முதியவராய் வந்தவர், வானத்ததில் எழுந்தருள ரிஷப வாகனம் ஓடோடி வந்து அவரைத் தாங்கியது. ஆம்... முதியவராக வந்து கங்கையைச் சிந்தி, யாக குண்டத்தை அணைத்தது சிவபெருமான் தான். அங்கே உமையவளும் வந்து சேர, இருவரும் ரிஷபத்தில் அமர்ந்து அசுரர்களுக்கு காட்சி தந்தனர்.அசுரக்குழந்தைகளே என்னைக் குறித்த உங்களது யாகத்தின் மதிப்பு அளவிட முடியாதது. நீங்கள் கேட்கும் வரங்களைத் தர நான் காத்திருக்கிறேன், என்றார் சிவன்.அசுரத்தலைவன் பத்மாசுரன் சிவனிடம், கருணைக்கடவுளே ! தங்கள் தரிசனம் கண்டு அகம் மகிழ்ந்தோம். எங்களது பக்தி உண்மையானதென்றால், ஆயிரத்து எட்டு அண்டங்களையும் எங்களுக்குத் தர வேண்டும். அவற்றை நாங்களே அரசாள வேண்டும். மேலும் எங்களுக்கு திருமால், பிரம்மா உள்ளிட்ட எந்த தேவராலும் அழிவு ஏற்படக்கூடாது. தேவர்கள் தங்கள் ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் எங்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். எல்லா அண்டங்களுக்கும் சென்று வரும் ஆற்றலை தாங்கள் தர வேண்டும், என்றான். சிவன் அவன் கேட்டதையெல்லாம் மட்டுமல்ல, கேட்காததையும் கொடுத்தார். சூரபத்மனே ! இந்த அண்டங்களை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். அவற்றை மேற்பார்வை செய்ய இப்போது உன்னிடமிருக்கும் பலம் போதாது. எனவே உன் சகோதரர்களுக்கும், சகல அண்டங்களுக்கும் , சகல அண்டங்களுக்கு செல்லும் வரம் திருகிறேன். இன்னும் பல கோடி பேர் அடங்கிய நான்கு வகை சேனைகளையும் தருகிறேன். இந்திர விமானம், சிங்க வாகனம், பாசுபதாஸ்திரம் போன்றவற்றையும் தருகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை நீ 108 யுககாலம் தான் ஆட்சி செய்ய முடியும், அதன் இறுதியில் மரணமடைவாய், என்றார்.
மிக மிக நீண்ட காலம் இந்த பூமியில் வாழப்போவது பற்றி சூரபத்மன் மகிழ்ந்தாலும், தன் மரண எச்சரிக்கையைக் கேட்டு வருந்தி, ஈசனே ! தங்கைளத் தவிர வேறு யாராலும் எங்களுக்கு மரணம் நேரக்கூடாது என்ற தங்கள் வரம் நிலைத்தாலே போதும். இந்த அண்டங்கள் உள்ளளவும் நாங்கள் வாழ்வோம், என்றான் சூரபத்மன்.அசுரத்தலைவனே ! என்னாலோ, என் சக்தியாலோ தவிர வேறு எதனாலும் உனக்கு மரணமில்லை, என்றார் சிவன். சூரபத்மன் இது கேட்டு மகிழ்ச்சி கூத்தாடினான். இதற்குள் சிவன் மறைந்து விட்டார். அசுரக்கூட்டம் ஆரவாரத்துடன் சிவனால் தங்களுக்கு அருளப்பட்ட படைகளுடன் கிளம்பியது. கிட்டத்தட்ட ஐம்பது கோடி அசுரர்களுடன் புறப்பட்ட அப்படை நேராக காஷ்யபரிடம் சென்றது. தந்தையே ! நாங்கள் பல்லாண்டுகளாக தவமிருந்து 1008 அண்டங்களையும் ஆளும் சக்தியைப் சிவபெருமான் மூலம் பெற்றோம். இனி தங்கள் வழிகாட்டுதல் படி நடப்போம் என்றான் சூரபத்மன். நல்ல பிள்ளைகளைப் பெற்றவர்களைப் பற்றி பெற்றவர்கள் பெருமைப்படுவார்கள் இங்கோ அரக்கி மீது ஆசைப்பட்டு, அசுரப் பிள்ளைகளைப் பெற்ற இந்த தந்தையோ மனம் வருந்தினார். சிவனாரே வரம் கொடுத்த பிள்ளைகளை தன்னால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்துடன் மகனே ! நீ இந்த வீரர்களுடன் குலகுரு சுக்ராச்சாரியாரை போய்ப்பார். அவரது வழிகாட்டுதல் படி நடந்து கொள் என்று சொல்லி அனுப்பி விட்டார். அனைவரும் சுக்ராச்சாரியாரைச் சென்று சந்தித்தனர். சுக்கிராச்சாரியார் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என் அன்பு சீடர்களே ! இந்த உலகம் சிவனுக்கு கட்டுப்பட்டது. உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனும், பாவம் செய்தாலும், புண்ணியம் செய்தாலும் இறுதியில் பரமாத்மாவான அந்த சிவனின் உடலில் தான் கலக்கிறது. எனவே, பாவ, புண்ணியம் பற்றி நீங்கள் யாரும் கவலைப்படக்கூடாது.
உங்களைக் கண்டு எல்லாரும் நடுங்க வேண்டும். அப்படியானால் தான் அசுர ராஜ்யம் பல்லாண்டு வாழும், நீங்கள் அந்த சிவனை மறக்காமல் தினமும் பூஜிக்க வேண்டும். அதே நேரம் எல்லா லோக அதிபதிகளையும் ஓடஓட விரட்டி அண்டங்களை உங்கள் பிடிக்குள் கொண்டு வர வேண்டும்.கொலை செய்யுங்கள்; தேவப் பெண்ணிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளுங்கள். கொள்ளையடியுங்கள்; போரிடுங்கள்; இப்படி செய்ய உங்களுக்கு சிவனே அதிகாரம் கொடுத்திருக்கிறார். அண்டமெல்லாம் உங்களுக்கு என வாக்களித்த பிறகு யாரோ ஒருவன் அதில் இருந்து ஆள என்ன தகுதி இருக்கிறது ? இவற்றைச் செய்யத் தயங்கினால், உங்களை எவனும் மதிக்கமாட்டான். புறப்படுங்கள் இப்போதே, என்றார். சூரபத்மன் அவரது காலில் விழுந்து பணிந்து புறப்பட்டான். அவர்களின் வாகனம் வித்தியாசமாக இருந்தது. சிவனால் சூரபத்மனுக்கு அருளப்பட்ட இந்திர விமானம் பறக்கும் சக்தியுடையது. அதை கோடி குதிரைகள் இழுத்துச் சென்றன. கோடி சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டதாக அது விளங்கியது. சிங்கமுகன் ஏறிச் சென்ற தேரை பத்து லட்சம் யானைகள், பத்துலட்சம் குதிரைகள், பல பூதங்கள் இழுத்துச் சென்றன என்றால், அந்த ரதத்தின் வேகத்தைக் கேட்கவா வேண்டும். தாரகாசுரன் பத்தாயிரம் குதிரைகள் பூட்டப் பட்ட மற்றொரு பறக்கும் விமானத்தில் ஏறிச் சென்றான். இதர படையினர் கோவேறு கழுதை, ஒட்டகம், யானை, குதிரை என பல மிருகங்களை வாகனமாக்கி ஏறிச் சென்றனர். இந்த படைகள் பறந்து சென்ற தூரம் மட்டும் மூன்றுகோடி யோஜனை அளவுக்கு இருந்ததாம். (அதாவது கிட்டத்தட்ட 40 கோடி கிலோ மீட்டர் தூரம்.) அந்தளவுக்கு பரந்திருந்தது இந்த உலகம். ஒருவனுக்கு முதல் தேவை செல்வம். அது இருந்தால் தான் எவ்வளவு மக்கள் இருந்தாலும் வயிறார சாப்பிட முடியும். இந்த செல்வத்தைச் சம்பாதிப்பதில் முதலில் அக்கறை காட்டியது அசுரப்படை. எனவே அவர்கள் செல்வத்தை முழுமையாகக் கொள்ளையடிக்க சென்ற இடம் அளகாபுரி. இந்த பட்டணத்தின் தலைவன் தான் குபேரன். குபேரனின் ஊருக்குள் அத்துமீறி புகுந்தது ராட்சதப் படை.
No comments:
Post a Comment