Friday, December 9, 2011

ஞானம் பெற வேண்டுமா?


உலக விவகாரங்களில் அகப்பட்டு தவிக்கிறான் மனிதன். அதுவா, இதுவா? இதை செய்யலாமா, கூடாதா? செய்தால் என்ன? ஆதாயம் கிடைக்குமானால் அதை செய்யலாமே என்ற எண்ணம் தோன்றுகிறது. அதே சமயம், சே… இப்படி செய்வது தர்மமல்ல… மகா பாவமும் கூட! இதை செய்து, ஏன் பாவத்தை கட்டிக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றுகிறது. அப்போது தான் அதுவா, இதுவா என்று யோசித்து திண்டாடுகிறான் மனிதன். இதற்கு காரணம், மனம் தான்.
மனம் ஒரு குரங்கு. அது சும்மா இராது; இங்குமங்கும் ஓடிக் கொண்டே இருக்கும். அது போல மனம் எதையெல்லாமோ யோசிக்கும்; ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கும். அப்போது, இவனுக்கு சரியான வழி காட்டுவது எது?
ஞானம், அஞ்ஞானம் என்று இரண்டு உள்ளது. பொதுவாக எல்லாரிடமும் அஞ்ஞானம் என்பது நிறைந்துள்ளது. இது, பிறவியோடு சேர்ந்து வருவது; ஞானம் என்பது பிறகு சம்பாதித்து கொள்வது. இந்த ஞானம் ஏற்படும் போது, அஞ்ஞானம் தானாகவே வெளியேறி விடுகிறது. ஞானம் ஏற்பட வேண்டுமானால், அதற்கு ஒரு குருவை தேடி அலைந்து, அவருக்கு மனம் கோணாமல் பணிவிடை செய்து, பிறகு அவரிடமிருந்து ஞானம் பெற வேண்டும்.
மனதில் தெளிவும், வைராக்கியமும் ஏற்பட்டு விட்டால் ஞானம் வரும். மனிதனுக்கு மனம், மனசாட்சி என்று இரண்டு உள்ளது. இதில், மனம் என்பது ஏதோ ஒன்றை விரும்புகிறது. இதில் நியாய, அநியாயம் கிடையாது. மனம் ஒன்றை விரும்பினால், அதை அடைய ஆசைப்படுகிறது. ஆனால், மனசாட்சி அப்படியல்ல! இது, நமக்கு கிடைக்க வேண்டியது தானா, அதை அடைவது நியாயமா என்றெல்லாம் கேள்விகள் கேட்கும்.
மனதுக்கும், மனசாட்சிக்கும் இடையே போராட்டம் நடக்கும். இதில், எது வலுவாக உள் ளதோ, அது வெற்றி பெறும். ஒருவன், ஒரு காரியத்தை செய்து விட்டு, “என்ன சார் பண்றது? மனசாட்சிக்கு விரோதமாத் தான் அதை செய்ய வேண்டியிருந்தது…’ என்கிறான்.
அதாவது, மனம் போனபடி தான் அதை செய்திருக்கிறான். இங்கே மனம் வெற்றி பெற்றுள் ளது. “நானும் செய்யலாமா என்று யோசித்தேன். ஆனால், என் மனசாட்சி அப்படிச் செய்ய இடம் தரவில்லை; அதனால், அதை செய்யவில்லை…’ என்கிறான். இங்கே மனம் செய்யச் சொன்னதை, மனசாட்சி தடுத்து விட்டது. மனசாட்சிக்கு வெற்றி. மனதை விட, மனசாட்சி சொல்வதே மேலானது. இதை, சரியான முறையில் தீர்மானம் செய்வதற்கு தான் ஞானம் தேவைப்படுகிறது.
எத்தனையோ இன்ப, துன்பங்களில் அகப்பட்டு உழலும் மனிதனுக்கு நற்கதி கிடைக்க வேண்டுமானால், ஞானம் ஏற்பட வேண்டும். சத்தியம், அன்பு, அகிம்சை போன்றவைகள் நல்ல குணங்கள்.
இவை இருந்தால், தவறான வழியில் செல்லாமல், நேர் வழியில் செல்ல முடியும். இதற்கான தகுந்த முடிவெடுப்பது தான் ஞானம்; தவறான முடிவெடுப்பது அஞ்ஞானம். ஞானம் பெற்று, ஞானியாக வாழ்ந்து, பகவானை அடைவது நல்லதா… அஞ்ஞானியாக இறப்பது நல்லதா? இதை யோசித்து, நல்ல முடிவு செய்வது தான் ஞானம்!

No comments:

Post a Comment