Wednesday, July 13, 2011

கந்தபுராணம் பகுதி-2



தன் காலில் கிடந்த காஷ்யபரை நோக்கி புன்முறுவல் பூத்தாள் மாயா.முனிவரே ! தாங்கள் என் காலிலேயே சரணடைந்து விட்டதால், உமது ஆசைக்கு இணங்குகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை, நான் பேரழகி. உம்மைப் போன்ற கிழவருடன் உறவு கொள்வதை என் மனம் ஏற்காது. எனவே, உம் தவ வலிமையால் நீர் இளைஞனாக மாறும் பிற உருவங்களை எடுத்துக் கொள்ளும் நானும் பல <உருவங்கைள எடுக்கும் சக்தி படைத்தவள். அதற்கேற்ப நீரும் மாறிக் கொள்ள வேண்டும், என்றாள்.காஷ்யபர் அதற்கும், சம்மதித்து, பேரழகு மிக்க இளைஞனாக வடிவெடுத்தார். அந்த சுந்தர அழகன் மாயாவை அடைந்தான். அந்த முதல் இரவிலேயே அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் தாமரை போன்ற மலர்ந்த முகம் உடையவனாக இருந்ததால், பத்மாசுரன் என பெரியரிட்டனர். பத்மம் என்றால் தாமரை எனப் பொருள். இவனே சூரபத்மன் என்றும் அழைக்கப்பட்டான். அவர்கள் கூடிக்களித்த போது ஏற்பட்ட வியர்வையில் இருந்து மேலும் முப்பதாயிரம் அசுரர்கள் வெளிப்பட்டனர். இரண்டாம் ஜாமத்தில் இருவரும் இளஞ்சிங்கங்களாக உருமாறி கூடிக்களித்தனர். அப்போது, ஆயிரம் முகம் கொண்டவனும், இரண்டாயிரம் கைகள் உள்ளவனுமான ஒரு மகன் பிறந்தான். இவனது பெயரே சிங்கமுகன் அப்போது ஏற்பட்ட வியர்வையில் இருந்து நாற்பதாயிரம் சிங்கமுக அசுரர்கள் உற்பத்தியானார்கள். மூன்றாம் ஜாமத்தில் யானையாக அவர்கள் வடிவெடுத்து களித்திருந்த போது, யானை முகம் கொண்ட தாரகாசுரனும், அவனோடு நாற்பதாயிரம் யானை முக சூரர்களும் பிறந்தனர். நான்காம் ஜாமத்தில் ஆடுகளாக மாறி கூடினர். அப்போது ஆட்டு முகம் கொண்ட அஜாமுகி என்ற மகள் பிறந்தாள். அவளோடு ஆட்டுமுகம் கொண்ட முப்பதாயிரம் அசுரர்கள் உருவாயினர்.
மறுநாள் பகலிலும் காஷ்யபரின் ஆசைக்கடல் வற்றவில்லை. அவர்கள் காட்டெருமை, பன்றி, கரடி, புலி, குதிரை, மான், காண்டாமிருகம், கழுதை என பல மிருகங்களின் வடிவை அடைந்து கூடி, மொத்தத்தில் இரண்டுலட்சம் பேரை பெற்றெடுத்து விட்டனர்.இவர்கள் யாரும் குழந்தை வடிவினராகப் பிறக்கவில்லை. காஷ்யபரின் நவசக்தி, மாயாவின் மாயாஜாலம் ஆகியவற்றால் இளைஞர்களாக பிறந்தனர். இவர்களின் முதல் மகனான சூரபத்மன்பெற்றோர் முன்வந்து வணங்கினான்.தாயே தந்தையாரே ! லட்சக்கணக்கில் சகோதரர்கள் எனக்கு இருக்கிறார்கள். நாங்கள் ஏன் பிறந்தோம் ? எங்களால் உங்களுக்கு ஆக வேண்டியதென்ன ? சொல்லுங்கள். தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறோம், என்றான்.காஷ்யபர் தன் மக்களுக்கு நல்லுபதேசம் செய்தார்.மக்களே ! இவ்வுலகில் தர்மமே என்றும் வெல்லும். நீங்கள் தர்மத்தின் வயப்பட்டு இருங்கள். தர்ம காரியங்கள் பல செய்யுங்கள். சிவபெருமானைக் குறித்து நீங்கள் தவம் செய்யுங்கள். ஆன்மிக சாதனைகளே உங்களுக்கு நிரந்தர இன்பம் தருபவை. குத்ஸர் என்ற முனிவர் இறந்த ஒருத்தியைக் கூட தன் தவ வலிமை மூலம் பிழைக்க வைத்தார். மிருகண்டு முனிவரின் புதல்வன் மார்க்கண்டேயன். சிவனின் திருவருளால் எமனையே வென்று என்றுமே இளைஞனாக இருக்க வரம் பெற்றான். சிவன் தான் இவ்வுலகமே. அவரை வணங்கி தர்மத்தை நிலை நாட்டுங்கள். இதன் மூலம் என்றும் அழியா தேவலோக வாழ்வைப் பெறலாம் என்றார்.இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி விட்டார்.தன் மக்களை தாய் மாயா அழைத்தாள்.என் அன்புக் குழந்தைகளே ! பெற்ற தாய் சொல்வதைக் கேட்பதே பிள்ளைகளுக்கு அழகு. உங்கள தந்தை சொல்வதில் கருத்தும் இல்லை, இன்பமும் இல்லை, சாரமும் இல்லை. இதற்காகவா நான் உங்களைப் பெற்றேன்.அவர் சொல்லும் வாழ்க்கை துறவறம் போல் அமையும். முனிவர்களுக்கும், யோகிகளுக்குமே அது பொருந்தும். என் ஆசை அதுவல்ல. நீங்கள் இந்த ஜகத்தையே வெல்ல வேண்டும்.
எல்லா லோகங்களும் உங்கள் கட்டுப்பாட்டில் வர வேண்டும். தேவலோகமும் உங்களுக்கு அடங்கியதாக இருக்க வேண்டும். தேவர்கள் உங்களுக்கு பணியாளர்களாக இருக்க வேண்டும். ஆனால், இதை அடைவது எளிதல்ல. பரமேஸ்வரனே இந்த தகுதியை உங்களுக்குத் தர முடியும். ஆனால், அவரை வரவழைப்பது அவ்வளவு எளிதல்ல.நீங்கள் வீரத்தையும், தீரத்தையும் பெற பிரமாண்ட யாகம் செய்ய வேண்டும். வடக்கே வடத்வீபம் என்ற இடம் இருக்கிறது. அது யாகம் செய்வதற்கு ஏற்ற இடம். அங்கே செல்லுங்கள். யாகத்தை துவங்குங்கள். யாகத்திற்கு தேவையான பொருட்களை யாகம் துவங்கும் வேளையில், நானே கொண்டு வந்து தருவேன், என்றாள்.தாயின் மொழி கேட்டு சூரர்கள் ஆர்ப்பரித்தனர். அன்னையை வாழ்த்தினர். அவளிடம் விடை பெற்று வடத்வீபம் புறப்பட்டனர்.கண்விழித்த காஷ்யபர், அங்கு தன் மக்கள் இல்லாதது கண்டு மாயாவிடம் காரணம் கேட்டார்.தவசீலரே ! அவர்கள் மட்டுமல்ல, நானும் இப்போதே புறப்படுகிறேன். நான் அசுரகுரு சுக்ராச்சாரியாரால் அனுப்பப்பட்டவள். எங்கள் அசுரகுலத்தை தழைக்க வைக்க, வேண்டுமென்றே உம்மை மயக்கி கூடினேன். அதையறியாத நீரும் என்னோடு மகிழ்ந்து இரண்டு லட்சம் அசுரர்களை உருவாக்கினீர். என் பணி முடிந்தது. நானும் செல்கிறேன், என்றவள் மாயமாய் மறைந்து விட்டாள். அவள் மட்டுமல்ல ! அவள் எழுப்பிய மாட, மாளிகை, கூட கோபுரங்களும் மறைந்தன.காஷ்யபர் தான் செய்த தவறை நினைத்து அழுதார். அப்போது அவரது முதுகை வருடிக் கொடுத்து, காஷ்யபா, என் அன்பு மகனே, என அழைத்தது ஒரு குரல்.

No comments:

Post a Comment