Saturday, July 16, 2011

அர்த்தமுள்ள இந்துமதம் 3

லௌகிக வாழ்க்கையின் சகல பகுதிகளையும் உள்ளடக்கி, ஒரு பெருங்கை எழுதக்கூடிய சக்தி இன்று எந்த எழுத்தாளருக்காவது உண்டா?
நாகரிகம் வளர்ந்துவிட்ட நிலையில், ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே உள்ள தூரம் குறைந்துவிட்ட நிலையில், பல நாட்டுக் கதைகளையும் படிக்கின்ற வாய்ப்பு அதிகப்பட்ட நிலையில், நம் மூதாதையர்களைவிட நாம் அறிஞர்கள் என்று கருதுகின்ற நிலையில், சகலவிதமான குணாதிசயங்களைக்கொண்டு பல பாத்திரங்களை உருவாக்கி ஒரே கதையாக எழுதுகின்ற சக்தி இன்று யாருக்காவது உண்டா? எனக்குத் தெரிந்தவரை இல்லை.
நம்முடைய இதிகாசங்களை வெறும் கற்பனைக் கதைகள் என்றே வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கற்பனைக்கு ஈடு கொடுக்க உலகத்தில் இன்னும் ஓர் எழுத்தாளன் பிறக்கவில்லை.
பெருங்கதைகளும் அவற்றுக்குள் உப கதைகளுமாக எழுதப்பட்ட நமது இதிகாசங்களின் பாத்திரப் படைப்புத்தான் எவ்வளவு அற்புதம்!
அவை கூறும் வாழ்க்கைத் தத்துவங்கள்தான் எத்தனை!
நம்பிக்கை
அவநம்பிகை
ஆணவம்
மீட்சி
காதல்
ராஜதந்திரம்
குறுக்குவழி
நட்பு
அன்பு
பணிவு
பாசம்
கடமை
- இப்படி வாழ்க்கையில் எத்தனை கூறுகள் உண்டோ அத்தனையும் நமது இதிகாசங்கள் காட்டுகின்றன.
மகாபாரதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
பொறுமைக்குத் தருமன்
துடிதுடிப்புக்குப் பீமன்
ஆண்மைக்கும் வீரத்திற்கும் அர்ச்சுனன்.
மூத்தோர் வழியில் முறை முறை தொடர நகுலன், சகாதேவன்
பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்ட சக்தி மிக்க ஆன்மாவாக, பாஞ்சாலி.
உள்ளதெல்லாம் கொடுத்து, கொடுப்பதற்கு இல்லையே என்று கலங்கும் வள்ளலாகக் கர்ணன்.
நேர்மையான ராஜதந்திரத்திற்கு எடுத்துக்காட்டாகக் கண்ணன்.
குறுக்குவழி ராஜதந்திரத்திற்கு ஒரே உதாரணமாகச் சகுனி!
தீய குணங்களின் மொத்த வடிவமாக கௌரவர்கள்!
தாய்பாசத்திற்கு ஒரு குந்தி!
நேர்மையான கடமையாளனாக விதுரன்.
பாத்திரங்களின் சிருஷ்டியிலேயே சம்பவங்கள் கருக்கொண்டுவிட்டன.
இந்தப் பாத்திரங்களின் குணங்களை மட்டும் சொல்லி விட்டால் கதை என்ன என்பது தற்குறிக்கும் புரியும்.
இந்தக் கதை வெறும் ஆணவத்தின் அழிவை தருமத்தின் வெற்றியை மட்டும் குறிப்பதல்ல.
லௌகிக வாழ்க்கையிலும் ஒவ்வொருவருக்கும் பயன்படக்கூடிய படிப்பினை இருக்கிறது.
கதையின் இறுதிக் களமான குருஷேத்திரத்தில் கதையின் மொத்த வடிவத்திற்கும் தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதுவரை சொல்லி வந்த நியாயங்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன.
பகவத் கீதை, மகாபாரதக் கதையின் சுருக்கமாகி விடுகிறது.
அரசியல் சமுதாய நீதிக்கு அதுவே கைவிளக்காகி விடுகிறது.
கண்ணனை நீ கடவுளாகக் கருத வேண்டாம்.
கடவுள் அவதாரம் எடுப்பார் என்பதையே நம்ப வேண்டாம்.
பரந்தாமன், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவன் என்றே எண்ணிப்பார்.
கீதையைத் தேவநீதியாக நீ ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், மனித நீதியாக உன் கண்முன்னால் தெரியும்.
கண்ணன் வெறும் கற்பனைதான் என்றால், கற்பனா சிருஷ்டிகளில் எல்லாம் அற்புத சிருஷ்டி, கண்ணனின் சிருஷ்டி.
ஊழ்வினை பற்றித் தெரிய வேண்டுமா? - பாரதம் படி.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமா? - பாரதம் படி.
ஒன்றை நினைத்தால் வேறொன்று விளையுமா? - பாரதம் காட்டும்.
செஞ்சோற்றுக் கடனா? நன்றியறிதலா? - பாரதம் காட்டும்.
பெற்ற மகனைத் தன் மகன் என்று சொல்ல முடியாத பாசக்கொடுமையா? - குந்தியைப் பார்.
ரத்த பாசத்தால் உன் உள்ளம் துடிக்கிறதா? சொந்தச் சகோதரர்களை எதிர்த்துப் போராட வேண்டிவருகிறதா? அப்போது உனக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லையா?
-கீதையைப் படி.
ஏழைக்கும் பணக்காரனுக்கும் நட்பு இருக்கமுடியுமா?
-கண்ணன் கதைக்கு உபகதையான குசேலன் கதையைப் படி.
விஞ்ஞானம் வளராத காலத்தில், போர்த்துறையில் எத்தனை வகையான ராஜதந்திரங்கள் இருந்தன.
அத்தனையும் ஒட்டுமொத்தமாக அறிந்துகொள்ள மகாபாரதம் படி.
ஒரு பாத்திரத்திற்கு ஒரு குணம் விசேஷம் என்றால், அதைக் கதையின் இறுதிவரையில் கொண்டு செலுத்திய கறபனைச் சிறப்பை அளவிட வார்த்தைகள் இல்லை.
ராம கதைக்கு வா!
காதல் என்றால் என்ன என்பதைக் காட்டக் கூடிய இலக்கியம் அதற்குமேல் ஒன்றில்லை.
சகோதரப் பாசம் ராமனுக்கும், லட்சுமணனுக்கும், பரதனுக்குமிடையே முழு வடிவில் சதுராடுகிறது.
குகனைப்போல் ஒரு நண்பன் கிடைத்தால்,நான் இருந்த இடத்தில் இருந்தபடியே கோட்டைகளைப் பிடிப்பேன்.
அனுமானைப் போன்ற ஓர் ஊழியன் கிடைத்தால், அகிலத்தையே விலைக்கு வாங்குவேன்.
சீதையைப் போன்று ஒரு தேவதை கிடைத்தால், கம்பனோடும் போட்டி போடுவேன்.
விபீஷணனைப் போன்ற ஒரு நியாயவன் கிடைத்தால், இன்றைய ஜனநாயகத்திற்கு நான் மரியாதை செலுத்துவேன்.
பாரதத்திற்குக் கர்ணனைப்போல் இதிலே செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் கும்பகர்ணன், நன்றிகெட்ட உறவுகளுக்கு ஒரு சவால்!
கோசலையைப் போல் ஒருதாயும், தசரதனைப்போல் ஒரு தந்தையும் யாருகும் அமைந்துவிட்டால், கொடிய வறுமைக்கூட தோன்றாது.!
இவ்வளவு நல்லவர்களக் கொண்ட ராம காதையை இரண்டே தீயவர்கள் நடத்திச் செல்கிறார்கள்.
முதல் பகுதியைத் தள்ளிவிடுகிறாள் மந்தரை. இரண்டாவது பகுதியை ஏற்று நடத்துகிறான் ராவணன்.
ஆயிரம் நல்லவர்களுக்கு அவதியைத் தர, இரண்டு மூன்று தீயவர்கள் போதுமென்றது ராம காதை.
மந்தரையும், சூர்ப்பநகையும், ராவணனுந்தாம் ராமனுக்குத் தெய் வடிவம் தருகிறார்கள்.
நிழல் அருமை வெயிலிலே நின்று அறியப்படுகிறது.
வைணவ இதிகாச சிருஷ்டி இப்படி வானோங்கி நிற்பது கண்டு, சைவர்கள் சிருஷ்டித்ததே முருகன் கதை.
அங்கே வில்;
இங்கே வேல்!
அங்கே ராமன்;
இங்கே முருகன்!
அங்கே ராவணன்;
இங்கே சூரபத்மன்!
அங்கே ராவணனுக்குச் சில தம்பிகள்.
இங்கே சூரபத்மனுக்குச் சில தம்பிகள்.
இரண்டிலும் ஏறத்தாழ ஒரே வகையான பாத்திரப் படைப்புகள்.
(விவரமாக் தெரிந்துகொள்ள திரு ரா.பி. சேதுப்பிள்ளையின் ‘வேலும் வில்லும்ய படியுங்கள்)
ஆயினும், வைணவர்களின் அற்புதக் கற்பனையைச் சைவர்கள் வெல்ல முடியவில்லை!
சைவர்கள் பெரும்பாலும் நாமாவளியாகவே பாடி இருக்கிறார்கள்.
“ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று” என்று இருக்கின்ற முகங்களுக்குக் கணக்குக் சொன்னார்களே தவிர ஆழ்ந்த த்த்துவங்களை அதன்மூலம் உணர்த்த வில்லை.
ஆண்டாள் திருப்பாவையைப் படித்தாற்கூட நமக்கு மெய்சிலிர்க்கிறது.
மனித ஆன்மாவின் தெய்வீக ராகத்தை அது மெய் சிலிர்க்கக் காட்டுகிறது.
அஃதன்றியும், கடவுளைக் காதலனாக பாவிப்பது என்ற சம்பிரதாயத்தை முதலில் துவக்கியது வைணவந்தான்.
பிறகு சைவமும் அதைப் பின்பற்றியது.
சைவத்திலும், முருகனையும் பரமசிவனின் வேறு சில வடிவங்களையும், காதலனாகப் பாவிப்பது வழக்கில் வந்தது.
ஆனால், சக்தியையோ,பிற பெண் தெய்வங்களையோ காதலியாகப் பாவிப்பதாக இல்லை. அங்கேயும் இந்துக்கள் பண்பாடு கார்த்தார்க்க்.
காதல் என்பது பாசத்தின் முதிர்ச்சியாகவே காட்டப்பட்டது.
சில இடங்களில் காம உணர்ச்சி அதிகரித்து இருந்தால் அது பரிபூரண நிலையைக் குறிக்கும்.
ஆதிமூலத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட தெய்வீக நிலையைக் குறிக்கும்.
வேறு எந்த மதத்தவரும், இந்துக்களைப் போல் இறைவனோடு நேரடியாகப்பேசுவதில்லை.
உனக்கு ஏன் மாடு என்றும், வீடு கிடையாதா என்றும், தாய் தகப்பன் இல்லையா என்றும், அதனால் தான் ஒருவன் வில்லால் அடித்தானா என்றும், ஏதோ நீண்ட நாள் பிரிந்திருந்த சொந்தக்கார்களைக் கேட்பது போல, இறைவனைக்கேட்பவர்கள் இந்துக்கள்தான்.
இறைவனுக்கும் மனிதனுக்கும் அதிக இடைவெளியில்லாமல் சிருஷ்டித்தவர்களும் இந்துக்கள்தான்.
மூலமாக முளைத்தெழுந்தவனை உறவின்ன் ஆக்கிக் கொண்டவர்களும் இந்துக்கள்தான்.
காதல் வாழ்க்கையையும் திருமண வாழ்க்கையையும் கடவுளிடம் கண்டவர்களக் இந்துக்கள்தான்.
ஸ்தூலத்தை சிவமாகவும் ஆன்மாவை சக்தியாகவும் கண்டவர்கள் இந்துக்கள்தான்.
கடைசி ஏழைக்கும் கடவுளைச் சொந்தக்காரனாக அவனை ஆண்டியாகக் கொண்வர்களும் இந்துக்கள்தான்.
அந்தத் தமிழக இந்துக்களிலே சைவர்கள், முருகனைத் தமிழனாக் கண்டார்கள்.
சைவர்கள் அவனைத் தமிழனாக்க் கண்டபோது, வைணவர்கள் திருமாலைத் தமிழாலேயே அழைத்தனர்.
சைவர்கள் ‘ஸ்ரீரங்கம்’ என்று சொன்னால், வைணவர்கள் அதைத் தமிழில் ‘திருவரங்கம்’ என்று சொல்லுவார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆன்மாவும் ஆதூலமும் ஆனந்தமாக ஆடிப்பாட வேண்டம் என்பதே இந்துக்களின் நோக்கமாக இருந்தது.
அந்த நோக்கத்தின் வடிவங்கள்தான் சைவ நடராஜரும் வைணவக் கண்ணனும்.
எங்கே தொட்டாஉம், எதைப் படித்தாலும், இந்துக்கள் உருவாக்கிய பாத்திரங்கள் நம்மை வெறும் அதீத உலகத்திற்கு கொண்டு போகவில்லை.
லௌகிக உலகத்தை எடுத்துக் காட்டுகின்றன.
கதைகளைப் பொய் என்று சொல்ல்லாம்.
அந்தக் கற்பனையின் சிறப்பை வியக்காமலிருக்க முடியாது.
சொல்லப்போனால், அத்தகைய கற்பனை, உலகத்தில் இந்தப் பல்லாயிரம் ஆண்டுகளில், வேறு எவனுக்கும் கிடையாது.

No comments:

Post a Comment