Friday, December 30, 2011

கந்தபுராணம் பகுதி-17


தன் குமாரன் பானுகோபனின் தோல்வி சூரபத்மனை எரிச்சலடைய செய்தது. கடும் கோபமாக இருந்த அவன், இனி யாரையும் நம்பி பயனில்லை. நானே நேரில் யுத்தகளத்திற்கு செல்கிறேன். அந்தச்சிறுவன் முருகனை ஒரு கணத்தில் பிடித்து வருகிறேன். என்று தன் பங்கிற்கு சபதம் செய்துவிட்டு இரவு முழுவதும் தூங்காமல் இருந்தான். மறுநாள் லட்சக்கணக்கான படைகள் தயாராயின. சூரபத்மன் தன் தம்பி மகன்களான அதிசூரன், அசுரேசன் ஆகியோர் தலைமையில் படைகளை அணிவகுக்கச் செய்தான். யுத்த தொடர்பான வாத்தியங்கள் எழுப்பிய சப்தம் விண்ணைப் பிளந்தது. ஆரவார ஓசைக் கிடையே சூரபத்மன் போர்களத்திற்கு  சென்றான். சூரபத்மன் போர்க்களத்திற்கு வந்த செய்தி அவர் தலைவன் இந்திரன் மூலமாக முருகனுக்கு தெரியவந்தது. உலகையே காக்கும் பெருமான் பூத படைகளுடன் போர்களத்தை சென்றடைந்தான். கடும் போர் நடந்தது. பாறைகளையும், மரங்களையும் பிடுங்கி அசுரர்கள் மீது வீசி ஏராளமானோரை முருகனின் படையினர் கொன்றனர். சிங்கமுகனின் மகனான அதிசூரன் இதுகண்டு திகைத்தான். இருந்தாலும் மனம் தளராமல் முருகனின் படையை நோக்கி தேரில் விரைந்து சென்றான். பூதங்களில் மிகவும் பலமிக்க உக்கிரன் என்பவன் அவனை தடுத்து நிறுத்தி தண்டாயுதத்தால் மார்பில் அடித்தான். இப்படியாக இருவரும் கடுமையாக போரிட்டனர். அதிசூரன் விடுத்த பாணங்களை எல்லாம் உக்கிரன் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டான். இதனால் அதிசூரனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் நாராயண அஸ்திரத்தை எடுத்து உக்கிரன் மீது எய்தான். தனது உயிர் போகப்போவது உறுதி என தெரிந்ததும் உக்கிரன் தன் மனதில் முருகப்பெருமானை நினைத்துக்கொண்டான். தன் நாக்கை வெளியே நீட்டினான். நாராயண அஸ்திரம் அவனது நாக்கில் வந்து தங்கியது. அதை அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டான்.
தன்னிடமிருந்த வலிமைவாய்ந்த அஸ்திரத்தையே விழுங்கிவிட்ட உக்கிரனைப் பார்த்து அதிசூரன் ஆச்சரியப்பட்டான். அவன் மட்டுமல்ல, நாராயண அஸ்திரத்திற்கு மயங்காத உக்கிரனைப் பார்த்து வேதர்களும் ஆச்சரியமடைந்தனர். அங்கு நின்ற பிரம்மாவிடம், படைப்புக் கடவுளே ! நாராயண அஸ்திரம் என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒன்று. அது யாரையும் அழிக்காமல் விட்டதில்லை. அப்படியிருந்தும் உக்கிரன் எப்படி தப்பித்தான் ? என கேட்டனர். அதற்கு பிரம்மா, யார் ஒருவன் சிவபெருமானையும், முருகப்பெருமானையும் மனதார வணங்குகிறானோ அவனை எத்தகைய சக்தி உள்ளவர்களாலும் வதைக்க முடியாது. அதன்படியே இவன் தப்பித்தான். இதைத்தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை என்றார். இதன்பிறகு அதிசூரன் பாசுபதாஸ்திரத்தை பிரயோகித்தான். அதையும் தடுக்க இயலாமல் உக்கிரன் தலைகுனிந்து நின்றான். ஆனால் உள்ளத்திற்குள் சிவபெருமானை பக்தியோடு தியானித்துக் கொண்டிருந்தான். இதனால் அந்த அஸ்திரம் அவனை தாக்கவில்லை. சிவபெருமானையே சென்றடைந்தது. யார் ஒருவன் ஆயுதம் இல்லாமல் போர்க்களத்தில் நிற்கிறானோ, அவன் மீது பாசுபதாஸ்திரத்தை பிரயோகித்தால் அது இறைவனிடமே சென்றடைந்துவிடும் என்ற ரகசியத்தை அறிந்திருந்தும், அறிவில்லாமல் அதிசூரன் செய்த காரியத்தால் எந்த ஆயுதமும் இல்லாமல் அவனும் போர்க்களத்தில் நின்றான். இதன்பிறகு தண்டத்தை எடுத்துக்கொண்டு உக்கிரன்மீது அதிசூரன் பாய்ந்தான். அதை பிடுங்கிய உக்கிரன், அதிசூரனை அடித்தே கொன்றுவிட்டான். இது கண்டு முருகனின் படையினர் ஆரவாரம் செய்தனர். தன் பெரியப்பா சிங்கமுகனின் மகன் அதிசூரன் கொல்லப்பட்டது கண்டு தாரகனின் மகனான அசுரேந்திரன் உக்கிரன் மீது பாய்ந்தான். பல்லாயிரம் பூத வீரர்கள் அவனை சூழ்ந்தனர். இருந்தாலும் அவர்களையெல்லாம் தன் ஒற்றைக் கையினால் அடித்து விரட்டினான் அசுரேந்திரன். வீரபாகுவையும் அவன் விட்டுவைக்கவில்லை. அவனுடைய ரதத்தை உடைத்தெறிந்தான்.
 அதிபயங்கர கோபத்துடன் வீரபாகு வானில் பறந்தான். முருகப்பெருமானை வணங்கியபடியே வாள் ஒன்றை எடுத்து அசுரேந்திரன் மீது பாய்ந்து அவனுடைய ஒரு கையை வெட்டினான். அசுரேந்திரன் கலங்கவில்லை. தன் மற்றொரு கையால் தண்டாயுதத்தை எடுத்து வீரபாகுவை அடித்தான்.இருவரும் கடுமையாக போரிட்டனர். ஒரு வழியாக அசுரேந்திரனை வெட்டி வீழ்த்தினான் வீரபாகு. பயந்துபோன அசுர வீரர்கள் திசைக்கு ஒருவராக ஓடினர்.வேறு வழியே இல்லாததால் சூரபத்மன் களத்தில் இறங்கினான். அவன் இறங்கிய உடனேயே அசுரர்கள் ஆரவாரம் செய்தனர். ஒட்டுமொத்த அசுர வம்சத்துக்கே தலைவனான சூரபத்மன் களத்தில் இறங்கியதால் ஆரவாரத்துடன் முருகனின் படையினர் மீது அசுரர்கள் பாய்ந்தனர். சூரன் ஒரே நேரத்தில் லட்சம் பாணங்களை எய்யும் சக்தி படைத்தவன். தன் ஒரு வில்லில் இருந்து லட்சம் பாணங்களை எய்தான். ரத்னகாளி என்ற சக்தியின் வியர்வையிலிருந்து அந்த பாணங்கள் செய்யப்பட்டவை. பாய்ந்து சென்ற அந்த பாணங்கள் முருகனின் படையைச் சேர்ந்த லட்சம் வீரர்களை தாக்கின. அவர்கள் மயக்கமடைந்து விழுந்தார்கள். இதற்கெல்லாம் கலங்காத நவவீரர்களில் ஒருவரான வீரமார்த்தாண்டன், சூரபத்மன் மீது ஏராளமான பாணங்களை அடித்தான். சூரபத்மன் அவற்றை ஒற்றைக்கையால் நொறுக்கி தள்ளிவிட்டான். மற்றொரு நவவீரனான வீரராட்சஷன், பத்மாசுரன் மீது அம்புகளை எய்தான். அவனுடைய காலைப்பிடித்து தூக்கிய சூரன், விண்ணில் தூக்கி எறிந்தான். அவன் மேலே சென்று வானத்தின் சுவர் வரையில் சென்று முட்டி அதே வேகத்தில் கீழே விழுந்து மயக்கமடைந்தான். வீரகேந்திரன், வீரதீரன், வீரமகேஸ்வரன், வீரகேசரி, வீரபுரூஹுதன், வீராந்தகன் ஆகிய அனைவருமே பத்மாசுரனால் தோற்கடிக்கப்பட்டனர். இந்நேரத்தில் வீரபாகு கலங்காத உள்ளத்துடன் சூரபத்மன் முன்னால் வந்து நின்றான்.

வீரபாகுவைக் கண்டதும் பத்மாசுரன் அகோரமாக சிரித்தான். அடேய் ! நீயா ! அன்று நீ தானே எனது அவைக்கு தூதனாக வந்தவன் ! அன்றே உன்னைக் கொன்றிருப்பேன். நீயோ மாய வடிவில் தப்பி விட்டாய். இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. அன்று அந்த சிறுவனுக்கு தூதனாக வந்தாய். இப்போது எனக்கு தூதனாக மாறிவிடு ! அந்த சிறுவனை என்னிடம் சரணடையச் சொல். என் தகுதிக்கு நீ என்னோடு போட்டியிட லாயக்கில்லாதவன். அப்படியே ஓடிப்போய் விடடா ! என்றான். வீரபாகு எக்காளமாகச் சிரித்தான். அடேய் அசுரா ! நான் நினைத்தால் இக்கணமே உன் தலையைக் கொய்து விடுவேன். அன்று முருகன் என்னைத் தூதனாக அனுப்பினார். இன்று உன்னோடு போர்புரிய அனுப்பியுள்ளார். உம் எடு வில்லை ! முடிந்தால் தோற்கடித்துப் பார், என சொல்லி விட்டு வில்லை எடுத்தான். சூரன் வீரபாகுவை மிகச் சாதாரண கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியமாக நின்றான். வீரபாகு பல அம்புகளை அவன் மீது எய்தான். அவை சூரனின் இரும்பு உடல்மீது பட்டு வளைந்து நொறுங்கியதே தவிர சிறு சிராய்ப்புக் காயத்தைக் கூட ஏற்படுத்தவில்லை. எனவே யமாஸ்திரம், சூரியாஸ்திரம், நாராயணாஸ்திரம் என சக்தி மிக்க அஸ்திரங்களை எய்து பார்த்தான். அவற்றை சூரன் தன் கையாலேயே தடுத்து நொறுக்கி விட்டான். பத்மாசுரனின் இந்த அபரிமித சக்தியை எண்ணி வீரபாகு வியப்படைந்தான். சிவனின் அருள் பெற்றவனை அழிப்பது என்றால் சாதாரண காரியமா ? அது மட்டுமல்ல ! அவனை அழிக்கும் சக்தியாகவும் சிவனே முருகனாக அவதாரமெடுத்துள்ள போது, வேறு யாரால் அவனைச் சாய்க்க முடியும். வீரபாகு மனம் தளரவில்லை. தன்னிடமிருந்த ஒரே அஸ்திரமான பாசுபத அஸ்திரத்தை எய்தான். பாசுபதாஸ்திரம் பல பாம்புகளை உள்ளடக்கியது. அது விஷத்தைக் கக்கிக் கொண்டு பாய்ந்தது. சூரனும் அதே போன்ற அஸ்திரத்தை எய்யவே ஒன்றையொன்று கடித்துக் கொண்ட பாம்புகள் மாய்ந்தன.
அந்த அஸ்திரங்கள் அவரவரிடமே திரும்பி வந்தன. இதைப் பயன்படுத்திக் கொண்ட சூரபத்மன் பல பாணங்களை அனுப்பி வீரபாகுவின் வில்லை ஒடித்து விட்டான். வீரபாகு மீதுபட்ட அம்புகள் அவனை மயக்கமடையச் செய்தன. வீரபாகு களத்தில் விழுந்த பிறகு பூதகணங்கள் அசுரர்களுடன் கடுமையாக மோதினர். எதற்கும் நேரம் வர வேண்டும். பூவுலகில் பிறந்தவன் மனிதனாயினும் சரி ! அசுரனாயினும் சரி அவனது மரணத்துக்கு எந்த நேரம் குறிக்கப்பட்டிருக்கிறதோ அதுவரையில் அவனை யாராலும் வெல்ல இயலாது. இங்கே சிவனின் அம்சமான முருகன். பத்மாசுரனின் முன் எமனாக வந்து நின்றான். பத்மாசுரா ! என் வீரர்களை வெற்றி கண்டுவிட்டதாக மமதை கொள்ளாதே. இதோ! நான் இருக்கிறேன். உன் படையைச் சந்திக்க இதோ எனது பெரும் படை இருக்கிறது. வீணாக அழிந்து விடாதே. என்னிடம் சரணடைந்து விடு, என முழக்கமிட்டார் முருகன். சூரன் சிரித்தான். இங்கே வந்து உன் படை தவிடு பொடியாகி விட்டது. கிரவுஞ்சன் என்ற சிறுவனையும், தாரகன் என்ற எனது தம்பியான கோழையையும் ஜெயித்து விட்ட ஆணவத்தில் என்னையும் சாதரணமாக கருதாதே. நான் உன்னை ஒரே பாணத்தில் கொன்று விடுவேன். சிறுவன் என்பதால் உயிர்ப்பிச்சை தருகிறேன். ஓடிப் போய் விடு என முருகனை எச்சரித்தான். முருகப்பெருமான் அவனுக்கு புத்தி கற்பிக்க நினைத்தார். பல்வேறு ஆயுதங்கள் இருதரப்பிலும் பரிமாறப்பட்டன. உக்கிரமான போர் நடந்தது, முருகனை வெல்லார் யாருண்டு ? முருகப்பெருமான் தன் ஆயுதங்களால் பத்மாசுரனை நிராயுதபாணியாக்கி விட்டார். ஒரு சிறுவனிடம் ஆயுதங்களை இழந்தோமே என சூரன் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றான். இந்நிலையில் அவனது வெண்கொற்றக்குடை, கிரீடம் ஆகியவற்றை கீழே விழச்செய்தார் முருகன், அவனை அவமானம் பிடுங்கித் தின்றது. சூரனின் நிலை கண்டு அவனது படைகள் சற்றும் தளராமல் முருகனின் படையினருடன் போரிட்டனர். போர்க்களத்தில் நின்றபடி சூரன் யோசித்தான்.
இவன் சிறுவனாயினும் சாதாரணமானவன் அல்ல ! இவனை அழிப்பதென்றால் சற்று கடினமானது தான். ஆனால், முடியாதது ஒன்றல்ல ! மீண்டும் நம் ஊருக்குள் சென்று பல்வேறு அஸ்திரங்களுடன் வர வேண்டும், என்றபடியே, அங்கிருந்து மறைந்து விட்டான் சூரன்.சூரன் ஓடிப்போனதை அறிந்து தேவர்கள் முருகனைக் கொண்டாடினர். முருகா ! தாங்கள் நினைத்திருந்தால் வேலாயுதத்தை எறிந்து அந்த சூரனை நொடியில் அழித்திருக்க முடியும். ஆனாலும், தாங்கள் எங்கள்மீது கிருபை செய்யவில்லை. சூரனால் நாங்கள் இன்னும் வேதனைப்பட வேண்டும் என்பது விதிபோலும் ! சூரன் மாயத்தால் மறைந்திருந்தாலும் தாங்கள் இந்த வேலை அனுப்பினால் அவன் எங்கிருந்தாலும் தாக்கி அழித்து விடும். எங்களைக் காப்பாற்றுங்கள் மகாபிரபு ! எனக் கருதினர். கருணைக் கடவுளான முருகன் அவர்களிடம், எதிரியாயினும் ஆயுதமற்றவனைக் கொன்றோம் என்ற அவச்சொல் நமக்கு வரக்கூடாது. அது மட்டுமல்ல ! அவன் மீது கொண்ட கருணையால் தான் அவனை நான் அனுப்பி விட்டேன். எதிரிகள் திருந்த வாய்ப்பு கொடுக்க வேண்டும். திருந்தாமல் திரும்பிவந்தால், அவனை அழிப்பதில் தவறில்லை. சூரன் திருந்த மாட்டான் என்பது நானும் அறிந்ததே ! மீண்டும் அவன் வருவான். அப்போது அவனை நிச்சயம் நான் விடமாட்டேன். நீங்கள் அமைதியாய் இருங்கள், என்றார். தேவர்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர். இந்த நேரத்தில் வடிவேல் முருகன் போர்க்களத்தில் மயங்கியும், இறந்தும் கிடந்த வீரபாகு மற்றும் நவவீரர்கள், படையினரை தனது கருணையால் எழச்செய்தார். அவர்கள் ஆராவாரம் செய்து முருகனை வணங்கினர். அரண்மனைக்குள் புகுந்த பத்மாசுரன் மீண்டும் முருகனை அழிப்பது பற்றிய ஆலோசனையில் ஆழ்ந்தான்.

No comments:

Post a Comment