Saturday, July 9, 2011

ஸ்ரீ காகபுஜண்டர்- 2

காகபுஜண்டர் முமூர்த்திகளுக்கு உபதேசித்தல்:
மகாபிரளயங்கள் வரும் பொழுது முமூர்த்திகளுள் இருவர்களாகிய பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவர்களும் சிவனின் மகாபிரளய அவதாரமாக விளங்கக் கூடிய காயாரோகணீஸ்வரனிடத்தில் ஒடுங்குவார்கள். மகாபிரளயம் முடிந்தபிறகு கிருதயுகம் ஆரம்பித்தவுடன் ஒடுக்கத்திலிருந்து பிரம்மா, விஷ்ணு போன்ற இருமூர்த்திகளும் மகாசிவத்திலிருந்து பிறப்பார்கள். மீண்டும் மூன்று மூர்த்திகளும் மூன்று தேவியர்களும் தாங்கள் இவ்வுலகில் ஆற்றவேண்டிய கடமைகளை அறிந்து கொள்வதாற்காக கைலாயத்தில் தேவசபையைக் கூட்டி மகாசிவனின் உத்திரவுப்படி எம்மை அழைப்பார்கள். இவ்வுலகில் முமூர்த்திகளும் அவர்களது தேவியர்களும் ஆற்றவேண்டிய கடமைகளையும் அவர்களின் முற்பிறப்பு உண்மைகளையும் நான் என் மனைவியோடு சேர்ந்து மும்மூர்த்திகளுக்கு உபதேசிப்பேன்.
நான் உபதேசம் செய்கின்றபொழுது மும்மூர்த்திகளும் என்னை வணங்கி என்னை குருபீடத்தில் அமரச்செய்து அன்பின் மிகுதியால் எம்பீடத்திற்கு கீழான பீடத்திலமர்ந்து கொண்டு என் உபதேசதைக் கேட்பார்கள். எம்முடைய உபதேசத்தை பிரம்மாவானவர் பிரம்மபாலன் சொரூபத்திலும், விஷ்ணுவானவர் கோபாலன் சொரூபத்திலும், சிவனானவர் பைரவபாலன் சொரூபத்திலும் கேட்டு இன்புருவார்கள்.
மும்மூர்த்திகளுக்கும் நான் உபதேசம் செய்த பிறகு இவ்வுலகில் பிரம்மாவானவர் தேவர்கள் முதலான அனைத்து உயிர்களையும் படைப்பார். பிரம்மனின் படைப்பை பிரம்மாவோடு சேர்ந்து விஷ்ணுவும் சிவனும் ஆட்சி கொள்வார்கள்.
Lord KrishnamurthiLord Thatchanaamurthi
தேவர்களூக்கெல்லாம் பிரம்மாவானவர் தன் உபதேச சொரூபமாகிய வேதமூர்த்தி ரூபத்தில் இவ்வுலக ரகசியங்களையெல்லாம் உபதேசிக்கின்றபொழுது அவர்கீழமர்ந்து அனைத்து தேவர்களும் உபதேசம் பெற்று அதன்படி இவ்வுலக இயக்கங்களை செய்வார்கள். வைகுண்டத்தில் திருமால் ஆளுகையின் கீழமர்ந்த அனைத்து தேவர்களுக்கெல்லாம் விஷ்ணுவானவர் தன் உபதேச சொரூபமாகிய கிருஷ்ணமூர்த்தி ரூபத்தில் இவ்வுலக ரகசியங்களையெல்லாம் உபதேசிக்கின்ற பொழுது அவர்கீழமர்ந்து வைகுண்டவாசம் செய்யும் அனைத்து தேவர்களும் உபதேசம் பெற்று அதன்படி இவ்வுலக இயக்கங்களை செய்வார்கள். கைலாயத்தில் மகாசிவனின் ஆளுகையின் கீழ் அமைந்த தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்களுக்கெல்லாம் மகாசிவன் தன்னுடைய உபதேச சொரூபமாகிய தட்சணாமூர்த்தி ரூபத்தில் இவ்வுலக ரகசியங்களையெல்லாம் உபதேசம் செய்கின்றபொழுது அவர்கீழ் அமர்ந்து அனைத்து தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்களையெல்லாம் உபதேசம் பெற்று அதன்படி இவ்வுலக இயங்களைச் செய்வார்கள்.
இவ்வாறாக பிரம்மனருளால் தேவர்களால் படைக்கப்படும் அனைத்து சிறு தேவர்களும் அவர்களின் படைப்புக்குக் காரணமான தேவர்கள் மூலம் அதற்குத் தொடர்புடைய மூன்று உபதேச சொரூபங்களாக விளங்கக்கூடிய வேதமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் தட்சணாமூர்த்தி போன்ற ஏதாவதொரு குருசொரூபம் மூலம் குரு உபதேசம் கொடுக்கப்பட்டு இவ்வுலகம் ஆட்சி செய்யப்படுகிறது.
ஈ, எறும்பு முதலான எண்பத்தி எண்ணாயிரம் ஜீவராசிகளுக்கும் அவ்வாறாகவே அவ்வுயிர்களின் படைப்புக் காரணத் தொடர்புடைய குருசொரூபத்தால் குரு உபதேசம் செய்யப்படுகிறது. ஒரு சதுர்யுகத்தில் முதலாவதாக வரும் கிருதாயுகத்தில் ஊழ்வினை விலக்கு அளிக்கப்பட்டு எல்லா உயிர்களுக்கும் பூரண சுதந்திரம் அளிக்கப்படுகின்றது. தர்மத்தை வழுவாமல் தேவர்களும் மற்ற உயிர்களும் வாழ்வதற்கு அனைத்து வசதிகளும் இன்பங்களும் இறைவனால் அளிக்கப்பட்டு பதினான்கு லோகங்களையும் உள்ளடக்கிய இவ்வுலகம் ஆளப்படுகிறது. கிருதாயுகத்தில் கடைசியாகப் பெற்ற பிறவியில் செய்கின்ற பாவங்கள் மட்டும் அவ்வுயிர்களின் வினையேட்டில் பதிக்கப்படுகிறது.
கிருதாயுகம் முடிந்து திரேதாயுகம் ஆரம்பித்த பிறகு முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் பிறவி தரப்படுகின்றது. வினையின் அடிப்படையில் அமைந்த அப்பிறவி முதல் கலியுகம் முடிகின்ற வரை அவ்வுயிர் செய்கின்ற நல்வினை மற்றும் தீவினைகளை அடிப்படையாகக் கொண்டே உயர்வும் தாழ்வும் இறைவனால் ஏற்படுத்தப்படுகின்றது. வினைகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு உயிரும் தனக்கென்று பிரத்யேக தேவர்களையும், முனிவர்களையும் சித்தர்களையும் வழிபாடு செய்கின்ற பொழுது அந்தந்த தேவர்களாலும், முனிவர்களாலும், சித்தர்களாலும் அந்தந்த உயிர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உபதேசம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு உயிரின் வினையின் வீரியத்தை அடிப்படையாகக் கொண்டு உபதேசத்தின் நிலைகளும் மாற்றம் பெறுகின்றது. எந்த அளவிற்கு ஓர் உயிர் நல்வினையைக் கொண்டுள்ளதோ அந்த அளவிற்கு உயர்நிலை ஞானங்களையும் உபதேசங்களையும் அந்த உயிரால் பெறப்படுகிறது. இவ்வாறாகவே அனைத்து முனிவர்களும், தேவர்களும், சித்தர்களும், அவரவர்களை வணங்குபவர்களுக்கு உரிய உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டிருகிறார்கள். இவ்வாறாகவே எம்மை வழிபடுவோர்களுக்கும் உலகத்தின் மூலகுருவாகிய நானும் நேரடியாகவும், மறைமுகமாகவும் எம் வழிவந்த சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டு வருகிறேன்.


காகபுஜண்டர் சகல உயிர்களுக்கும் உபதேசித்தல்:

பலகோடி யுகங்களாய், பல கற்ப காலங்களாய் எம் வழிவந்த கோடான கோடி தேவபுருடர்கள், ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள், மிருகங்கள், பறவைகள், பாம்புகள் முதலான ஒன்று முதல் ஆறு அறிவு வரை படைத்த அனைத்து உயிர்களுக்கும் நான் இதுவரை உபதேசம் செய்துள்ளேன், தொடர்ந்து உபதேசங்களை செய்துகொண்டும் இருக்கின்றேன். பல கற்ப காலங்கள் கடந்த எம் வாழ்க்கையில் பல கோடி விசித்திரங்களை நான் இவ்வுலகின் பார்த்திருக்கிறேன். பூலோகம் மட்டுமன்றி பிற பதிமூன்று லோகங்களிலும் பலகோடி தேவ இன உயிர்களுக்கும் நான் உபதேசம் செய்திருக்கின்றேன். ஈரேழு பதினான்கு லோகங்களிலும் என் அரசாட்சி பல கோடியுகங்களாய் குறைவின்றி நடந்து வருகின்றது. கிருதா யுகத்தில் "தேவமதம்" என்னும் பொதுப் பெயரால் ஒரேயொரு மதம் மட்டும் வாழ்ந்து தர்மம் தழைத்தோங்கும் உயர்நிலைக் கொண்டு பதினான்கு உலகங்களும் வாழ்வதை பலமுறை பார்த்திருக்கின்றேன். துவாபரா யுகத்தில் ஒன்பதாயிரம் மத பேதங்களைக் கொண்டு இவ்வுலகம் வாழ்வதை பலமுறை பார்த்திருக்கிறேன். கலியுகத்தில் பதினெட்டாயிரம் மதபேதங்களை கொண்டு இவ்வுலகம் வாழ்வதை நான் பலமுறை பார்த்திருக்கின்றேன். வெவ்வேறு சதுர்யுகங்களிலும் வெவ்வேறு வேற்றுமைகளைக் கொண்ட ஒரே ஒற்றுமை மூலங்களைக் கொண்டு தேவர்களும், சித்தர்களும், முனிவர்களும், யோகிகளும், ஈ, எறும்பு முதலான எண்பத்தி எண்ணாயிரம் வகை ஜீவராசிகளும், இறை அவதாரங்களும், புராணங்களும், தத்துவங்களும், வேதங்களும், கலைகளும் இவ்வுலகில் தோன்றுவதும் இறுதியில் மறைவதும் மீண்டும் தோன்றுவதுமாகிய சுழற்சி விளையாட்டுக்கள் இவ்வுலகில் நிகழ்வதை நான் பலகோடி ஆண்டுகளாய் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு தேவபுருடர்களையும் அடுத்தடுத்த பிறவிகளில் கண்டு அவர்க்ளை ஆசீர்வதித்து அவர்களுக்கு இது எத்தனையாவது பிறவி என்ற விவரத்தை சொல்லி அவர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறேன். எல்லா யுகங்களிலும், எல்லா லோகங்களிலும், எல்லா வடிவங்களிலும் நான் ஆதிகுருவாக அருளாட்சி செய்து கொண்டு வருகிறேன்.


காகபுஜண்டரின் பதினாறு திருப்பெயர்கள்:

உலகத்தின் ஆதிகுருவாகிய எனக்கு பதினாறு திருப்பெயர்கள் உண்டு. அவையாவன.
1. காகபுஜண்டன்
2. நாகபுஜண்டன்.
3. யோகபுஜண்டன்.
4. புஜங்கன்.
5. புஜண்டி
6. காக்கையன்.
7. நாகேந்திரமுனி.
8. மனுவாக்கியன்.
9. காலாமிர்தன்.
10. சஞ்சீவிமுனி.
11. அஞ்சனாமூர்த்தி.
12. கற்பகவிருட்சன்.
13. நற்பவி.
14. பிரம்மகுரு.
15. ஆதிசித்தர்.
16. திரிகாலஜெயர்..
காக்கையை கரத்தில் (புஜத்தில்) தாங்கியுள்ளதால் எனக்கு காகபுஜண்டர் எனப் பெயருண்டு. நாகத்தை கரத்தில் தாங்கியுள்ளதால் எனக்கு நாகபுஜண்டன் என்கிற பெயருண்டு. யோகதண்டத்தை கரத்தில் (புஜத்தில்) தாங்கியுள்ளதால் எனக்கு யோகபுஜண்டன் என்கிற பெயருண்டு. கரங்களில் பல அங்கங்களையும் கொண்டுள்ளதால் எனக்கு புஜங்கன் என் கிற பெயருண்டு. கரத்தை அண்டியவர்களுக்கெல்லாம் உபதேசித்தருள்வதால் எனக்கு புஜண்டி என் கிற பெயருண்டு. பலகோடி ரூபங்களை நான் எடுத்தாலும் எனக்கு பிடித்தமான ரூபமாக காக்கை ரூபத்தை கருதுவதால் எனக்கு காக்கையன் என் கிற பெயருண்டு. நாகேந்திரனை தலைவராகக் கொண்ட நாகலோகத்தில் வாழும் நாகங்களுக்கெல்லாம் குருமுனிவராகத் திகழ்வதால் எனக்கு நாகேந்திரமுனி என் கிற பெயருண்டு. உலகத்தின் உயர்ந்த நீதியாக விளங்கக்கூடிய மனுநீதியை உபதேசிப்பதால் எனக்கு மனுவாக்கியன் என்கிற பெயருண்டு. முக்கால ரகசியங்களையும் உணர்ந்து அதன் அமிர்தங்களை இவ்வுலகிற்கு உபதேசித்தால் எனக்கு காலாமிர்தன் என்கிற பெயருண்டு. என்றும் அழியாத சிரஞ்சீவியாக நான் வாழ்ந்து வருவதால் எனக்கு சிரஞ்சீவிமுனி என்கிற பெயருண்டு. முக்காலத்தையும் பூரணமாக உணர்ந்து முக்கால அஞ்சனமாக விளங்குவதாலும், எம்முடைய கரத்தில் அஞ்சனம் கொண்டிருப்பதாலும் எனக்கு அஞ்சனாமூர்த்தி என் கிற பெயருண்டு. கற்பகவிருட்சத்தின் மீது அமர்ந்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் அளவற்ற ஞானத்தை நான் உபதேசித்துக் கொண்டிருப்பதாலும், என் ஞான உபதேசத்தைப் பெறுபவர்கள் கற்பகவிருட்சமாக எல்லா வளங்களையும் கொண்டு விளங்குவதாலும், அதற்கெல்லாம் காரணமாக விளங்கும் எனக்கு கற்பகவிருட்சன் என்கிற பெயருண்டு. உலகமெல்லாம் நன்மையே விளைய வேண்டும் என்கிற உயர் நோக்கம் கொண்டு இவ்வுலகை அருளாட்சி செய்து கொண்டிருப்பதால் எனக்கு நற்பவி என்கிற பெயருண்டு. பரபிரம்ம தத்துவமாக விளங்கும் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் அருளுபதேசம் செய்வதால் எனக்கு பிரம்மகுரு என்னும் பெயருண்டு. சித்தர்களுக்கெல்லாம் முதல் சித்தனாக இவ்வுலகில் தோன்றி எல்லா சித்தர்களுக்கும் உபதேசம் செய்துகொண்டு அவர்களை அருளாட்சி செய்து கொண்டு வருவதால் எனக்கு ஆதிசித்தர் என்கிற பெயருண்டு. முக்காலங்களையும் வென்று பலகோடி ஆண்டுகளாய் வெற்றியோடு சிரஞ்சீவியாக இவ்வுலகில் அருளாட்சி செய்து கொண்டு வருவதால் எனக்கு திரிகாலஜெயர் என்கிற பெயருண்டு. இவையன்றியும் இவ்வுலகோர் பல்வேறு குருசொரூபங்களில் எம்மை வணங்கி என்னருள் பெற்று வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.


காகபுஜண்டரின் பதினாறு திருக்கரங்களின் அருளாட்சி:

நான் என்னுடைய பதினாறு திருக்கரங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி இவ்வுலகை அருளாட்சி செய்து கொண்டு வருகிறேன். சூலாயுத கரத்தால் உலக உயிர்களை தீயசக்திகளிடமிருந்து காப்பாற்றுகிறேன். எழுத்தாணி கரத்தால் உலகதோருக்கு அவர்களின் நாவில் ஞானத்தை எழுதுகிறேன். ஞானஒளி கரத்தால் உலகோர்களுக்கு ஞானஒளியைப் பாய்ச்சி ஆசீர்வதிக்கிறேன். அபய கரத்தால் உலகோர்களுக்கு அபயமளிக்கிறேன். காமதேனு கரத்தைப் பயன்படுத்தி உலகோர்களுக்கு எல்லா செல்வங்களையும் குறைவின்றி காமதேனு மூலம் பெற்றுத் தருகிறேன். வீணை கரத்தின் மூலம் உலகோர்களுக்கு அறுபத்திநான்கு தெய்வீகக் கலைகளையும் உபதேசித்தருள்கிறேன். காகத்தைக் கொண்ட கரத்தின் மூலம் உலகோர்களுக்கு அன்பு தத்துவத்தையும் ஒற்றுமை தத்துவத்தையும் உபதேசித்தருள்கிறேன். அஞ்சனம் கரத்தைப் பயன்படுத்தி உலகோர்களுக்கு முக்கால ரகசியங்களை உணரும் தெய்வீகத்தை உபதேசித்தருள்கிறேன். வேலாயுத கரத்தால் உலகோர்களுக்கு வெற்றி ஆசீர்வாதங்களை வழங்குகின்றேன். தண்டாயுத கரத்தால் குருவருளுக்குக் கலங்கம் ஏற்படுத்துபவர்களுக்கு தண்டனைகள் வழங்குகின்றேன். வரத கரத்தால் உலகோர்களுக்கு வரம் அளிக்கின்றேன். செந்நாகம் கொண்ட கரத்தால் உலகோர்களுக்கு ஊழ்வினை நீக்கி ஞானத்தை அருள்கிறேன். சுருதி (ஓலைச்சுவடி) கரத்தால் உலகோர்களுக்கு அனைத்து கல்வியையும் அருளுகின்றேன். அமிர்தகலச கரத்தால் உலகோர்களுக்கு அமிர்தத்தை கொடுத்து அவ்வுயிர்களின் ஆயுளை உயர்த்துகிறேன். அட்ட சித்தி முத்திரை கரத்தின் மூலம் உலகோர்களுக்கு அட்டமாசித்திகளையும் வழங்குகின்றேன். யோகத்தண்டு கரத்தின் மூலம் உலகோர்களுக்கு பூரண யோகமார்க்கத்தை உபதேசித்தருள்கிறேன்.
இவ்வாறாகவே, என் வலபாகத்திலே சக்திரூபமாக என் மனைவி பகுளாதேவி சுமந்து கொண்டு இவ்வுலகில் தெய்வீக அருளாட்சிகள் செய்து கொண்டு வருகிறேன். எம்போன்ற எங்களிருவருக்கும் அமைந்த ஒத்த திருக்கரங்களான பதினான்கு திருக்கரங்களைத் தவிர்த்து என் மனைவிக்கு வேறுபட்டிருக்கும் அன்னம் கொண்ட திருக்கரத்தின் மூலம் தாய்மை அன்பையும், கரும்பாம்பு கொண்ட திருக்கரத்தின் மூலம் மோட்சத்தையும் உலகோர்களுக்கு என் மனைவி வழங்கியருள்கிறாள். நானும், என் மனைவியும் சிவசக்தி ரூபத்தில் அதாவது தந்தை தாய் ரூபத்தில் (இடப்பாகம் தந்தையாகவும் வலபாகம் தாயாகவும்) இவ்வுலகில் குருவருளாட்சி செய்து கொண்டு வருகிறோம். தந்தை தாய் ரூபமான எம் குருவருளன்றி பேரருளை முழுமையாக பெறுகின்ற பாக்கியம் உலகோர்களுக்கு கிட்டாது. என்பது பேருண்மை. என், அன்பு சீடனாகிய கோரக்கனே! யான் இதுவரை சொல்லியருளிய எம் தெய்வீக வரலாற்றை நீர் மிகப்பணிவுடன் கேட்டபடியினால் பகுளாதேவி உடனுறை காகபுஜண்டனாகிய எம் வற்றாத பதினாறு குருவருட்பேறுகளும் உமக்குக் குறைவின்றி கிடைக்க ஆசீர்வதிக்கின்றோம். நற்பவி!


காகபுஜண்டரின் மூலமந்திரங்கள்:

காகபுஜண்டரின் மூலமந்திரங்கள் இரண்டு வகைகளாகக் கொண்டதாகும். அவையாவன : கர்மசித்தி மூலமந்திரம் மற்றும் ஞானசித்தி மூலமந்திரம் என்பனவாகும். உலக இன்பங்களைப் பெறுவதற்கு கர்ம சித்தி மூலமந்திரமும், ஞான இன்பங்களைப் பெறுவதற்கு ஞான சித்தி மூலமந்திரமும் பயன்படும்.


காகபுஜண்டரின் கர்மசித்தி மூலமந்திரம்:


"ஓம் க்லீம் ஸ்ரீம் ஸ்ரீபகுளாதேவி சமேத ஸ்ரீகாகபுஜண்டமகரிஷி ப்யோம்
நமஹ நமஹ வசியவசிய ஸ்ரீபாதுகாம் பூஜையாமே! தர்ப்பயாமே!"


காகபுஜண்டரின் ஞானசித்தி மூலமந்திரம்:


"ஞானானந்தமயம்
தேவம் நிர்மல படிகாத்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
காகபுஜண்டம் உபாஸ்மகே!"


(........ from our friendly site.......)

No comments:

Post a Comment