அன்றிரவில் ஜெயந்தனின் கனவில் தோன்றிய வடிவேலன், ஜெயந்தா ! நீயும் தேவர்களும் கவலை கொள்ளத் தேவையில்லை. நான் விரைவில் வந்து உன்னை மீட்டு உனக்கு பெருமையும் தேடி தரப்போகிறேன். என் தூதன் வீரபாகு இப்போது நீங்கள் தங்கியிருக்கும் நகரில் புகுந்து விட்டான். அவன் பராக்கிரமசாலி. சூரனை நிச்சயம் சந்தித்து, அவனை என்னிடம் சரணடையச் சொல்வான். அப்படி மறுத்தால் போர் பிரகடனம் செய்ய ஏற்பாடு செய்து விட்டேன். கொஞ்சம் பொறுத்திரு, என்றார். ஜெயந்தன் மகிழ்ந்தான். அந்நேரத்தில் வீரபாகு பல கட்டுக்காவல்களை மீறி, ஜெயந்தனும் தேவர்களும் அடைக்கப்பட்டிருந்த சிறைக்குள் வந்து குதித்தான். அங்கே பெரும் அதிர்வு ஏற்பட்டது. அவன் ஜெயந்தனிடம், இந்திரன் மகனே ! கவலைப்படாதே. நல்ல நேரம் பிறந்து விட்டது. மீண்டும் நீங்கள் அவரவருக்குரிய பதவியைப் பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரப் போகிறீர்கள். சூரனின் சாம்ராஜ்யம் அழியும், என்று ஆறுதல் கூறி விடை பெற்றான். பின்னர் வீரமகேந்திர பட்டணத்தின் தெருக்களில் மற்றவர் கண்ணுக்கு தெரியா வண்ணம் தன் உடலை மறைத்துக் கொண்டு நடந்தான். சூரபத்மனின் கம்பீரமான அரண்மனையை நோட்டமிட்டான். அவனது திறமையை மனதுக்குள் பாராட்டினான் எதிரிகளாக இருந்தாலும், அவனுடைய திறமையை பாராட்டுபவன் எவனோ, அவனே நீதிமான். மேலும், இப்படிப்பட்டவர்களே எதிரியின் பலத்தைப் புரிந்து கொண்டு வியூகம் வகுத்து வெற்றியும் பெற முடியும். புத்திசாலியும், நீதிமானுமான வீரபாகு எதிரியான சூரபத்மனின் திறமையை மனதுக்குள் பாராட்டியதில் வியப்பேதும் இல்லை. அரண்மனை வாசலில் கோரைப்பற்களும், பார்த்தாலே பயந்து நடுங்கும் விதத்திலும் கோரத் தோற்றமும் உடைய இரண்டு காவலர்கள் ஆயுதங்களுடன் அங்குமிங்கும் உலா வந்தனர்.
உக்ரன், மயூரன் என்ற அந்தக் காவலர்களின் கண்ணுக்கு வீரபாகு அங்கே நிற்பது தெரியவில்லை வீரபாகு இதைப் பயன்படுத்தி அரண்மனைக்குள் நுழைந்து சபாமண்டபத்தில் வந்து நின்றான். சூரபத்மன் மிக கம்பீரமாக ரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். நெற்றியிலும், உடலிலும் மூன்று பட்டையாக திருநீறு, ஒளி வீசும் ஆபரணங்கள் அணிந்து, தலையில் கிரீடம் சூடி, ஆடம்பரமாகவும், அமர்க்களமாகவும் வீற்றிருந்தான். வீரபாகு யோசித்தான். இவ்வளவு அமர்க்களம் செய்யும் இவன் முன்னால் நின்று கொண்டு பேசினால் நமக்கு அவமானம் எனக் கருதிய வீரபாகு. முருகப்பெருமானை துதித்தான், உடனே சூரன் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை விட மிக அற்புதமான சிம்மாசனம் அந்து வந்து இறங்கியது. வீரபாகு மகிழ்ச்சியுடன் தன் உருவத்தை திடீரென வெளிப்படுத்தினான். சிம்மாசனத்தை இழுத்துப் போட்டான். சூரனின் முன்னால் கால் மேல் கால்போட்டு அமர்ந்தான். இதைக் கண்டு சூரபத்மனும், அவையில் இருந்த மற்ற அசுரர்களும் அதிர்ச்சியடைந்தனர். சூரன் அதட்டினான். யார் நீ ! என் இடத்துக்குள்ளேயே வந்து என் முன்னாலேயே கால் மேல் கால்போட்டு மரியாதையின்றி அமர்ந்திருக்கும் உன்னை எமலோகம் அனுப்பியிருப்பேன். இருப்பினும், இத்தனை கட்டுக்காவலையும் மீறி உள்ளே வந்த நீ மாயாஜாலத்தில் சிறந்தவன் என்பதை ஒப்புக்கொண்டு, நீ வந்த காரியம் பற்றி கேட்கிறேன் அதை விரைவாக என்னிடம் சொல், என்றான். வீரபாகு தன்னைப் பற்றியும், தான் வந்த விஷயம் பற்றியும் தெளிவாகச் சொன்னான். சிவபெருமானின் உத்தரவுப்படி, முருகன் தோன்றியுள்ளதையும், ஏற்கனவே தாரகனைக் கொன்றதையும் சுட்டிக்காட்டி, திருச்செந்தூரில் தங்கியுள்ள முருகனிடம் சரணடையும்படியும் கூறினான். சூரபத்மனுக்கு மீசை துடித்தது. வீரபாகு தொடர்ந்தான். உனக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கவும் முருகப்பெருமான் தயாராக இருக்கிறார்.
நீ உடனடியாக தேவேந்திரனின் மகன் ஜெயந்தனையும், மற்ற தேவர்களையும் விடுதலை செய்தால் அது சாத்தியமாகும் உன் ராஜ்யத்தையும் நீ காப்பாற்றிக் கொள்ளலாம். மறுத்தால், உன் தலை போய் விடும் முருகனின் சார்பில் எச்சரிக்கிறேன், என்றான். சூரபத்மன் கோபம் கொப்பளிக்க இருக்கையில் இருந்து எழுந்தான். அடேய்! பொடியனுக்கு தூதுவனாய் வந்த பொடியனே ! நான் இருக்கையில் எழுந்த பிறகும், என் முன்னால் அமர்ந்திருக்கிறாயே ! திமிர் பிடித்தவனே ! நான் அந்த பொடியனிடம் சரணடைய வேண்டுமா ? என் தம்பியைக் கொன்ற அன்றைய தினமே அவனைக் கொல்ல முடிவெடுத்தேன். ஆனால், ஒரு குழந்தையைக் கொல்வது பாவம் என்பதால், கோபத்தை அடக்கிக் கொண்டேன். இப்போது அவன் என் ராஜாங்க காரியத்திலும் தலையிட ஆரம்பித்து விட்டான். சிவனிடம் பெற்ற வரத்தால், இந்த உலகையே என் பிடியில் வைத்துள்ள நான் ஒரு சிறுவனிடம் சரணடைவதா ? நாளையே என்படை அவனைச் சந்திக்கும். தூதராக வந்து என் முன்னால் சிம்மாசனத்தில் அமர்ந்த உன்னை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன். யார் அங்கே அவனைப் பிடியுங்கள், என்றான் சூரபத்மன். வீரபாகு ஆவேசமானான், இருந்த இடத்தை விட்டு எழாமலேயே, ஏ சூரனே ! தூதுவனாக வந்த இடத்தில் உன்னை ஏதும் செய்யக்கூடாது என்பதால், உன்னை உயிரோடு விடுகிறேன். இல்லாவிட்டால், உன் தலையை இந்நேரம் நொறுக்கியிருப்பேன். என் தலைவன் முருகனை அவமானப்படுத்தும் வார்த்தைகளை இனியொரு முறை சொல்லாதே, என கர்ஜித்தான். இதைக் கேட்டதும் சூரபத்மன் கைகால்கள் நடுங்குமளவுக்கும், முகம் சிவக்குமளவுக்கும் ஆவேசமாகி, பிடியுங்கள் ! அவனைக் கட்டி வைத்து உதையுங்கள், என்றான்.
No comments:
Post a Comment