனே! என் தாய் நீராடுவதற்காக மதுரைக்கு புனித தீர்த்தங்களை வரவழைத்தீர்கள். ஆனால், கணவனை இழந்து, புத்திரனைப் பெறாத அவள், பசுக்கன்றின் வாலைப்பிடித்தபடி நீராடுவது குறித்து வருந்துகிறாள். இந்நிலைக்கு மாற்று ஏற்பாட்டைத் தாங்களே செய்ய வேண்டும், என்றாள். தன்னை முழுமையாக நம்புவர்க்கு கேட்டதை கேட்டபடி தரும் ஈசன் அவளுக்கு அருள்புரிய மனம் கொண்டார். தேவாதி தேவனான இந்திரனை நோக்கிப் பார்த்தார். அவன் ஓடோடி வந்தான். இந்திரா! என் மாமியார் புனித தீர்த்தமாட விரும்புகிறார். கணவனுடன் இணைந்து தீர்த்தமாடினால் தான் புண்ணியபலம் கிடைக்கும் என்பதால், சொர்க்கத்தில் இருக்கும் மலையத்துவஜ பாண்டியனை புஷ்பகவிமானத்தில் ஏற்றி தக்க மரியாதைகளுடன் மதுரைக்கு அனுப்பி வை, என்றார். அதன்படியே அவன் செய்ய, மலையத்துவஜன் எழுகடல் தீர்த்தக்கரையில் வந்து இறங்கினான்.
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ என்ற பழமொழி ஈசனின் திருவருளால் பொய்யானது. காஞ்சனமாலை தன் கணவனைக் கண்டு கதறியழுது அவன் பாதம் பற்றி வணங்கினாள். தடாதகைபிராட்டியாரோ தன் தங்கத்தந்தையைப் பார்த்ததும் உணர்ச்சிப்பூர்வமானாள். மலையத்துவஜபாண்டியன் ஈசனை வணங்கினான். பெருமானே! எனக்கு ஆண்மகன் இல்லை என்ற வருத்தமே இல்லை. ஏனெனில், பெண்ணைப் பெற்றதால் பெருமையடைந்தவன் நான். ஈசனாகிய தாங்களே எனக்கு மருமகனாகக் கிடைத்ததை என்னவென்று சொல்வேன்! தங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும், எனச் சொல்லி அவரது பாதத்தில் விழச்சென்றான். சிவபெருமான் அதைக்கண்டு பின்வாங்கினார். மாமனாரே! நான் பூமிக்கு மானிட அவதாரம் எடுத்து வந்துள்ளேன். தாங்கள் எனக்கு மாமனார். மாமன் என்பவர் தந்தைக்குச் சமமானவர். எனவே, தங்களுக்குத்தான் நான் மரியாதை செய்யவேண்டும். ஈசன் என்ற அந்தஸ்துடன் என் பாதத்தில் விழ தங்களை அனுமதிக்கமாட்டேன், என பணிவுடன் சொன்னார். மருமகன்கள் தங்கள் மாமனாருக்கு செய்ய வேண்டிய மரியாதையை, இந்த இடத்தில் தெளிவாக நடத்திக் காட்டியுள்ளார் ஈசன். பின்னர் சிவனடியார்களை அழைத்த அவர்,  அடியவர்களே! முறைப்படி இவர்களுக்கு தீர்த்த ஸ்நானம் செய்து வையுங்கள், என்றார். இறைவனின் கட்டளைக் கேற்ப சிவனடியார்களே அவர்களுக்கு தீர்த்தஸ்நானம் செய்வித்தனர். பின்னர் காஞ்சனமாலையும், மலையத்துவஜனும் பிறவாப்பெருவாழ்வு பெற்றனர். அவர்கள் சிவபெருமானுடன் ஜோதியில் கலந்தனர். என்னதான் பெருவாழ்வு பெற்றாலும், தாயையும், தந்தையையும் பிரிந்த மகளுக்கு வருத்தம் இருக்காதா என்ன! தடாதகைப் பிராட்டியாருக்கு கண்ணீர் முட்டிநின்றது. இருப்பினும், தன் மணாளனின் பாதம் பணிந்து தன் பெற்றோருக்கு நற்கதி கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தாள்.பின்னர் சுந்தரபாண்டியனான தன் கணவரிடம்,அன்பரே!  என் தாய் தந்தை சிவலோகம் அடைந்து விட்டனர். எனக்கு சகோதரர்கள் இல்லை. பாண்டியவம்சம் நம்மோடு முடிந்து விடக்கூடாது. தாங்கள் தான் நம் வம்சவிருத்திக்கு அருளவேண்டும், எனக் கேட்டுக் கொண்டாள்.

No comments:

Post a Comment