Tuesday, November 22, 2011

துன்ப வாழ்வு மாற்றத் திருமந்திரம் கூறும் இருவழிகள்


தெளிவு தருவது நிறைமொழி – மந்திரம். அதனைச் சிந்தித்துச் செயலாக்கும் பொழுது தெளிவு வாழ்வுக்கு அழகையும் தருவதால் மந்திரம் - திருமந்திரம் எனப் போற்றப்படுகிறது. தமிழிலே தெளிவையும் அழகையும் தரும் மூவாயிரம் பாடல்களைத் திருமூலர் பாடிச் செல்ல அந்தத் தொகுப்பு திருமந்திரம் என்னும் ஈடிணையில்லாப் பெருநூலாக இலங்கி சைவத்திருமுறையின் பத்தாவது திருமுறையாகவும் திகழ்கிறது.
இத்தினத்தில் திருமூலரின் சில மந்திரங்களை சிந்திப்பது அறிவையும் தெளிவையும் அருளையும் பொருளையும் தந்து தமிழினத்தை இன்று சூழ்ந்துள்ள இருளையும் மருளையும் நீக்குவதற்கான நெஞ்ச உறுதியையும் தரும் என்பது என் எண்ணம்.
அறுத்தன ஆறினும் ஆன்இனம் மேவி
அறத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஓறத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தன ஈசனை வேண்டி நின்றானே
வன்னம் பதம் மந்திரம் தத்துவம் கலை புவனம் என்னும் ஆறுவழிகளாலும் - அத்துவாக்களாலும் - பசுத்தன்மையைப் பேணி, ஐம்புலன்களால் எண்ணற்ற துன்பத்தைத் தேடுகின்றோம். ஒன்றல்ல பல கொடிய வினைப்பயன்கள் வந்து வாழ்வை வருத்துகின்றது. இதனால் வெறுப்புற்ற மனதினராய் வாழ விருப்பற்று நிற்கின்றோம்.
எமது சக்தியால் இதனை மாற்ற இயலாது என்னும் நிலையில் இறைவனை வேண்டி நிற்கின்றோம். வேண்டுதல் புறத்தே பிறக்கின்றது. தோண்டுதல் - தேடுதல் அகத்தே பிறக்கின்றது. அதே அத்துவாக்களே இறைவன் தன்னை வெளிப்படுத்தும் வழியாகவும் உள்ளது என்ற மெய்யுணர்வு தோன்றுகையில் அதே அத்துவாக்களைப் பயன்படுத்தியே பொய் நின்று நீங்கி மெய்சார்ந்து வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் ஏற்படுகின்றது என்பது மெய்கண்டார் அனுபவம்.
திருமந்திரத்து இம் மந்திரப் பொருள் அன்றைய மனிதனும் இன்றைய மனிதனும் நாளைய மனிதனும் ஓரே மனிதத்தன்மையைத் தான் கொண்டுள்ளோம். எங்களின் புறம் மாறலாம் வளரலாம் விஞ்ஞானமயமாகலாம். பூகோளமயமாகலாம். ஆனால் மனிதன் மாறவில்லை – மாறவும் முடியாது. மானிடம் என்றும் மானிடமாகவே இருக்கும். ஆசைகளும் தேவைகளும் மானிடத்தின் இயல்பு. அதனை வென்றிட வழி காட்டுவது தெய்வீகத்தின் இயல்பு.
மானிடமும் தெய்வீகமும் கொண்டது ஆன்மா. அதனை ஆன்மா உணரும் பொழுது அந்த உயிரின் சொல் செயல் சிந்தனை தெய்வீகமானதாக மாறும். அத்தகைய தெய்வீகத் தன்மையுள்ளவரே திருமூலர். இந்நிலை எய்தப் பெற்றவரைச் சித்தர் என்பாரும் உளர். இதனால் திருமூலர் சித்தர் என்றும் போற்றப்படுகின்றார்.
சித்தர் ஆயினும் முத்தர் ஆயினும் இறைவனுக்குப் பக்தர் ஆகி நிற்கின்ற பொழுதே அவர்களின் முழுஆற்றலும் அறிவும் அகிலத்திற்குப் பயன் அளிக்கும் என்பது நம் முன்னோர் கருத்து. காரணம் வினையினை கழிக்க வந்த உயிர் வினையின் ஆட்சிக்குள் தான் நிற்குமே தவிர அதனைக் கடந்து செல்லும் வலிமை அதற்கு ஏற்பட முடியாது. அந்த வினையினைக் கடந்து விதியினை மாற்றும் மதியினைத் தந்திடும் ஆற்றல் இறைவன் ஒருவனுக்கே தான் உண்டென்பது நம்முன்னோர் சொன்ன உறுதி மொழி. இந்த இறைசிந்தனையே அன்றும் இன்றும் என்றும் மானிடம் பயன் பெறு வழியுமாகும். திருமூலரின் திருமந்திர மொழியும் இதுவே.
மனிதர்களாகிய நாம் எழுத்து (வன்னம்) கருத்து (பதம்) நிறைவான மொழி (மந்திரம்) மெய்மைகளின் விளக்கம் (தத்துவம்) அறியும் வெளிப்படுத்தல் திறன் (கலை) உலக அனுபவப்படுத்தல் (புவனம்) இவைகளின் வழி நாங்கள் எம் சுயத்தைக் கட்டிப்போடுகின்றோம்.
இந்த நம்மைப் பந்தத்தில் (கட்டிப்போடுதல்) என்பது பசுவைக் கொண்டு போய் மாட்டுத் தொழுவத்தில் கட்டுதல் போன்ற செயல். இதனாலேயே உயிர் என்றாலே பசு என்னும் அழகான உவமானம் பெற்றது. பதி இறைவன் உயிர் பசு. உலகம் பாசம். இது நம்முன்னோர்கள் இறைவன் உயிர் உலகம் என்னும் என்றும் உள்ள முப்பொருள்கள் பற்றி சொன்ன விளக்கம்.
பதி நிலையானது. பசு தளையால் கட்டுண்டது. உலகம் மாறுவது – மாயமானது. எந்த ஒன்று முன் ஒரு கணத்தில் இருந்தது போல் அடுத்த கணத்தில் இல்லாது மாறிக்கொண்டிருக்கிறதோ அத மாயை. இதனை இயங்கியல் தன்மை என்பர்.
நிலையான பதி. இயங்கும் தன்மையான உலகம். இரண்டுக்கும் நடுவே தன் வினைகளால் கட்டுண்ட நிலையில் உயிர். உயிர் உலகினைக் காண்கின்றது. பதியைக் காணவில்லை. கண்டதையே உண்மையென நினைக்கையில் மயக்கம். உயிர் மயங்குகிறது. ஆன்மா சார்ந்ததன் வண்ணமாகிறது. மாறுவன மாறுகிறது. மாயையில் உயிர் தவிக்கின்றது. நிலையானது எதுவோ அதில் சார்ந்தாலே தனக்கு அமைதி எனப் பகுத்தறிகிறது. ஆந்த நிலையானதைப் பதியை இறைவனைத் தேடுகிறது .தன்னிலும் மேலானது அது என உணர்கையில் அதன் வழிப்பட முயல்கிறது. அதனைத் தொடரவென அதைத் தொழுகிறது. வழிபாடு பிறக்கிறது. வழிபட்டதன் வழி நடக்கையில் வாழ்க்கை சிறக்கிறது.
வழிபட்டதை உணர இயலாமால் வழி தெரியாது நிற்கையில் வாழ்க்கை அழிகிறது. வெறுப்பு விளைகிறது. இதனாலேயே மாணிக்கவாசகப் பெருமான் “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் - செல்வச் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்” என்றார். இறந்த பின் அல்ல இருக்கின்ற பொழுதே சிவானந்தப் பேரின்பத்தில் திளைக்க வைப்பது சொல்லும் பாட்டின் பொருளுணர்ந்து இறைவனைத் தொழுதல் என்பது திருவாதவூரர் திருவார்த்தைகள்.
வழிபடு பொருளை உணர்ந்து வழிபடுவதும் - மற்றவர்கள் உணர்ந்து வழிபட வைத்தலுமே பூசைகளில் எல்லாம் சிறந்த பூசை என்பது அருணந்தி சிவாச்சாரியாரின் சிவஞானசித்தியார் தரு விளக்கம். “ஞானநூல் தனை ஓதல் ஓதுவித்தல் - நல்பொருளைக் கேட்பித்தல் தான் கேட்டல் நன்றா - ஈனமில்லாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும் - இறைவன் அடி அடைவிக்கும் எழில் ஞானப் பூசை” என்பது சிவஞானசித்தியார் சுபக்க 275வது பாடல் வரிகள். இதனையே திருமூலர்
பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
எனப்பாடி பிறவிகள் தொடர்வதற்கு முயல் தவம் செய்யாமை காரணம் என்பதை விளக்கிக் கூடவே இறைவனைத் தமிழால் வெளிப்படுத்துவதும் பெருந்தவமே என்பதையும் கூறி தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே தன்னை இறைவன் தோற்றுவித்தான் என்பதையும் எடுத்து விளக்குகின்றார்.
இங்கு முயல் தவம் என்பது தவத்தை வாழ்வில் நின்று வேறான ஒன்றாகக் கருதாது வாழ்வையே தவமாகக் கொள்ளும் பெருநிலையை உணர்த்துகிறது. இதனை விளக்கும் மொழியாகவே
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றிப்பற்றத் தலைப்படும் தானே
எனத் திருமூலர் பாடினார்.
அந்த வகையில் திருமந்திரம் தவமொழி மட்டுமல்ல வாழ்வு தருமொழி. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் உணர்வுடன் மக்களைச் செயல்பட வைக்கும் அழைப்பு மொழி. ஊன் பற்றி நின்று உணர்வினை உயிர்ப்பிக்கும் இத்திருமந்திரத்தைப் பற்றப் பற்றப் தலைவனாம் இறைவனின் தரிசனம் அதன் வழி காணப்பெறும் என உறுதி தருமொழி. துன்பக் கடல் கடக்க உதவும் அறிவுத் தோணி. தானமும் தவமும் கொண்டே வினைக்கடல் வென்று அருட்கடல் புகலாம் என வழி சொன்னது திருமந்திரம்
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக்கேடில் புகழோன்
விளைக்குந் தவம் அறம் மேற்றுணையாமே.
நாம் வினைக்கடலில் தவித்துக் கொண்டிருக்கின்றோம். அதனை நம் வாழ்வு என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த வினைக்கடலைக் கடக்கத் தோணிகளாக – துன்பக் களைப்பை நீக்கும் இருவழிகள் உள. நமக்கும் நம் சுற்றத்தவர்க்கும் குற்றமற்ற தன்மையையும் புகழையும் தரும் தவம் அறம் என்பவற்றை மேற்கொள்ளுதலே அவ்வழிகள்.
இதில் தவம் என்பது உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு என்று வள்ளுவர் விளக்குகின்றார். எனக்கு வந்த துன்பத்தைத் கண்டு துவளாது துடிக்காது வெடிக்காது வேகாது புலம்பாது மனஉறுதியுடன் அதனை ஏற்று அதனை மாற்ற முயல்தலும் எந்த உயிர்க்கும் துன்பம் செய்யாப் பெருவாழ்வுமே தவம் என்பது குறள் பொருளாகிறது.
இவ்வாறு தன்னில் உறுதியும் பிறரில் உருக்கமும் கொள்கின்ற பொழுதே தன்னலத்தை வெல்லும் வாழ்வு வாழலாம். இது ஒரு தவநிலை இந்தத் தவநிலை குறித்து வள்ளுவர் மிக அழகான குறள் ஒன்று கூறுகிறார். 'தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும்' என்பதே அக்குறள். இந்நிலை வருவதற்கு இறையாணை வழி நடத்தல் வேண்டும். இறையாணையே அறம்.
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்
என நீத்தார் பெருமையில் அந்தணர் என்போர் அறவோர் - அவர்கள் எல்லா உயிர்கள் மேலும் சிறப்பான கருணை கொண்டு அவைகள் வாழ்வினைப் பேணி நிற்றலால் என அறவோர் என்பவர்க்கு வரைவிலக்கணம் வகுத்து விட்டே வள்ளுவர் அடுத்தாக அறன் வலியுறுத்தலை தொடங்கி
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அற்த்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
எனச் சிறப்பையும் நிறைவையும் தருகின்ற அறத்தினை விட வேறு என்ன உறுதுணை உயிர்க்கு உளது? எனக் கேள்வி எழுப்புகின்றார்.
செந்தண்மை பூண்டொழுகல் என்பது இறைவன் ஒவ்வொரு உயிர்க்கும் கொடுத்த இயற்கையான ஆற்றலைப் பேணுதலும் அந்த ஆற்றலைப் பயன்படுத்தி உயிர் வாழ்தலை அனுமதித்தலும் எனலாம்.
இதனையே அரசியல் மொழியில் சுதந்திரம் என்பர். இந்த சுதந்திரம் மனிதனின் பிரிக்க முடியாத உரிமை என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சாசன மொழி. ஆனால் திருக்குறள் முதல் திருமூலர் வரை இந்தச் சுதந்திரம் மனிதர்களுக்கு மட்டும் அல்ல எல்லா உயிர்க்கும் அனுமதிக்கப்படல் வேண்டுமெனக் கோருவது நம்தமிழ்ச் சிறப்பு.
இந்த வகையில் தான் இந்தச் சுதந்திரத்தை இறையாணை என்றனர் நம்முன்னோர். அந்த இறையாணையை ஏற்று வாழ்தலே அறம். இவ்வாறு தன்னலமறுப்பு என்னும் தவத்தையும் உயிர்நலச் சிறப்பு என்னும் அறத்தையும் பழக்கப்படுத்தி வழக்கப்படுத்துதலே வாழ்வை துன்பமில்லா இன்பப்பெருவாழ்வு ஆக்குவதற்கான வழி என்பது திருமூலர் மொழி.
இந்த தவத்தையும் அறத்தையும் விளங்கிக் கொள்ள இயலாதவர்களுக்கு அதனை கடைப்பிடிப்பதற்கானச் சுருக்க வழி ஒன்றையும் திருமூலர் பின்வரும் திருமந்திரத்தால் வகுத்துத் தருகிறார்.
பற்றது வாய்க்கின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக்கு அல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்று அண்ணல் வைத்த வழி கொள்ளுமாறே
என்பது உய்விற்கான சுருக்க வழி சொல்லு திருமந்திரம். அதன் விளக்கம் - “உயிர்பற்றாக உள்ள பரம்பொருளை வாய்க்கு வந்தபடி எல்லாம் குறைகள் சொல்லாது – அறநெறி அல்லாத வேறு வழிகளில் சென்று மீட்சி பெறலாம் என எண்ணாது - மற்றவர்களுக்கு உங்களால் இயன்றதை ஈதலே வாழ்வின் பலமாகும் ஆன்மாவின் துணையாகும். இதுவே உயர்ந்தவனாகிய இறைவன் ஆன்மாக்கள் உய்வுற்று வீடடைய வைத்துள்ள வழி” என்பதாகிறது.
இங்கு ஈதல் என்பது அருட்கொடை அன்புக்கொடை அறிவுக்கொடை நிதிக்கொடை பொருட்கொடை உணர்வுக்கொடை உழைப்புக்கொடை உண்டிக் கொடை உயிர்க்கொடை எனப்பலவாறாக அமைகிறது. சுருக்கமாகச் சொன்னால் கொடுத்தல் - பகிர்தல் என்பன தன்னலமறுப்பினை ஆணிவேராகக் கொண்ட செயற்பாடுகள்.
இன்றைய காலகட்டத்தில் எம் இனத்தின் இன்மைகள் போக்கி நன்மைகள் செய்ய இந்தக் கொடுத்தல் - பகிர்தல் என்பதே ஒரே வழி.
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவார்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவாரக்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே
என்னும் திருமந்திரம் இன்றைய காலகட்டத்தில் நாம் பிறர்க்கு உதவிடல் வேண்டும் என்பதைக் குறிக்கும் பெருமந்திரம்.
பச்சிலை கொண்டு பரமனைப் போற்றலாம். பச்சைப்புல் கொண்டு பசுவின் பசியாற்றலாம். அவ்வாறே ஒரு கைபிடிச் சோறு ஊட்டியே பசிப்பிணி போக்கலாமே. அதுவும் இல்லையேல் இன்னுரை கூறியே பிறர் துன்பம் ஆற்றலாமே.
ஏளிமையான மொழியில் நாம் வாழவும் பிறரை வாழவைக்கவும் ஆண்டவன் தரும் அழைப்பாக இதனை ஏற்றுத் துன்புற்று நிற்கும் நம்மக்களுக்கு அன்புற்றுப் பணி செய்ய இத் திருமந்திரம் அழைக்கிறது. தானமும் தருமமும் தள்ளிவைக்கப்படாது செய்யப்பட வேண்டிய மனிதப்பணிகள். அதனைச் செய்தலே அறம். அதனைச் செய்தலே தவம். அறவழியான தன்னலமற்ற வாழ்வே அன்புற்றமர்தல். அறமே இறைவனை நாம் தாங்குவதற்கான வழி. அன்பே இறைவன் எம்மைத் தாங்கவைப்பதற்கான வழி.
அறத்தின் சின்னமாகிய விடை மேல் இறைவன் எழுவது அறத்தாலேயே அவனை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது. அதேபோல் தேவர்க்கும் பிரம்மா திருமாலுக்கும் இறைவனின் திருவடியை மானிடர்க்கு அருளுவது அவன் அன்பென்னும் வலையில் மட்டுமே அகப்படுவான் என்பதைக் காட்டுகிறது.
இதனையே அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
என்னும் திருமந்திரத்தின் மூலமந்திரமாக ஒலிக்கிறது.
இந்த தன்லமற்ற அன்பு – நன்மைத்தனமே செய்தல் என்னும் சிவத்தன்மை - இதனை அறிவுறுத்தி வாழப்பழக்கி எம்மை வாழ்விக்கும் பேராற்றலே திருமந்திரம். திருமந்திரம் தரும் மூச்சுப் பயிற்சி எம் உடலுக்கும் உள்ளத்திற்கும் உறுதி தருகிறது. நோய்நொடியின்றி நூறாண்டு காணவைக்கிறது.
திருமந்திரம் தரும் காட்சிப்பயிற்சி – தியானப் பயிற்சி ஒன்றாயும் வேறாயும் உடனாயும் இருக்கும் இறைவனையும் இறைவல்லமைகளையும் காணவும் பெறவும் வைக்கிறது. இதுவே திருமந்திரத்தின் பெருமை.

No comments:

Post a Comment