Wednesday, November 30, 2011

நாடி அறிதல்.


சித்தமருத்துவத்தில் பெருவிரல் பக்கமாக மணிக்கட்டிலிருந்து ஒரு அங்குலம் தள்ளி, நாடி நரம்பு ரத்தக்குழாயின் மேல் மூன்று விரல்களை

வைத்துச் சற்று அழுத்தியும் தளர்த்தியும் பார்க்கும்போது ஆள்காட்டி விரலாகிய முதல் விரலில் உணர்வது வாதநாடி எனவும்,
நடுவிரலில் உணர்வது பித்தநாடி எனவும், பெளத்திர (மோதிர) விரலில் உணர்வது கபநாடி எனவும் கூறப்படுகிறது.

இது பற்றி அகத்தியர் நாடியில்,

"கரிமுகனடியைவாழ்த்திக்
கைதனில் நாடி பார்க்கில்,
பெருவிரலங்குலத்தில்
பிடித்தபடி நடுவே தொட்டால்,
ஒரு விரலோடில் வாதம்
உயர்நடுவிரலிற் பித்தம்,
திருவிரல் மூன்றிலோடில்
சிலேத்தும் நாடி தானே"

என்றும், திருமூலர் நாடியில்,

"குறியாய் வலக்கரங்குவித்த பெருவிரல்,
வறியாயதன் கீழ் வைத்திடு மூவிரல்
பிரிவாய் மேலேறிப் பெலத்ததுவாதமாம்
அறிவாய் நடுவிரலமர்ந்தது பித்தமே"

"பித்தத்தின் கீழே புரண்டதையமாம்,
உற்றுற்றுப் பார்க்கவோர் நரம்பேயோடிடும்
பத்தித்த மூவரும் பாய்கின்ற வேகத்தால்
மத்தித்த நாளம்போல் வழங்கும் நரம்பிதே"

என்றும் கூறப்பட்டுள்ளது.

நாடி நரம்பு ரத்தக்குழாயின் மேல் மூன்று விரல்களை வைத்துச் சற்று அழுத்தியும் தளர்த்தியும் பார்க்கும்போது
1:1/2:1/4 என்ற மாத்திரையளவிலிருந்தால் உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று சித்தர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment