சைவ சமய பெருமக்களிற்கு திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமையாதவை. பசுவின் சாணத்தை எடுத்து அதனை சுட்டு சாம்பலாக்கிய பஸ்மமே சுத்தமான விபூதி ஆகும். விபூதி தரிப்பது ஆன்மீக சம்பந்தமான நன்மைகள் விளைவதுடன், உடல்நலம் சார்ந்த நன்மைகளும் உண்டாகும் என்பது சான்றோர்களின் கருத்தாகும். திருநீறு கிருமிநாசினியும் கூட. அதனை உடல் முழுவதும் பூசுவதனால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும் என இயற்கை மருத்துவம் கூறுகிறது. நெற்றியில் தரிப்பதனால் தலைக்குள் கோர்க்கும் நீரினை திருநீறு வெளியேற்றுகிறது. திருநீற்றிற்கு விபூதி, பசுமம், பசிதம், சாரம் இரட்சை என பல பெயர்கள் உண்டு.
1. விபூதி - மேலான ஐசுவரியத்தைத் தருவது.
2. பசிதம் - அறியாமையை அழித்து, சிவஞான சிவதத்துவத்தைத்
தருவது.
3. சாரம் - ஆன்மாக்களின் மலமாசினை அகற்றுவது.
4. இரட்சை - ஆன்மாக்களை துன்பத்தினின்றும் நீக்கி பேரின்ப வாழ்வு தருவது.
5. திருநீறு - பாவங்களை எல்லாம் நீறு செய்வது.
6. பஸ்மம் - பழைய வினைகளை பஸ்மமாக்குவது.
திருநீற்றிற்கு வேறு காரணத்திற்காகவும் வேறு பெயர்கள் உண்டென்று வீராகம சுலோகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.“சத்யோ சாதாத் விபூதிச்ச வாமாத் பசிதமே வச
அகோராத் பஸ்ம சம்சாத் புருசாத் சார நாமச”
அதாவது சிவனின் ஐந்து முகங்களிலும் இருந்து ஐந்து வகை பசுக்கள் தோன்றியதாகவும். அந்ததந்த பசுவின் சாணத்தில் செய்ப்படும் திருநீற்றிற்கு ஒரு பெயர் கூறப்பட்டுள்ளது.
1. ஈசானிய முகத்தில் இருந்து தோன்றிய சிகப்பு நிற பசு சுமனையாகும். அதன் சாணத்தில் செய்யப்பட்ட திருநீறு ரட்சை எனப்படும்.
2. தற்புருச முகத்தில் இருந்து தோன்றிய புகை நிற பசு சுசீலையாகும். அதன் சாணத்தில் செய்யப்பட்ட திருநீறு சாரம் எனப்படும்.
3. அகோர முகத்தில் இருந்து தோன்றிய கருப்பு நிற பசு சுரபியாகும். அதன் சாணத்தில் செய்யப்பட்ட திருநீறு பஸ்மம் எனப்படும்.
4. வாமதேவ முகத்தில் இருந்து தோன்றிய வெள்ளை நிற பசு பத்திரையாகும். அதன் சாணத்தில் செய்யப்பட்ட திருநீறு பசிதம் எனப்படும்.
5. சத்தியோசாத முகத்தில் இருந்து தோன்றிய கபில நிற பசு தந்தையாகும். அதன் சாணத்தில் செய்யப்பட்ட திருநீறு விபூதி எனப்படும்.
இரண்டு கருத்துக்களையும சீர்தூக்கிப்பார்த்து நம்முடைய தேவைக்கேற்ற திருநீற்றினை நாம் தயாரித்து அணியலாம்.
முறைப்படி திருநீறு தயாரிக்கும் முறை:-
ஒரே பசுவின் சாணத்தை பசு சாணம் போடும் போது நிலத்தில் விழாமல் தாமரை இலையில் பிடித்து, அதனை உருண்டைகளாக்கி வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். நன்றாக ஈரமில்லாமல் காய்ந்த பின்னர் சாண உருண்டைகளை உமியால் மூடி உமிக்கு தீயிடவேண்டும். 4 அல்லது 5 நாடகள் கழித்து இதனை மெதுவாக கிளறி சாணத்தின் சாம்பலை மட்டும் சேகரிக்க வேண்டும். இதனை துணியில் சலித்து உரிய பாத்திரத்தில் சேகரித்து வைத்து உபயோகிக்க வேண்டும். அகத்திய மகரிசி தனது நுர்லில் பஞ்சாட்சர மந்திரத்தினை விபூதி தயாரிப்பதற்கு, அணிவதற்கு எவ்வாறு பிரயோகம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். சில நாட்களில் அதன் விபரம் அறியத் தருகிறோம்.
இச்சமயத்தில் திருநீறு செய்வதற்கு பசுவின் சாணத்தை நாம் ஏன் பயன்படுத்துகிறோம் எனப்பார்ப்பது சிறப்பாக இருக்கும். பசுவிலிருந்து நீங்கிய மலம் சாணம். அது அக்னியால் தகிக்கப்படும் போது தூய்மையடைந்து திருநீறாகிறது. மும் மலங்களினால் கூடப்பெற்ற பசுவாகிய ஆன்மா சிவாக்கினியில் தகிக்கப்படும் போது தூய்மையடைந்து பிறவிப் பயனையடைகிறது. பசுவின் மலம் நீறாக்கப்பட்டு தூய்மையடைதல் போல ஆனமாக்கள் ஆகிய பசுக்களின் மலங்கள் சிவ ஞானபக்கினியினால் தகிக்கப்பட்டு தூய்மையடைதல் வேண்டும் என்பதை உணர்த்துவதற்காவேயாம்.
திருநீற்றின்பெருமையை திருஞானசம்பந்தர் தனது மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சிவாயநம,நமசிவாய, சிவ சிவா என்று ஏதாவதொரு பஞ்சாட்சர மந்திரத்தை செபித்தபடி உத்தூளனமாக (நெற்றி முழவதும்) அல்லது திரிபுண்டரிகமாக (3 கோடுகளாக) திருநீற்றினை அணிதல் வேண்டும். இதற்கு ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய விரல்களை உபயோகிக்க வேண்டும். கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக நோக்கியபடியே அணிதல் வேண்டும். இதனால் நல்வாக்கு,நல்லோர் நட்பு, உயர்ந்த நற்குணங்கள், குறைவில்லா செல்வம், சகல விதமான ஐசுவரியங்கள் போன்ற எல்லா நலமும் பெற்று நம் வாழ்வில் சிறப்புடன் வாழலாம்.
திருநீறு பூசுபவர்களை அது புனிதப்படுத்துகிறது. “பூசுநீறு போல் உள்ளும் மனிதர்கள்” என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார். விபூதி பூசுபவர்களை அது தனது வெண்மையைப்போல் மாற்றுகிறது.
திருநீறு பூசுபவர்களை அது புனிதப்படுத்துகிறது. “பூசுநீறு போல் உள்ளும் மனிதர்கள்”என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார். விபூதி பூசுபவர்களை அது தனது வெண்மையைப்போல் மாற்றுகிறது.
திருநீற்றினைக் கொண்டு திருஞானசம்பந்தர் பாண்டிய மன்னனின் வெப்பு நோயை தீர்த்ததையும், அப்பர் தன்னுடைய வயிற்று வலியினை சுகமாக்கிக் கொண்டதையும் நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்.
எந்த பொருளை சுட்டாலும் அது கரியாகி பின்னர் சாம்பல் ஆகும். சாம்பலை மேற்க்கொண்டு எரிக்க முடியாது. இதன் மூலம் இது வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்த்துகிறது. முடிவில் முடிசார்ந்த மன்னரும் ஒரு பிடி சாம்பல் ஆகும் நியதியை இது சுட்டிக் காட்டுகிறது.
திருநீற்றினை அனுஸ்டானங்கள் கடைப்பிடிப்பவர்களும், சிவபூசை செய்பவர்களும் முதலில் திருநீற்றினை சாதரணமாக பூசிக் கொள்ள வேண்டும். பின்னர் வலதுகை பெருவிரல், மோதிரவிரல், நடுவிரலினால் தீருநீற்றினை எடுத்து இடதுகை உள்ளங்கையில் வைத்து பஞ்சாட்சரத்தை எழுதி இடது கையினால் மூடி கீற்க்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.
ஓம் நிவர்த்தி கலாயை நம
ஓம் பிரதிஸ்டா கலாயை நம
ஓம் வித்தியா கலாயை நம
ஓம் சாந்தி கலாயை நம
ஓம் சாந்தியதீத கலாயை நம
ஓம் ஈசானாய நம
ஓம் தற்புருசாய நம
ஓம் அகோராய நம
ஓம் வாம தேவாய நம
ஓம் சத்யோசாதாய நம
ஓம் ஹிருதாய நம
ஓம் சிரசே நம
ஓம் சிகாயை நம
ஓம் கவசாய நம
ஓம் நேத்திரத்திராய நம
ஓம் அஸ்திராய பட்
பின்னர் சிறிது நீர் விட்டு இருகைகளையும் தேய்து குழைத்து ஓம் ஈசானாய நம, ஓம் தற்புருசாய நம, ஓம் அகோராய நம, ஓம் வாம தேவாய நம, ஓம் சத்யோசாதாய நம என்ற மந்திரங்களை சொல்லி முறைப்படி அந்தந்த இடங்களில் இட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் அணிந்து கொள்வதனால் அந்தந்த பகுதிகளினால் செய்யப்பட்ட பாவங்கள் நீங்கும்.
மேலும் சில நன்மைகளைப் பார்ப்போம்
வாத, பித்த, கப நாடிகளை சமநிலைப்படுத்தக் கூடியது.
மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை துர்ய்மையாக்கும்.
ஆணவம், கன்மம், மாயை என்ற மும் மலங்களை நீங்கச் செய்யும்.
சஞ்சிதம், ஆகாமியம் போன்ற த்த்துவங்களை உணர்த்தி, ஆன்ம தத்துவம், வித்தயா தத்துவம், சிவதத்துவம் தரவல்லது.
விதிப்படியமைந்த திருநீற்றை உட்கோண்டால் உடம்பின் அசுத்தங்கள் அனைத்தையும் போக்கி நாடிநரம்புகள் அனைத்திற்கும் வலிமையை கொடுக்கும்
உடலுக்கும், உயிரிற்கும், இம்மையிற்கும், மறுமையிற்கும் உயர்வளிக்கும் விபூதியினை தினமும் நாம் அணிந்து உயர்வடைவோமாக.
iyya thiruneeru pasu sanam alla sri konganavar siddar mudal part il sivan kangalan pusum thiruneeru patri solliyullarkal
ReplyDelete