Saturday, July 9, 2011

ஆன்மீக முயற்ச்சியும், குருவும்

இந்தியாவைப் போல குருவிற்கு மரியாதை கொடுக்கும் சமுதாயம் இருக்குமா என்பது சந்தேகமே. ஒன்றாம் வகுப்பில் ஆனா  ஆவன்னா சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் முதல் , கராத்தே ஆசிரியர், இசை ஆசிரியர் , ஆன்மீக குரு வரை எல்லோருக்கும் என்றும் மதிப்புக் கொடுக்கிறான் இந்தியன். பின்னாளில் தான் பெரிய ஆளாக வந்தாலும், பள்ளி டீச்சர் எதிரில் வந்தால் சிரித்து,  வணக்கம் செலுத்தி நலம் விசாரிப்பான்  சராசரி  இந்தியன். குருவுக்கும் , மாணவனுக்கும் உள்ள பந்தம் அலாதியானது, பிரிக்க முடியாதது.

நானும் எனது ஒன்றாம்  வகுப்பு ஆசிரியை முதல் எல்லா ஆசிரியர்களிடமும் மிக்க மரியாதை வைத்திருப்பவன் தான். ஆன்மீகத்தில், தத்துவத்தில்  என்னுடைய குருவாக நான் பாடம் கற்றது ,சுவாமி விவேகானந்தர், ஆதி சங்கரர், கிருஷ்ணர், சாக்ரடீஸ், புத்தர்,   இயேசுகிறிஸ்து, முஹம்மது நபி, குரு நானக், கபீர், பெரியார், பாரதியார், பட்டினத்தார்,  தியாகராஜர்… ஆகியோரிடம் இருந்து.
இந்து மதத்தில் குருவுக்கு முக்கிய இடம் உண்டு.
குரு மீது ஒரு இந்து வைத்திருக்கும் மரியாதையும், அன்பும் பிணைப்பும் அளவற்றது. ஒரு மனிதனின் மனநிலை அடையக் கூடிய உச்ச கட்ட நிலைக்கு அவனைக்  கொண்டு சொன்று, துன்பத்திலே துடிக்காத மனநிலைக்கு ஒருவனை உயர்த்தி, ஒருவன் தன் இயல்பின் உண்மையான நிலையை அறியும்படி செய்து, அவனை சுதந்திரமுள்ளவனாக ஆன்மீக குரு ஆக்குகிறார் என்பதே மாணவனின் எண்ணம். சுவாமி விவேகானந்தர் தன்னுடைய சென்னை சொற்பொழிவில் “நான் சொல்லியதில் மனித குலத்துக்கு ஏதாவது நன்மை இருந்தால் அது என்னுடைய குரு இராம கிருஷ்ண  பரமஹம்சரால், நான் சொல்லியதில் ஏதாவது தவறு இருந்தால் அதற்க்கு காரணம் நானே” என்றார்.
சுவாமி விவேகானந்தருக்கு இராமகிரிஷ்ணர கிட்டியது போல, அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கிட்டியது போல எல்லோருக்கும் ஆன்மீக குரு கிடைத்தால் எவ்வளவோ சிறப்பாக இருக்கும். அப்படிக் கிடைக்காத பட்சத்திலே என்ன செய்ய முடியும்? குரு கிடைக்கவில்லை என்றால், முந்தைய குருக்கள் சொல்லியதை வைத்து படித்துப் பார்த்து நாமே  நம்மை ஆன்மீக ரீதியில் உயர்த்திக்  கொள்ள முயல்வதுதானே  நடக்கக் கூடியது? சரியான குரு கிடைக்கவில்லை என்றால் , கிடைக்கும் யாரையாவது குருவாக வைத்துக் கொள்ள முடியுமா?
ஆனால் குரு கண்டிப்பாக  அவசியம், குரு இல்லாவிட்டால் முடியாது என்று ஒரு conditional clause வைப்பது ஏன்?
ஆனால் குருதான் எல்லாம், குரு இல்லாவிட்டால் ஆன்மீகம் இல்லை என்ற கருத்தை பலரும் சொல்கிறார்கள்.
ஆன்மீக முன்னேற்றத்துக்கு குரு கண்டிப்பாக வேண்டும் -இதை எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று விளக்க முடியுமா?
துரோணாச்சாரியாரைக் குறிக்க ஓரிரு இடங்களில் அர்ஜுனன் குரு என்கிற வார்த்தையை உபயோகப் படுத்தி இருக்கிறார்- அது ஆன்மீக குருவைக் குறிக்க அல்ல, வில் வித்தை குருவைக் குறிக்க.
இப்படி ஆன்மீக முயற்ச்சிக்கு குரு என்று ஒருவர் இருந்தே ஆக வேண்டும், இல்லாவிட்டால் முடியாது என்று முட்டுக் கட்டை போடுவது சரியா?
அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கிடைத்தது போல , விவேகானந்தருக்கு பரமஹம்சர் கிடைத்து போல சிறப்பான குரு கிடைத்தால் நல்லது. அப்படி கிடைக்கவில்லை என்றால் ஆன்மீக முயற்சி செய்யாமல் இருக்க முடியாது. பொருத்தம் இல்லாதவரை குரு, குரு என்று தலையில் வைத்துக் கொண்டாடினால், மக்களுக்கு, சமுதாயத்துக்கு, இந்து மதத்துக்கு பின்னடைவே உருவாகும்.
எல்லோரும் பள்ளிக்கு செல்கிறார்கள். கீதை உபநிடதங்கள் இவை எல்லாம் மொழி பெயர்ப்பு செய்யப் பட்டு கடைகளில் கிடைக்கின்றனர். அவற்றைப் படித்துதான் பலரும் இந்து மதக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்கிறார்கள். கட உபநிடதம் போன்றவை புரிந்து கொள்ள மிக எளிதாகவும் உள்ளன.
இன்றைக்கு ஆன்மீக விடயங்களைப் பற்றி சிந்திக்கும் பலரும்,  இப்படிப் படிப்பறிவில் கற்றதிலும், வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சியாலும் , தாங்கள் மனக் குவிப்பு, பூசனை போன்றவற்றின் மூலம் பெற்ற ஆன்மீக முன்னேற்றத்தையும் அடிப்படையாக வைத்தே எழுதுகிறார்கள். எல்லோருக்கும் குரு இருக்கிறார்களா?
குரு என்று சொன்னால் அவர் ஆன்மீக முயற்ச்சியில் தானே வெற்றி பெற்றவராக இருக்க வேண்டும்- புத்தரைப் போல, ஆதி சங்கரரைப் போல, சுவாமி விவேகனந்தரைப் போல்.
வெறுமனே எழுதப் பட்டுள்ளவற்றை படித்து சொல்வதானால் அதை நாமே படித்துக் கொள்ளலாம். இன்னொருவர் சொல்லிக் கொடுத்தால் தவறில்லை.
ஆனால் அப்படி படித்துப் பொருள் சொல்லும் குரு இல்லை என்றால், நாம் படித்து தெரிந்து கொள்ள முடியாதா? யார் வேண்டுமானாலும் படித்து தெரிந்து கொள்ளலாம்.
இதை நாம் சொல்லுவது  ஏனென்றால், இன்றைக்கு பல இளைங்கர்கள் கூட ஒரு குரு தேவை, அவரைத் தேடு, அவர் காலில் விழு, அவர் சொல்வதை அப்படியே கேள்……… என்கிற வலையில் விழுகிறார்கள்.  பின்னாளில் “குரு”வுக்கு ஏதாவது “”பிரச்சினை” என்றால் “சே, அவரு நல்லவருப்பா, … இவங்க சும்மா சொல்றாங்க” என்று பில்ட் அப் கொடுக்கும் பரிதாப நிலைக்கு ஆளாகிறார்கள். அப்போதும் குருவை விட முடியாது. ஏனெனில் தான் இத்தனை நாளாக ஏமாற்றப் பட்டதை   ஒத்துக் கொள்ள மனம் இடம் கொடுக்காது.
இன்றைக்கு குரு பிசினஸ் ஒரு சூப்பர் பிசினெஸ் என்பது பலருக்கும் தெரிந்தே உள்ளது. ஆதி சங்கரர் போல கையிலே நயா பைசா இல்லாமல் இந்தியா முழுவதும் கால்நடையாக சுற்றி வரும் குரு யாராவது இருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.  ஆதி சங்கரர் கூட துறவி, இல்லறத்தாராக இருந்து கொண்டு எனக்கு பணம் காசு வேண்டாம்,  நிதி சால சுகமா, இராமு நீ சந்நிதி சேவா சுகமா”‘  என்று பாடி தெருவிலே உஞ்சி விருத்தி எடுக்கும் குரு தியாகராஜர் போல யாரவது இருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன். 
குரு பிக்ஷா பண் ட்  என்று போட்டு பணம் வசூல் செய்கிறார்கள். குரு பிக்ஷா என்றால் அவர் ஆதி சங்கரர் போல, தியாகராஜர் போல தெருவில் வந்து பிஷை எடுக்க வேண்டும் அல்லவா, அதுதானே இந்து மதம் காட்டிய வழி. இப்படி பண்ட் போட்டு வசூலிப்பதுதான் சனாதன தர்மமா? ஆதி சங்கரர் சொல்லி இருக்கிறார்   அர்த்தம் அனர்த்தம் – பணம் காசு  கெட்டதே செய்யும் – என்று. அப்புறம் எதற்கு இவர்களுக்கு  பணம் காசு.  கட்சிக் காரர் நிதி வசூல் செய்து கட்சி தலைமையிடம் பேர் வாங்கி சீட்டு வாங்குவதற்கும்    இதற்கும் என்ன வித்யாசம்?  என் தலைவன் இல்லாவிட்டால் இந்த நாடு என்ன ஆகும் என்று சொல்வது போலத்தான் “குரு” இல்லாவிட்டால் ஆன்மீகம் இல்லை என்பது.  
உங்களிடம் யாரவது வந்து,  ”குரு
ஒருத்தர் இருக்கிறார்  , வாங்க பார்க்கலாம்” என்றால், அவர்களிடம் உங்கள் குரு கையிலே பணம் வைத்துக் கொள்ளாமல் , சொத்து , பத்து இல்லாமல் இருக்கிறாரா என்று கேளுங்கள். அவர் பிஷை எடுத்து உண்கிறாரா, என்று கேளுங்கள்.

No comments:

Post a Comment