Wednesday, November 20, 2013

தினம் ஒரு திருமந்திரம் 20-11-2013ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே.

பொருள் : சுழுமுனையின் மேல் சென்றவர்க்குத் துன்பம் களையும் சிவம் நாத தத்துவத்தில் வெளிப்படுவான். நாதத்தில் விளங்கும் சிவன் பரிசுத்தமான ஒளியை வீசிக் கொண்டிருக்கும். அவ்வாறு பொருந்திய சந்திர மண்டலம் விளங்கப் பெற்றவர்க்கு, தகுதிவாய்ந்த மனம் பொருந்துகின்ற சுழுமுனை நூலேணியாகும்.

Sunday, November 17, 2013

தினம் ஒரு திருமந்திரம் 17-11-2013

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

பொருள் : 
அன்பு வேறு, சிவம் வேறு, இரண்டும் ஒன்றல்ல- தனித்தனியான இரண்டு என்று சொல்லுபவர்கள் அறிவில்லாத மூடர்கள். அன்பே சிவம் என்பதை பலரும் அறியாதிருக்கிறார்கள் .  அன்பு தான் சிவம் என்பதை எல்லோரும் அறிந்து விட்டால், பிறகு அவர்களே அன்புருவமான சிவமாய் அமர்ந்திருப்பர்கள்-வாழ்ந்திருப்பார்கள். (அமர்ந்திருப்பதாவது ஆனந்த வெள்ளத்தில் திளைப்பது)

Saturday, November 16, 2013

மந்திர உச்சாடனம்- விதிமுறைகள்

மந்திரம் என்பதை மனதின் திற(ர)ம் என்று கொள்ளலாம். மனதை திறக்ககூடிய சாவி மந்திரம். மந்திர உச்சாடனம் என்பது வெறும் சொற்களை சொல்வதை போல சொல்லக்கூடியதல்ல. அதன் உச்சரிப்புகள்  நுணுக்கமானவை. சொற்களை மிக ஜாக்கிரதையாகவும், மிகுந்த பிரயாசையோடும் சொல்ல வேண்டும்.

            பொதுவாக மந்திரங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று ஆபத்தானவை,  மற்றொன்று ஆபத்தில்லாதவை. எல்லா பீஜ மந்திரங்களும் மிகவும் ஆபத்தானவை. அதன் உச்சரிப்புகள்  மாறும் போது பலன்களும் மாறும். ஒவ்வொரு பீஜங்களும் ஒவ்வொரு சக்தியை குறிக்கும். எனவே அந்த சக்தியை கவர்ந்திழுக்க அதன் சரியான உச்சரிப்பை உபயோகிக்க வேண்டும். ஆபத்தில்லாத மந்திரங்கள் என்பது பொதுவாக அனைவரும் உச்சரிக்கும் "ஓம் நமசிவாய,  ஓம் நமோ நாராயணாய, ராம ராம, கிருஷ்ணா கிருஷ்ணா"  போன்றவைகள் ஆகும். இதற்கு எந்த விதிகளும் இல்லை.

 நாம் ஆபத்தான மந்திரங்களை உச்சரிப்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.  (ஏனெனில், ஒரு உச்சரிப்பு  மாறினால் பலன்கள் மாறி, அந்த மந்திரமே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்)

1. யார் மந்திர உச்சாடனம் செய்யலாம்?
    யார் வேண்டுமானாலும் செய்யலாம். அனால், உச்சரிப்பவர் அக ஒழுக்கம் மற்றும் புற ஒழுக்கத்தில் சிறந்தவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் மந்திரங்களை உச்சரித்தால், அது பாவ கர்ம வினையாக மாறி நம்மை ஜென்ம ஜெனமமாய் தொடரும்.

2. பிரமச்சரியம் அவசியமா?
    நிச்சயமாக அவசியம் இல்லை. இல்லற வாசிகள், பிரம்மச்சாரிகள், சந்நியாசிகள் என்று யாராக இருப்பினும் மேலே சொன்ன ஒழுக்க முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

3. குரு அவசியமா?
   எந்த ஒரு கலைக்கும் குரு நிச்சயமாக தேவை. ஆனால் மந்திர யோகத்திற்கு குருவை தேடி, தீட்சை பெற்று பின் மந்திர பாராயணம் செய்வது என்பது இந்த காலத்திற்கு பொருந்தாது. ஆனால், குரு முகமாக ஒருவர் மந்திரங்களை அறிவதே சிறப்பு. எந்த மந்திரங்களை, எந்த அளவில், எந்த அழுத்ததில் உச்சரிக்க வேண்டும் என்பது அனுபவசாலிகளுக்கே தெரியும். அப்படி, குருமுகமாக கற்க இயலாதவர்கள், "குரு தட்சினாமுர்த்தி "யை மானசீக குருவாக ஏற்று மந்திர உச்சாடனம் செய்ய ஆரம்பிக்கலாம்.

4. தவறான உச்சரிப்புகள் என்ன செய்யும்?
    மந்திரம் என்பது ஏதோ பல வார்த்தைகளை போட்டு தொடர்ச்சியாக சொல்லக்கூடிய சொற்றொடர் அல்ல. அது, நமது எழுத்துக்கள் அல்லது அட்சரங்களில் உள்ள அதிர்வலைகளை பிரபஞ்சத்தில் உலாவ விட்டு நமக்கு தேவையான பலன்களை கொடுக்கும் ஒரு முறை ஆகும்.

      அதிர்வலைகள் நேர்மறை, எதிர்மறை என்று இரண்டு பிரிவுகளாக உள்ளது. நேர்மறை அதிர்வலைகள் என்பது நல்ல நோக்கத்தோடு, சரியான உச்சரிப்புகளுடன் ஜெபிக்க கூடிய முறையில் உருவாகும்.
எதிர்மறை அதிர்வலைகள் என்பது கெட்ட நோக்கத்தோடு ஜெபிக்க கூடிய முறையில் உருவாகும். (பல சமயங்களில் தவறான உச்சரிப்புகள் எதிர்மறை அதிர்வலைகள் ஏற்படுத்தும்). எனவே, தவறான உச்சரிப்புகளை முடிந்த வரை  தவிர்ப்பது பயக்கும்.

-திரு. இயற்கை சிகிச்சையாளன் (Mr. Nature Cure )பஞ்ச பூத சிகிச்சை- நிலம் (உடல் )- I

இந்த பஞ்ச பூத சிகிச்சையில், முதல் பூதமான நிலம் அல்லது உடல் என்னும் பூதத்தை எப்படி ஆரோக்கியமாக வைத்து கொள்வது என்றும், அதன் மூலம் மற்ற நான்கு பூதங்களை  பாதுகாப்பது எப்படி என்றும் இந்த பதிவில் காண்போம்

உடல் என்னும் அற்புத தொழிற்சாலை (The amazing Industry- Body)

இந்த பூத (அ) பரு உடலை நாம் நிலம் என்னும் பூதத்தின் கீழ் கொண்டாலும், இதில் மற்ற 4 பூதங்களும் அடங்கி இருப்பதை மறுக்க முடியாது.

நிலம்             - உடல் உறுப்புகள்
நீர்                   - இரத்தம், உமிழ் நீர், விந்து, நாதம்
நெருப்பு        - பசி, உஷ்ணம்
காற்று           - மூச்சு விடுதல்
ஆகாயம்      - தூக்கம், மனம்

எனவே, பஞ்ச பூதங்களும் நிலம்(உடல்) என்னும் பூதத்திலேயே அடங்கி விடுகிறது.

இனி , உடல் உறுப்புகள், அதன் செயல்பாடுகள், அதில் நோய் ஏற்படும் முறைகள், அதை சரி செய்யும் வழிமுறைகள் மற்றும் நில பூதத்தை நம் வசமாக்கும் வழிகளை காண்போம்.

உடல் உறுப்புகள் :மேலே படத்தில் உள்ளது தான் ஒரு மனித செல் (Human cell). இதை "அணு" என்று சொல்லலாம். இந்த செல் தான் நம் உடலில் மிக முக்கியம். ஏனென்றால், பல செல்களின் கூட்டமைப்பு தான் "திசுக்கள்" (Tissue) என்று கூறுகிறோம். பல லட்சம் திசுக்களின் கூட்டமைப்பு "உறுப்புகள்" (organs) என்று கூறுகிறோம்.
இந்த உறுப்புகளை, அதன் இடங்களின் அமைப்பை பொருத்தும், அதன் செயல்பாடுகள் பொருத்தும் பெயரிட்டுள்ளனர். 

உதாரணம்:

வயிறு                         : உணவை கூழாக்கும் உறுப்பு 
குடல்                           : ஜீரண உறுப்பு 
நுரையீரல்                 : காற்றை கடத்தும் உறுப்பு 
சிறுநீரகம்                  : திரவ கழிவு வடிகட்டி
கல்லீரல்                    : உடல் உஷ்ணமானி 
எலும்புகள்                : உடலுக்கு கட்டமைப்பை தருவது 
நரம்புகள்                   : உணர்ச்சிகளை கடத்தும்
இரத்த குழாய்கள்   : இரத்தத்தை கடத்தும் 
இருதயம்                   : இரத்தத்தை பம்ப் செய்யும் 

இப்படி எண்ணற்ற உறுப்புகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை சரிவர செய்து கொண்டு இருக்கும். இதை போன்ற ஒரு மிகப்பெரிய தொழிற்சாலையை நாம் உலகத்தில் வேறு எங்கேயும் காண முடியாது.

இதில் ஏதேனும் ஒரு சிறு தடங்கல் வந்தாலும், உடல் உறுப்புகள் அனைத்தும் ஒன்று கூடி, தன்னை தானே சரி செய்து கொள்ள முயற்சி செய்யும். ஆனால், அது பெரிய உபாதைகளாக மாறும் பட்சத்தில், உடலானது நோய்க்கான அறிகுறிகளை நமக்கு உணர்த்தி, அந்த உபாதைகளை நீக்க சமிஞை  கொடுக்கும். இதை தான் நாம் "நோயின் அறிகுறிகள்"  என்று கூறுகின்றோம். 
உதாரணமாக சளி, இருமல், ஜலதோஷம், வாந்தி, பேதி, தலைவலி, இரத்த அழுத்த மாறுதல், உடல் சர்க்கரை நிலை மாறுதல் போன்றவையெல்லாம் உடலில் ஏற்படுகின்ற அல்லது ஏற்பட போகின்ற நோய்களின் அறிகுறிகளேயல்லாமல், "நோய்கள் " அல்ல. இதை நாம் முதலில் தெளிந்தால் தான், உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது எப்படி என்று தெரிந்து புரிந்து கொள்ள முடியும்.   

பிராண  சக்தியும் உடலும்:

 "இந்த பிரபஞ்சத்தில் பரந்து விரிந்து கிடைக்கின்ற பிராண சக்தி தான் நம்மை வாழ வைக்கின்றது "  என்னும் இயற்கை மருத்துவ கோட்பாட்டின்படி, உடலின் உள்ளே நுழைகின்ற பிராண சக்தியால் தான் நாம் உயிர் வாழ்ந்து கொண்டு .இருக்கின்றோம் என்பது தான் ஒரு மனிதன் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது. இந்த பிராண சக்தி (cosmic energy)யானது  தனக்குளே எல்லா விதமான  தாது உப்புகளையும் எல்லாவிதமான வாயுக்களையும் கொண்டுள்ளது. 

"பிராண சகத்தின் மூலமாக மட்டுமே நாம் நம் உடலுக்கு தேவையான சக்திகளை எல்லாம் பெற்று விடலாம்" என்பது தான் யோகிகளின் தத்துவம்.
நம் உடம்பிற்குள்ளேயும் இந்த பிராண சக்தி நுழைந்து, நம்முடைய செல்களை ஆட்சி செய்கின்றது.  

உடம்பின் உள்ளே நுழைகின்ற பிராண சக்தியை மேலே சொன்ன செல்கள் கிரகித்து கொள்கின்றன.(உலக மருத்துவ கொள்கைப்படி oxygen என்னும் பிராண வாயு உள்ளே நுழைகிறது). செல்களின் உள்ளே சென்ற பிராண சக்தியானது பின் எல்லா நாடிகளின் வழியே நுழைந்து உடல் உறுப்புகளை இயக்குகிறது. 

பிராண சக்தியினை செல்கள் கிரகித்து கொள்ளும் செயலின் பெயர் "உட்கொள்ளுதல்"(Assimilation) என்பதாகும். கிரகித்த சக்திகளின் மூலம் ஏற்பட்ட கழிவுகளை வெளியேற்றுகின்ற செயலுக்கு "வெளித்தள்ளுதல்"(Dissimilation) என்று பெயர். இந்த இரண்டு செயல்களும் தடை இன்றி நடக்கும் வரை நம் செல்கள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். நாம் இளமையோடும், சுறுசுறுப்போடும் இருப்போம். இந்த இரண்டில் ஒன்று தடைபட்டாலும் மற்றொன்று நடக்காது. அதன் காரணமாக உடல் உறுப்புகள் அனைத்தும் அந்த தடைபட்ட இயக்கத்தை சரி செய்ய போராடும் (இதை தான், நாம் உறுப்புகள் எவ்வாறு நோயுறுகின்றன என்று பார்த்தோம்). 

இந்த பிராண சக்தி  எப்படி இயங்குகிறது, எப்படி தடைபடுகிறது, எப்படி அதை நாம் சேமிப்பது, அதன் மூலம் எப்படி உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது என்பதை வரும் பதிவுகளில் காண்போம் ...............

-திரு. இயற்கை சிகிச்சையாளன் (Dr. Nature Cure)

Friday, November 15, 2013

தினம் ஒரு திருமந்திரம் 15-11-2013தத்தம் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமும்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ் வேந்தன் கடனே.

பொருள் : தத்தமக்குரிய சமயநெறியில் நில்லாதவர்களைச் சிவன் அருளிய ஆகம முறைப்படி, அப்பெருமான் மறு பிறப்பில் அத்தகைய தண்டனையைக் கொடுத்துத் திருத்தும். இப் பிறப்பிலேயே தக்க தண்டனை கொடுத்துத் திருத்துவது அரசனது கடமையாகும்

Wednesday, November 13, 2013

கணபதி ஹோமம் (தடைகள் நீங்க)

கணபதி ஹோமம் புதிய தொழில்கள் துவங்கும் போது நடத்தப்படும். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மற்ற ஹோமங்களை துவக்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்ய வேண்டும்.கணபதி ஹோமத்தின் பெருமை: மகாகணபதியின் அருளைப் பெறக் கணபதி ஹோமம் மிகவும் முக்கியமானது. வெள்ளிக்கிழமை, சதுர்த்தி ஆகிய நாட்களில் விடியற்காலையில் ஹோமம் செய்வது விசேஷம். அஷ்டத்திரவியம், தேங்காய்த்துண்டு ஆகியவை அதற்குச் சிறந்த ஹோமத்திரவியங்கள். 1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும். ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவை ஸர்வ வச்யம் நல்கும். திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும். நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும். தேன் தங்கம் தரும். நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்தி, ராஜ வச்யம் தரும். மோதகம் போரில் வெற்றி தரும். மட்டை உரிக்காத தேங்காய் (1 மண்டலம்) மந்திர சித்தி நல்கும். தாமரை செல்வ வளர்ச்சி தரும். வெண்தாமரையால் வாக் சித்தி ஏற்படும். அருகம்புல் குபேர சம்பத்து தரும். மோதகம் நினைத்ததைத் தரும். வில்வ இலை, நெய்யில் நனைத்த சமித் ஆகியவையும் அப்படியே. தேங்காய், அவல் மிளகு ஆகியவை ஸர்வ வசியம் தரும். இவ்வாறு ஹோமத்திற்குரிய ஆகுதிகள் பெருமை சேர்க்க வல்லபை. பலன் தருபவை.

Monday, November 11, 2013

தினம் ஒரு திருமந்திரம் 11-11-2013


திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென்று எண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம்இல் லாத புளிமாங் கொம்பேறிக்
 கருத்துஅறி யாதவர் காலற்ற வாறே.

பொருள் : செப்பமாக வளர்த்த மரத்தினின்றும் பெற்ற இனிய மாம்பழத்தைச் சேமிப்புப் பொருளாக எண்ணி அறையில் வைத்துவிட்டு, தகுதியில்லாத புளியம் பழத்துக்காகப் புளியங் கிளையில் ஏறி, ஆலோசனை யில்லாதவர் பிராணசத்தி குறைவுற்று வருந்துகின்றாரே !

Sunday, November 10, 2013

தெரிஞ்சிக்கோங்க !

சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது சின்ன  எறும்புகளோ பூச்சிகளோ நமக்குத் தெரியாமல் உணவில் விழுந்து உயிர் விடக்கூடாது என்பதற்காகவே. சாப்பிடும் முன் இலையின் ஓரத்தில் கைப்பிடிச் சோறு/சாதம் வைப்பது உணவு தானியங்கள் விளைவிக்கும் போது நமக்குத் தெரியாமல் சின்னச்சின்ன உயிரினங்கள் (புழு,பூச்சிகள்) கொல்லப்பட்டிருக்கும், அவைகளுக்கு வைக்கப்படும் பிண்டம் தான் அந்த கைப்பிடிச் சாதம். மற்றும் அந்தச் சாதம் பிற உயிர்களுக்கும் உணவாக வேண்டும் என்ற உயிரிய ஜீவகாருண்ய நோக்கமே.

இப்படி எல்லா உயிரினங்களையும் மதிப்பதே நம் பண்பாடு

தினம் ஒரு திருமந்திரம் 10-11-2013

கிழக்கெழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே.

பொருள் :
கிழக்கே வானத்தில் உதயமாகிய நன்றாக விளங்கிய சூரியன், மேற்கில் மறைவதைக் கண்டும் அறிவில்லாத மக்கள் இளமை நிலையாமையை உணரார். அதே போன்று இளங்கன்று சில நாளின் வளர்ந்து மூப்படைந்து இறப்பதைக் கண்டும் அகன்ற உலகிலுள்ளோர் இந்த இளமை நிலையாமையை உணரமாட்டார்.

Thursday, November 7, 2013

தினம் ஒரு திருமந்திரம் 07-11-2013

தன்னது சாயை தனக்குத் வாதுகண்டு
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.

பொருள் : 
தன்னோடு பொருந்திய நிழல் தனக்கு உதவாதது கண்டும் அறிவில்லாதவர்கள் தமக்கு வேறாகவுள்ள செல்வம் தமக்கு உதவும் என்று எண்ணுவார்கள். உடலோடு ஒன்றாக வந்தது உன்னுடைய உயிர். எனினும் உயிர் போகும்போது உடல் அழிந்து போகும். அகக்கண் இடமாக விளங்குகிறது நிலையான ஒளி. அதனை உடம்பு உள்ளபோதே நாடிக் கொள்ளுங்கள்.

Wednesday, November 6, 2013

குட்டிக் கதை

கடவுள்: கழுதையைப்
படைத்து அதனிடம் சொன்னார். நீ
கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும்
பொதி சுமப்பாய். உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத்
தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்.

கழுதை: கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்
கடவுள்: நாயைப் படைத்து அதனிடம்
சொன்னார். நீ மனிதனின்
வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல
நண்பனாய் இருப்பாய். மனிதன் தரும்
மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்.

நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

கடவுள்: குரங்கைப் படைத்து அதனிடம்
சொன்னார். நீ மரங்களில்
கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.

குரங்கு: எனக்கு 10
வருடங்களே போதும் சாமி.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

கடவுள்: மனிதனைப் படைத்தார். நீ
சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன்
அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.

மனிதன்: சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு. கழுதை வேண்டாமென்று சொன்ன 30
வருடங்களையும், நாயின் 15
வருடங்களையும், குரங்கின் 10
வருடங்களையும் எனக்குத் தாருங்கள்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள் மனிதனாகவும், பின் திருமணம் செய்து 30 ஆண்டுகள் கழுதையைப்
போல குடும்பப் பாரம் சுமந்தும், குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள் நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும், கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப் போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான்


Tuesday, November 5, 2013

வாஸ்து சாஸ்திரம்

சூரியனை பூமி சுற்றும் திசை, காற்று வீசும் திசை, இவ்விரண்டாலும் பூமியில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் வீட்டுமனை, கட்டிடம் போன்றவற்றை அமைப்பதற்கு நம் முன்னோர்கள் சாஸ்திரங்களை உருவாக்கினர். இந்த சாஸ்திரங்களை வீட்டின் சொந்தக்காரரின் ஜென்ம லக்னம் மற்றும் ராசியுடன் இணைத்து வகுத்தனர். இவையே மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது. வாயு சாஸ்திரம்தான் வாஸ்து சாஸ்திரம் என்று மாறியதாகவும் கூற்று உள்ளது.

ஒவ்வொரு மனையிலும் வாஸ்து புருஷன் என்னும் ஆற்றல் தெய்வம் ஒடுங்கியிருப்பதாகவும், அந்த வாஸ்து தெய்வத்தின் தலைப்பகுதி மனையின் வடகிழக்கு மூலையிலும், உடலானது மனையின் நடுப்பகுதியிலும், தென்மேற்கு மூலையில் கால் பகுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. வாஸ்து தெய்வத்தின் தலை, உடல், கால் போன்றவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப மனையில் அமையும் வீடு மற்றும் அதன் அமைப்புகள் இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 4 திசைகள் தவிர, வடக்கும்– கிழக்கும் இணையும் வடகிழக்கு (ஈசான்யம்), கிழக்கும்– தெற்கும் இணையும் தென்
கிழக்கு (அக்னி), தெற்கும்– மேற்கும் இணையும் தென் மேற்கு (நிருதி), மேற்கும்– வடக்கும் இணையும் வடமேற்கு (வாயு) ஆகிய திசைகளும் உள்ளன. கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன், தெற்கில் எமன், மேற்கில் வருணன் ஆகியோரின் பார்வை இருப்பதாக கூறப்படுகிறது.

வடகிழக்கு ஈஸ்வரன் வாசம் செய்யும் மூலை என்பதால், அந்த பகுதி சுத்தமாக, சற்று பள்ளமாக, பளு இல்லாமல், நீர் நிலைகள் அமையும் விதமாக இருக்க வேண்டும். சாக்கடை, கழிவறை, செப்டிக் டேங்க் போன்றவற்றை இந்த மூலையில் அமைக்கக் கூடாது.

தென்மேற்கு மூலை உயரமாகவும், கனமான அமைப்புடனும் இருக்க வேண்டும். இந்த மூலை உயர்வாக இருந்தால் பொருளாதார உயர்வு உண்டாகும் என்கிறது வாஸ்து. மனையில் உயர்ந்த மரம், மாடி அறை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவற்றை அமைக்கலாம். போர்வெல், சம்ப், கழிவறை அமைக்கக் கூடாது.

தென்கிழக்கு மூலையில் சமையல் அறை
அமைவதே சிறப்பானதாகும். இந்த மூலை வெளிச்சமாகவும், சூடாகவும் இருந்தால் வீட்டில் அமைதி நிலவும். வடமேற்கு திசை காற்றோட்டமாக இருக்க வேண்டிய பகுதி. வாயு பகவான் வாசம் செய்யும் இந்த பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் சரியாக அமைந்தால் உடல்நலம் நன்றாக இருக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

திசைகளில் மேற்கும், தெற்கும் உயரமான திசைகள். கிழக்கும், வடக்கும் பள்ளமான திசைகள். எனவே மாடிப்படி கிழக்கில் ஆரம்பித்து மேற்கு நோக்கியோ, அல்லது வடக்கில் ஆரம்பித்து தெற்கு நோக்கியோ ஏறும்படி அமைய வேண்டும்.

வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலைஎன்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும்[“வாஸ்து” என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ளநிலத்தைக் குறிக்கும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.
வாஸ்து பூமிபூஜை


வேதத்தில் வாஸ்து சாஸ்திரம்

கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கொங்கிறீற்றாலும் (Concrete) கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை.
வாஸ்து பூமிபூஜை

வாஸ்து பூமிபூஜையின் அடிப்படை தத்துவம் ஒரு கட்டிடமொன்று கட்டப்படும் முன்பு மண்ணின் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே.[
பண்டைய வாஸ்து சாஸ்திர நூல்கள்

அதர்வ வேதம் தவிர வராஹமிஹிரரால் ஆக்கப்பட்ட பிருஹத் சம்ஹிதை என்னும் சமஸ்கிருத சோதிட நூலிலும் வாஸ்து சாஸ்திரம் பற்றிக் குறிப்பிடத்தக்க அளவு தவல்கள் உள்ளன.மயனால் எழுதப்பட்ட மயமதம், மானசாரரால் ஆக்கப்பட்டமானசாரம், விஸ்வகர்மாவின் விஸ்வகர்மீயம் முதலிய பல நூல்கள் தனிப்பட வாஸ்து சாஸ்திரம் பற்றி எழுந்த நூல்களாகும். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ லலிதா நவரத்னம் என்னும் பெயரில் வெளிவந்த நூலொன்று பண்டைக் காலத்தில் ஏற்பட்ட சிற்ப நூல்களாக 32 நூல்களைப் பட்டியலிட்டிருக்கிறது.

இதில் கண்டவை 1) விசுவதர்மம், 2) விசுவேசம், 3) விசுவசாரம், 4) விருத்தம், 5) மிகுதாவட்டம், 6) நளம், 7) மனுமான், பானு, 9) கற்பாரியம், 10)சிருஷ்டம், 11) மானசாரம், 12) வித்தியாபதி, 13) பாராசரியம், 14) ஆரிடகம், 15) சயித்தியகம், 16) மானபோதம், 17) மயிந்திரமால், 18) வஜ்ரம், 19) ஸௌம்யம், 20) விசுவகாசிபம், 21) கலந்திரம், 22) விசாலம், 23) சித்திரம், 24) காபிலம், 25) காலயூபம், 26) நாமசம், 27) சாத்விகம், 28) விசுவபோதம், 29) ஆதிசாரம், 30) மயமான போதம், 31) மயன்மதம், 32) மயநீதி என்பனவாகும். இவற்றுள் பல இன்று இல்லை. இப் பட்டியலில் காணப்படும் இன்றும் புழக்கத்திலுள்ள நூல்களான மானசாரம், மயன்மதம் (மயமதம்) என்பவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டாலும், தென்னிந்திய நுல்களாகும்.
வாஸ்து புருஷ மண்டலமும், வாஸ்து புருஷனும்படிமம்-1 வாஸ்து புருஷ மண்டலம்

கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்குப் பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் எனப்படுகிறது. இம் மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன.
படிமம்-2 திக்குகளின் அதிபதிகள்

முக்கியமான எட்டுத்திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்ட திக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். வடக்குத் திசைக்குக் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள்.படிமம்-3 வாஸ்து புருஷ மண்டலமும் வாஸ்து புருஷனும்

இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப் படுத்துகின்றது. இந்த உருவகம் குறியீட்டு வடிவில் தரப்படும்போது, வடகிழக்கில் தலையும், தென் மேற்கில் காலும் இருக்க வாஸ்து புருஷ மண்டலத்தைக் குப்புறப் படுத்தபடி ஆக்கிரமித்திருக்கும் ஒரு ஆண் உருவமாக வாஸ்து புருஷன் விபரிக்கப்படுகிறான் (படிமம் 3).
posted under வாஸ்து | No Comments »

வாஸ்து தோஷம் நீங்க பரிகாரம்

கட்டி முடித்த வீட்டில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டில் வாயிலாக சரி செய்யலாம்.

• வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.

• பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.

• ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.

• திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.

• தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.

• காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.

வாஸ்து தோஷம்

உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பதாக உறுதியாக தெரிய வந்தால், அதை தீர்க்க எளிய வழி உள்ளது. உங்கள் வீட்டுத் தலைவாசல் நிலையின் நீளம், அகலத்தை அளந்து கொள்ளுங்கள். அந்த அளவிற்கு அறுகம்புல் மாலையை நிலையில் மாட்டுங்கள் அதே போல மகாலட்சுமி உங்கள் வீட்டில் குடியிருக்க, நீள அளவுக்கு வெற்றிலை மாலை சூட்டுங்கள்.

நிலையில் சூட்டப்பட்ட அறுகம்புல் மாலையும், மகாலட்சுமிக்காகச் சூட்டப்பட்ட வெற்றிலை மாலையையும் மறுநாள் காலை கழற்றி மூன்றுபடி தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் போடுங்கள். அறுகம்புல் மாலை மற்றும் வெற்றிலை மாலையில் பட்ட தண்ணீரை உங்கள் விட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தெளித்துவிடுங்கள்.

வீட்டின் வெளிப்புறத்திலும் தெளியுங்கள். பிறகு, அறுகம்புல் மாலையையும், வெற்றிலை மாலையையும் ஒரு வெள்ளைத்துணியில் முடித்து ஆற்றில் போட்டு விடுங்கள். வாஸ்து தோஷம் விலகிவிடும். வாஸ்து தோஷத்துக்கு செவலூர் ஆலயத்தில் ஒரே ஒரு கல் வாங்கி மனை போட்டால் போதும் என்கிறார்கள்.

வீட்டின் ஈசான்ய மூலையில் ஒரு சொம்பில் நீர் ஊற்றி, அதன் மேல் ஒரு தேங்காயை வைத்து கலசம் ஏற்றி வைக்க வாஸ்து குறைபாடுகளை கலச அமைப்பு நீக்கி விடும். ஜாதகத்தில் குரு 3,6,8,12-ல் மறைந்திருந்தால் வளர்பிறை அல்லது தேய்பிறை பஞ்சமி திதியில் நவகிரகக் குருவுக்கு பால், பன்னீர், அபிஷேகம் செய்து, கஸ்தூரி பொட்டிட்டு மஞ்சள் பட்டுத்துணி சாற்றி, தாமரை பூ மாலை போட்டு, நெய், தீபம் அர்ச்சனை செய்ய வாஸ்து தோஷத்தால் தடைபட்ட தொழில், திருமணம் நடக்கும்.

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும்.


தென்பால் உகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன்

பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காண் ஏடி

பெண்பால் உகந்திலன் ஏற் பேதாய் இரு நிலத்தோர்

விண்பால் இயோகெய்தி வீடுவர் காண் சாழலோ


-திருவாசகம்-

சைவத்திலே அண்டத்திற்கும், பிண்டத்திற்கும் ( உடம்பு) உள்ள ஒரே தன்மையான ஒத்த இயல்புகளை ஒற்றுமைகளைக் கூறுவது திருமூலர் காலத்திலிருந்து இன்று வரை இருந்து வருகின்ற சித்தர்களின் மிக முக்கியான வெளிப்பாடாகும்.

நான்கு வேதங்களிலும் உள்ள புருஷஸூக்தம் அண்டத்தை ஒரு பிரமாண்டமான மனித உருவில் கண்டு வணங்குகின்றது. சாந்தோக்கிய உபநிடதத்தில் உள்ள தஹரவித்தை எம்முள்ளே உள்ள ஆகாசத்தை உபாசிப்பதைப் பற்றிப் பேசுகின்றது. திருமூலர் எமது உடலின் உள்ளமைப்பிலேயே பேரண்டத்தைக்காணும் ஒரு பெரும் அறிவுப்புரட்சியைப் பேசுகின்றார். இது எமது வானியலையும், அறிவியலையும், உளவியலையும் ஊடறுத்த சைவத்துக்கே உரிய ஒரு புதிய பரிணமிப்பான பேரண்ட உள அறிவுப் பரிமாண தத்துவமாகும். இதுவே தமிழர்களின் உளவியல் அல்லது அறிவியல் தத்துவங்கள் என்றும் கூறலாம். இது சைவத்திலேயே காணப்பட்டாலும் இந்த அறிவியல் உண்மை கால, தேச, நேர, சூழ்நிலை வரையறைகளைக் கடந்த எல்லா மக்களுக்கும், எல்லா இடங்களுக்கும் உரிய உலகளாவிய தத்துவ உண்மையாகும். இது படைப்புகள் எல்லாவற்றிற்குள்ளும் உள் ஆழத்திலே உள்ள பொதுவான சூத்திரத்தின் ஒத்த அமைப்பை, இயக்கத்தை, செயற்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

அண்டம் முழுவதுமே கருஞ்சுழியிலிருந்து (Black Hole) சூட்சுமமான இருப்பு நிலையில் இருந்து தூலமான இருப்பு நிலைக்குத் (from subtle to the gross existance) தள்ளப்பட்டு வந்தவையே. (Steven Hawkins, Ex Head of the Department of Physics, Cambridge University, UK) இவை எல்லாம் பராசக்தியின் வெளிப்பாடே. இங்குதான் சக்தியில் இருந்து சடமும், சடத்தில் இருந்து சக்தியும் பரிணமிக்கும் மாற்றத்தைக் காண்கின்றோம்.( Albert Einstein, Atomic Scientist, Nobel prize winner for thr the Physics - 1921) இந்தப் பேரண்டத்தின் தோற்றமும், இருப்பும், ஒடுக்கமும் பராசக்தியின் பரிணமிப்பும், மீள் பரிணமிப்புமான விளையாட்டே. இந்த சக்தியைத்தான் ஸ்ரீசக்கரத்திலும் அதன் முப்பரிமாண வடிவான மஹாமேருச்சக்கரத்திலும் உச்சியில் உள்ள முக்கோணமாக உருவகப்படுத்தித் தியானிக்கின்றோம். இதுவே சிவலிங்கத்தின் வட்டமான பீடமான ஆவுடையார். சிவலிங்கம் என்பது சுழற்சி அதிர்வான சக்தியை நிலைக்குத்ததிர்வான நாதம் அல்லது சிவம் ஊடறுத்து நிற்கும் இணை வடிவு ஆகும். சைவர்களாகிய நாம் சிவலிங்கத்தை முக்காலத்துக்கும் உரிய உளவியல், உயிரியல், வானியல், இரசாயனவியல், தத்துவம், ஆன்மீகம் யாவும் உள்ளளடக்கிய ஒருங்கிணைந்த அறிவியல் வடிவமைப்பாகக் காண்கின்றோம்.

இறையை நாதம் என்கின்ற சிவம் அல்லது அப்பன் என்ற ஆண் வடிவும் பிந்து என்கின்ற சக்தி அல்லது தாய் என்ற பெண்வடிவும் இணைந்த ஒருமித்த அம்மையப்பர் வடிவில் எப்பொழுதும்,எங்கும் காணும் தரிசனம் சைவத்தின் முனைப்புண்மை. எம்மில் இந்த நாதம், பிந்து இரண்டும் இணையும் போது அடி வயிற்றின் கீழே உள்ள குண்டலினி என்கின்ற பாலியற் சக்தி மேலெழுந்து மூலாதாரம் முதலாக சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை ஊடான ஆறு ஆதாரச் சக்கரங்களினூடாகச் (Energy Centres) சிரசு வரை மேல் நோக்கிப் பாய்ந்து இறையனுபவமாகிய பரவச நிலையை (State of Bliss), புதிய உணர்வை, பார்வையை (Perception), தெளிவை, தரிசனங்களை, விளக்கங்களைத் தருகின்றது. நாதம், பிந்து இணைந்து குண்டலினி சக்தி கீழ் நோக்கிச் செல்லும் போது உலக வாழ்க்கையில் பாலியல் இன்பமாகப் பரிணமிக்கின்றது. ஆண், பெண், அலி, பிறழ்பாற் சேர்க்கையாளர் என்று எம்மில் ஒவ்வொருவரிலும் ஏற்கெனவே இந்த நாதம் என்கின்ற ஆண்மையும் பிந்து என்கின்ற பெண்மையும் வெவ்வேறு விகித்தில் உண்டு. ஆணில் பெண்மையும் பெண்ணில் ஆண்மையும் கலந்துதான் காணப்படுகின்றது. இதையே சைவர்களாகிய நாம் ஆண் பாதி, பெண் பாதியான அர்த்த நாரீசுவர வடிவில் காண்கின்றோம். ஆண்களில் நாதம் கூடிய அளவிலும் பிந்து குறைந்த அளவிலும் காணப்படுகின்றது. பெண்களில் பிந்து கூடிய அளவிலும் நாதம் குறைந்த அளவிலும் காணப்படுகின்றது. அவ்வாறில்லாமல் மாறுபட்டுக் காணப்படும் நிலையில் அலிகளும், பிறழ் பாற் சேர்க்கையாளர்களும் வருகின்றார்கள். ஒவ்வொருவரும் தம்முள் உள்ள இந்த நாதம், பிந்து உந்துதல்களின் அகச்சமநிலையைப் பெறும் பொருட்டு புறத்தே பாலியல் நாட்டத்தை வெளிப்படுத்துகின்றார்கள். இது மிகச்சிறிய கண்ணுக்குத் தெரியாத பற்றீரியாக்கள் போன்ற நுண்ணுயிர்களில் இருந்து மனிதர் வரையுள்ள சிக்கலான உயிரினங்கள் வரை பொருந்துகின்ற உண்மையாகும்.

இதுவே படைத்தலுக்கரிய உந்துதல் ஆகும். இதுவே எமது இருப்புக்கான உந்துதலுமாகும். இதுவே இருப்பு நிலையைப் பேணுகின்ற உந்துதலுமாகும். இதுவே அண்ட வெளியின் இருட் சுழல். இதுவே எமது அகத்தின் இருள் மலம். இறையொளி இந்த இருளை ஊடுருவும்போது உதயம் நிகழ்கின்றது. இந்தப் பேரண்டம் கருஞ்சுழியில் சூட்சுமமான இருப்பில் இருந்து தூலமான இருப்புக்கு வந்து மீண்டும் முடிவில் சூட்சுமத்திலேயே சென்று ஒடுங்குவது கோடிக்கணக்கான வருடங்கள் எடுக்கும் இந்த சுழற்பாட்டினூடாக மீண்டும் விரிந்து வெளிப்படவே.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்படவிரிந்தன - திருவாசகம் -திருவண்டப்பகுதி. இதுதான் இந்தப் பேரண்டத்தின் அசைவு அல்லது சுழற்சி. இதுதான் உயிர் வாழ்வனவற்றின் உள்ள (உள்) அசைவு அல்லது சுழற்சி. இதற்குப் பின்னால் ஒரு பேரறிவு இருப்பதனால் இது எந்த விதமான குழப்பமும் இல்லாமல் நடந்தேறுகின்றது. இதுவே எமது விஞ்ஞான, தொழில் நுட்ப, தொடர்பாடல்களின் தொடர்ந்தேர்ச்சியான தேடல். இது வானியலின் அண்டப்பேரறிவியல்; உளவியலின் அண்டப்பேரறிவியல்; பௌதிகத்தின் அண்டப்பேரறிவியல்; சமூகவியலின் அண்டப்பேரறிவியல்; இறையியலின் அண்டப் பேரறிவியல்; பாலியலின் அண்டப்பேரறிவியல்; ஆத்மீகத்தின் அண்டப்பேரறிவியல்; இதுவே ஆண் என்றும் பெண் என்றும் சகல உயிரினங்களும் முனைப்படுத்தப்பட்டுள்ளதைக்காட்டும் அண்டப்பேரறிவியல்; உயிரற்ற சடப்பொருட்களையாக்கும் துணிக்கைகளான அணுக்களிலும் உள்ள நேரேற்றம் உள்ள புரோத்தன்களினதும் எதிரேற்றம் உள்ள இலத்திரன்களினதும் அகச்சமநிலை நாடிய கவர்ச்சியையும் அசைவையும் விளக்கும் அண்டப்பேரறிவியல்; துணிக்கைகளே அற்ற ஒளி, ஒலி, மின்சாரம், மின்காந்தம், ஈர்ப்பு, காந்தம், மற்றும் அணுச்சக்திகளும் கூட அகச்சமநிலை நாடி நேர் எதிர் முனைகளாகத் தொழிற்படுவதை விளக்கும் அண்டப்பேரறிவியல். இதுவே முழுமையான அண்டப்பேரறிவியலின் வடிவு. இந்தப் பேரண்டஅறிவியலின் தரிசனத்தைத்தான் அப்பர் சுவாமிகள்“….கண்டறியாதன கண்டேன்” என்று திருவையாற்றுப் பதிகத்தில் பாடுகின்றார்.

“காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்…”

“கோழிபெடை யொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்…”

“வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்…”

“சிறையிளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்…”

“பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்…”

“வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்…”

“இடுகுரல் அன்னதோர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்…”

“கருங்கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்…”

“நற்றுணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்…”

“பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்…”

“இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்…”

இந்த எதிர்முனைப்பட்ட உந்தல்கள் எப்போதும் அகச்சமநிலையை அடைவதற்கான ஓட்டத்தில், ஆட்டத்தில் அல்லது அசைவில் உள்ளன. தொடர்ந்தேர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் இந்த ஆட்டமே, அசைவே அணுவிலும் காணப்படுகின்றது; அண்டத்திலும் காணப்படுகின்றது; உயிர் வாழ்வனவும் இந்த ஆட்டத்தில்தான்; உயிரற்ற சடப்பொருட்கள் கூட இந்த ஆட்டம்தான். இவற்றில் அடங்காத மினசாரம், காந்தம், மின்னியற் சக்திகளும் கூட இந்த ஆட்டத்தின் படியே ஆடுகின்றன. நுண்ணுயிர்களிலும் எளிமையான உயிர் உள்ளதோ, அற்றதோ என்ற இரண்டுக்கும் இடைப்பட்ட நியூக்கிளிக்கமில உயிரக வடிவங்களிலும் இந்த ஆட்டமே. அவன், அவள், அது என்று மூவகைப்பட்டு நிற்கும் இந்த அண்டப்பேரண்டம் முழுமையிலும் நின்று இயங்கும், இயக்கும் ஆட்டம். இந்த ஆட்டத்தை உணர்ந்து தெளிதலே சிதம்பர தரிசனம்.

சாங்கிய யோகம் 24 தத்துவங்களையும் ஆராய்ந்து புருக்ஷன், பிரகிருதி வரை சென்று நின்று விடுகின்றது. (ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாசம்; ஐந்து அறிகருவிகளான கண், காது, மூக்கு, நாக்கு, தோல்; ஐந்து செயற்கருவிகளான கை, கால், நாக்கு, பாலுறுப்பு, கழிவுறுப்பு; ஐந்து அகப்புலனுணர்வுகளான மணம், சுவை, தொடுகை, பார்வை, ஒலி; நான்கு அந்தக்கரணங்களான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் யாவும் எம்மை ஆக்கியுள்ள 24 தத்துவங்கள்). புருஷனுக்கும் அப்பால் உள்ள பேர்இருப்புடன் ஒன்றுதல் அல்லது சமாதிநிலையுடன் நின்று விடுகின்றது பதஞ்சலியின் யோகம். பௌத்தம் சூனியநிலை அல்லது ஒன்றுமற்ற நிலையைப்பறிப் பேசுகின்றது. வேதாந்தம் பேர்இருப்பாகவே ஆகிவிடும் நிலையைப் பேசுகின்றது. வைணவம் பேர்இருப்புக்கு அணித்தாகி அனுபவிக்கும் பேரின்ப நிலையைக்கூறுகின்றது. சாக்தம் இருப்பை பெண்வடிவான பராசக்தியாக வழிகாட்டுகின்றது. ஆனால் இங்கெல்லாம் இந்த அண்டத்தினது, இந்த படைப்புகளினது நோக்கம், இருப்பு, இயக்கம், ஆட்டம், முடிபு பற்றிய புதிர்கள் இன்னமும் விடுபடவில்லை. முழுமையாக ஒழுங்கமைக்கப்படாத புதிர்ச்சித்திரம் (Jigsaw Puzzle) போலக் கிடக்கின்றது.

சைவத்தின் அறிவியலே இதற்கு அப்பாலும் சென்று எம்முள்ளே உறையும் இறையை பிந்து அல்லது சக்தி என்கின்ற பெண்வடிவினதும் நாதம் அல்லது சிவம் என்கின்ற ஆண்வடிவினதும் இணைபிரியா நிலையாக அம்மையப்பராகக் காண்கின்றது. இதேபோல இறையின் பேரண்ட இருப்பை பராசக்தி என்ற பெண் வடிவினதும் பரசிவம் என்ற ஆண்வடிவினதும் ஒருமித்த இணைந்த அம்மையப்பரான இந்தக்காட்சியுடன் இந்தப்பேரண்டத்தினதும் இந்தப்பிண்டமாகிய மனித உடலினதும் ஒத்த உள் அமைப்பும், இயக்கமும், ஆட்டமும் விளங்க அம்மையப்பராக நேர் எதிர் முனைப்புகளாக நேர் எதிர் ஏற்றங்களாக உள்ள படைப்புகள் யாவற்றினதும் தொடர்ந்தேர்ச்சியான உயிரியல், பௌதிக இரசாயனத், தொடர்புகளும் தாக்கங்களும் இயக்கங்களும் சமநிலையை நாடி அவை ஆடும் ஆட்டங்களும் ஒழுங்கமைக்கப்பட்ட புதிர்ச்சித்திரம்போல் (jigsaw puzzle) தெளிவாக தரிசனம் ஆகின்றது. இதுவே பேரண்டம் முழுவதிலும் உள்ள ஆட்டம் (Cocmic Dance). இதுவே நடராச நர்த்தனம்.

எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி

எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்

எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்குந்

தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே

- திருமந்திரம் பா-2722 -


நன்றி 

Monday, November 4, 2013

தினம் ஒரு திருமந்திரம் 04-11-2013

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.

பொருள் : 
தங்கள் உள்ளத்தே சிவலோகத்தையும், சிவத்தோடு அத்து விதமாய் பொருந்தி நிற்பதாகிய யோக நிலையையும் இவ்வாறு பொருந்தி நிற்றலால் அனுபவிக்கும் சிவபோகமாகிய பேரின்பத்தையும் தூங்காமல் தூங்குவதாகிய ஆனந்த நித்திரையில் கண்டார்கள். இவர்கள் எய்திய நிலையானது மனவாக்குக்கு எட்டாதது. ஆதலான் எவ்வாறு சொல்வது ?

Saturday, November 2, 2013

பஞ்ச பூத சிகிச்சை- 1

பஞ்ச பூதங்கள் என்பது
1. நிலம் 
2. நீர் 
3. காற்று 
4. நெருப்பு  
5. ஆகாயம் 

      "அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது, பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது"  என்னும் சித்தர்களின் கோட்பாட்டின் படி வெளியில் உள்ள பஞ்ச பூதங்களும், நம் உடம்பின் உள்ளேயும் உள்ளது. 

நிலமாக உடல் உறுப்புகளும்,
நீராக இரத்தமும், 
காற்றாக மூச்சும், 
நெருப்பாக பசி  உடல் உஷ்ணமும், 
ஆகாயமாக மனமும் உள்ளது. 

வெளியில் உள்ள பஞ்ச பூதங்களில் ஏற்படுகின்ற மாற்றங்களை "இயற்கை பேரிடர் " என்று சொல்கின்றோம். உடம்பின் உள்ளே உள்ள பஞ்ச பூதங்களில் ஏற்படுகின்ற மாற்றங்களை "நோய்" என்று சொல்கின்றோம் 

இயற்கை பூதங்களில் ஒத்திசைவு (harmony) இருந்தால் உலகம் அமைதியாக இருக்கும். உடல் பூதங்களில் ஒத்திசைவு இருந்தால் உடல் ஆரோக்யமாக இருக்கும்.

இந்த ஒத்திசைவு என்றால் என்ன? என்றும் ,அதை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்றும் தெரிந்து விட்டால் உலகமும்  அமைதியாக இருக்கும், உடலிலும் நோய் என்பது வராது.

இயற்கை பஞ்ச பூதங்களின் ஒத்திசைவு  (Harmony of the Nature elements )

1. நிலம் என்னும் முதல் தத்துவம்  (அண்டமும் பிண்டமும் )

    அண்ட நிலம் (பூமி )
 
      நிலமே பஞ்ச பூதங்களின் ஆதாரம் . நிலம் இல்லையேல் மற்ற பூதங்கள் நிலையாது . நிலத்தின் மூலமாகத்  தான் மனிதன் முதல் எல்லா உயிரினங்களுக்கும் தேவையான உணவு கிடைக்கின்றது. உணவு இல்லையேல் உயிர் இல்லை. எனவே நிலத்தை சார்ந்து தான் மக்களின் வாழ்வாதாரம் சுழன்று கொண்டு இருக்கின்றது.     

         முற்காலத்தில், மனிதன் நிலத்தை  தெய்வம் போல் மதித்து வந்தான். காலை கண் வழித்தது முதல் இரவு படுக்கும் வரை அவன் நிலத்தை சார்ந்தே இருந்தான். நிலத்தை வைத்து தான் மற்ற வேலைகளை செய்தான். எனவே, நிலத்தை பெருமை படுத்த அவன் கையாண்ட சிறந்த வழிமுறை தான் "பொங்கல் பண்டிகை". அன்று, தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றும் நிலத்தை தொழுது தன்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கின்றான்.

     தை மாதம் என்பது "உத்திராயண காலத்தின் " ஆரம்பம். (  உத்திராயணம்  என்பது தை மாதம் முதல் ஆனி  மாதம் முடிய 6 மாதங்கள் கொண்டது ). இந்த 6 மாதங்களும் சூரியன் வடகிழக்கில் இருந்து தென் மேற்கு நோக்கியே நகரும். இந்த 6 மாதமானது, நிலத்தை மீண்டும் சீர் செய்து,  தட்சிணாயண காலத்தில் வரும் மழைக்காகவும் பின் தொடர்ந்து வருகின்ற பனிக்காகவும் தயார் செய்தல் ஆகும். (தட்சிணாயணம் காலம் என்பது ஆடி முதல் மார்க்கழி முடிய 6 மாதங்கள் ஆகும்). இக்காலம், நிலம் தன்னை தானே சீர் செய்து கொள்வதற்கு உகந்த காலமாகும். பின்பனி, கோடை காலம், ஆரம்ப மழை காலம் என்று மூன்று பருவங்களை நிலம் சந்திக்கும். இக்காலத்தில் நிகழும் பருவ நிலை மாற்றங்களும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே, சரியான உணவு முறைகளும் அக்காலத்தில் பருவ நிலைகளுக்கு ஏற்றவாறு பின்பற்றப்பட்டது
 
 ஆனால் இன்று?

   இன்றைய மக்கள் வாழ்கை முறை இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறையாக இல்லை. முற்றிலும் இயற்கைக்கு விரோதமான வாழ்கை முறையாக உள்ளது. நெடிது உயர்ந்த வீடுகள், ஆழ் துளை நீரேற்றங்கள், காற்று மண்டலத்தை கெடுக்கும் புகை வண்டிகள், fast food எனும் வேகமாக தயாரிக்க பட்ட உணவு வகைகள் என்று இயற்கையையும், உடலையும் கெடுக்கும் வாழ்க்கையாகவே நாம் வாழ்ந்து வருகிறோம்.

     இதில், நிலம் என்னும் பூதம் தான், முதலில் மனிதன் கெடுத்த பூதம் ஆகும்.
  • நிலத்தை உழுவதற்கு பதிலாக பிளாட் (plot) போட்டு விற்க ஆரம்பித்தான்.
  • ஒரே இடத்தில மேலே மேலே வீடுகள் கட்டி நீரை ஏற்ற ஆழ் துளை கிணறு தோண்டி போர் (bore) மூலாக நீரை மேலே ஏற்றினான். எனவே நிலத்தடி நீர் குறைந்தது.
  • ஏரிகளையும் , ஆறுகளையும் ஆக்கிரமித்து வீடுகளாக மாற்றினான். நீர் இருப்பு குறைந்தது.
  • சாதாரண சாலைகளை சிமெண்ட் சாலைகளாக மாற்றி, மழை நீர் பூமியில் இறங்குவதற்கு கூட வழி இல்லாத நிலை ஆகினான்.
  • செயற்கை உரங்களை கண்டுபிடித்து மண்ணையும் அதன்  தன்மைகளையும் அழிக்கின்றான்.
  • பூச்சி கொல்லி மருந்துகள் மூலமாக பூச்சிகளை அழிக்கின்றானோ இல்லையோ, மண் வளத்தை அழிக்கின்றான் 
  • பிளாஸ்டிக் உபயோகத்தின் மூலமாக மண்ணின் இயற்கை தன்மையை அழிக்கின்றான் 
         இப்படி நிலத்தின் தன்மையை நாம் அனுதினமும் அழித்து கொண்டு இருக்கின்றோம். எனவே, பூமியின் வெப்ப நிலை அதிகரிக்கின்றது. விளைவு - பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர்கள் மனிதர்களை அழிக்கின்றது.

       "மனிதன் நிலத்தை அழித்தால் நிலம் மனிதனை அழிக்கும் "

 பிண்ட நிலம் (உடல்)

    பூமி எனும் அண்ட முதல் தத்துவத்தை அழிப்பது என்பது, உடல் எனும் பிண்ட முதல் தத்துவத்தை அழிப்பதாகும்.

    உடல் என்பது உறுப்புகள், இரத்தம், நரம்புகள், எலும்புகள், பிராணன் மற்றும் உஷ்ணம் போன்றவைகளால் செயல்படுத்தப்பட்டு,  மனம் என்னும் சாரதியால் செலுத்த பட்டு, ஆன்மா எனும் சக்தியால் வழி நடத்தபடுகின்ற ஒரு தேர். இத்தேரானது சரியான திசையில், சரியான வேகத்தில் செல்ல இந்த உறுப்புகள், மனம் மற்றும் ஆன்மா போன்றவைகளின் உதவி மிகவும் அவசியம். இதில் ஏதேனும் ஒன்று பழுது பட்டால், உடல் என்னும் தேரை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியாமல் போய்  விடும்.
இதில் மனம் மற்றும் ஆன்மா மற்ற பூதங்களாகும். உடல் உறுப்புகள் தான் நிலத்திற்கு தொடர்புடைய பூதமாகும்.

   இந்த பிண்ட பூதம் (உடல்) எப்படி அழிக்கப்படுகின்றது என்றும், இதனால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றது என்றும், இந்த பிண்ட நில பூதத்தை எப்படி ஆரோக்கியமாக வைத்து கொள்வது என்றும் இனி வரும் பதிவுகளில் காண்போம்

- தொடரும் ...........

திரு. இயற்கை சிகிச்சையாளன்  (Mr. Nature Cure )