Saturday, May 11, 2013

சப்தகன்னியர்- மாகேஸ்வரி


பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் சுற்றுப் பிரகாரத்தில் அருள்பாலிப்பர். சப்த கன்னியர் எனப்படும் சப்த மாத்திரிகைகள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்று அமைக்கப்படுவர். சில இடங்களில் தனித்தனித் திருமேனிகளும் கொண்டிருப்பர். நின்ற நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் வழக்கில் இல்லை. இருந்தருளும் நிலையில், இடது காலை மடித்து சுகாசன நிலையிலோ அல்லது உத்குடி ஆசன நிலையிலோ வைத்திருப்பர். வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் காணலாம். ஆகமம் மற்றும் புராணங்களில் இவர்களுக்குக் கரங்கள் பல கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக இரண்டு அல்லது நான்கு கரங்களுடனேயே இருப்பர். இரண்டு கரங்களானால் அபய வரதம் கொண்டிருப்பர்; நான்கு கரங்களானால் முன்னிரு கரங்களை அபயவரதமாகவும் பின்னிரு கரங்களில் தத்தமக்குரிய ஆயுதங்களைத் தாங்கியிருப்பர். கோயிலில் உள்ள இறைவனை வழிபட்ட பின் இந்த சப்தகன்னியரையும் வழிபட்டால் தான். கோயிலுக்கு சென்றதற்கான முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சப்தகன்னியரின் தோற்றம்: சிவன் அந்த காசுரனுடன் போரில் ஈடுபட்ட போது; அந்த காசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரர்களை அழிக்கும் நோக்கில், சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்னியிலிருந்து யோகேசுவரி - என்ற சக்தியைத் தோற்றுவித்தார் என்றும்; அவள் மாகேசுவரி - என்ற சக்தியை உருவாக்கினாள் என்றும்; அவளுக்கு உதவியாக பிரம்மன் தனது அம்ச பிராம்மியையும்; விஷ்ணு தனது அம்ச வைஷ்ணவியையும்; இந்திரன் - தனது அமட்ச இந்திராணியையும் ; முருகன் - தனது அம்ச கவுமாரியையும்; வராகமூர்த்தி - தனது அம்ச வராகியையும்; யமன் - தனது அம்ச சாமுண்டியையும் படைத்து அளித்தனர் என்று வராகபுராணம் கூறுகிறது. சும்ப - நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது.

நைரிதன் என்ற அசுரனை ஒழிக்கப் பிரதம்மா யுத்தம் செய்த போது; அவருக்கு உதவி புரிவதற்காக பிற தேவர்கள் தங்களது சக்திகளை உருவாக்கி, அளித்தனர் என்று சுப்ரபேதாகமம் விளக்குகின்றது. அக்னி புராணம், மச்ச புராணம், தேவி புராணம் என்ற புராண நூல்களிலும், பூர்வ காரணாகமம், அம்சுமத் பேதாகமம் என்ற ஆகம நூல்களிலும்; விஸ்வகர்ம சாஸ்திரம், சில்பரத்தினம், ரூப மண்டலம், ரூபாவதாரம் என்ற சிற்ப சாஸ்திர நூல்களிலும்; இவர்களது உருவ அமைப்பு ஆயுதங்கள் முதலியன கூறப்படுகின்றன. ஆண் தெய்வங்களின் சக்திகளான இவர்கள் தத்தமக்குரிய ஆண் தெய்வங்களின்; ஆயுதங்கள் ஆபரணங்கள் வாகனம் கொடி என்பனவற்றினைக் கொண்டு விளங்குவர்!

இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் மாகேஸ்வரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், கருங்குயில்நாதன் பேட்டை அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சக்திபுரீசுவரர் திருக்கோயில் ஆகும். தக்க யாகத்தில் இந்திரன் குயில் உருவங்கொண்டு வந்து வழிபட்ட தலம். சப்தமாதர் திருவுருவங்கள் உள்ளன. இங்குள்ள தீர்த்தம் நோய் நீக்கும் சிறப்புடையது. தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவது. காவிரி வடகரையில் பூம்புகார்ப் பேருந்து சாலையில் உள்ளது கருணாபுரம் கருணாபேட்டை.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

போன் : 94435 23080.

மாகேஸ்வரி வழிபட்ட மற்றொரு தலம் தஞ்சாவூர் மாவட்டம், கோயிலடி அருள்மிகு ஞானாம்பிகை சமேத ஹரிமுக்தீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இங்கு சப்தமாதர் திருவுருவங்கள் உள்ளன. தலவிருட்சம் நெல்லிமரம். தீர்த்தம் சத்திய கங்கை.

தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் கோயிலடி பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கே இரண்டு கி.மீ. அய்யம்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மேற்கே ஒரு கி.மீ

மாகேஸ்வரி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு): மகேஸ்வரனின் அம்சமாக வெளிப்பட்டவள் மாகேஸ்வரி சிவபிரானைப் போன்றேமுக்கண் ஐந்துதிருமுகங்களைக் கொண்டவளாகக் காட்சியளிப்பவள். பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு உள்ளிட்ட ஆயுதங்களை தம் கரங்களில் தரித்தவள். அபய வரத ஹஸ்தம் துலங்க பத்து கரங்களுடன் இடபக்கொடி, ஜடாமகுடம், பாம்பணி பூண்டவளாய் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பவள். ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவள். வெள்ளை நிறமுடையவள்.

தன்னை வழிபடுவோருக்குப் போகத்தைக் கொடுப்பவள். இவள் சர்வமங்களா எனப்பெயருடையவள். ஆகையால். மக்களுக்கு சர்வ மங்களங்களையும் அருள்பவள். தர்மத்தின் திருவுருவாய் அமைந்தவள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் தருபவள். தன்னை உபாசிப்பவர்களுக்கு பொன்னும் - மெய்ப்பொருளும் - போகமும் அருள்பவள்!

மாகேஸ்வரி பாடல்: சிரத்துமாமதி சூடிய தேவனைக் கருணா
புரத்து நாதனைப் புண்ணியமூர்த்தியைப் புகழ்சால்
உரத்து மேம்படும் மயேச்சரி பூசனை உஞற்றி
வரத்து மேதகு சிறப்பெலாம் பெற்றனள் வாழ்ந்தாள்.

மாகேஸ்வரி ரௌத்ரி பூஜா

ஆசன மூர்த்தி மூலம்:

ஓம் - ஹ்ரீம் -மாகேஸ்வரி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - மம் - மாகேஸ்வரி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஹாம் - மம் - மாகேஸ்வரியே - நம:

காயத்ரி: ஓம் - வ்ருஷத்வஜாயை வித்மஹே:
ம்ருக ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ ரௌத்ரீ ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்: ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச,
மஹாதேவீம் சதுர்புஜாம்;
ஜடாகுட ஸம்யுத்தாம்,
சுக்ல வர்ணாம், சூசோபிதாம்;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்;
வ்ருஷ வாஹ ஸமாரூடாம்
வந்தே மகேஸ்வரீம் சுபாம்.

மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஹாம் -மம்- மாகேஸ்வர்யை - நம:

No comments:

Post a Comment