Monday, December 23, 2013

தினம் ஒரு திருமந்திரம் 23-12-2013கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்காட்டி
வீணாத்தண்டு ஊடே வெளியுறத் தானோக்கிக்
காணாக்கண் கேளாச் செவிஎன்று இருப்பார்க்கு
வாணான் அடைக்கும் வழிஅது வாமே.

பொருள் : கோணுதல் இல்லாத மனத்தை ஐõலந்திர பந்தம் முதலியவற்றால் கீழ் நோக்காது தடுத்து நடு நாடியின் வழியாகச் செல்லும் பிராணனுடன் மனத்தையும் பொருத்தி ஆகாயத்தின் இடை பார்வையைச் செலுத்தி, காணாத கண்ணுகம் கேளாத செவியுமாக இருப்பார்க்கு வாழ்நாளாகிய ஆயுள் அழியாமல் அடைக்கும் உபாயமாகும்.

Thursday, December 19, 2013

தினம் ஒரு திருமந்திரம் 19-12-2013

உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலம்என் றாரே.

பொருள்
எல்லாமுடைய சிவனது அடியார்க்கு அடியாராய் உள்ளவரிடம் கூடி, சிவச் சோதியில் பொருந்திச் சிவபுரத்தில் புகுந்தேன். சிவபுரத்தில் கடைவாயிலில் பொருந்தி நின்றவர் என்னைப் பார்த்ததும் சிவபெருமானிடம் விண்ணப்பிக்க, சிவபெருமான் என்னை அழைத்து வருமாறு பணிக்கக் கடைவாயில் காப்பாளர் அபய முத்திரை காட்டி அழைத்தனர். (ஓலம் - அடைக்கலமொழி)

Thursday, December 12, 2013

தினம் ஒரு திருமந்திரம் 12-12-2013

ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளை யோனே.

பொருள் : போகப் பொருள்கள் வருவன வரும். அவை நீங்குவன நீங்கும். கழிக்கப் பெறும் வினைகள் கழியும். அனுபவிக்க வேண்டி வருவன வந்து சேரும். ஆகையால் இவற்றை இறைவன் காட்டியருளக் கண்டிருப்பவனே அவன் ஆணையின் வண்ணம் செயலாற்றுகின்ற முதல் தகுதி உடையவன் ஆவான்.

ஒரு ஜென் தத்துவக் கதை

ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோபம் கொண்ட மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்.

அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாட்டால் அது பெரும் அவமானம் என கருதப்படும். எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான்.

ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான். அறிவுரை வேண்டி ஒரு ஜென் துறவியை நாடினான்.

அவனது கதை முழுதும் கேட்ட அவர், " சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன" என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றான் அவன். " இப்போது நீ என்னசெய்கிறாய்?" என்று பின்பு கேட்டார். " டீ ஆற்றுகிறேன்" என்றான் அவன்."அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர்.

ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன். "எனக்கு பயம் அதிகரித்தவன்னம்இருக்கிறது. என்ன செய்ய?" என்றான். இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று" என்றார் ஜென் துறவி.
தன் பயத்தை எல்லாம் வேகமாக மாற்றி வெறித்தனமாய் டீ ஆற்றினான்.

இரண்டு வாரம் ஆனது. அப்போதும் அதே அறிவுரை.

போட்டி நாள் அருகில் வந்து விட்டது. டீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.

"போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு" என்றார் துறவி.

மல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.. "வா.. முதலில் டீ சாப்பிடு" என்றான் கடை காரன். "சரி" என்று அமர்ந்தான் வீரன்.

அவனது டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.

இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்!

ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால்,போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணி போட்டியே வேண்டாம் என சென்று விட்டான்.

தத்துவம்: ஈடுபாடு ஒன்றே வெற்றி தரும், போட்டிகள் இல்லையென்றாலும்