Wednesday, November 30, 2011

ஆன்மிகம் ஒட்டுமா?


தமிழ்நாட்டில் ஆசையூர் என்ற ஊரில் ஒரு மீசைக்காரர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பலாப்பழம் சாப்பிடக் கொள்ளை ஆசை.  ஒருநாள் நடந்து சென்ற போது, ஒரு தோட்டத்தைக் கண்டார். அங்கிருந்த பலாமரம் அவரை வா! வா! என அழைத்தது.  மரத்தில் பலாப் பழங்கள் பழுத்துத் தொங்கி மணம் வீசிக் கொண்டிருந்தன. மீசைக்காரர் அந்தப் பழத்தை எப்படியாவது சாப்பிட வேண்டும் என முடிவு செய்து விட்டார்.

பலாப்பழம் சாப்பிட்டால் அதிலுள்ள பசை கையிலும் மீசையிலும் ஒட்டுமே!  என்ன செய்யலாம் என்று யோசித்தார்.  வீட்டில் மனைவி பலாப்பழம் அறுக்கும்போது கையில் எண்ணெய் தடவிக் கொள்வது நினைவுக்கு வந்தது. உடனே கடைக்கு ஓடினார். நல்லெண்ணெய் வாங்கிக் கொண்டு  தோட்டத்துக்கு வந்தார். கையில் எண்ணெயைத் தடவினார். மீசையிலும் தடவிக்கொண்டார். பழத்தைப் பறித்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும் என்னும் அவசரம்; ஆசை!  கையில் எண்ணெய் பசையுடன் ஏறினால் வழுக்குமே என்ற சிந்தனை வரவில்லை. மரத்தில் தொற்றிக் கொண்டு ஏறினார். கையில் தடவியிருந்த எண்ணெய் வழுக்கவே தவறி விழுந்து அலறினார். சப்தம் கேட்டு, தோட்டத்திற்குள் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். பலாப்பழம் வேண்டுமானால் என்னிடம் பத்து ரூபாயைக் கொடுத்தால் நானே பறித்துத் தந்திருப்பேனே என்றார் தோட்டக்காரர்.

ஆன்மிகம் என்பது பிசுபிசுப்பான பலாப்பழம் போல! அதை அவ்வளவு எளிதில் பறிக்கவோ, சாப்பிடவோ முடியாது. பறித்தால் முள் குத்தும், பிரித்தால் பசை ஒட்டுவது போல ஒட்டும். நாம் ஆன்மிகத்தின் அருகே நெருங்க நெருங்க அது நம்மை விட்டு விலகி ஓடவே பார்க்கும். பலாவை முள் குத்தாமல் பறித்து, பசை ஒட்டாமல் சாப்பிட வேண்டுமானால் தோட்டக்காரனின் உதவி தேவை. அதுபோல், ஆன்மிகத்தை பக்குவமாக உணர ஒரு குருவின் உதவி தேவை. குரு என்றால் ஏதோ தாடி மீசை வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல. ஆன்மிகம் பற்றி நன்கு அறிந்தவர்களுடன் ஆன்மிக விடயங்கள் குறித்து விவாதித்தாலே போதும். அதற்கு முடியவில்லை என்றால்  ராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், சிவபுராணம் ஆகியவற்றை எளிய நடையில் எழுதியிருப்போரின் புத்தகங்களை படிக்க வேண்டும். தகுதியானோர் பேசும் ஆன்மிக கூட்டங்களுக்கு செல்ல வேண்டும். அங்கே பேசுவோரிடம், நமது சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி படிப்படியாக ஆன்மிகத்தில் காலெடுத்து வைக்கும்போது, அது தானாகவே நம்மை வந்து ஒட்டிக்கொள்ளும்.

No comments:

Post a Comment