Friday, July 15, 2011

பகவத் கீதை- 1

நமக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்ரம்!


செல்வதற்கு முன்…

(பகவத் கீதைக்கு ஆதிசங்கரர் முதல் எத்தனையோ ஞானிகள் உரை எழுதியிருக்கிறார்கள். எத்தனையோ பண்டிதர்கள் வியாக்கியானம் செய்து இருக்கிறார்கள். அந்த அளவு ஞானமோ, தகுதியோ எனக்கு இல்லை என்றாலும் ஒரு சாமானியனாக நான் கீதை இன்றைய கால கட்ட மனிதர்களுக்கு எப்படி வழி காட்டுகிறது என்பதை அதனைப் படித்து ஆழ்ந்து சிந்தித்த ஆர்வக் கோளாறு காரணமாக எழுத முற்படுகிறேன். கீதோபதேசம் அர்ஜுனனிற்கு மட்டுமல்லாமல் யாரெல்லாம் அதை ஆழ்ந்து படிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் வழிகாட்டக்கூடியது.

மகாத்மா காந்தி அதை மிக அழகாகக் கூறியுள்ளார்: “கீதை சூத்திரங்கள் அடங்கிய நூல் அல்ல. அது கவிதை உருவான மகத்தான நூல். நீங்கள் அதை எந்த அளவுக்கு ஆழ்ந்து பரிசீலனை செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதிலிருந்து அற்புதமான அர்த்தங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். காலம் செல்லச் செல்ல அதில் உள்ள முக்கிய வார்த்தைகள் புதிய விரிவான அர்த்தங்களுடன் திகழ்கின்றன.....என்னைப் பொறுத்த மட்டில் எனது நடத்தையை உருவாக்கும் தவறாத ஒரு வழிகாட்டியாக கீதை அமைந்தது. அது தினந்தோறும் என் சந்தேகங்களைத் தீர்க்கும் ஒரு அகராதியாக அமைந்தது. எனக்கு கஷ்டங்களும், சோதனைகளும் ஏற்பட்ட போது அதிலிருந்து விடுதலை பெற நான் இந்த அகராதியையே நாடினேன்”.

கீதோபதேசம் அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ உள்ளங்களில் இருள் மண்டிய போதெல்லாம் ஞான விளக்கேற்றி வைத்திருக்கிறது. பண்டிதன் முதல் பாமரன் வரை, அரசன் முதல் அன்றாடங்காய்ச்சி வரை இந்த ஞானாக்னியில் தங்கள் துக்கங்களையும், அறியாமையையும் பொசுக்கி பலனடந்து இருக்கிறார்கள். இன்று நமக்கும் கீதோபதேசம் எவ்வாறு பொருந்துகிறது, கீதையின் ஞானம் எப்படி நமக்கு போக வேண்டிய பாதையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது என்கிற நோக்கையே இந்தத் தொடரில் பிரதானப்படுத்தி இருக்கிறேன். எனவே இதில் கீதையின் முழு உரையையும் அப்படியே தராமல் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் உண்மைகளை அழகாகக் கூறும் அதன் முக்கிய சாராம்சத்தை உதாரணங்களுடனும், விஞ்ஞான உண்மைகளுடனும், மற்ற அறிஞர்கள் கருத்துடனும் இணைத்து விளக்க முற்பட்டுள்ளேன். இது அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறேன். - என்.கணேசன்)


கீதை காட்டும் பாதை 1

நமக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்ரம்!

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் அவ்வப்போது தனக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தைக் காண்கிறான். தர்மம்-அதர்மம், நன்மை-தீமை, பலம்-பலவீனம், கட்டுப்பாடு-கிளர்ச்சிகள், அறிவு-அறியாமை, லட்சியம்-அலட்சியம் போன்ற அணிகள் நேரெதிராக நின்று அவனுக்குள்ளே அடிக்கடி போர் புரிந்த வண்ணம் இருக்கின்றன. அவன் அந்தப் போரில் ஒவ்வொரு ஜதையிலும் எதை ஜெயிக்க விடுகிறான் என்பதை வைத்தே அவன் அளக்கப்படுகிறான். அதை வைத்தே அவன் வாழ்க்கையின் தரமும் தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் அப்படி நடக்கும் போரில் எல்லா சமயங்களிலும் சரியாகத் தீர்மானித்து உறுதியாகச் செயல்படும் தெளிவை மனிதன் பெற்றிருப்பதில்லை. சில சமயங்களில் அவன் தன்னிலை இழந்து குழப்பத்தால் செயலிழந்து விடுகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறான். சில சமயங்களில் தெரிந்தாலும் அதனைச் செயல்படுத்த திறனின்றி தவிக்கின்றான். செயல்பட வேண்டிய நேரத்தில் ஸ்தம்பித்துப் போகிற முட்டாள்தனம் அவனுள் ஏற்பட்டு விடுகிறது. செயலிழந்து நிற்கையில் பிரச்னைகள் பெரிதாக ஆரம்பிக்கின்றன. எதிர்நோக்கி நிற்கும் பிரச்னைகளின் பிரம்மாண்டத்தைப் பார்க்கையில் வாழ்க்கையை முடித்துக் கொள்வது நல்லது என்று கூட சிலர் முடிவு செய்கிறார்கள். சிலர் பேசாமல் சன்னியாசம் வாங்கிக் கொண்டு விலகிக் கொள்வது உத்தமம் என்று நினைக்கிறார்கள்.

அர்ஜுனன் குருக்‌ஷேத்திர பூமியில் இந்த நிலையில் தான் நிற்கிறான். அப்போது அவனுக்கு பகவான் கிருஷ்ணன் செய்யும் உபதேசம் தான் பகவத் கீதை. அந்த உபதேசம் அன்று அர்ஜுனனின் குழப்பத்தைக் களைந்து தெளிவு பெற வைத்து அவனை உறுதியுடனும் வீரத்துடனும் செயல்பட வைத்தது. அவனை வெற்றி பெறவும் வைத்தது. பகவத் கீதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அர்ஜுனனுக்காக சொல்லப்பட்டது என்றாலும் பிற்கால மனிதர்கள் அனைவருக்காகவும், அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு இக்கட்டான கட்டத்திலும் பொருந்தும் படியாக தனித்தனியே சொல்லப்பட்டிருக்கிறது என்று உணரத்தக்க வகையில் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய பேருண்மைகளை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் சிறப்பு பெற்று அமரத்துவம் அடைந்து விட்டது.

முன்பு சொன்னது போல நாம் அனைவருமே சில சமயங்களில் அர்ஜுனன் நிலைக்கு வந்து விடுகிறோம். வாழ்க்கையில் பிரச்னைகள் பூதாகரமாக நம் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கையில் தெளிவாகவும், விரைவாகவும், உறுதியாகவும் செயல்பட வேண்டியிருக்கும் கட்டத்தில் குழப்பம், பயம், துக்கம், செயலின்மை, விரக்தி ஆகியவற்றின் பிடியில் கட்டுண்டு நிற்க நேர்கிறது. எளிய தேவைகள், எளிமையான வாழ்க்கை என்றிருந்த நம் முன்னோர்களை விட அதிகமாக ஏராளமான தேவைகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையை சிக்கலாக்கி வைத்திருக்கும் நாம் அவ்வப்போது அந்த குழப்ப நிலைக்கு வந்து விடுகிறோம். மேற்கொண்டு செல்லும் வழியறியாது தடுமாறி நிற்கிற அது போன்ற தருணங்களில் எல்லாம் அணையா விளக்காக ஒளிரும் கீதை நமக்கு தெளிவான வழியைக் காட்டுகிறது.

ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட மகத்தான இதிகாசமான மகாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் 25 முதல் 42 வரை உள்ள 18 அத்தியாயங்களே பகவத் கீதை. வியாசர் வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் முழு சாராம்சத்தையும் பகவத் கீதையில் தந்துள்ளார். குருட்டு மன்னன் திருதராஷ்டிரன் “தர்மக்‌ஷேத்ரமான குருக்‌ஷேத்திரத்தில்” என்ன நடக்கிறது என்று சஞ்சயனிட்ம் கேட்க, சஞ்சயன் வியாச முனிவரால் அளிக்கப்பட்ட ஞானதிருஷ்டியால் அங்கு நடப்பதை நேரடி ஒளிபரப்பாகக் கண்டு சொல்ல ஆரம்பிக்கிறான். ஆக பகவத்கீதையே தர்மம் என்ற சொல்லில் இருந்து தான் ஆரம்பமாகிறது.

தர்மம் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு இணையான சொல்லை எந்த மொழியிலும் சொல்வது எளிதல்ல. சரி, நியாயம், வள்ளல் தன்மை, கடமை, விதிமுறை என்று பல பொருள்கள் அதற்கு இருக்கின்றன. ஆனால் அந்த பொருள்களில் எதுவுமே தனியாக முழுமையான பொருளைத் தந்து விடுவதில்லை. பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் எப்படி ஒருவன் இருக்க வேண்டுமோ அப்படி இருப்பது தர்மம். அப்படி இருக்கும் வரையில் மனிதன் தானும் அமைதி அடைகிறான், பிறர் அமைதிக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்கிறான். அப்படி இல்லாத போது, அந்த தர்ம நெறியில் இருந்து விலகும் போது மனிதன் தானும் அமைதியிழந்து பிறர்க்கும் தீங்கிழைக்கிறான். எனவே அவரவர் தர்மத்தின் படி ஒவ்வொருவரும் இருப்பார்களேயானால் உலகம் அமைதிப்பூங்காவாகி சிறப்பாக இயங்கி வரும்.

கீதையின் முதல் அத்தியாயமான அர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜுனன் தன் தர்மம் மறக்கிறான். அதுவே அவன் கலக்கத்திற்கும் குழப்பத்திற்கும் காரணமாக அமைகிறது. பாண்டவ, கௌரவ சேனைகளுக்கு மத்தியில் தன் தேரை ஓட்டிச் சென்று நிறுத்தும்படி அர்ஜுனன் சொல்ல பகவான் கிருஷ்ணனும் அப்படியே செய்கிறார். இருபுறமும் அர்ஜுனன் பார்வையைச் செலுத்துகிறான். உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள், குருமார்கள் முதலானோரே இருபக்கமும் இருக்கக் கண்டான். அனைவரும் தன்னுயிரைத் துறக்கவும், பிறர் உயிரைப் பறிக்கவும் தயாராக உறுதியுடன் கூடி இருக்கும் நிலையைப் பார்த்த போது அவனுக்குள்ளே விவரிக்க முடியாத துக்கம் ஏற்பட்டது. இத்தனை பேருக்கு அழிவை ஏற்படுத்தி பெறக்கூடிய வெற்றி வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. அவன் கண்கள் கலங்கின. கையிலிருந்து காண்டீபம் நழுவியது. உடல் நடுங்கியது. போர் புரிய வேண்டாம் என்று முடிவு செய்கிறான்.

கிருஷ்ணனுக்கே அவன் போரின் தீய விளைவுகளை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான். போரினால் குலம் அழியும், அதர்மம் பெருகும், மக்கள் மனம் போன படி நடந்து கொள்ள ஆரம்பிப்பார்கள், விபசாரம் அதிகரிக்கும், பஞ்சம் வரும், பல சமூகப் பிரச்னைகள் தோன்ற ஆரம்பிக்கும் என்றெல்லாம் எடுத்துச் சொன்னான். அவன் சொன்ன எதிலுமே உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அவன் சொல்லாத ஒரு உண்மை அத்தனை பேச்சுக்கும் அடித்தளமாக இருந்தது. அது தன் அன்பிற்குரியவர்கள் மீது அவனுக்கு இருந்த அளவு கடந்த பாசம் தான். அவர்கள் அல்லாமல் வேறு யார் எதிரணியிலிருந்தாலும் அவர்களைக் கொன்று குவிப்பதில் அவனுக்கு எள்ளளவும் வருத்தம் இருந்திராது. அவனுக்கு யுத்தங்கள் புதிதல்ல. அவன் கொன்று குவித்த ஆட்களும் குறைவல்ல. அவனுடைய உடலெல்லாம் வீரம் நிரம்பியே இருந்தது. அக்ஞாத வாசத்தின் இறுதியில் உத்தரனுக்காக தனியொருவனாக நின்று பீஷ்மர், திரோணர், கிருபர், துரியோதனன், கர்ணன் ஆகியோரை எதிர்கொண்டு வெற்றி பெற்றவன் அவன். ஆனால் இத்தனை நாள் வராத ஞானோதயம் இப்போது அவனுக்கு வரக் காரணம் இந்த மகத்தான யுத்தத்தில் பலருடைய மரணத்தின் மூலம் தான் வெற்றி சாத்தியம் என்பது தான். அப்படி இறக்கப் போகிறவர்கள் அவனுடைய பாசத்திற்கு உரியவர்கள் என்பது தான்.

அசோகனுக்கு கலிங்கப் போரில் ஏற்பட்ட மாற்றம் உண்மையானது. இறந்தவர்கள் அவனது உறவினர்கள் அல்ல. ஆனால் அந்த போரின் அழிவுக் காட்சிகளைப் பார்த்த போது அவன் மனதில் ஏற்பட்ட துக்கமும், போரின் வெற்றி மகிழ்ச்சிக்குப் பதிலாக ஒரு வெறுமையை உணர வைத்ததும் மன ஆழத்திலிருந்து வந்தவை. அதனால் அது அவனுடைய பிற்பகுதி வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றி விட்டது. அர்ஜுனன் மாற்றம் அப்படிப்பட்டதல்ல. கடமையை ஆற்ற வேண்டிய தருணத்தில் பாசமிகு உறவுகளையும், அன்பு வைத்த மனிதர்களையும் கண்ட பின் வந்த தயக்கம் அவனுடையது.

சூதினாலும், சூழ்ச்சியினாலும் கவர்ந்த இராஜ்ஜியத்தை முழுவதும் கொடுக்கா விட்டாலும் ஐந்து கிராமங்களையாவது தருமாறு தர்மபுத்திரன் மிக அதிகமாகத் தாழ்ந்து வந்த போதும் ஊசிமுனை அளவு இடமும் தர மாட்டேன் என்று அகம்பாவத்தோடு மறுத்தவன் துரியோதனன். அவனைப் போன்றவனிடம் அவர்களுடைய இராஜ்ஜியத்தை விட்டு விட்டால் அவன் ஆளும் மக்களுக்கு என்ன நன்மை செய்வான்? அவர்கள் படப்போகும் துன்பங்களுக்கெல்லாம் விட்டுக் கொடுத்த இவர்களே அல்லவா முழுக்காரணமாவார்கள். நல்லாட்சி புரிந்து மக்களைக் காப்பாற்ற வேண்டியவர்கள் சூதினால் ஆட்சியை கொடியவர்களிடம் இழந்தது மட்டுமல்லாமல் திரும்பப் பெறாமல் தத்துவம் பேசி விட்டுக் கொடுப்பது அந்த மக்களுக்கிழைக்கும் தர்மமாகுமா? அதை விடப் பெரிய அதர்மம் என்ன இருக்க முடியும்? தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக லட்சக்கணக்கான மக்களுக்கு அநீதி ஏற்படுத்துவது எந்த விதத்தில் தர்மம்?

மனம் பலவீனமாக இருக்கின்ற நேரத்தில் செயல்பட வேண்டிய மனிதன் செயல்படாமல் இருக்க ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிப்பான். மனித சுபாவத்தில் அன்றும் இன்றும் இது இயல்பே. தன் மனதில் தோன்றிய நல்லவை, கெட்டவை அனைத்தையும் ஒளிவு மறைவின்றி அப்படியே பகவானிடம் கொட்டிய அர்ஜுனன் கடைசியில் தன் குதிரையின் கடிவாளங்களை கிருஷ்ணனிடம் ஒப்படைத்தது போலவே தன் மனதின் கடிவாளத்தையும் அவரிடம் ஒப்படைத்து சரணடைந்தான். “நான் சிறியவன். குறை மிகுந்தவன். தர்மம் எது என்பதை அறியாதவன். என் அறிவு மயங்குகிறது. அதனால் உன்னைக் கேட்கின்றேன். தர்மம் எது என்று எனக்கு உறுதியாகச் சொல். நான் உன் சீடன், உன்னையே நான் சரணடைகின்றேன்”

வாழ்க்கையில் எத்தனையோ குழப்பங்களிலும், பிரச்னைகளிலும் சிக்கி நமக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தை அடிக்கடி கண்டு தவிக்கும் நாமும் அர்ஜுனன் செய்ததையே செய்வோம். நம்முள்ளே அந்தர்மியாய் இறைவன் இருக்கிறார். அவர் அனைத்தும் அறிந்தவர். நம்முடைய பிரச்னைகளையும், சிக்கல்களையும், துக்கங்களையும் அவர் முன் வைத்து வழி காட்ட வேண்டும் என்று வேண்டி சரண் அடைவோம். அவர் கண்டிப்பாக வழி காட்டுவார்!

அர்ஜுனனோடு சேர்ந்து நாமும் ஞானமும் தெளிவும் பெறத் தயாராவோமா?

No comments:

Post a Comment