சுதர்மமே சிறந்தது!
இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு தத்துவத்தை பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். அது தான் சுதர்மம்.
பகவத்கீதையின் ஆரம்பம் ”தர்மம்” என்ற சொல்லில் துவங்குவதை முன்பு குறிப்பிட்டிருந்தேன். பகவத் கீதை “மம” என்ற சொல்லில் முடிகிறது. ’மம’ என்றால் “என்னுடைய” என்று அர்த்தம். “தர்மம்” மற்றும் “என்னுடைய” என்ற சொற்களுக்கிடையில் 700 சுலோகங்கள் கொண்ட பகவத் கீதை ஒளிர்கிறது. இதைக் குறிப்பிடும் பல அறிஞர்கள் “என்னுடைய தர்மம்” என்பதன் விளக்கமே பகவத் கீதையின் முழு சாராம்சமும் என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையே. அர்ஜுனனிற்கு தர்மம் எது என்று விளக்கிய கீதையைப் படிக்கையில் அவரவர் தர்மத்தை ஒவ்வொருவரும் உணராமல் இருக்க முடியாது. சுதர்மம் பகவத் கீதையின் மிக முக்கியமான தத்துவம்.
ஆன்மாவின் நிரந்தரத்தையும், உடலின் அழியும் தன்மையையும் கூறிய பகவான் சுதர்மம் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். அரசகுலத்தவனான அர்ஜுனனுக்கு அறப் போரைக் காட்டிலும் சிறந்த சுயதர்மம் இல்லை என்றும், தேடாமலேயே வரும் தர்மயுத்தம் சொர்க்கத்தின் கதவைத் திறந்து வைத்திருப்பதைப் போன்றது என்றும், அதிர்ஷ்டசாலிகளிகளுக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய பாக்கியம் என்றும் சொல்கிறார். அந்த அறப்போரை நடத்தாமல் போனால் கடமையையும், கௌரவத்தையும் கொன்று பாவத்தை அடைய நேரிடும், பழி வந்து சேரும் என்று எச்சரிக்கிறார்.
இப்படி எல்லா கோணங்களிலும் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனிற்கு வலியுறுத்தும் சுதர்மத்தை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
ஒரு மனிதன் பிறக்கும் போதே அவன் சுதர்மமும் பிறந்து விடுகிறது. ஒருவன் எதற்காக படைக்கப்பட்டானோ அதைச் செய்வது அவன் சுதர்மம். ஒருவனுடைய சுதர்மம் அவன் உண்மையான இயல்பையும், மனப்போக்கையும் ஒத்து அமைவது. அந்த சுதர்மத்தை ஒட்டியே அவன் திறமைகளைப் பெற்றிருப்பான். அதை செய்வதாலேயே அவன் அமைதி அடைய முடியும். இதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று ஒன்றும் கிடையாது. சுலபம், சிரமம் என்றெல்லாம் கணக்கிட்டு எடுத்துக் கொள்வதோ, தள்ளி விடுதலோ கூடாது.
பிறரது தர்மம் சில சமயங்களில் சிறந்ததாகத் தோன்றலாம். ஆனால் அதைக் கடைபிடிப்பதால் நன்மை உண்டாகாது. வினோபா கூறுவார்: “மீன்களிடம் ‘நீரை விட பால் அதிக மதிப்புடையது. அதனால் நீங்கள் பாலில் வந்து வாழுங்கள்’ என்று எவரேனும் சொல்வாராயின் மீன்கள் அதை ஏற்குமா? மீன்கள் நீரில் தான் வாழும். பாலில் அவை இறந்து போகும்”.
அதே போல பிறரது தர்மம் சுலபமாகத் தோன்றலாம். அப்படி தோன்றி அதைக் கடைபிடித்தாலும் அது ஒருவர் வாழ்வை சிறப்பிக்காது. அர்ஜுனனுக்கு இந்த போரைச் செய்வதை விட சன்னியாசம் பெற்றுக் கொண்டு எங்காவது போய் விட்டால் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றினாலும் அவனால் உண்மையாக சன்னியாசியாக முடியுமா? காட்டுக்கே போனாலும் எல்லாவற்றையும் துறந்து விட அவனால் முடியுமா? அஹிம்சையை அவனால் பின்பற்ற முடியுமா? அவனால் சும்மா இருக்க முடியுமா? ஓரிரு நாட்களுக்கு அவனது இயல்பான தன்மைகளை அவன் அடக்கி வைக்கலாம். ஆனால் அத்தன்மைகள் விரைவில் அவனையும் மீறியல்லவா வெளிப்படும்.
இது அவன் பிரச்னை மட்டுமல்ல. நம்மில் பலருடைய பிரச்னையும் தான். நமக்கு அடுத்தவர்கள் தொழில் சுலபமாகத் தெரியும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல், நம்முடைய வேலைகளில் இருக்கும் எல்லா கஷ்டங்களும் தெரியும் நமக்கு அடுத்தவர்கள் தொழில் பிரச்னை இல்லாததாகத் தெரியும். அவரவர் தொழிலில் உள்ள பிரச்னைகளை அவரவரே அறிவார்கள். அடுத்தவர் தொழிலை சில நாட்கள் செய்து பார்த்தால் தான் அதில் உள்ள சிக்கல்கள் புரியும். எனவே பிரச்னைகளைப் பார்த்து பின்வாங்கி அடுத்தவர்களுடைய கடமையோ, தொழிலோ நம்முடையதை விட சிறந்தது என்று எண்ணுவது உண்மைக்குப் புறம்பானது.
எதற்காகப் பிறந்தோமோ அதைச் செய்யாமல் யாரும் தங்கள் வாழ்வில் நிறைவையும், அமைதியையும் பெற முடியாது. இது இந்தக் காலத்திய மனிதர்கள் அலட்சியம் செய்யும் ஒரு மாபெரும் உண்மையாகும். இன்று தொழிலில் உயர்வு, தாழ்வு என்று பார்க்கிறோம். இலாப நஷ்டங்கள் பார்க்கிறோம். ஆனால் நம் இயல்புக்கும், திறமைக்கும் ஏற்ற தொழில் தானா, இதில் நமக்கு மனநிறைவு கிடைக்குமா என்றெல்லாம் பார்க்க மறந்து விடுகிறோம். இன்றைய இளைஞர்களை மூளைச்சலவை செய்து டாக்டர்களாக்கவும், இன்ஜீனியர்களாக்கவும் மட்டுமே ஆக்க, படாத பாடு படும் பெற்றோர்கள் இதை எண்ணிப்பார்க்க மறந்து விடுகிறார்கள்.
எதில் நமக்கு உண்மையான ஈடுபாடு உள்ளதோ அதை ஒட்டியே நம் சுதர்மம் அமையும். எது சுதர்மம் என்று அறிந்து கொள்ள அங்குமிங்கும் செல்ல வேண்டாம். மனதினுள் ஆத்மார்த்தமாகக் கேட்டுக் கொண்டால் போதும். அப்போது பதில் கிடைக்கும். சுதர்மத்தின் வழியே நடக்கையில் கிடைக்கும் சந்தோஷமே அலாதி. அப்படி நடக்கையில் தான் ஒரு மனிதன் உண்மையாக வாழ்கின்றான்.
கணித மேதை பாஸ்கலின் தந்தை அவரை கிரேக்கம், லத்தீன் போன்ற பழைய மொழிகளில் பாண்டித்தியம் பெற வைக்க எண்ணினார். ஆனால் பாஸ்கலுக்கோ கணிதம் என்றால் உயிராக இருந்தது. அவருடைய தந்தை கணித புத்தகங்கள், உபகரணங்கள் எல்லாம் அவருக்குக் கிடைக்காதபடி செய்து பாஸ்கலை ஒரு அறையில் அடைத்து வைத்துப் பார்த்தார். பாஸ்கல் பூட்டிய அறைக்குள் கரித்துண்டால் தரையில் கணிதக் குறியீடுகளால் கோட்பாடுகளை எழுதிப் பார்ப்பார். ஒரு கால காலத்தில் அவருடைய தந்தை தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. பாஸ்கல் தன் தந்தையின் கட்டாயத்திற்காகத் தன் கணித ஈடுபாட்டை தியாகம் செய்திருந்தால் இன்று இந்த உலகம் எத்தனையோ கணித மேம்பாட்டை இழந்திருக்கும்.
ஒவ்வொருவரும் அவரவர் சுயதர்மத்தின் படி, இயல்பாக அமைந்துள்ள திறமையின் படி செயல் புரியும் போது அவர்களும் நிறைவை உணர்கிறார்கள். அவர்களால் சமூகத்திற்கும் நன்மைகள் கிடைக்கின்றன. அப்படி இல்லாமல் அதற்கு எதிர்மாறாக அவர்கள் இயங்கும் போது அவர்களும் சந்தோஷமாக இருப்பதில்லை. அவர்களால் உண்மையான நற்பலன்கள் கிடைப்பதும் அரிதாக இருக்கிறது.
பண்டைய காலத்தைப் போல இக்காலத்தில் வாழ்க்கை முறை எளிமையாக இல்லை. நடைமுறைச் சிக்கல்களும் தற்போது அதிகம் இருக்கின்றன. வருமானத்தை வைத்தே வாழ்க்கையின் வெற்றி இக்காலத்தில் தீர்மானிக்கப் படுகிறது. சில துறைகளில் ஒருவருக்கு மிகுந்த ஈடுபாடும், திறமையும் இருக்கலாம். ஆனால் அத்துறையிலோ வருமானம் சிறிதும் இல்லை என்றால் அவர் எப்படி சுதர்மத்தை மேற்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுவது நியாயமே. அப்படி வருமானத்திற்காக வேறு ஒரு தொழில் செய்ய நேர்ந்தாலும் பகுதி நேரமாவது தனக்கு இயல்பாக திறமையும் ஆர்வமும் உள்ள துறைக்கு ஒருவர் ஒதுக்க வேண்டும்.
இதைத் தான் விமானத்தைக் கண்டு பிடித்த ரைட் சகோதரர்கள் செய்தார்கள். பணவசதி அதிகம் இல்லாத அவர்களுக்கு விமானத்தை உருவாக்கும் முயற்சியில் முழுவதுமாக ஈடுபட முடியாத சூழ்நிலை இருந்தது. ஆராய்ச்சி பல ஆண்டுகள் நீண்டதால், அதற்கு நிறையவே பணமும் தேவைப்பட்டதால், அவர்கள் தினசரி வருமானத்திற்கு சைக்கிள் கடை ஒன்றை வைத்து பல ஆண்டுகள் தங்கள் பிழைப்பை நடத்தினார்கள். ஓய்வு நேரங்களில் அவர்கள் விமான ஆராய்ச்சிகளையும் செய்தார்கள். அதனாலேயே அவர்களால் சரித்திரத்தில் இடம் பிடிக்க முடிந்தது.
எத்தனையோ துறைகளில் பெரும் சாதனைகள் புரியும் அளவு திறமை உள்ளவர்கள் வருமானம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேறு ஒரு தொழிலில் முழு நேரமும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை நாம் இன்று பல இடங்களில் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெறுமையினை அடிக்கடி உணர்கிறார்கள் என்பது கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய தனித் திறமையைப் பற்றி யாராவது நினைவுறுத்தினால் அவர்கள் முகத்தில் சோகம் படர்வதையும் பார்க்க முடியும். எது நமது உண்மையான இயல்போ, எதைச் செய்கையில் நாம் நூறு சதவீதம் நாமாக இருக்கிறோமோ, அதற்கு எதிர்மாறாக வாழ்ந்து யாரும் நிறைவைக் காண முடியாது. எனவே இக்காலத்தில் சூழ்நிலையின் காரணமாக வேறு தொழில் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தாலும் ஒருவன் சுதர்மத்தை அடியோடு மறந்து விடக்கூடாது.
சுதர்மத்தை கைவிடுவது தற்கொலைக்கு சமமானது. இதனாலேயே பகவான் கிருஷ்ணன் சுதர்மத்தை மிக முக்கியமாக வலியுறுத்துகிறார். இன்னொரு இடத்தில் “சுயதர்மத்தைச் செய்கையில் ஒருவன் இறந்து போனாலும் நல்லதே” என்று கூட கூறுகிறார். சுதர்மத்தைப் பின்பற்றாமல் இருக்க எத்தனையோ காரணங்களை ஒருவன் தேடிக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அந்தக் காரணங்களில் ஒன்று கூட மேன்மையானதாக இருக்க முடியாது.
இக்காலத்தில் தொழிலில் நேர்மையில்லை, ஈடுபாடில்லை, உயிரில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகம் எழுவதற்குக் காரணம் மனிதர்கள் சுதர்மத்தைப் புறக்கணிப்பது தான். எந்திரங்களாய் அவர்கள் மாறிவிடக் காரணமும் அது தான்.
கீதை சொல்லும் சுதர்மம் குறித்து இன்னும் விரிவாகப் பார்ப்போம்...
பாதை நீளும்....
No comments:
Post a Comment