Thursday, July 14, 2011

ஜென் கதைகள்

*ஜென்*  பிரிவில் கோயன்கள் எனப்படும் உபதேசங்கள் ஏராளம் உள்ளன. கேள்வி - பதிலாக அமைந்திருக்கும் இந்த உபதேசங்களைப் புரிந்து கொள்வது எளிதல்ல.
மனம் தெளிவடைவதே ஞானம். அதற்கான மார்க்கமே ஆன்மீகம். ஜென் தத்துவம் இதுவே. 

தவத்தில் ஆழ்ந்து உள்ளுணர்வைப் பெற்றவர்களால் மட்டுமே இதன் சரியான அர்த்தத்தை உணர்ந்து கொள்ள முடியும். 

நூற்றுக் கணக்கான கோயன்கள் சில சுவையான சம்பவங்களையும் சுட்டிக்காட்டிப் போதிப்பவை.  

ஜென் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நான்-இன் என்ற ஜப்பானிய ஜென் குருவைப் பார்க்க பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் வந்தார். நான்-இன் அவருக்குத் தேநீர் கொடுத்து உபசரிக்க ஆரம்பித்தார். விருந்தினரின் குவளை முழுவதும் தேநீர் நிரம்பியது. ஆனால் இன்னும் அவர் தேநீரை ஊற்றிக் கொண்டே இருந்தார். 
தேநீர் ததும்பி வழிவதைப் பார்த்த பேராசிரியரால் பொறுக்க முடியவில்லை. 


"இது நிரம்பி விட்டது. இதற்கு மேல் இந்தக் குவளையில் இடம் இல்லை"என்றார். நான்-இன் கூறினார், "இந்தக் குவளை போலவே நீங்களும் உங்கள் ஊகங்களினாலும் அபிப்ராயங்களினாலும் நிரம்பி இருக்கிறீர்கள். அதைக் காலி செய்யாதவரை உங்களுக்கு 
ஜென் என்றால் என்ன என்பதை நான் எப்படிப் புரிய வைக்க முடியும்?"



நானா ஞானி ? 
ஜப்பானிய செல்வந்தர் ஒருவர் சம்பந்தப்பட்ட விழாவுக்கு ஜென்ஞானி காசன் அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு முன் இப்படியொரு ஆடம்பர விழாவில் அவர் கலந்து கொண்டதில்லை. எனவே, அவருக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டது. வியர்த்து கொட்டியது. 
இந்நிகழ்ச்சிக்குப் பின் காசன் தன் மாணவர்களை அழைத்தார். ""என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களுக்கு ஆசிரியராக இருக்கத் தகுதியற்றவன். உலகத்தில் ஏற்படும் பிரபலத்தை சமமாகப் பாவிக்க முடியாத மனநிலையில் தற்போது இருக்கிறேன். நீங்கள் வேறு ஆசிரியரிடம் சென்று பயிலுங்கள்'' என்று கூறி விடைபெற்றார். பின்னர், ஒரு கோயிலில் சென்று தனிமையில் தியானம் செய்தார். வேறு ஓர் ஆசிரியரிடம் மாணவராகச் சேர்ந்து பயின்றார். எட்டு ஆண்டுகளுக்குப் பின்காசன் ஞானம் அடைந்தவராக புதிய மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

இதுவே வாழ்வு முறை ! 
ஒரு செல்வந்தர் ஜென் ஞானி சென்காய் என்பவரிடம் வந்து, ""எங்களது தலைமுறையினர் தொடர்ந்து எப்போதும் செழிப்புடன் இருக்க ஏதாவது ஆசீர்வாதம் எழுதிக் கொடுங்கள்'' என்று கேட்டார். சென்-காய் ஒரு காகிதத்தை எடுத்து, ""தந்தை இறக்க, மகன் இறக்க, பேரன் இறக்க !'' என்று எழுதிக் கொடுத்தார். செல்வந்தர் திடுக்கிட்டார். ""எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கத்தான் உங்களிடம் ஆசீர்வாத வாக்கியம் கேட்டேன். ஏன் இப்படி எழுதி விட்டீர்கள் ?''என்று விசனப்பட்டார். சென்-காய் அமைதியாக, ""இதில் குற்றம் ஒன்றும் இல்லை. உனக்கு முன் உன் மகன் இறந்தால் அது உனக்கு துன்பத்தைத் தரும். உன் பேரன் இறந்தால், அது உனக்கும் உன் மகனுக்கும் பெரும் துன்பமாகும். உனது வம்சம் தலைமுறை தலைமுறையாக நான் குறிப்பிட்ட ஒழுங்கில் நடைபெற்று வந்தால், அதுவே இயற்கையான வாழ்வு முறை. அதைத்தான் எழுதி அளித்திருக்கிறேன்''என்றார். 

கேளும், பிள்ளாய் ! 
பங்கி என்னும் ஜென் ஞானிக்கு நல்ல புகழ். அவரிடம் நிறைய மாணவர்கள். பொறாமைக்காரரான நிச்சேரியன் துறவிக்கு இது பிடிக்கவில்லை. பங்கியிடம் விவாதம் புரிவதற்காக அவர் இருந்த ஆலயத்திற்கு வந்தார்.
""பங்கி ! உங்களுக்கு யாராவது மரியாதை செய்தால் நீங்கள் பணிபுரிவீர்கள் ; இல்லையா? என்னைப் போன்றவர்கள் உமக்கெல்லாம் மரியாதை தருவதில்லை. என்னை உன்னால் பணிய வைக்க முடியுமா ?'' என்று கேட்டார்.
"" என் அருகில் வாருங்கள். அது எப்படி என்று விளக்குகிறேன்''என்றார் பங்கி. உடனே, துறவி கூட்டத்தை விலக்கிக்கொண்டு, ஆணவமாக, பங்கியை நோக்கி வந்தார்.
""இப்படி, எனது இடதுபக்கம் வாருங்கள்''. துறவி அவ்வாறே சென்றார்.
""ரொம்ப வந்து விட்டீர்கள். ஒரு இரண்டடி பின்னால் போங்கள்!'' - போனார். 
பங்கி அமைதியாக, ""சரி! நான் சொன்னபடியெல்லாம் நீ பணிந்து நடந்ததால், நீ ஒரு கவுரவமான மனிதன் என்று நினைக்கிறேன். இப்போது நீ எனது பக்கத்தில் அமர்ந்து பாடத்தை கவனி !'' என்றார். 

No comments:

Post a Comment