இப்போது அசுரப்படை வைகுண்டத்தை முற்றுகையிட்டு விட்டது. மகாவிஷ்ணு அனைத்தும் அறிந்தவரல்லவா ? அவர் சயனத்தில் ஆழ்ந்திருப்பதென்ன தூக்கத்திற்கு ஒப்பானதா ? சர்வ வியாபியான அவருக்கு தூக்கம் ஏது ? உலகை பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள அவர் ஆவேசமாய் எழுந்தார். தனது பாஞ்சஜன்யம் என்னும் வெற்றிச்சங்கும், நந்தகம் என்ற கத்தி, கவுமோதகி என்ற கதாயுதம், சுதர்சன சக்கரம், சார்ங்கம் என்ற வில் ஆகிய ஆயுதங்களுடன் அசுரப்படைகளை அழிக்கப் புறப்பட்டார். சிவனிடம் அருள் பெற்ற அசுரர்களைத் தன்னால் அழிக்க முடியாதெனத் தெரிந்தாலும், சிவனின் அருள் பெற்றவர்களுக்கு தனதருளையும் கொடுக்கும் நோக்கத்தில் அவர்களைச் சந்தித்தார். ஆனாலும், அவரருளைப் பெறுவது அவ்வளவு சுலபமானதா என்ன ! சூரர்களுடன் கடும் போரில் இறங்கி விட்டார் நாராயணன். 12 ஆண்டுகள் கடும் போராட்டம் நடந்தது. எந்த ஆயுதமும் சூரர்களை அழிக்காது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருந்த நாராயணன். அவர்களுக்கு அருளும் நோக்கில் தன் சக்கராயுதத்தை ஏவினார். அது தாரகாசுரனின் மார்பில் பதக்கமாய் பதிந்தது. நாராயணன் தாரகனிடம், சூரனே ! நீ சிவனிடம் வரம் பெற்றதை நான் அறிந்தாலும், உனக்கு அருளும் நோக்கிலேயே சக்ராயுதத்தை பரிசாய் தந்தேன். நீ உன் இஷ்டம் போல் இந்த லோகத்தையும் உனதாக்கிக் கொள்ளலாம் என்றார். தாரகன் அவரிடம் இருந்து விடை பெற்றான். பின்னர் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் ஆகிய சகோதரர்கள் நந்திகேஸ்வரரின் அனுமதியுடன் சிவபெருமானைச் சந்தித்து ஆசி பெற்றனர். சகல அண்டங்களையும் வென்றது குறித்து கூறினர். சிவபெருமான் அவர்களை வாழ்த்தி, ஒவ்வொரு அண்டத்திற்கும் ஒரு தலைவரை நியமித்த பின்னர். அவற்றின் நடு நாயகமாக விளங்கும் ஓரிடத்தில் கோட்டை கட்டி ஆட்சி செய்ய அனுக்கிரஹம் செய்தார். இவ்விடத்தில் ஒரு சந்தேகம் எழும் ஏன் தேவர்கள் அல்லல்பட வேண்டும் ? அசுரர்களை ஏன் இறைவன் உற்சாகப்படுத்த வேண்டும் என்பதே அது. தேவராயினும், மனிதராயினும், கந்தர்வராயினும் பிற வகையினராயினும் தவறு செய்யும் பட்சத்தில் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் ஓடினர். பரந்தாமா ! பரமசிவன் தான் அசுரர்களுக்கு வரங்களைத் தந்தார் என்றால் தாங்களும் தங்கள் சக்ராயுதத்தை அவர்களுக்கு வழங்கி விட்டீர்களே ! இது நியாயமா ? நம்மை ஆபத்து சூழந்து கொண்டுள்ளதே ! என்றனர்.அவர்களிடம் பரந்தாமன், தேவர்களே முன்பொரு முறை பரமசிவனின் மாமனார் தட்சன் நடத்திய யாகத்திற்கு, அந்த லோகாதி பதியின் அனுமதியின்றிச் சென்றோம். அவன் கொடுத்த ஹவிர்பாகத்தை ஏற்றுக் கொண்டோம். அந்த பாவத்தின் பலன் உங்களை மட்டுமல்ல, என்னையும் சேர்ந்து கொண்டது. அதன் பலாபலனை இப்போது அனுபவிக்கிறோம். பரமேஸ்வரன் போட்டுள்ள இந்த முடிச்சை அவிழ்க்க அவரால் தான் இயலும். தவறு செய்த நாம் தண்டனையை அனுபவித்து தானே ஆக வேண்டும், என்றார். பரந்தாமனின் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த தேவர்கள் தலை குனிந்தனர். ஒரு நிமிட நேரம் செய்த தவறுக்காக, 108 யுகங்கள் அசுரர்களின் கொடுமைக்கு ஆளாக நேர்ந்ததே என வருந்தினர்.பரமேஸ்வரனை இரண்டாம் முறையாக சிவலோகத்திற்கே சென்று சந்தித்த சூரர்கள் வீரமகேந்திரபுரம் என்ற நகரத்தை ஸ்தாபித்தனர். பிரம்மா அவனுக்கு முடிசூட்டினார். விஷ்ணு முடிசூட்டு விழாவில் பங்கேற்றார். அவரை சூரபத்மன் வைகுண்டத்துக்கே அனுப்பி விட்டான் தேவர் தலைவரான இந்திரன், அசுரன் உமிழும் வெற்றிலை எச்சிலை பிடிக்கும் பாத்திரத்தை கையில் பிடித்துக் கொண்டான். வாயு சாமரம் வீசினான். பணப்பை இருந்த குபேரனின் கையில், அசுரனுக்கு எடுத்துக் கொடுக்க வேண்டிய பாக்குப்பை இருந்தது. வெண்கொற்றக்குடையை சூரிய சந்திரர்கள் பிடித்தனர். இப்படி தேவர்களெல்லாம் ஆளுக்கொரு வேலை செய்ய உத்தரவிட்டான்.
மகேந்திரபுரியை நிர்மாணித்த விஸ்வகர்மாவின் மகள் பத்மகோமளை. பேரழகியான இவளை பத்மாசுரன் திருமணம் செய்து கொண்டான். சந்திரனின் உதவியுடன் உலகிலுள்ள அழகிகளை மயக்கி, தன்னுடன் சேர்த்துக் கொண்டான். கணவன் அசுரனாயினும், அவன் மணம் கோணாமல் பதிபக்தி மிளிர அவனுடன் வாழ்ந்தாள் கோமளை. இவர்களுக்கு நான்கு மகன்கள் பிறந்தனர்.பானுகோபன், அக்னிமுகன், இரண்யன், வஜ்ரபாகு என அவர்களுக்கு பெயர் சூட்டினர் அசுரதம்பதியர்.பட்டத்தரசிக்கு நான்கு மக்கள் பிறந்தாலும், சூரன் பல இன கன்னிகைகளுடன் கூடினான். மூன்றாயிரம் மகன்கள் பிறந்தனர். இங்கே இப்படியிருக்கும் சூரபத்மனின் தம்பி சிங்கமுகன் ஆசுரபுரி என்ற நகரை அழைத்துக் கொண்டான். அவன் எமனின் மகள் விபூதிகையை திருமணம் செய்தான். இன்னும் பல பெண்களை மணந்து நூறு பிள்ளைகளைப் பெற்றான். தாரகன் மாயாபுரி என்ற நகரை அமைத்தான். அவன் நிருதியின் மகளான சவுரிகை என்பவளைத் திருமணம் செய்ததுடன் மேலும் பல பெண்களையும் சேர்த்துக் கொண்டான். சவுரிகைக்கு அசுரேந்தின் என்ற மகன் பிறந்தான்.சூரர்களுக்கு ஆட்டுமுகம் கொண்ட அஜாமுகி என்ற சகோதரி பிறந்தாளோ, அவள் தன் பங்குக்கு இந்த உலகைக் கெடுத்துக் கொண்டிருந்தாள்.அழகுள்ளவனோ, அழகில்லாதவனோ யாராயிருந்தாலும் அவள் விரும்பி விட்டால் தன்னை அனுபவித்தாக வேண்டும் என கட்டளையிட்டாள். பல அந்தணர்கள், தேவர்கள் என எல்லோரையும் அனுபவித்தாள். ஒழுக்கம் என்ற சொல்லே அவளுக்கு தெரியாது. போதாக்குறைக்கு தன்னோடு பிறந்த அசுர சகோதரர்களுக்கு லோகத்திலுள்ள அழகான பெண்களை எல்லாம் பிடித்து வந்து இரையாக்கினாள்.ஒருநாள் கோபக்கார முனிவரான துர்வாசரை சந்தித்தாள்.
No comments:
Post a Comment