Wednesday, July 13, 2011

குழந்தைகளுக்கு பக்தி புகட்டுவோம்!

ஆண்டவன் தொண்டு என்றாலும், ஆன்மிக நூல்களை வாசிப்பதென்றாலும் அது வயதானவர் களுக்கு மட்டுமே என்று ஒதுக்கிவிடுகிறோம். ஆனால், குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பக்தி, ஒருவரை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
குழந்தையாக திருஞானசம்பந்தர் இருந்தபோது செலுத்திய பக்தி, அவர் இறைவனின் குழந்தையாகவே மாறுவதற்குரிய சந்தர்ப்பத் தைத் தந்தது. இதனால் இவரை, “இளைய பிள்ளையார்’ என்று அடைமொழி கொடுத்து அழைக்கிறோம்.
சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதியம்மாள் தம்பதியரின் செல்வப்புதல்வராக அவதரித்தார் திருஞானசம்பந்தர். மூன்று வயதுக் குழந்தையான சம்பந்தரை, அவரது தந்தை தினமும் தோணியப்பர் கோவிலுக்கு அழைத்துச் செல் வார். அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் (குளம்) நீராடும் போது, குழந்தையை கரையில் அமர்த்தி விடுவார். குழந்தை சம்பந்தன் அங்குமிங்கும் வேடிக்கை பார்ப்பார். ஒரு தோணியில், சிவபார் வதி பவனி வருவது போன்ற சிற்பம் அங்கு இருக் கும். அதை ரசித்தபடியே இருப்பார்.
ஒருநாள் நல்ல பசி. குளிக்கச் சென்ற இருதயர் திரும்பவில்லை. கரையில் இருந்த குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. அப்போது, அம்பாள் அவர் முன் வந்தார். கையில் கொண்டு வந்த பொற் கிண் ணத்தில் பால் நிரம்பியிருந்தது. குழந்தைக்கு அதைப் புகட்டினாள். அப்படியே மறைந்து விட்டாள்.
குளித்துவிட்டு வந்த இருதயர் குழந்தையின் வாயில் வழிந்திருந்த பாலைப் பார்த்துவிட்டு,
“பிறர் கொடுக்கும் பாலைக் குடிக்கலாமா? யார் கொடுத்தது இது?’ என்று அதட்டினார்.
“தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம்
கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாள் பணிந்தேத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே…’
—என்று துவங்கி ஒரு பதிகத்தைப் பாடியபடியே தோணியப்பரையும், அம்பிகையையும் சுட்டிக்காட்டியது குழந்தை. பதிகம் என்பது 11 பாடல்களைக் கொண்டது. இந்தப் பதிகத்தைப் பாடுவோருக்கு முன்வினை பாவங்கள் எல்லாம் தீர்ந்து விடும் என்று பாடி முடித்தார்.
ஒரு குழந்தைக்கு இவ்வளவு ஞானமா? இருதயரும், கோவிலுக்கு வந்த பக்தர்களும் ஆச்சரியப்பட்டனர்.
சம்பந்தரின் பாடல்களில் ஒரு விசேஷம் உண்டு. இவர் பாடும் ஒவ்வொரு பதிகத்தின் கடைசிப் பாடலிலும் தன் பெயரை அவர் குறிப்பிட்டிருப்பார்; அதாவது, இந்தப்பாடல் ஞானசம்பந்தனாகிய தன்னால் தரப்பட்டது என்று சொல்லியிருப்பார்.
இவரது முதல் பாடலைப் போல கடைசிப்
பாடலும் மிகவும் உயர்ந்தது. இவருக்கு நிச்சயிக்கப்பட்ட முதல் திருமணம் சில காரணங்களால் நின்று போனது. பின்னர், திருப்பெருமணநல்லூர் எனப்படும் ஆச்சாள்புரத்தில் வசித்த பெண்மணியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமக்கள் யாக குண்டத்தை வலம் வந்த போது, தன் இனிய குரலில், “காதலாகிக் கசிந்து’ எனத்
துவங்கும் பதிகத்தைப் பாடினார் சம்பந்தர். அவர் பாடி முடித்ததும், மாப்பிள்ளை – மணப் பெண்ணுடன், திருமணத்தில் பங்கேற்றவர்களும் அந்த ஜோதியில் கலந்து விட்டனர்.
சிவஜோதியில் சம்பந்தர் கலந்த நாளை குருபூஜை யாக எல்லா சிவாலயங்களிலும் வைகாசி மூலம் நட்சத்திரத்தன்று நடத்துவர். சீர்காழி தோணியப் பர் கோவிலில் இந்த நிகழ்ச்சி மிகவும் விசேஷம்.
சம்பந்தரின் வரலாறு, குழந்தைப் பருவத் திலேயே பக்தியைப் புகட்ட வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்கிறது.

No comments:

Post a Comment