Thursday, January 3, 2013

ஞானம் அடைய இதோ எளிய வழி!!!


ஞானம் அடைவது என்பதை பற்றி பேச

நான் ஞானம் அடைந்திருக்க வேண்டும்.

நான் ஞானம் அடைந்தவன் என நீங்கள் உணர

உங்களுக்கும் ஞானம் இருக்க வேண்டும்.

எனக்கு ஞானம் இருக்கிறது என்பதை அறியும்

ஞானம் உங்களுக்கு இருந்தால்,
ஞானம் அடைவதை பற்றி நாம் ஏன் இங்கே பேச 
வேண்டும் ?


ஞானம் எனும் கருத்து மிகவும் மலிந்த விஷயமாகி
விட்டது. ஞானம் அடைந்தால் என்ன ஆகும் என 
கேட்டால், கடன் தொல்லை தீரும், தொழில் மேன்மை 
நடக்கும் என பதில் வருகிறது.தன்னை யோகி என்று 
அழைத்துக்கொள்ளுபவர்களோ தங்களின்
சுயசரிதை புத்தகத்தில் 1980ல் இன்ன மாதம் இன்ன 
தேதியில்ஞானம் அடைந்தேன் என்கிறார்கள். 
எதிர்காலத்தில் விசிடிங்
கார்டிலோ அவர்களின் யோகபயிற்சி பள்ளியிலோ இப்படி
எழுதினாலும் எழுதுவார்கள்.

“ஞானி Since 1980".


ஆன்மீகம் என்பது கடைசரக்கே. அதிலும் ஞானம் என்பது
 வார்த்தையால் சொல்லமுடியாத அளவுக்கு அசிங்கமாகி
விட்டது. நமது கலாச்சாரம் பலயோகமுறைகளை 
கொண்டது.யோகம் என்பது பிரம்ம சொரூபத்துடன் 
வேறுபாடு இல்லாமல் கலப்பது. ஹடயோகம், 
கர்ம யோகம், பக்தி யோகம்,ராஜயோகம், ஞான யோகம் 
என பல யோக முறைகள் இருக்கிறது. உடல், மனம், 
முறைகள் ஹட,கர்ம,பக்தி மற்றும் ராஜ யோக முறைகள். 
ஆனால் 
இதை தவிர்த்து எந்த செயலும் இல்லாமல், தனது ஞானம் 
கொண்டே இறைவனுடன் கலப்பது ஞானயோகம்.

எந்த செயலும் தேவை இல்லை என சொல்லிவிட்டு, ஞானம்
 ”அடைவது” , “கலப்பது” என பல செயல்பற்றி 
சொல்லுகிறேன், உண்மையில் இவை செயல்கள் அல்ல. 
ஞானம் என பிரத்யோகமாக அடைய எதுவம் இல்லை. 
அனைவரும் ஞான நிலையிலேயே இருக்கிறார்கள். 
அதை உணர்வதில்லை.கஸ்தூரிமான் தனது 
வால்பகுதியில் கஸ்தூரி இருப்பது 
தெரியாமல் அந்த வாசனை காட்டில் எங்கே இருக்கிறது 
என தேடி அலையுமாம். கடைசியில் சோர்வுற்று அமரும்
பொழுது அதன் கஸ்தூரி இருக்கும் இடம் அதற்கு தெரிய
வரும். அது போல ஞான நிலையிலேயே இருக்கிறோம் 
என அறியாமல் செயல் செய்ய வேண்டி இருக்கிறது.
ஞான யோகிகள் தாங்கள் பிரம்ம சொரூபம் என்றும்,
உலகம்பொய்யானது, தனது இருப்பே மெய்யானது என 
எண்ணுகிறார்கள். ஞான யோகிகளின் நிலையை 
உணரவும். ஞான யோகத்தை பின்பற்றி ஞானத்தை
உணரவும்தோன்றிய நூல் “யோகவாஸிஷ்டம்”.ராமாயண 
காலத்தில் ( த்ரிதாயுகம்) நடப்பதாக வர்ணிக்கபட்டுள்ளது.
பகவத் கீதை போன்ற நூல் 
அல்ல இது. ஸ்ரீ ராமனின் குருவான வஸிஷ்டர் தனது 
மாணக்கனுக்கு ஞானம் அடைய வேண்டி உபதேசிக்கிறார். 
உபதேசித்தவுடன் தான் பிரம்மம் என ஸ்ரீராமன் 
உணருகிறான்.என்ன வேடிக்கை பார்த்தீர்களா? 
கடவுளாக இருந்தாலும் இங்கே வந்தால் தான் யார் 
என்பதை மறந்துவிடுகிறார்கள். 
நம்மை பற்றி யோசியுங்கள். 32000 சுலோகம் கொண்டது 
இந்த நூல் பல ஞானிகளால் எளியவடிவில் விளக்கம் 
அளிக்கப்பட்டுள்ளது.
காலம் மற்றும் தேசம் எனும் இரு கொள்கைகள் எவ்வளவு 
தவறானது என சுட்டிகாட்டி விளக்குகிறார் வஸிஷ்டர். 
நீங்கள் இரவில் தூங்குகிறீர்கள் அப்பொழுது கனவில் வரும் 
செயல்கள் அனைத்தும் உண்மை போலவே இருக்கிறது. 
உங்களை வேறு உலகில் எடுத்து செல்லுகிறது. கண் 
விழித்தவுடன் அந்த உலகம் மறைந்து வேறு உலகம் 
கண்களில் தெரிகிறது. எது உண்மை?
கண் விழித்தது என்பது கனவாக இருந்து நினைவு என்பது
பொய்யாக இருந்தால்?

நமது உணர்வு நிலையை தூக்கத்திலிருந்து நாம் 
எட்டியவுடன் நமக்கு முதலில் மூளையில் வரும் 
செய்தி இரண்டு. இன்ன நேரத்தில் நான் விழித்திருக்கிறேன், 
இன்ன இடத்தில் இருக்கிறேன். இதில் ஏதேனும் ஒன்று 
சரியாக செயல்படவில்லை என்றால் உங்களால் 
இயல்பாக இருக்க முடியாது.காலம் என்பது உங்களுக்குள் 
புகுத்தப்பட்ட மாயை. இடம் என்பதும் அது போன்றதே.

நமது வாழ்க்கையிலும் ஏதோ சில நிமிடம் நம்மை 
அறியாமல் ஞானத்தை சுவைத்ததுண்டு.
சில தருணங்களை சுட்டி காட்டுகிறேன்.
மதிய நேரத்தில் தூங்கி மாலை நேரத்தில் எழுத்தவுடன் 
மனதில் காலை நேரமாக இருக்குமோ என நினைத்து பல் 
தேய்க்க முயற்சி செய்ததுண்டா? பிறகு மாலை நேரம் என 
தெரிந்ததும் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
இரவு நேர நீண்ட பயணங்களில் திடீரென முழிப்பு வந்ததும் 
எந்த ஊரில் பயணிக்கிறோம் அறிய என முயற்சி 
செய்யாமல் இருந்ததுண்டா? ஜன்னல் வழியே பார்த்தால் 
உங்களுக்குள் என்ன உணர்வீர்கள் ?இது போல 
வஸிஷ்டர் ஸ்ரீராமனுக்கு சில கதைகளை சொல்லி 
அவரின் அறியாமையை தவிடு
பொடியாக்குகிறார். ஸ்ரீராமன் உணர்வு நிலையில் இருந்து 
ஞானவெளியில் தூக்கிவீசப்படுகிறார்.
காலம் என்பது கற்பனையே. அந்த கற்பனைதான் ஞானம் 
அடைய தடையாக இருக்கிறது.
உங்களுக்கு முப்பது வயதாகிறது என சொல்லிகிறோம்.
அல்லவா? இது எப்படி வந்தது? பிறந்து முப்பது வருடம் 
ஆகியது, 365.25 நாட்கள் சேர்ந்து 24 மணி நேரம்.24மணி 
நேரம் ஒரு நாள் என்பது ஏன் நாம் அமைத்துக்கொண்டோம்?
ஒரு பகல் ஒரு இரவு இருப்பது ஒரு நாள் என அனைவரும் 
எடுத்த ஒருமித்த முடிவு. இதையே 12 மணி நேரம் ஒரு நாள் 
என முடிவு செய்தால் உங்களுக்கு 60 வயதாகிவிட்டது. 
இதே ஒரு நாள் 48 மணி நேரம் என கொண்டால் 
உங்களுக்கு பதினைந்து வயது தான்.காலகணிதம் எனும் 
அடிப்படியில் நான் 60வயதில் இறந்து மறுபிறவி 
எடுக்கிறேன் என கொண்டால், மேற்கண்ட விளக்கத்தில் 
ஒரு நாள் 12 மணி நேரம் எனறால் இந்த நேரம் நான் 
அடுத்த பிறவியில் இருக்க வேண்டும். ஒரு நாளுக்கு 
60 மணி நேரம் எனக்கொண்டால் 
இந்த நேரம் நான் எனது முற்பிறவியில் இருப்பேன்.
ஒருவரின் அடுத்த பிறவி மற்றும் முந்தைய பிறவி என 
அனைவரும் நம்புவது காலத்தை வைத்துதான். 
உண்மையில்நாம் இறந்துவிடவில்லை என 
நினைப்பதும், அடுத்த பிறவி 
என்பது காலத்தை பொருத்தது.
இந்த கருத்தை வஸிஷ்டர் விளக்க கூறும் கதை 
அபாரமானது.கடைசியில் ஸ்ரீராமர் புரிந்துகொண்டதும்
வஸிஷ்டர் கூறுகிறார், “ஸ்ரீ ராமா அங்கே பார், ஸ்ரீகிருஷ்ணர் 
பகவத் கீதையை உபதேசிக்கிறார், இங்கே பார் மச்சவதாரம் 
நிகழ்கிறது. அனைத்தும் ஒருங்கே நிகழ்கிறது. நீ அதை
அறியவில்லை”
அதனால் தான் சொல்லுகிறேன் ஞானம் அடைவது 
எளிது. காலம் எனும் கட்டை உடைத்து வெளியேறுங்கள். 
அனைத்தும் காணும் “அதனுடன்”ஒன்றாகிவிடுவீர்கள்.

நன்றி
http://vediceye.blogspot.in/2009/04/blog-post_03.html

3 comments:

  1. http://vediceye.blogspot.in/2009/04/blog-post_03.html

    இங்கிருந்துதான் இந்த கட்டுரை எடுத்தாளப்பட்டுள்ளது. அனுமதி பெறப்பட்டுள்ளதா ?

    ReplyDelete
  2. மன்னிக்க வேண்டும்.

    இப்போது அனுமதி கோரப்படுகிறது.

    ReplyDelete