Friday, July 15, 2011

பொறுமையிருந்தால் மனிதனாகலாம்

அந்த நகரிலேயே மிகப்பெரிய ஓட்டல் அது. ஒரு பணக்காரப் பெண்மணி தனது ஆடம்பரக்காரில் வந்து இறங்கினார். அந்த ஓட்டலின் பலநாள் வாடிக்கையாளர் அவர். அவர் வந்தால், ஓட்டல் முதலாளியே நேரில் அவரை வரவேற்று இருக்கையில் அமர வைப்பார். ஓட்டல் பணியாளர் அவரிடம் மெனு கார்டை நீட்டி, என்ன வேண்டுமென டிக் செய்யச் சொன்னார். காய்கறி சூப், புரூட் சாலட், நூடுல்ஸ், மஷ்ரூம் பிரியாணி
என்ற பட்டியல் நீண்டது. அந்த பெண்ணுக்கு புரூட்சாலட் சாப்பிட ஆசை. ஆனால், தவறுதலாக காய்கறி சூப்பில் டிக் செய்து விட்டார். பத்தே நிமிடங்களில் பணியாளர் அவர் முன்னால் காய்கறி சூப்பை வைத்தார். அவ்வளவுதான்! காய்கறி சூப்பின் உஷ்ணத்தை விட கொதித்து விட்டார் பெண்மணி. நான் இதையா கேட்டேன். புரூட் சாலட் அல்லவா கேட்டிருந்தேன், என் நேரத்தை வீணடிக்கிறீர்களே! என சத்தம் போடவும், முதலாளியே ஓடி வந்து விட்டார்.
பணியாளர் நினைத்திருந்தால், மெனு கார்டில் அவர் டிக் செய்ததைக் காட்டியிருக்கலாம். ஆனால், அவர் மிகுந்த பொறுமையுடன் மன்னிக்க வேண்டும் அம்மா, தவறு நடந்திருக்கலாம். நான் புரூட்சாலட்டை ஐந்தே நிமிடங்களில் கொண்டு வருகிறேன், என்று உள்ளே சென்றார். புரூட் சாலட் வந்தது. சாப்பிடும் போது தான் அந்தப் பெண்ணுக்கு சந்தேகம் வந்தது. பணியாளரிடம், நான் டிக் செய்த மெனுகார்டைக் கொண்டு வாருங்கள், என்றார். பணியாளர் கொண்டு வந்தார். திருப்பிப் பார்த்த அவருக்கு என்னவோ போல் ஆகி விட்டது. பணியாளரை அழைத்து அவரது முதலாளி முன்னிலையிலேயே மன்னிப்பு கேட்டார். சூப்புக்கும் சேர்த்து பணத்தை செலுத்தினார். முதலாளி அந்தப்பணியாளரின் பொறுமையையும் கடமையுணர்வையும் பாராட்டி சம்பள உயர்வளித்தார். அந்தப் பெண் தான் தவறு செய்தார் என்று பணியாளர் வாக்குவாதம் செய்திருந்தால், அது வீண் பிரச்னையை வளர்த்திருக்கும். அவரது பொறுமை அவருக்கு பெருமை தந்தது. அந்தப் பெண்ணும் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டதன் மூலம் மனிதத்தன்மையை நிரூபித்து விட்டார். பிறரது தவறுகளை பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும்.சரிதானே!

No comments:

Post a Comment