Saturday, April 7, 2012

விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம்


அணுத்துகள் விஞ்ஞானிகள் வியக்கும் நடராஜ நடனம்!


விஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான
இயற்பியல் (physics) முன்னேற முன்னேற அதன் புதுப்
புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள்
பிஸிக்ஸ் போன்றவை உருவாகி உள்ளன. 

கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக
நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு
வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு
தனது படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும்
இரு கோவில்களுக்கு விஜயம் செய்தார். ஒரு கோவிலின்
அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள்
வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன்
சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய
தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின்
மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி
அறிமுகப்படுத்திக் கொண்டான். 

எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த
அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள்.
இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல்
சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின்
ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம்
இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய
அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார். 

பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும்
அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி
தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ்
தொடரில் பத்தாவது எபிசோடான 'தி எட்ஜ் ஃபார் எவரில்'
(The edge forever) அவர் பயன்படுத்திக் கொண்டார்.
கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில்
உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார். 

இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை
விளக்க வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல்
விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ
நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார்!
ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர்.
"தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்' (The Tao of Physics) என்ற
இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல்
1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக
வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்;
இன்றும் படித்து இன்புறுகின்றனர்! 

அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-
"மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார்வையை விட
கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று;
அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது! கீழை நாட்டு ஞானிகளுக்கு
பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம்
போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக்
கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால்
காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன
பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன பௌதிகம்
அணுத்துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக
அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது.
கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது
போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை
உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின்
நடனம் போலவே உள்ளது." 

அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின்
நடனத்தைப் பற்றி முதலில் சற்று அறிய வேண்டும் என்றார்
காப்ரா! அணுவில் உள்ள அசைவை - நடனத்தை
சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே
லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர் 29ம் தேதி பிஸிக்ஸ்
அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான்
ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்: 

"
நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற
ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும்
ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின்
நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும்
சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின்
பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை
உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ
நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள
பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத்
தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்." 

நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள்
நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே
நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக
விஞ்ஞானிகள் வியந்தனர். 

விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக்
கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்டு
அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான்
அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய்,
அணுவில் அசைவாய் என்ற வரிகளாகும் (இருவர் மயலோ
என்று தொடங்கும் திருப்புகழ்) 

இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி
ஐரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு
இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள
நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள்
இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப்
போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில்
அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய
நடராஜரின் சிலையைப் படத்தில் பார்க்கலாம்)

செர்ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும்
நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி,   நன்றி
தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு
பெருமையுடன் தெரிவித்தது. 

ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர
நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய்
சிலிர்க்கிறது அல்லவா?! 


No comments:

Post a Comment