Saturday, July 16, 2011

பகவத் கீதை 2


இந்த துக்கம் அர்த்தமற்றது!

ஒருவர் பேசுவதை இடைமறிக்காமல் முழுவதுமாகக் கேட்பது மிகப் பெரிய அபூர்வமான கலை. அது எல்லோருக்கும் கைகூடுவதில்லை. ஒருவர் பேசப் பேச இடையிடையே தங்கள் கருத்தையும், எண்ணத்தையும் சொல்லத் தோன்றும். அதே போல அறிவுரையை யாருக்கும், எப்போதும், இலவசமாக அறிவுரை வழங்கத் தயாராக இருப்பவர்கள் அதிகம். கேட்டால் மட்டுமே, தேவைப்பட்டவர்களுக்கு மட்டுமே சரியான அறிவுரை சொல்ல முற்படுவதும் அபூர்வமே. இந்த இரண்டு அபூர்வத் தன்மைகளையும் பகவான் கிருஷ்ணனிடம் நாம் பார்க்க முடிகிறது. திடீரென்று தத்துவஞானியாக மாறிய அர்ஜுனன் யுத்தத்தால் குலநாசம் வரும், பல தலைமுறைகளுக்கு அதர்மம் சூழும் என்றெல்லாம் கண்டுபிடித்து சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன், அவன் ”உன்னை சரணடைகிறேன், எது தர்மம் என்று சொல்” என்று சொன்ன பின்னரே தன் உபதேசத்தை ஆரம்பிக்கிறார்.

பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயமான சாங்கிய யோகத்தில் பதினோராம் சுலோகத்தில் இருந்து தான் பகவான் கிருஷ்ணனின் உபதேசம் ஆரம்பமாகிறது.

“யாருக்காக துக்கப்பட வேண்டாமோ, அவர்களுக்காக நீ துக்கப்படுகிறாய். விவேகிகள் இருப்பவர்களுக்காகவும், இறந்தவர்களுக்காகவும் வருத்தப்பட மாட்டார்கள்.

நானோ நீயோ, இந்த மன்னர்களோ ஒரு காலத்திலும் இராமலிருந்ததில்லை. இனிமேலும் நம்மில் எவரும் இராமலிருக்கப் போவதுமில்லை.

உடல் எடுத்த ஆன்மாவுக்கு இந்த உடலில் குழந்தைப் பருவம், இளமைப்பருவம், மூப்பு ஆகியவை எப்படியோ மற்றொரு உடலை அடைவதும் (அதாவது மறுபிறப்பும்). விவேகி இதற்கு மயங்குவதில்லை.

இந்த ஆன்மா ஒரு போதும் பிறப்பதில்லை. ஒரு போதும் இறப்பதில்லை. இது இல்லாதிருந்து பின் உண்டாவதில்லை. பிறப்பில்லாதது, என்றும் இருப்பது, புராதனமானது. உடல் கொல்லப்பட்டலும் ஆன்மா கொல்லப்படுவதில்லை.

கிழிந்த துணிகளைக் களைந்து எறிந்து விட்டு மனிதன் புதிய துணிகளை அணிந்து கொள்வது போல் ஆத்மா சிதைந்து போன உடம்புகளைக் களைந்து விட்டு புதிய உடம்பைப் பெற்றுக் கொள்கிறது”

என்று பகவான் கிருஷ்ணன் உடலின் நிலையாமை குறித்தும், ஆன்மாவின் நிரந்தரத்தன்மை குறித்தும் சொல்கிறார்.

ஒரு மனிதன் தன் உடலையே தானாகவும், தன் அடையாளமாகவும் காண முற்படும் போது அவன் கணக்கற்ற துன்பங்களைப் பெற வலுவான அஸ்திவாரத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். கிட்டத்தட்ட அனைத்து துக்கங்களுக்கும் மூல காரணம் அப்படி உடலையே “நான்” என்றும் “மற்றவர்” என்றும் எடுத்துக் கொள்ளும் அறியாமையே. எனவே தான் பகவான் கிருஷ்ணன் ஆரம்பத்திலேயே அந்த அறியாமையை சுட்டிக் காட்டுகிறார்.

நம் உடலில் ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கான செல்கள் பிறக்கின்றன, ஆயிரக்கணக்கான செல்கள் அழிகின்றன என்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. மனித உடல் சில மாதங்களில் முற்றிலும் புதியதாக மாறி விடுகிறது என்றும் பழைய செல்களில் ஒன்று கூட அப்போது உடலில் எஞ்சி இருப்பதில்லை என்றும் நவீன விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இன்று ஒரு தாவரத்தில் இருக்கும் செல், நாளை நம் உடம்பினுள்ளே இருக்கலாம். சில நாட்கள் கழித்து ஒரு விலங்கின் உடலில் அந்த செல்லைக் காணலாம். இப்படி உடல் இயங்கத் தேவையாக இருக்கும் செல்கள் கூட நம்மிடம் நிரந்தரமாக இருப்பதிலை. இன்று “நான்” என்று சொல்வதில் ஒரு பகுதியாக இருந்த செல் ஒரு நாள் தாவரத்தின் ’நானாக’ இருக்கிறது, இன்னொரு நாள் விலங்கின் ‘நானாக’ இருக்கிறது. இப்படி மாறிக் கொண்டே இருக்கும் உடலில் எது நம்முடையது? கணந்தோறும் மாறுவதும், கணந்தோறும் அழிவதுமான உடல் தான் நாமா?

இந்த செல்கள் பற்றிய விஞ்ஞானம் எல்லாம் எனக்குத் தெரியாது, என்னைப் பொறுத்த வரை பார்வைக்கு உடல் தொடர்ந்து இருக்கிறது என்று சொன்னால் கூட குழந்தைப் பருவம், இளமைப் பருவம், நடுத்தர வயதுப் பருவம், வயோதிகம் என்று பார்வைக்குக் கூட உடல் மாறிக் கொண்டே போகிறதே இதில் எது நீ என்ற கேள்வி எழுகிறது.

மேலும் உடலின் பிறப்புடன் ஆன்மா உருவாவதில்லை. உடல் இறக்கும் போது ஆன்மா அழிந்து போவதுமில்லை. என்றும் இருக்கும் ஆன்மாவிற்கு உடல் ஒரு ஆடையைப் போலத் தான். இந்த எண்ணம் மனதில் ஆழப்பதிந்தால் மரணம், அது யாருடையதானாலும், நம்மை வருத்தாது. தினம் தினம் உடை மாற்றுகிறோமே அதற்காக நாம் துக்கப்படுகிறோமா?

நீங்கள் உபயோகிக்கும் கருவி நீங்களாகி விட முடியாது. நீங்கள் எடுத்திருக்கும் இந்தப் பிறவி முழுவதும் நீங்கள் உபயோகிக்கும் கருவி தான் இந்த உடல். இதை நீங்களாக அடையாளம் காணும் போது அந்த அடையாளம் அத்துடன் நின்று போவதில்லை. அதனுடன் ஒரு பட்டாளமே கூட்டு சேர்ந்து விடுகிறது. நான், எனது மனைவி, எனது கணவன், எனது பிள்ளைகள், எனது நண்பர்கள் என்று அந்த ‘நானு’டன் நாம் இணைக்கும் கூட்டம் எல்லாமே சேரும் போது ஒன்றில்லா விட்டால் இன்னொன்று என்று ஏதாவது ஒரு துக்கம் நம்மைப் பாடாய் படுத்துகிறது. அத்துடன் நிற்காமல் எனது சொத்து, எனது பூமி, எனது செல்வாக்கு, எனது பதவி என்று நாம் தேடி சம்பாதித்ததும் நம்முடைய ‘நானு’டன் சேரும் போது இதற்கெல்லாம் வரும் சின்ன சின்ன நஷ்டங்கள் கூட நம்மைப் பாடாய் படுத்தும் சக்தி பெற்று விடுகிறது. வருத்தப்பட நிறைய காரணங்கள் நமக்குக் கிடைத்து விடுகின்றன. எனவே தான் பகவான் கிருஷ்ணன் இத்தனைக்கும் மூல வேரான இந்த உடலை நானாக நினைக்கும் அறியாமையின் முட்டாள்தனத்தை ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டுகிறார். அந்த அறியாமை நம்மை விட்டு விலகும் போது அதனுடன் சம்பந்தப்பட்ட அத்தனை துக்கமும் நம்மிடம் இருந்து விலகுகின்றன.

பகவான் கிருஷ்ணன் மேலும் சொல்கிறார்.

“இந்த ஆன்மா எப்போதும் பிறப்பதாயும், இறப்பதாயும் நீ எண்ணினாலும் அப்போது கூட நீ துக்கப்படுவது சரியல்ல.

பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் நிச்சயம். உன்னால் தவிர்க்க முடியாததற்கு நீ வருந்தி என்ன பயன்?”

பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனிற்காகவும், தத்துவங்களில் பெரிய நம்பிக்கை இல்லாதவர்களுக்காகவும், இன்னும் ஒரு படி இறங்கி வருகிறார். எனக்கு இந்த ஆன்மா பற்றிய தத்துவ விசாரங்கள் எல்லாம் பிடிபடவில்லை, எனக்கு உடல் தான் நான் என்று தோன்றுகிறது சொல்கிறவர்களுக்கு அவர் கேட்கும் கேள்வி தான் இது.

“நெருனல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்திவ் வுலகு”
என்று திருவள்ளுவர் சொன்னது போல உலகத்தில் நேற்று வரை வாழ்ந்தவனும் திடீர் என்று இன்று இல்லாமல் போவது இயல்பல்லவா? பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பும் நிச்சயமல்லவா?

கிங் லியர் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் சொன்னது போல ”இந்த உலகத்திற்கு வருவதைப் போலவே இந்த உலகை விட்டுப் போவதையும் நாம் சகித்துக் கொள்ளவே வேண்டும்” அல்லவா?

எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் இந்த விதிக்கு நாமும் கட்டுப்பட்டவர்களே அல்லவா? உலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இது இயல்பான நிகழ்வே அல்லவா? ஒரு விதத்தில் பார்த்தால் நாம் இதை எதிர்பார்த்தே அல்லவா இருக்க வேண்டும்? பின் ஏன் நம் விஷயத்தில் நிகழும் போது நாம் பெருந்துக்கத்தில் அழுந்த வேண்டும்? மாறுதல் ஒன்றே மாறாத நியதி அல்லவா? நம் விஷயத்தில் மட்டும் அந்த நியதி மாறுபட வேண்டும் என்று ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாயம்?

இந்த உண்மைகளை எல்லாம் சொல்வது ஒருவன் ‘கல் மனம்’ கொண்டவனாய் மாறி விட வேண்டும் என்பதற்கல்ல. மரணம் நிகழும் போது, இழப்புகளை சந்திக்கும் போது, உடனடியாக வருத்தப்படுதல் சாதாரண மனிதர்களுக்கு இயல்பே. ஆனால் அதிலிருந்து உடனடியாக மீளுதல் மிக முக்கியம். அதைப் பெரிது படுத்தி சோகப் பெருங்கடலில் மூழ்க ஆரம்பிப்பதற்கு பதிலாக இந்த உண்மைகளை உள்ளத்தில் பதித்து, தெளிந்து, அடுத்ததாகச் செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பிப்பது புத்திசாலித்தனம். நம்மை சில இழப்புகள் செயலிழக்க வைத்து விடாமல் நம் வாழ்க்கைப் பாதையில் நாம் தொடர்ந்து முன்னேற இந்த உண்மைகள் நமக்கு பேருதவியாக இருக்கும்.

அடுத்ததாக பகவான் கிருஷ்ணன் கீதோபதேசத்தின் மிக முக்கியமான தத்துவம் ஒன்றை, வெற்றி பெற எண்ணும் ஒவ்வொரு மனிதனும் பின் பற்ற வேண்டிய ஒரு தத்துவத்தை, சொல்ல ஆரம்பிக்கிறார். அது என்ன என்று பார்ப்போமா?....

தொடர்வோம் ....

No comments:

Post a Comment