Wednesday, July 13, 2011

அர்த்தம் நிறைந்த ஆன்மீகத் தத்துவங்கள்- 5

ஆற்றங்கரைகளில் கோயில் எழுப்பப்பட்டது ஏன்?

தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் நதிக்கரைகளில் உள்ளன. வயிற்றுக்குத் தேவை உணவு. நதிக்கரைகளில் இருந்த மக்கள், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாததால் தேவையான அளவு பயிர் விளைவித்தனர். உணவுக்கு அவர்கள் கஷ்டப்பட்டதில்லை. எனவே, உயர்ந்த எண்ணங்கள் இயற்கையாகவே அவர்கள் மனதில் எழுந்தது. அதன் விளைவாக இறைவழிபாடு அதிகரித்தது. கோயில்கள் ஏராளமாக எழுப்பப்பட்டன. ஏற்கனவே இருந்த கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டன. உதாரணத்துக்கு காவிரிக்கரையில் தான் கோயில்கள் அதிகம். அன்றைய சோழ ஆட்சியில் தான் கோயில்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன. அப்பர், சம்பந்தர், சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்கள் 274ல் 190 காவிரிக்கரையில் உள்ளது. ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 40 காவிரிக்கரையில் இருக்கிறது


ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும். "ராம' என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி "மரா' என்றே முதலில் உச்சரித்தார். "மரா' என்றாலும், "ராம' என்றாலும் "பாவங்களைப் போக்கடிப்பது' என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். "ரமா' என்று அவளுக்கு பெயருண்டு. "ரமா' என்றால் "லட்சுமி'. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். "ரா' என்றால் "இல்லை' "மன்' என்றால் "தலைவன்'. "இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை' என்பது இதன் பொருள்.

கோயில்களில்எதை பலியிட வேண்டும்?

 உமையவளாகிய பராசக்தியை லோகமாதா என்று வழிபடுகிறோம். அவளே கோயில்களில் இறைவனோடு சேர்ந்து அம்மையப்பராய் அருள்பாலிக்கிறாள். இறைவனின் ஐந்து தொழில்களில் ஒன்றான அருளல் என்னும் அருட்சக்தியே அம்பிகையாக உருவெடுத்து அருள்புரிவதாக ஆகமங்கள் கூறுகின்றன. அதேநேரம், கருணையே உருவான அம்பிகை உக்கிர ரூபமாகி அசுரசக்திகளை அழிக்கும் போது "காளி' என்று பெயர் பெறுகிறாள். ஆடு, மாடு போன்ற உயிர்களை அவளுக்கு பலியிடுகிறார்கள். ஆனால், உண்மையில் காளி விரும்பும் பலி எவை தெரியுமா? "வாமாசாரம்' என்று சாஸ்திரத்தின் மூலம் பழங்காலத்தில் காளிக்கு பலியிடும் வழக்கம் இருந்ததை அறியமுடிகிறது. மனித மனதில் ஆறு வகையான பகைவர்கள் இருக்கிறார்கள். அப்பகைவர்களை வெல்லும் சக்தியை அருள்பவள் காளியே. காமம், கோபம், கருமித்தனம்(லோபம்), மோகம், ஆணவம்(மதம்), பொறாமை(மாச்சர்யம்) என்பவையே அந்த தீயகுணங்களின் குறியீடாகவே வெள்ளாடு, எருமை, பூனை, செம்மறியாடு, மனிதன், ஒட்டகம் ஆகியவற்றை அக்காலத்தில் பலியிட்டு வழிபட்டனர். ஆனால், காலப்போக்கில் இவ்வழக்கம் குறைந்து ஆடு, கோழி பலியிடப்படுகிறது. மற்ற மிருகங்கள் குறைந்த அளவில் பலியிடப்படுகின்றன. பலியிடுதலில் இருக்கும் உண்மையை உணராமல், வெறும் அடையாளத்தை மட்டும் பின்பற்றுவது முறையானதல்ல. கருணையே வடிவமான காளியிடம் நம்மிடம் இருக்கும் வேண்டாத தீயகுணங்களை பலியிட்டு மனத்தூய்மை பெறுவதே சிறப்பாகும்.

•காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது எதற்கு


சூரியனை முழுமுதற்கடவுளாகப் போற்றி வணங்கும் வழக்கம் பண்டைய காலம் தொட்டே இருந்துவருகிறது. சூரியனின் ஆற்றலையும், பயனையும் நம் முன்னோர்கள் மட்டுமின்றி, அன்றைய நவீன அறிவியல் தொழில் நுட்ப உலகத்தில் மின்சக்தி பற்றாக்குறையை நீக்க சூரிய சக்தியை சரியான முறையில் பயன்படுத்த நமது அறிவியல் அறிஞர்கள் முன்வந்துள்ளனர். காலம் செல்லச் செல்ல சூரிய நமஸ்காரம் மட்டுமல்லாது அனைத்து சக்திகளும் சூரியனிடமிருந்து நேரடியாகப் பெறும் வாய்ப்பு உருவாகும்.

சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிச்ய நோய்தீர்க்கும் யோக பயிற்சியாகும். தொன்று தொட்டே பாரத மக்கள் பின்பற்றி வந்த ஓர் ஆசார முறை சூரிய நமஸ்காரம். உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரமிது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடற்பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.

அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது புண்ணிய பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர். சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம்.

மேற்கத்திய நாடுகள் உட்பட உலகின் எல்லா பாகங்களிலும் இந்த ஆசார முறை பிரசித்தி பெற்றிருக்கிறது. ஜிம்னாஸ்டிக், சன்பாத் என்ற பெயர்களில் சூரிய நமஸ்காரத்தை உட்படுத்தி உடற்பயிற்சிகள் செய்து வருகின்றனர்.

சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலிலுள்ள எல்லா முட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய ஒளிகதிர்களும் உண்டு. கால்சியம் உற்பத்தியை கட்டுபடுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன. மேலும் உடலுறுப்புகள் உறுதி பெறுவதால் காச நோயனுக்களின் ஆக்கிரமிப்பையும் தடுக்கின்றன.

தொடர்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதினால் அகால வயது முதிர்ச்சியை ஓரளவுக்கு தடை செய்யலாம். மூட்டுகள் நல்ல லாவகமடைகின்றது. தொப்பை வயிறு வருவதை கட்டுபடுத்த இயல்கின்றது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவகின்றது.

சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் ஆரம்பத்தில் அனுசரிக்க வேண்டிய சில விசயங்களை பார்ப்போம். பரிசுத்தமான எளிய வாழ்க்கை வாழ வேண்டும். அளவான உணவு அருந்த வேண்டும். விசாலமானதும் காற்றோட்டம் உள்ளதுமான இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்கார வேளையில் மிக அவசியமான ஆடை மட்டும் தளர்த்தியாக அணியவேண்டும். தேனிர், காபி, கொக்கோ, புகையிலை, மதுபானம் முதலியவை அருந்த வேண்டாம், இப்படி அநேக விஷயங்கள் கவனித்து சூரிய நமஸ்காரம் ஆரம்பிக்க வேண்டும்.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம். இளஞ்சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. இரவில் தூக்கத்தால் உடலுக்கும், மனத்திற்கும் ஓய்வு கிடைப்பதால், அதிகாலையில் உடற்தசைகள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும். மூளையின் அலைகள், அதிர்வுகள் குறைந்து அமைதியாக இருப்பதும் அதிகாலையில்தான். அதிகாலையில் வெப்பம் குறைவாக இருப்பதால் சூரிய நமஸ்கார பயிற்சியின் போது நமது உடலும் உள்ளமும் சோர்வடைவதில்லை. சூரிய நமஸ்காரம் செய்வதற்கு உகந்த திசை கிழக்கு. சூரியனின் கதிர்கள் உடல் முழுவதும் படும் வகையில் சுத்தமான காற்று இருக்கக்கூடிய திறந்த வெளியில் நின்றபடி செய்ய வேண்டும்.

சூரிய நமஸ்காரம் எட்டு நிலைகளை வரிசையாகக் கொண்ட ஒரு யோக பயிற்சியாகும். ஒவ்வொரு சூரிய நமஸ்காரமும் மொத்தம் பன்னிரண்டு ஆசன நிலைகளை உள்ளடக்கியதாகும். பன்னிரண்டு ஆசனங்கள் இணைந்தது ஒரு சுற்று. இவ்வாறு 12 நமஸ்கார சுற்றுகள் இணைந்தது ஒரு சூரிய நமஸ்காரமாகும்.

ஒவ்வொரு நமஸ்காரமும் நம் உடல் உறுப்புகளான மூளை, இருதயம், வயிற்றிலுள்ள சுரப்பிகளைத் தூண்டும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். நமக்கு மன, உடல், ஆத்ம நலன் தரும் சூரியபகவானின் திருநாமங்களை உரக்க உச்சரிப்போம்.

ஓம் மித்ராய நமஹ...... சிறந்த நண்பன்

ஓம் ரவயே நமஹ...... போற்றுதலுக்குரியவன்

ஓம் சூர்யாய நமஹ...... ஊக்கம் அளிப்பவன்

ஓம் பானவே நமஹ...... அழகூட்டுபவன்

ஓம் ககாய நமஹ...... உணர்வுகளுக்கு வலிமை தருபவன்

ஓம் பூஷ்ணே நமஹ...... புத்துணர்ச்சி தருபவன்

ஓம் ஹிரண்யகர்ப்பாய நமஹ...... ஆற்றல் அளிப்பவன்

ஓம் மரீசயே நமஹ...... நோய்களை அழிப்பவன்

ஓம் ஆதித்யாய நமஹ...... கவர்ந்திழுப்பவன்

ஓம் சவித்ரே நமஹ...... சிருஷ்டிப்பவன்

ஓம் அர்க்காய நமஹ...... வணக்கத்திற்கு உரியவன்

ஓம் பாஸ்கராய நமஹ...... ஒளிமிகுந்து பிரகாசிப்பவன்.

மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்தவாறு சூரிய நமஸ்காரம் செய்யும்போது நமது மனம் சிதறாமல் ஒருமுகப்படுகிறது. மந்திரத்தை உச்சரிக்கும்போது அதன் அதிர்வு நமது உடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பல உணர்வுகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.

No comments:

Post a Comment