Thursday, May 3, 2012

முன்னோரை வணங்கும் புண்ணிய வழிபாடு!


ஜோதிட சாஸ்திரத்தில் அயனம், பருவம், மாதம், பட்சம், வாரம், நாள், ராசி, நட்சத்திரம், திதி என பல அம்சங்கள் உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து வரும்போது ஒவ்வொரு விரதங்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. வான, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன், சந்திரன் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை‘ ஆகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும்போது புரட்டாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தை ஆன்மீக மாதம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு விரதங்களும் வழிபாடுகளும் பண்டிகைகளும் இம்மாதத்தில் பிரசித்தம்.
 
திதிகளில் மிகவும் சிறப்பு பெற்றது, மகத்துவங்கள் கொண்டது அமாவாசை. இந்நாளில் முன்னோர்களை நினைத்து பூஜை, வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட புரட்டாசி மாதம் வரும் அமாவாசை பிரசித்தி பெற்றது. எனவேதான் இந்த அமாவாசைக்கு பெரிய அமாவாசை எனும் பொருள்படும்படியாக ‘மகாளய அமாவாசை‘ என்று பெயர். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.
 
இந்த காலகட்டத்தை மகாளய பட்சம் என்று அழைக்கிறார்கள். பட்சம் என்பது 15 நாட்களை குறிக்கும். பிரதமை முதல் புரட்டாசி மாத அமாவாசை வரை நம் முன்னோர்கள் இங்கே வருகிறார்கள். இந்த பட்ச காலத்தில் முன்னோர்களை நினைத்து வணங்குவதன் மூலம் அவர்களின் நல்லாசி நமக்கு கிட்டும். மற்ற அமாவாசைகளில் வழிபடாவிட்டாலும் இந்த மகாளய அமாவாசையில் வழிபட்டால் அதிக பலன் உண்டு. இந்த பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரம் மகா பரணி என்றும் அழைக்கப்படுகிறது. அஷ்டமி மற்றும் திரயோதசி திதிகளும் மிகவும் சிற்பபானவை என்று தர்ம சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
 
இறந்த தாய், தந்தையர்க்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள் இறந்த தேதி, திதி போன்றவற்றை மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசையில் திதி, வழிபாடுகள் செய்யலாம். இறந்த தாய், தந்தையரை நினைத்து அவர்கள் படத்துக்கு மாலை போட்டு, அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலைவாழை இலையில் படைத்து வணங்கினால் கர்ம வினைகள் நீங்கும். 
 
துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைப்பதற்கு இந்த நாள் மிகவும் உகந்ததாகும். இந்நாளில் இதுபோல் இறந்தவர்களை நினைத்து பூஜை, வழிபாடு செய்ய அவர்கள் ஆத்மா சாந்தியடையும் என்பது வேதவாக்கு. இந்த நாளில் ஏழை, எளியோர், இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வை தானம் செய்வதும் அன்னதானம் தருவதும் நலம் பயக்கும். காகத்துக்கு உணவிடுவது மிக சிறப்பானது. பசுமாட்டுக்கு கீரை, பழம் போன்றவற்றையும் யானைக்கு பழங்கள், கரும்பு, சர்க்கரை பொங்கல் ஆகியவற்றையும் அளிப்பதால் பாவங்கள், தோஷங்கள், தடை நீங்கி சுபிட்சம் உண்டாகும். 

No comments:

Post a Comment