Tuesday, April 3, 2012

சுவையும் குணமும்



நிலத்திற்கு நிலம் மண்ணில் வேறுபாடுகள் தோன்றுவது போல், மண்ணின் கனிமங்களும் வேறுபடுகின்றன. அதற்கு ஏற்றவாறு மண்ணின் சுவை அமைந்து, அந்தந்தச் சுவைக்கு ஏற்ப நலன்கள் அமைகின்றன என்பது பண்டைய கால வழக்கு.

"" உவர்ப்பில் கலக்கமாம் கைப்பின் வருங்கேடு
துவர்ப்பிற் பயமாஞ் சுவைகள் அவற்றில்
புளிநோய் பசி காழ்ப்புப் பூங்கொடியே தித்திப்பு
அளிபெருகும் மாத வர்க்கு''                                 

என்று, சிலப்பதிகார காலத்தில் தோன்றிய பரத சேனாதிபதியம் உரைக்கின்றது. உவர்ப்பு கலக்கத்தையும், கைப்பு கேட்டையும், துவர்ப்பு அச்சத்தையும், புளிப்பு நோயையும், கார்ப்பு பசியையும், இனிப்பு நன்மையையும் மனிதர்க்குத் தருவதாக இதன் பொருளமையக் காணலாம்.

அதனால்தான் புள்ளிருக்கு வேளூரைச் சார்ந்த மருத்துவர் வைத்திய நாத ஈசுவரர், நோய் என்று வருகின்றவர்களுக்கு மருந்தாக மண்ணையே வழங்கி வந்தாராம். அந்த மண்ணும் நோயைப் போக்கி மகிழ்ச்சியைத் தந்தது. எவ்வாறென்றால், அம்மருத்துவர் தந்த மண்ணுக்கு உரிய நிலம் மருத நிலம்–இனிப்புச் சுவையைக் கொண்டது என்பது பெறப்படுகிறது.

"" மண்டலத்தில் நாளும் வயித்தியராகத் தாமிருந்தும்
கண்டவினை தீர்க்கின்றார், காணீரோ? தொண்டர்
விருந்தைப் பார்த் துண்டருளும் வேளூர்என் னாதர்
மருந்தைப் பார்த் தால்சுத்த மண்.''                       

என்று காளமேகப்புலவர் உரைக்கக் காணலாம்.
உப்பும் புளியும்

உணவின் சுவையைக் கூட்டுவதற்காக உப்பும், புளியும் 
உணவின் பாகமாக அமையும். அவை உணவில் 
பாகமாகக் கொள்ளப் பட்டாலும் இனிப்பு, காரம், 
கசப்பு ஆகிய சுவைகள் இணைந்து உப்பு, புளிக்குரிய 
இயல்பான குணத்தை மாற்றிவிடுகின்றன. 
அவ்வாறிருந்தாலும் உப்பும், புளியும் உடலைப் 
பாதிக்கக் கூடியதாகவே அமைகின்றன. 
இவ்விரண்டும் நெஞ்சடைப்பு, கோழை, ஈளை 
ஆகியவற்றை ஆதியாகக் கொண்டு உருவாகும் 
நோய்களுக்கு மூலமாக அமை கின்றன. அதன் 
பொருட்டே மருந்துண்ணும் வேளையில் நோயாளி 
உப்பையும், புளியையும் விலக்கிட 
வேண்டுமென்பர். நோய் வாராதிருக்கவும் 
இவை தள்ளப்பட வேண்டிய தென்று உணர்த்துவதை 
உணரலாம்

நாடியும் சுவையும்


சித்த மருத்துவ முறைகளில் சிறந்த முறையாகக் காணப் படுகின்றவற்றுள் சுவையைக் கொண்டே நோயை அறிந்திடும் முறை சிறப்பிடம் பெறுகிறது. நோயாளியின் நாவில் எவ்வகையான சுவை தோன்றுகிறதோ அச்சுவையைக் கொண்டு நோயின் வகையை அறிந்து, அதற்குரிய மருத்துவ முறையை மருந்தாகக் கொள்கின்றனர்.
நாவில் இனிப்புச்சுவை தோன்றினால் ஐயம் மிகுந்த தென்றும், கசப்புச்சுவை தோன்றினால் பித்தம் மிகுந்ததொன்றும், புளிப்புச் சுவை தோன்றினால் வாதம் மிகுந்த தென்றும், துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு ஆகிய சுவை தோன்றினால் வாதபித்த ஐயம் கலந்த தென்றும் தெரிகிறது

No comments:

Post a Comment